புதுச்சேரி அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் ஒப்பந்த மருத்துவர்களுக்கு காலம் தாழ்த்தாமல் சம்பளத்தை வழங்கவும், பணி நிரந்தரம் செய்க


இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) புதுச்சேரி

பத்திரிக்கை செய்தி

புதுச்சேரி அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் ஒப்பந்த மருத்துவர்களுக்கு காலம் தாழ்த்தாமல் சம்பளத்தை வழங்கவும், பணி நிரந்தரம் செய்யவும் மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது.

—+———
புதுச்சேரி மாநிலத்தில் அரசு பொது மருத்துவமனை தொடங்கி, ஆரம்ப சுகாதார மருத்துவமனைகள் வலுவான கட்டமைப்பு வசதிகளை கொண்டிருந்தன. தற்போது படிப்படியாக அரசு மருத்துவமனைகளின் செயல்பாடு சீரழிவை சந்திக்கிறது.
தேவையான மருந்துகள், தொழில்நுட்பக் கருவிகள், மருத்துவர்கள், செவிலியர்கள், தொழில்நுட்ப வல்லுனர்கள், வார்டு உதவியாளர்கள் உட்பட போதிய நிதி உதவியின்றி பற்றாக்குறை நீடிக்கிறது.

மத்திய தணிக்கை குழுவின் அறிக்கைகளும், நடப்பு சம்பவங்களும் அரசின்வசம் இருந்து மருத்துவமனைகள் கைவிடப்படும் நிலையை நோக்கி நகர்கிறது. இதைப் பயன்படுத்தி தனியார் மருத்துவமனைகள் ஏழை நோயாளிகளிடம் கொள்ளை லாபம் பார்த்து வருகிறார்.

புதுச்சேரி அரசு மருத்துவமனைகளில் 108 ஒப்பந்த மருத்துவர்கள் ஐந்தாண்டுகள் முதல் 17 ஆண்டுகள்  வரையில் பணியாற்று வருகின்றனர். இவர்கள்தான் அரசு மருத்துவமனையை இயக்குகிறார்கள். ஆனால் இவர்களுக்கு வழங்க வேண்டிய மாதாந்திர ஊதியம் காலத்துடன் வழங்கப்படுவதில்லை. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கூட காலத்துடன் ஊதியம் வழங்காமல் அலட்சியம் காட்டியது கண்டனத்துக்குரியதாகும்.

நிரந்தர மருத்துவர்கள், வெகு சிலரே பணியில் உள்ளனர். மருத்துவமனையில் அசாதாரணமான சூழல் ஏற்படும்போது, சம்பவத்திற்கு ஒப்பந்த மருத்துவர்கள் பொறுப்பு ஏற்க முடியாது. தனிச்சிறப்பு மருத்துவர்கள் ஒரு சிலர் தேவைப்படும் போது தான் மருத்துவமனைக்கு வரும் நிலை உள்ளது.

ஆகவே மாநில முதல்வர் அவர்கள் உயிர் காக்கும் பணியில் ஈடுபடும் ஒப்பந்த மருத்துவர்களுக்கு மாத ஊதியம் காலத்தோடு வழங்க வேண்டுகிறோம். மேலும் கல்லூரி உதவி பேராசிரியர்களுக்கு வழங்கியதை போல ஒப்பந்த மருத்துவர்களுக்கு ஒரு முறை சிறப்பு அனுமதி பெற்று பணி நிரந்தரம் செய்திட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்கட்சி வலியுறுத்துகிறது.

இந்திரா காந்தி அரசு மருத்துவமனை மற்றும் கல்லூரியில் பணியாற்றும் மருத்துவர்கள் ,இதர மருத்துவ பணியாளர்களுக்கும் நிலுவை சம்பளத்தை வழங்க வேண்டும். அரசு மருத்துவமனையில் காலியா உள்ள பணியிடங்களை புதுச்சேரி இளைஞர்களை கொண்டு நிரப்பிட வேண்டும்.

கடந்த 29 .10 .2024  அன்று மேதகு துணைநிலை ஆளுநர் அவர்களை சந்தித்தபோது சுகாதாரத்திற்கு முன்னுரிமை கொடுத்து செயல்பட வேண்டும் என்று கோரிக்கை கட்சியின் சார்பில் வைக்கப்பட்டது . புதுச்சேரி துணைநிலை ஆளுநர் விஷயத்தில் தலையிட்டு மருத்துவர்களுக்கு ஊதியத்தை வழங்கவும், ஒன்றிய அரசிடம் கூடுதல் நிதியைப் பெற்று அரசு மருத்துவமனைகளில் தரத்தை உயர்த்தவும் , மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி புதுச்சேரி மாநில குழு சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.

இப்படிக்கு
இரா.இராஜாங்கம்
மாநில செயலாளர்

Leave a Reply