புதுச்சேரி மாநில அரசின் பட்ஜெட் 2015-2016

புதுச்சேரி அரசு, 2011 ஆண்டு தேர்தல் காலத்தில் கொடுத்து, நிறைவேற்றப்படாத வாக்குறுதிகளை கோர்வையாக இணைக்கப்பட்டு இந்த பட்ஜெட்டில் மீண்டும் அறிவிக்கப்பட்டுள்ளது. நான்கு ஆண்டு காலம் ஆட்சியில் இருந்துகொண்டு மக்கள் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றாமல் அடுத்த தேர்தலுக்கு இன்னும் 9 மாதங்கள் உள்ள நிலையில் அரசு தந்திரமாக தேர்தலை மனதில் கொண்டு பட்ஜெட் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த பட்ஜெட்டில் முதியோர், விதவையர், மாற்றுத்திறனாளிகளின் உதவிதொகைகள் உயர்வு, மிக்சி, கிரைண்டர் போன்ற அறிவிப்புகளை தவிர தேர்தலின் போது கொடுத்த வாக்குறுதிகள் பற்றி எந்த அறிவிப்பும் இல்லை. இந்த மிக்சி, கிரைண்டர் வழங்குவது கூட தலித் மக்களுக்கான சிறப்பு கூறு நிதி திட்டத்தில் இருந்தும் கட்டிட தொழிலாளர் நலவாரிய தொகுப்பு நிதியிலிருந்தும் வழங்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளதே தவிர, இதற்கென்று தனி நிதி ஒதுக்கப்படவில்லை.

முறைசாரா தொழிலாளர்களுக்கான நலவாரியம், மாணவர்களுக்குக்கான பாக்கெட் மணி திட்டம், நின்றுபோய் உள்ள ரொட்டிப்பால் திட்டம் பற்றி பட்ஜெட் இடம்பெறவில்லை. பஞ்சாலைகளை செயல்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று கூறிவிட்டு, இருக்கின்ற குறைந்த எண்ணிக்கையிலான தொழிலாளர்களையும் VRS திட்டம் மூலம் வெளியேற்றம் செய்யும் நடவடிக்கை என்பது பாரதி, சுதேசி, ரோடியர் பஞ்சாலைகளை நவீனப்படுத்தி புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கும் எண்ணம் இந்த அரசுக்கு துளிக்கூடம் இல்லை என்பது தெள்ளத் தெளிவாகின்றது. விவசாயத்துக்கு அதிகப்படியான நிதி ஒதுக்கப்பட்டிருப்பதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. ஆனால், விவசாயத்தை லாபகரமான தொழிலாக மாற்றுவது மேலும் அழிந்து வரும் விவசாய நிலங்களை பாதுகாப்பது தொடர்பான அம்சங்கள் எதுவும் இல்லை. 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தை இந்த அரசு முழுமையாக நிராகரிப்பதாக தெரிகிறது.

வேலைவாய்ப்பு பற்றி ஒன்றுமே பேசாத இந்த அரசு, தேர்தல கால வாக்குறுதிகளான வீட்டுக்கு ஒருவருக்கு வேலை என்று சொல்லிவிட்டு, தற்போது பட்ஜெட் அறிக்கையில் இடம்பெறாதது, சமூக பதற்றத்தை அதிகரிப்பதோடு, சமூக குற்றங்களையும் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும், வேலைவாய்ப்பு அலுவலகத்தை, ஒரு ஆலோசனை மையமாக மாற்ற முயற்சிப்பது, புதுச்சேரி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவதிலிருந்து, அரசு தனது பொறுப்பை கைகழுவிடுவதற்கான வேலை.

சிறப்பு பொருளாதார மண்டலம் அமைக்க ஏற்கெனவே எடுக்கப்பட்ட 850 ஏக்கர் நிலம் தனியாருக்கு தாரை வார்க்கும் உள்நோக்கத்தில் சில அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது. புதுச்சேரியை நவீன நகரமாக உருவாக்குவதின் பின் விளைவுகள் பற்றி இந்த அரசு எந்தவித விவரத்தையும் தெரியப்படுத்தவில்லை. நலிவடைந்துள்ள பொதுத்துறை நிறுவன்ங்களை பாதுகாப்பது பற்றி, பல மாதங்களாக ஊதியம் பெறாமல் அல்லல்படும் பொதுத்துறை தொழிலாளர்களை பாதுகாப்பது பற்றி எந்த வித அறிவிப்பும் இல்லை. அரசுப் பள்ளிகளில் ஆசிரியர் பணியிடங்கள் இனி நேரடி நியமனம் மூலம் நிரப்பப்படும் என்ற அறிவிப்பு பல்வேறு ஊழல்களுக்கு வழிவகுக்கும். தகுதியானவர்கள், வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிந்திருப்பவர்கள் வேலை கிடைக்காமல் திண்டாடுவர்.

மொத்தத்தில் இந்த பட்ஜெட் அறிக்கை என்பது தேர்தலுக்கான முன்னோட்டமேயன்றி வேறெதுவும் இல்லை.

இவண்

இராஜாங்கம்.இரா

செயலாளர்

Leave a Reply