புதுச்சேரி தலைமைச் செயலகத்தை முற்றுகை போராட்டம்

புதுச்சேரி அரசு மாணவர்களை பாதிக்கும் வகையில் பள்ளி மற்றும் உயர்கல்வியில் செயல்பட்டு வருவதைக் கண்டித்து திங்களன்று (ஜூன் 29) புதுச்சேரி தலைமைச்செயலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து கட்சியின் பிரதேச செயலாளர் இரா.ராஜாங்கம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

என்.ஆர். காங்கிரஸ் அரசு தனியார் நடத்துகின்ற கல்வி நிறுவனங்களின் அரசாக மாறிவிட்டது. மக்களின் வாழ்வாதார கோரிக்கையில் அக்கறைகாட்டாத இந்த அரசு அவசர அவசரமாக செயல்பட்டு மருத்துவக் கல்லூரிகளுக்கு நிகர் நிலைப் பல்கலைக் கழகங்களாக உயர்த்தி அனுமதி அளித்துள்ளது.1996-ம் ஆண்டுவாக்கில் மருத்துவக்கல்லூரிகளுக்கு அனுமதி வழங்கியபோது 50 சதம் இடங்கள் அரசுக்கு வழங்கப்படுமெனக் கூறி, அதற்காக குறைந்த விலையில் நிலம், குடிநீர், தங்குதடையற்ற மின்சாரம், அரசு செலவிலேயே சாலை மேம்பாடு போன்றவைகள் செய்யப்பட்டது. கடந்த காலத்தில் 50 சத இடங்களை பெற ஆட்சியாளர்கள் எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை.

இந்நிலையில் தற்போது அரசுக்கு கிடைத்து வரும் சொற்பஇடங்களும் கிடைக்காமல் செய்கிறவகையில் அந்த மருத்துவ கல்லூரிகளுக்கு நிகர் நிலை பல்கலைக்கழக அந்தஸ்தை புதுச்சேரி அரசு வாரி வழங்கியுள்ளது. மக்களுக்கு செய்த துரோகமாகும். இதை மார்க்சிஸ்ட் கட்சி வன்மையாகக் கண்டிப்பதோடு அந்த உத்தரவினை ரத்து செய்து அரசிற்கு உறுதியளித்தவாறு 50 சதம் இடங்களைப் பெற வழிகாணுமாறு புதுச்சேரி அரசை வலியுறுத்துகிறது.மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி புதுச்சேரி மாணவர்களுக்கு மத்திய பல்கலைக் கழகத்தில் அனைத்துப் பாடப் பிரிவுகளிலும் 25 சத இட ஒதுக்கீடு அளிக்கப்பட வேண்டும்மென்று தொடர்ந்து போராடி வருகிறது.

பல்கலைக்கழகம் பெரும்பாலான பாடப்பிரிவுகளுக்கு இந்த இடஒதுக்கீடு அளிக்கப்படாத நிலையில் புதுச்சேரி மாணவர்களின் நலன் காக்க எந்த நடவடிக்கையும் அரசு மேற்கொள்ளவில்லை சுமார் 600 மாணவர்கள் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். தனியார் மருத்துவக் கல்லூரிகள் மீது புதுச்சேரி அரசு காட்டும் அக்கறை இந்த பிரச்சனையில் ஏன் வரவில்லை? அனைத்து பாடப்பிரிவுகளிலும் 25 சத ஒதுக்கீட்டைப் பெற அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்காததை மார்க்சிஸ்ட் கட்சி கண்டிக்கிறது.புதுச்சேரியில் பத்தாம் வகுப்பு தேறிய அரசுப்பள்ளி மாணவர்கள் பதினோறாம் வகுப்பில் சேரும் அளவிற்கான மேல்நிலைப் பள்ளிகளை அரசு உருவாக்கவில்லை.

இதன் விளைவாக இந்த ஆண்டு அரசு பள்ளியில் படித்த 7507 மாணவர்கள் பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற நிலையில் அனைவருக்கும் மேல்நிலைக் கல்வி பெறுவதற்கான வாய்ப்பு இல்லை. குறிப்பாக கல்வி அமைச்சரின் பகுதியான பாகூரில் 840 மாணவர்கள் பத்தாம் வகுப்பில் அரசுப்பள்ளிகளில் தேர்ச்சி பெற்றுள்ள நிலையில் பதினோராம் வகுப்பில் 550 மாணவர்கள் மட்டுமே மேல்நிலைக் கல்வியைத் தொடரக் கூடிய சூழ்நிலை உள்ளது. மீதி மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குரியாக உள்ளது. எனவே புதுச்சேரி அரசு தேவையான அளவில் மேல்நிலைப் பள்ளிகளை உருவாக்குவதற்கும், மேல்நிலைப்பள்ளி முடித்த மாணவர்கள் கல்வியைத் தொடர போதுமான அளவில் கல்லூரிகளை ஏற்படுத்த வேண்டும்.

புதுச்சேரியில் எந்தவிதமான கட்டுப்பாடும் இல்லாமல் புற்றீசல் போல் தனியார் பள்ளிகள் முளைத்து வருகின்றன. காமராஜர் வழியில் நடப்பதாகப் கூறிக்கொள்ளும் என்.ஆர். அரசு சின்னஞ்சிறிய மாநிலத்தில் அரசுப்பள்ளிகளை உருவாக்கி கல்விக்கண் திறப்பதற்கு மாறாக தனியார்களுக்கு அனுமதி வழங்கி மழலையர் கல்வி முதல் மருத்துவக் கல்லூரி வரை கல்விகட்டணக் கொள்ளை அடிக்க உதவி வருவது கண்டிக்கத்தக்கது. இதனால் ஏழை, எளிய மக்களின் குழந்தைகளுக்கு கல்வி வாய்ப்பு எட்டாக்கனியாகி வருகிறது. எனவே தேவையான அளவு அரசுப்பள்ளிகளையும், கல்லூரிகளையும் திறந்திட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கட்சி கேட்டுக் கொள்கிறது.

தனியார் பள்ளிகள்; எந்தவித வரைமுறை இன்றி பல்வேறு பெயர்களில் அதிகபடியாக கட்டணத்தை வசூலித்து பெற்றோரைக் கசக்கி பிழிந்து வருகின்றன. இதனால் பெற்றோர் மிகுந்த நெருக்கடிக்கும், மனஉளைச்சலுக்கும் உள்ளாகி வருகின்றனர். இது புதுச்சேரி அரசுக்கு தெரிந்தே நடைபெற்று வருகிறது. அரசு தனியார் பள்ளிகளுக்கு ஆதரவாக செயல்படுவதை கைவிட்டு கல்விகட்டணத்தை முறைப்படுத்த சட்டம் இயற்றிட வேண்டும்.

தனியார் பள்ளிகளில் ஏழை, எளிய மாணவர்களுக்கு 25 சதம் ஒதுக்கீட்டை உறுதி செய்து 2009-ம் ஆண்டு கல்வி உரிமைச்சட்டம்; இயற்றப்பட்டது. புதுச்சேரி அரசு இந்த சட்டத்தை புதுச்சேரியில் அமல்படுத்திட 2011-ம் ஆண்டு உத்தரவு பிறப்பித்தது, ஆண்டுகள் நான்கு கடந்தும் இந்த உத்தரவு இன்னும் அமலாகவில்லை. அமலாகாதது குறித்து புதுச்சேரி அரசும் கவலை கொள்ளவில்லை. மேலும் காலதாமதம் செய்யாமல் உடனடியாக இந்த 25 சதம் ஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும்.

கல்வி பயில்வதற்கான பல்வேறு வாய்ப்புகள் மறுக்கப்பட்டு சுயமுயற்சியில் அரசுப்பள்ளிகளில் படித்து தேர்ச்சி பெறும்; மாணவர்கள், தனியார் பள்ளிகளில் தேர்ச்சி பெற்றுவரும் மாணவர்களோடு போட்டிபோடக்கூடிய ஒரு சூழ்நிலை என்பது சென்டாக்கில் உள்ளது. இதனால் மருத்துவம் மற்றும் பொறியியல் போன்ற உயர்படிப்புகளுக்கு ஒ ரு சில மதிப்பெண் வித்தியாசத்திலேயே கூட அரசுப்பள்ளி மாணவர்களுக்கு வாய்ப்புகள் பறிபோய் விடுகிறது. புதுச்சேரி அரசு நிதி ஒதுக்கீடு செய்தும், இட ஒதுக்கீடு செய்தும் மேற்கொள்ளப்படும் சென்டாக்கில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு முன்னுரிமை அளித்திட வேண்டும்.

கல்வியை தனியார்மயமாக்கியும், காவிமயமாக்கியும் வரும் மத்திய பா.ஜ.க கூட்டணியில் சேர்ந்து புதுச்சேரியில் தனியார் கல்வி நிறுவனங்களுக்கு உடந்தையாகவும், புதுச்சேரி மாணவர்கள் நலனில் எந்தவித அக்கறையும் செலுத்தாத புதுச்சேரி அரசைக் கண்டித்தும் மேற்சொன்ன கோரிக்கைகளை நிறைவேற்றிட கோரியும் 29.06.2015 திங்கட்கிழமை காலை 10 மணிக்கு புதுச்சேரி அரசின் தலைமைச் செயலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தை நடத்துவதென புதுச்சேரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தீர்மானித்துள்ளது. அனைத்து பகுதி மக்களும் அதரவு தருமாறு கேட்டுக்கொள்கிறோம்.

Leave a Reply