புதுச்சேரியில் சிபிஎம்,சிபிஐ கொடியை எரித்து பாஜக காலிகள் வெறியாட்டம்

தோழர்கள் போராட்டம்.

மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்தபின்னர் தலைநகர் டில்லியில் மாணவர்களுக்கு எதிரான அடக்குமுறைகள் அதிகரித்துள்ளன.ஏற்கனவே தில்லி ஜேஎன்யு பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் தாக்கப்படுவதும் காணாமற் போவதும் தொடர்கிறது. தலித் மாணவர் முத்துகிருஷ்ணன் மறைவு தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புதுச்சேரி அண்ணாசாலையில் தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கலவரத்தை ஏற்படுத்தவேண்டும் என்றே பாஜக வினர் 20க்கும் மேற்பட்டோர் வியாழனன்று மாலை அதே இடத்தில் ஆர்ப்பாட்டம் செய்தனர். பின்னர் திடீரென்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளின் கொடிகளை சாலையில் போட்டு திடீரென்று பெட்ரோல் ஊற்றி எரித்தனர். இதை காவல்துறையினர் தடுக்காமல் வேடிக்கைபார்த்தனர்.

சிபிஎம் கண்டனம்

நடந்த சம்பவத்திற்கு காரணமான பாஜகவினரை உடனே கைது செய்ய வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பிரதேச செயலாளர் ஆர்.ராஜாங்கம், மாநிலக்குழு உறுப்பினர் வெ.பெருமாள் தலைமையில் கட்சித் தொண்டர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.பின்னர் பெரியகடை காவல்நிலையத்திற்கு ஊர்வலமாக சென்று வியாழனன்று இரவு புகார் அளித்தனர்.

முதல்வரை சந்தித்து புகார்

வெள்ளிக்கிழமை (மார்ச் 24) முதல்வர் நாராயணசாமியை சந்தித்துப் பேசினர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கொடிகளை எரித்த பாஜகவினர் மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். பின்னர் அவரிடம் மனு அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது:

மத்தியில் பாஜக தலைமையிலான அரசு பதவியேற்றதை தொடர்ந்து நாட்டில் சிறுபான்மையினர், தலித்துகள், பெண்கள் மீது தாக்குதல்கள் அதிகரித்துள்ளன. கருத்துரிமை, உணவு உரிமை, சகிப்புத் தன்மையற்ற போக்கு, தீவிரமாகி வருகிறது. இது அரசியல் சட்டம், பாரம்பரிய பண்பாட்டின் மீது தொடுக்கப்பட்டுள்ள தாக்குதலாகும்.

நாட்டின் ஒற்றுமை, ஒருமைப்பாட்டை பாதுகாக்கவும், நவீன தாராளமய கொள்கைகளுக்கு எதிராகவும் போராடி வரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் இடதுசாரிகள் மீது வன்முறையை பாஜக நிகழ்த்தி வருகிறது. பாஜக மற்றும் வகுப்புவாத அமைப்புகளால் புதுவையிலும் சமூக பதற்றம் மற்றும் வன்முறை சூழல் திட்டமிட்டு உருவாக்கப்படுகிறது. புதுவை மாநிலத்தில் உள்ள லாஸ்பேட்டையில் தனியார் பள்ளி மீது தாக்குதல், பெரியார் நகர் பள்ளிவாசல் மீது தாக்குதல் நடத்தி உள்ளனர்.இதன் தொடர்ச்சியாக மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக் கொடிகளை தீயிட்டு கொளுத்தி உள்ளனர். இந்நடவடிக்கை அரசியல் அமைப்புச் சட்டத்துக்கு எதிரானதாகும். மாநிலத்தில் நிலவும் அமைதியை சீர்குலைத்து மோதலை தூண்டுவது போல் பாஜகவின் செயல்பாடு அமைந்துள்ளது. இந்த ஜனநாயக விரோதச் செயலை மாநில அரசு இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும். இப்பிரச்னை அரசியல் ரீதியாகவும் கட்சி ரீதியாகவும் எதிர்கொள்ளும் வகையில் பெரியகடை காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளோம். முதல்வர் இதில் தலையிட்டு, கொடிகளை எரித்த பாஜகவினர், மற்றும் இச்சம்பவத்துக்கு தூண்டுதலாக செயல்பட்டவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.மாநிலத்தில் அமைதியையும், நல்லிணக்கத்தையும் பாதுகாக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

முதல்வர் நாராயணசாமி உறுதி

மார்க்சிஸ்ட் கட்சியின் கோரிக்கை மனுவை பெற்றுக் கொண்டு முதல்வர் நாராயணசாமி, சட்டம் ஒழுங்கை பாதுகாக்க அரசு கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது. எந்த கட்சியாக இருந்தாலும் அவர்கள் மீது புதுச்சேரி அரசு பாரபட்சமில்லாமல் நடவடிக்கை எடுக்கும் என்றார்.

சிபிஐ கண்டனம்

கம்யூனிஸ்ட் கட்சிக் கொடிகளை எரித்ததின் மூலம் புதுவையில் கலவரத்தைத் தூண்ட பாஜக திட்டமிட்டுள்ளது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் ஆர்.விஸ்வநாதன் தெரிவித்தார்.

வெள்ளிக்கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:.

பாஜகவினர் ஆர்ப்பாட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளின் கொடிகளை எரித்துள்ளனர். இதன் மூலம் புதுவையில் கலவரத்தை தூண்ட திட்டமிட்டுள்ளனர். பாஜகவின் செயல்பாடுகளுக்கு துணைநிலை ஆளுநர் கிரண்பேடி அனைத்து வகையிலும் பக்கபலமாக உள்ளார். கொடியை எரித்த பாஜகவினர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். எந்த நிலையையும் எதிர்கொள்ள நாங்கள் தயாராக உள்ளோம்.

பாஜகவினரின் செயல்களை கண்டித்து பாகூர், புதுவை நகரம், லாஸ்பேட்டை, மேட்டுப்பாளையம், வில்லியனூர் உள்பட 5 மையங்களில் சனிக்கிழமை மாலை 4.30 மணிக்கு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். பாஜகவின் செயல்பாடுகளை மக்களிடம் கொண்டு செல்லும் வகையில் இப்போராட்டம் நடத்தப்படுகிறது என்றார்.

பாஜக வினர் சிறையில் அடைப்பு

CPIM flag burnஇதனிடையே மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கொடிகளை எரித்த போராட்டத்திற்கு தலைமைத் தாங்கிய பாஜகவைச் சேர்ந்த சதாம்உசேன் உட்பட 12 பேரை பெரியக்கடை காவல் நிலையத்தினர் கைது செய்தனர். அவர்கள் 12 பேர் மீது 5 பிரிவுகளின் கீழ் ஜாமீனில் வெளிவராதபடி வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Leave a Reply