புதுச்சேரி அரசு, புதுச்சேரி
வணக்கம்,
பொருள் : மக்கள் பிரச்சனைகளில் தலையிடக் கோருதல் – வளர்ச்சி
திட்டங்களுக்கு முன்னுரிமை அளித்தல் தொடர்பாக.
தங்கள் தலைமையிலான அரசு ஆட்சிப் பொறுப்பேற்3 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. இக்காலத்தில் விவசாய பயிர்கடன் தள்ளுபடி, விவசாயிகளுக்கு இலவச மின்சாரம், காவலர் பணியிடத்திற்கு வயது வரம்பு தளர்வு, புதியதாக விண்ணபித்த முதியோர், விதவைகளுக்கு உதவித் தொகை, தடுமாற்றத்தோடும் இடைநிற்றலோடும் இலவச அரிசித் திட்டம் ஆகியன பெரும் போராட்டத்தோடு அமலாக்கப்பட்டுள்ளதை மார்க் சிஸ்ட் கட்சி வரவேற்கிறது. ஆனால் மாநில மக்களின் சமூகப் பொருளாதாரம் உயர்த்துகிற வகையில் வளர்ச்சித்திட்டங்கள் இக்காலத்தில் உருவாக்கப்படவில்லை. தேர்தல் கால வாக்குறுதிகள் பல நிறைவேற்றப்படவில்லை. மத்திய பாஜக அரசின் நிதிக்கொள்கை, ஜிஎஸ்டி, பணமதிப்பு நீக்க நடவடிக்கையால் மாநில அரசின் வருவாய் இழப்பு, மாநில அரசின் கடன்…போன்றவற்றால் மாநில அரசு சந்திக்கும் நெருக்கடிகள் மக்கள் மீது திணிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் மின்கட்டண உயர்வு, சொத்துவரி உயர்வு, குப்பை வரிவிதிபு, குடிநீர் வரி உயர்வு என மக்கள் மீது கடுமையான வரிகள் விதிக்கப்படுகின்றன. ஜிஎஸ்டி, பணமதிப்பு நீக்கம் போன்றவற்றால் வேலையின்மையும், விலைஉயர்வும் மக்களை கடுமையாக பாதித்துள்ளா நிலையில் மாநில அரசின் வரிவிதிப்பு கொள்கை ஏற்புடையதல்ல.
மறுபுறத்தில் கூட்டுறவு சர்க்கரை ஆலையினை தனியாருக்கு விடுவது, அரசு சார்பு நிறுவனங்கள் நடத்திய 40க்கும் மேற்பட்ட மதுக்கடைகளை தனியாருக்கு விட்டுவிடுவது, புதுச்சேரி சாலை போக்குவரத்து கழகத்தின் தொலைதூர சொகுசு பேருந்துகள் இயங்கிய தடத்தில் தனியாரை அனுமதிப்பது, மாநில அரசுக்கு 2 கோடி மிச்சப்படும் என்பதற்காக மதிய உணவு திட்டத்தை தனியாரிடம் விட்டுவிடுவது, குழந்தைகள் மருத்துவமனைய்ல் 4ஆம் பிரிவு பணியிடங்களை ரிலையன்சின் துணைநிறுவனத்திற்கு ஒப்படைப்பது என தனியார்மய நடவடிக்கைகள் பொறுத்தமற்றதாகும்.
மத்திய பாஜக அரசு மாநிலங்களின் உரிமை மற்றும் அதிகாரங்களை மட்டுப்படுத்தி வருகிறது. மேலும் மாற்று கட்சி ஆட்சியில் உள்ள மாநிலங்களில் ஆளுநர்கள் மூலம் தலையீடு செய்துவருகிறாது. மக்களாட்சி ஜனநாயகத்தில் யாருக்கு அதிகாரம் என்ற சர்ச்சை இன்றளவும் தொடர்கிராது. இதன் பாதிப்பை மக்கள் அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள்.
மாநிலத்தில் நிலவும் இத்தகைய அரசியல் சூழலில் மக்கள் நம்பிக்கை இழந்து வருகிறார்கள். இதன் விளைவு ஆட்சி அதிகார மட்டத்திற்குள்ளும் எதிர்பாராத பாதிப்புகளை உருவாக்கிவிடும் என்றே தெரிகிறது.
ஆகவே, மக்கள் மீது திணிக்கபட்டுள்ள வரிகளை குறைத்திடவும், சமூகநலத்திட்டங்களை செயல்படுத்திடவும் வேண்டும். மேலும் மாநிலத்தின் நிதி ஆதாரங்களை மேம்படுத்திட, முதலீடு வருவாய்களை அதிகப்படுத்திட, மாநில பொதுத்துறைகளை பாதுகாத்திட வேண்டும். மாநிலத்தின் தேவைகளை ஈடு செய்துகொள்ளும் வகையில் தொலைதூர பார்வையோடு மாற்று கொள்கைகளுக்கு வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்திட மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது. மாநில அரசின் சுதந்திரமான செயல்பாடுகளுக்கு அடிப்படையான முழு மாநில அந்தஸ்துக்கான நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும். மேலும் இத்துடன் இணைக்கப்பட்டுள்ள பற்றி எரியும் புதுச்சேரி மக்கள் பிரச்சனைகளை கோரிக்கைகளை நிறைவேற்றிடவும் மார்க்சிஸ்ட் கட்சி தங்களை கேட்டுக்கொள்கிறது.
1. அனைவருக்கும் இலவச அரிசி திட்டம் :
பொதுவினியோக முறை படிப்படியாக சீரழிக்கப்பட்டது. பாஜக ஆட்சியில் ரேஷனில் வழங்கப்பட்ட அரிசிக்குப் பதிலாக 2015 செப்டம்பர் முதல் சிவப்பு அட்டைதாரர்களுக்கு வங்கி கணக்கில் பணத்தை போடுகிறது. ஏழை மக்கள் உணவு பாதுகாப்பு, விவசாயிகள் பாதுகாப்பு, வெளிச்சந்தையின் விலையேற்றத்தை கட்டுப்படுத்துவது என்ற நோக்கங்கள் கைவிடப்பட்டுள்ளன. மாநில அரசு அனைத்து குடும்ப அட்டைகளுக்கும் 20 கிலோ அரிசி கொடுப்பதாக அறிவித்தது. துணைநிலை ஆளுநர் குறுக்கீட்டால் இத்திட்டம் துவக்க கட்டத்திலேயே நிறுத்தப்பட்டு பணம் வழங்கப்பட்டது. மக்கள் விருப்பத்திற்கு எதிரான பணபரிமாற்றத்தை மார்க்சிஸ்ட் கட்சி எதிர்த்தது. ஆளுநரின் தவறான நடவடிக்கையை எதிர்த்து மாநில அமைச்சர்களின் போராட்டம், பின்பு நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு என்ற தன்மையில் தற்போது சிவப்பு வண்ண குடும்ப அட்டை உள்ளவர்களுக்கு மட்டும் அரிசி வழங்கப்படுகிறது. மஞ்சள் அட்டை குடும்பங்களுக்கு பணம் வழங்கப்படுகிறது. மாநில அரசு அனைத்து குடும்பத்தினருக்கும் அரிசியாக தொடர்ந்து வழங்கிட வேண்டும். இத்திட்டத்திற்கு தேவையான நெல்லை விவசாயிகளிடம் இருந்து நேரடியாக கொள்முதல் செய்திட வேண்டும்.
- மின்கட்டணத்தினை குறைக்க வேண்டும் :
மின்சார சட்டம் 20003ஐ தொடர்ந்து மின் உற்பத்தி – மின்கடத்தி – மின்வினியோகம் என மூன்றாக பிரித்து தனியார்மயமாக்கப்பட்டன. மின்சார சேவை நுகர்வு பொருளாக மாற்றப்பட்டன. அதன் தொடர்ச்சியாக ஒழுங்குமுறை மின்சார அமைப்பு ஒவ்வொரு ஆண்டும் மாநில அரசின் கோரிக்கையை ஏற்று மின்கட்டண உயர்வை தீர்மானிக்கிறது. மக்கள் கருத்து கேட்பு கூட்டத்தில் நுகர்வோர்களின் கருத்துக்கள் உதாசீனம் செய்யப்படுகிறது. நடப்பு 2019-20 நிதியாண்டிற்கு நிரந்தர சேவைக் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் ஸ்மார்ட் மின் மீட்டர் பொறுத்துவதால் மின்கட்டணத்தை இருமடங்காக்கி உயர்த்திட வழிவகுத்துள்ளது. மீட்டர் ரீடிங் கணக்கிடும் ஊழியர்கள் பற்றாக்குறையால் கால தாழ்த்தி கணக்கிடப்படுகிறது. இதனால் மின்கட்டண விகிதத்தில் மாறுதலும், கட்டண உயர்வும் ஏற்படுகிறது..
ஆகவே, மாநில அரசு 100 யூனிட் வரையில் இலவச மின்சாரம் என்றா தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றிட வேண்டும். மாநில அரசு மானியம் வழங்கி, மின்கட்டண உயர்வை குறைத்திட வேண்டும். மின் கணக்கீட்டு முறைக்காக ஸ்மார்ட் மின் மீட்டரை பொறுத்தும் திட்டத்தை கைவிட வேண்டும். மின்சார இழப்பை கட்டுப்படுத்தவும், மின் திருட்டை தடுக்கவும் பொறுத்தமான நடவடிக்கை எடுத்திட வேண்டும். ஏனாமில் சுமார் 20 கோடி ரூபாய்கள் மின் திருட்டில் ஈடுபட்ட கனகதுர்கா நிறுவனத்தின் மீதான வழக்கை விரைந்து முடித்து பணத்தை வசூலித்திட வேண்டும்.
- நகராட்சி அமைப்புகளின் வரிகளை முறைப்படுத்துக
மாநில அரசு நகராட்சி அமைப்புகளுக்கு பட்ஜெட்டில் கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்து மக்களின் அடிப்படை வசதிகளை பூர்த்தி செய்திட வேண்டும். மாறாக நகராட்சி அமைப்புகளுக்கு தேவையான நிதி ஒதுக்கப்படாததால் நிர்வாக செலவு மற்றும் மக்களின் அடிப்படை வசதிகளுக்காக மக்கள் மீதே சேவை வரி பலமடங்கு உயர்த்தப்படுகிறது. தற்போது வீட்டு வசதி உயர்வு, குப்பை வரி விதிப்பு, குடிநீர் வரி உயர்வு போன்ற வரிகள் உயர்த்தப்பட்டுள்ளன. மேலும் பாதாள சாக்கடை திட்டத்திற்கும் வரிவிதிக்கப்பட உள்ளதாகவும் தெரிகிறது. ஆகவே, உயர்த்தப்பட்ட வரிகளை குறைத்திட வேண்டும். புதிய சேவை வரிகளை மக்கள் மீது திணிப்பதை கைவிட வேண்டும்.
- நீராதார வளத்தை பாதுகாக்க நடவடிக்கை
புதுச்சேரி மாநிலம் குடிநீர், விவசாயம் உள்ளிட்ட அனைத்து தேவைகளுக்கும் நிலத்தடி நீரையே நம்பியுள்ளது. இந்நிலையில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்திருப்பதும், குறுகிய காலத்தில் குடிநீர் பஞ்சம் ஏற்படும் என்ற செய்தியும் கவலையளிக்கிறது. மாநில அரசு, நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்த ஏரிகளை தூர்வார நிதி ஒதுக்கியுள்ளதாக ஊடகங்களின் வாயிலாக தெரிய வருகிறது. இத்திட்டத்தை மக்கள் பங்கேற்போடு செயல்படுத்திட வேண்டும். புதுச்சேரி மாநிலத்தில் உள்ள 84 ஏரிகளை பாதுகாத்திட அரசு உள்ளூர் பயனாளிகள், ஏரி சங்கங்கள் ஒருங்கிணைந்து கண்காணிக்கவும், செயல்படுத்தவும் வகையில் புதிய அமைப்புகள் உருவாக்கப்பட வேண்டும். நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்த பொறுத்தமான செயல்திட்டத்தை உருவாக்கிட வேண்டும். நகர்பகுதிகளின் 24 மணீ நேர குடிநீர் வழங்கலுக்காக பிரான்சு நாட்டு நிதிஉதவியுடன் கிராமப்புறங்களில் இருந்து நீர் எடுக்கும் திட்டத்தை மக்கள் கருத்தறியாமல் செயல்படுத்தக் கூடாது.
- தொழிலாளர் கொள்கையினை அறிவித்திடுக :
தங்கள் அரசு பொறுப்பேற்று, தாக்கல் செய்த முதல் பட்ஜெட்டில் தொழில் கொள்கையும், தொழிலாளர் கொள்கையும் உருவாக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. பட்ஜெட் கூட்டத்தொடரின்போதே தொழில் கொள்கை அறிவிக்கப்பட்டது. ஆனால் இதுநாள் வரையில் தொழிலாளர் நலக் கொள்கை அறிவிக்கப்படாதது ஏற்புடையதல்ல. தொழிற்சங்கம் அமைக்கும் உரிமை, வேலை நேர உரிமை, சட்டக்கூலி அமலாக்கம், சட்டவிரோத, ஒப்பந்த தொழிலாளர் முறை ஒழிப்பு ஆகிய அம்சங்களை உள்ளடக்கிய தொழிலாளர் கொள்கை அறிவிக்க வேண்டும். மேலும் தேர்தல் வாக்குறுதியும், சட்டமன்ற அறிவிப்புமான முறைசாரா தொழிலாளர்களுக்கு நலவாரியம் அமைத்திட வேண்டும்.
- மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதி திட்டம்:
கிராமப்புற மக்களுக்கான 100 நாள் வேலைத்திட்டத்தை முழுமையாக அமலாக்கிட வேண்டும். புதுச்சேரி மாநிலத்தில் 68681 குடும்பங்கள் இத்திட்டத்தில் பதிவு செய்துள்ளனர். கிராமப்புற பயனாளிகளுக்கு எந்த காலத்திலும் ஆண்டுக்கு 100 நாட்கள் வேலை வழங்கப்படவில்லை. முந்தைய ஆட்சியில் 2012-2013ல் அதிகபட்ச வேலைவாய்ப்புகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டதே தவிர நடைமுறையில் இல்லை. 2017-18ல் ரூ10.25 கோடி ரூபாய்கள் நிதி ஒதுக்கி 5 இலட்சம் மனித வேலை நாட்கள் உருவாக்கப்பட்டன. ஆண்டுக்கு 20 நாட்களுக்கும் குறைவாகவே கிராமப்புற வேலை உறுதி திட்டம் அமலாக்கப்படுகிறது.
ஆகவே, மாநில அரசு கிராமப்புற நீராதார வளங்களை மேம்படுத்திட 100 நாள் வேலைத் திட்டத்தை பயன்படுத்திட வேண்டும். நடப்பு பட்ஜெட்டில் ஒரு குடும்பத்திற்கு 100 நாள் வேலை வழங்கிட ரூ.68.68 இலட்சம் மனித வேலை நாட்களை உருவாக்கிட வேண்டும்.
- உள்ளாட்சித் தேர்தல் நடத்திடுக :
மார்க்சிஸ்ட் கட்சி தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம் 14.12.2012ல் உயர்நீதிமன்ற தீர்ப்பில் சிறு திருத்தம் செய்து 2 மாத காலத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பு விபரங்களை பெறுவது, 2 மாத காலத்தில் தொகுதி மறுசீரமைப்பு செய்வது, 3 மாத காலத்தில் உள்ளாட்சித் தேர்தலை நடத்தி முடிப்பது என உத்தரவிட்டது. என்.ஆர். காங்கிரஸ் அரசு உச்சநீதிமன்ற தீர்ப்பினை அமலாக்கவில்லை.
உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்த வழக்கை மார்க்சிஸ்ட் கட்சி முறையீடு செய்து விசாரணைக்கு கொண்டுவந்தது. மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் தலைமை செயலாளர் நேரில் ஆஜராக உத்தரவிட்டது. இந்தப் பின்னணியில் மாநில அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இவ்வழக்கில் கடந்த 07.05.2018ல் உச்சநீதிமன்றம் 8 வார காலத்திற்குள் உள்ளாட்சித் தேர்தலை நடத்தி முடிக்க உத்தரவிட்டது.
ஏற்கெனவே தொகுதி மறுசீரமைப்பு குழு தனது அறிக்கையை 28.01.2016ல் அரசுக்கு அளித்துள்ளது. 01.2.2016ல் அரசிதழில் வெளியிடப்பட்டது. 08.08.2016ல் உள்ளாட்சித் துறை அதிகாரிகள் அனைத்துக் கட்சி கூட்டத்தை நடத்தினர். மீண்டும் உச்சநீதிமன்ற இறுதி தீர்ப்புக்குப் பின் 24.05.2018ல் மாநில அரசு அனைத்துக் கட்சிகள் கூட்டத்தை நடத்தியது. சட்டப்பேரவையிலும் விவாதிக்கப்பட்டது. ஆனால் இது நாள் வரையில் தேர்தலை நடத்தாமல் காலம் கடத்துவது கவலையளிக்கிறது.
ஆகவே, மாநில அரசு தாமதியாமல் உள்ளாட்சி அமைப்புகளின பதவி எண்ணிக்கை குறையாமல் தொகுதி மறுசீரமைப்பு செய்து உள்ளாட்சித் தேர்தலை நடத்திட முன்வரவேண்டும். நடப்பு பட்ஜெட்டில் தேர்தலுக்கு நிதி ஒதுக்கவும், மாநில தேர்தல் ஆணையரை நியமிக்கவும், 3 மாத கால அவகாசத்திற்குள் உள்ளாட்சித் தேர்தலை நடத்தி முடித்திடவும் மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது.
- மாநில பொதுத்துறைகளை வலுப்படுத்துதல் – மாநில வருவாயினை பெருக்குதல்
புதுச்சேரி மாநில அரசின் 12 நிறுவனங்கள் மற்றும் ஒரு கழகத்தில் ரூ.711 கோடி ரூபாய்களுக்கு முதலீடு செய்யப்பட்டுள்ளன. நிர்வாக சீர்கேடு, நிதி ஒழுங்கீனத்தால் தொடர்ந்து நட்டத்தில் தள்ளப்பட்டுள்ளன. அதிகாரத்தில் உள்ளவர்கள் தங்களின் அரசியல் தேவைக்காக கொல்லைப்புறா நியமனங்களை செய்வதும் முக்கிய பிரச்சனையாகும். புதுச்சேரி சாராய வடிகாலாலை மற்றும் மின்திறன் குழுமம் ஆகியன மட்டுமே அரசுக்கு ஆதாயப் பங்கை அளித்துவருகின்றன. இதர துறைகள் அரசு வழங்கிய கடனுக்கான வட்டியை கூட திரும்ப செலுத்தும் திறன் இல்லை. இப்பிரச்சனையை ஆய்வு செய்து மாநில பொதுத்துறை மற்றும் நிறுவனங்களை மேம்படுத்த வேண்டியது அவசியமாகும். தங்களது அரசு அமைத்த திரு.விஜயன் தலைமையிலான குழுவின் அறிக்கையின் முழு விவரங்கள் மக்களின் பார்வைக்கு வெளியிடப்பட வேண்டும்.
மாநில பொத்துறைகளை பாதுகாப்பது என்பது வேலைவாய்ப்பு, பொருளாதார வளார்ச்சி ஆகியவற்றோடு இலாபத்தில் கிடைக்கும் ஆதாயப்பங்கின் மூலம் வளர்ச்சி திட்டங்களுக்கும், நலத்திட்டங்களுக்கும் முதலீடு செய்திட முடியும். ஆகவே, கீழ்கண்ட அம்சங்கள் மீது நடவடிக்கை எடுத்திட வேண்டும்.
திரு. விஜயன் குழு அறிக்கை வெள்யிடப்பட்டு அரசியல் கட்சிகள் மற்றும் மக்கள் கருத்தினை அறிந்திட வேண்டும்.
ரோடியர் பஞ்சாலையை இயக்குவதற்கு ரோடியர் பஞ்சாலை முன்னாள் முதன்மை செயல் அலுவலர் திரு. பி.சோமசுந்தரம் அளித்த திட்ட அறிக்கை பரிசீலிக்கப்பட வேண்டும்.
கூட்டுறவு சர்க்கரை ஆலையை இயக்கிட மாற்று வழிமுறைகளை ஆராய வேண்டும்.
சாலைப்போக்குவரத்து கழகத்தில் தொலைதூர சொகுசு பேருந்து வழித்தடத்தில் தனியார் பேருந்துகளை அனுமதிப்பதை கைவிட வேண்டும்.
மதுபானத் தொழில் இலாபத்தில் இயங்கும்போது 40 அரசு சார்பு நிறுவன மதுக்கடைகளை தனியாருக்கு தாரை வார்ப்பது ஏற்புடையதல்ல.
சுதேசி, பாரதி, ஸ்பின்கோ, ஜெயபிரகாஷ் நாராயன் ஆகிய மில்களை நவீனப்படுத்தி, தரமான பஞ்சு வழங்க இயக்கிட வேண்டும்.
- புதிய கல்விக் கொள்கை – கல்விப் பிரச்சனைகள்
திரு. கஸ்தூரிரங்கன் தலைமையிலான குழு அளித்த அறிக்கையினை மத்திய பாஜக அரசு புதிய கல்விக் கொள்கை 2019 வரைவினை வெளியிட்டுள்ளது. இக்கொள்கை மாநில உரிமை, கல்வி உரிமைகளை மற்றும் மொழி உரிமைகளை பாதிக்கிறது. கல்வியில் இந்துத்துவ சித்தாந்தத்தை புகுத்துவதோடு, வணிகமயத்தை மேலும் விரிவடையச் செய்கிறது. இக்கொள்கை அறிக்கையில் இந்திய விடுதலைக்குப் பிறகு 1970வரையிலான . பேராசிரியர் ராதாகிருஷ்ணன் குழு, கோத்தாரி குழு ஆகியவற்றின் கல்விக் கொள்கை பரிந்துரைகள் குறித்து கவனத்தில் கொள்ளவில்லை. ஆகவே, மாநில அரசு புதிய கல்விக் கொள்கை 2019வரைவிற்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.
பொதுப்பள்ளிகள் சமூகத்தில் முற்போக்கு விழுமியங்களை சமூகப் பொறுப்புணர்வை வளர்க்கிறது. ஆகவே, அவற்றை பாதுகாத்திட வேண்டும்.
இட ஒதுக்கீட்டில் இடம்பெறாத பொருளாதார ரீதியில் பின்தங்கிய இதர பிரிவினருக்கு 10% இட ஒதுக்கீடு வழங்க சட்டம் இயற்றப்பட்டுள்ளது. அதன்படி அரசு மருத்துவக் கல்லூரி உள்ளிட்ட கல்வி நிறுவனங்களில் எண்ணிக்கையை உயர்த்தி இட ஒதுக்கீட்டை அமல்படுத்திட வேண்டும்.
மதிய உணவுத் திட்டத்தில் இஸ்கான் என்ற மத அடிப்படையில் இயங்கும் தனியார் அமைப்புக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. மேற்படி உணவில் பூண்டு, வெங்காயம் சேர்க்க மறுப்பது, முட்டை வழங்க மறுப்பது, உணவு கலாச்சாரத்திற்கு எதிரானதாகும். சாத்வீக உணவு மட்டுமே வழங்கப்படும் என்பது ஒற்றை உணவு கலாச்சாராத்தை திணிப்பதாகும். ஆகவே, குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து உணவை அரசுப் பொறுப்பில் தொடர்ந்து வழங்கிட வேண்டும்.
19ஆம் நூற்றாண்டின் மத்தியில் துவங்கப்பட்ட கலவைக்கல்லூரி, வ.ஊ.சி பள்ளிகளின் தோற்றம் மாறாமல் புதுப்பித்து பாதுகாத்திட வேண்டும்.
கிராமப்புற அரசு கல்லூரிகளை விரிவுப்படுத்திட வேண்டும். ஆசிரியர் பணியில் புதுச்சேரி மாநில இளைஞர்களுக்கு முன்னுரிமை அளித்திட வேண்டும்.