புதுச்சேரி மக்கள் நல கூட்டணியின் குறைந்தபட்ச செயல்திட்ட விளக்க பொதுக்கூட்டம் 06.02.2016 சனிக்கிழமை நடைபெற்றது. புதுவை-கடலூர் சாலையில் நடைபெற்ற கூட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் விசுவநாதன் தலைமை தாங்கினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் பிரதேச செயலாளர் ராஜாங்கம், காரைக்கால் பிரதேச செயலாளர் கலியபெருமாள், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் புதுவை மாநில முதன்மை செயலாளர் தேவ.பொழிலன், அரசியல் குழு துணை செயலாளர் பொன்.செந்தமிழ்செல்வன், புதுவை மாநில ம.தி.மு.க. பொறுப்புக்குழு தலைவர் சந்திரசேகரன், காரைக்கால் செயலாளர் அம்பலவாணன், புரட்சிகர சோசலிஸ்ட் கட்சி மாநில செயலாளர் லெனின் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தேசிய செயலாளர் ராஜா எம்.பி., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ் மாநில செயலாளர் ராமகிருஷ்ணன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தேசிய செயலாளர் நாராயணா, தமிழ் மாநில செயலாளர் முத்தரசன் மற்றும் பலர் சிறப்புரையாற்றினார்கள்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் பேசியதாவது:-
புதுச்சேரி பாரதி, பாரதிதாசன் ஆகியோர் வாழ்ந்த இடமாகும். விடுதலைப் போராட்ட வீரர் வ.சுப்பையா போராடி மக்களுக்கு உரிமைகளை பெற்றுத் தந்த இடமாகும். திமுக, அதிமுகவுக்கு மாற்றாக தமிழகத்தில் மக்கள் நலக்கூட்டணி உருவாகி உள்ளது. அதே போல் புதுச்சேரியில் காங்கிரஸ், ஆளும் என்.ஆர் காங்கிரஸ் கட்சிகளுக்கு மாற்றாக புதிய கொள்கை மாற்றத்துடன் மக்கள் நலக் கூட்டணி உருவாகி உள்ளது.
திமுக தலைவர் குடும்பமே ஊழல் வழக்கை சந்தித்து வருகிறது. அதிமுகவின் பொதுச் செயலாளர் மீதே ஊழல் வழக்கு உள்ளது. இருவரும் தண் டனை பெற்று சிறைக்கு செல்ல வேண்டியவர்கள். மதுரை கிரானைட் கொள்ளை இரு கட்சிகளின் ஆட்சியின்போது நடை பெற்றுள்ளது. இதனால் அரசுக்கு ஒரு லட்சத்து 6 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
விழுப்புரம் தனியார் கல்லூரியில் 3 மாணவிகள் இறந்ததற்கு கார ணம் கல்லூரியில் அடிப்படை கட்டமைப்பு இல்லாததே. அதற்கு அனுமதி வழங்கியதில் திமுக, பாமக, அதிமுகவுக்கு பங்கு உள்ளதால் அவர்கள் தண்டிக்கப்பட வேண்டியவர்கள் என்றார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலாளர் து.ராஜா பேசியதாவது:-
“இந்தியாவின் கவனத்தை தமிழகம் ஈர்த் துள்ளது. தென்பகுதியில் ஏதோ மாற்றம் நிகழ் கிறது. புதிய அரசியல் மாற்று கொள்கை, மக்கள் நலக்கூட்டணி என்ன, அதன் கொள் கைகள் என்ன என்று இந்தியாவே உற்று நோக்கி யுள்ளது. மாற்றம் என்பது சமூகத்தில், அரசிய லில் ஏற்பட வேண்டும். அத்தகைய மாற்றத்தைமக்கள் நலக்கூட்டணி தரும். அதற்கு அந்தவல்லமை உள்ளது என இந்தியாவே எதிர் நோக்கி உள்ளது” என்று குறிப்பிட்டார். “மக்கள் விரும்பும் தலைவர்களால் உரு வாக்கப்பட்ட கூட்டணி தான் மக்கள் நலக்கூட்டணி ஆகும். பா.ஜ.கவுக்கும், புதுவைசுதந்திரப் போராட்டத்துக்கும், இந்திய விடு தலைப் போராட்டத்துக்கும் எந்த தொடர் பும் இல்லை. நாட்டின் விடுதலைக்குப் பாடு படாதவர்கள் ஆட்சியில் அமர்ந்துள்ளனர். மக்களை காப்பாற்றுவதற்காக மாற்று அரசியல் வேண்டும், மாற்றுப் பாதை வேண்டும் என மக்கள் எதிர்நோக்கி உள்ளனர். அம் மாற்றத்தை புதுவையிலும் மக்கள் நலக் கூட்டணி வழங்கும்” என்றும் து.ராஜா கூறி னார்.
பொதுக்கூட்டத்தில் ம.தி. மு.க. பொதுச்செயலாளர் வைகோ பேசியதாவது:-
தமிழகம் மற்றும் புதுவையில் மாற்று அரசியல், மாற்றுப்பாதை, மதச்சார்பின்மை, சமூக நீதி நிலையான வளர்ச்சி, கடன் சுமையிலிருந்து மீட்டு, ஊழல் தடுப்பு ஆகிய கொள்கை முன்நிறுத்தி மக்கள் நல கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது. அசுர சக்திகள் நம்மை அழிக்க நினைக்கின்றன. என்னை மக்கள் நல கூட்டணியின் ஒருங்கிணைப்பாளராக அறிவித்து உள்ளார்கள். ஒரு தாய், தனது குழந்தையை பாதுகாப்பதுபோல மக்கள் நல கூட்டணியை பாதுகாப்பேன். தமிழகத்தில் தலித் சமுதாய மக்கள் 21 சதவீதம் பேர் உள்ளனர். அந்த மக்களில் இருந்து ஒருவர் தமிழகத்தில் முதல்- அமைச்சராக தேர்வு செய்யப்படுவார்.
புதுச்சேரி மண்ணுக்கு என தனி சிறப்பு உண்டு. புதுவை மாநிலம் முழு அந்தஸ்து பெறாமல் உள்ளது. எதற்கெடுத்தாலும் மத்திய அரசை நாட வேண்டிய நிலை உள்ளது. புதுச்சேரிக்கு என்றோ தனி மாநில அந்தஸ்து கிடைத்திருக்கும். ஆனால் இன்றுவரையில் மாநில அந்தஸ்து பெறமுடியவில்லை. புதுவை முதல்-அமைச்சர் ரங்கசாமி சட்டசபையில் மாநில அந்தஸ்து தீர்மானம் நிறைவேற்றியும் அதனை பெற முடியவில்லை. கடந்த பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவுடன், என்.ஆர்.காங்கிரஸ் அரசு கைகோர்த்தது. அதன் பின்னரும் புதுவைக்கு மாநில அந்தஸ்து தகுதி பெற எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. புதுவை மாநிலம் அதிகாரம் இல்லாத மாநிலமாக உள்ளது. புதுவைக்கு மாநில அந்தஸ்து கேட்ட கவர்னர் வீரேந்திர கட்டாரியா தூக்கி வீசப்பட்டார். தற்போது புதுவைக்கு என தனி கவர்னர் இல்லாத மாநிலமாக இருக்கிறது.
மாறுதலை உருவாக்க முடியும்
புதுச்சேரியில் மக்கள் நல கூட்டணி ஆட்சிக்கு வந்தவுடன் அனைத்து மக்களையும் ஒன்று திரட்டி மாநில அந்தஸ்து பெறுவோம். மக்கள் நல கூட்டணி பலம் வாய்ந்த கட்சிகளை எதிர்த்து நிற்கிறது. உறுதியுடன் மகத்தான மாறுதலை ஏற்படுத்த முடியும் என்ற நம்பிக்கையுடன் வீதி, வீதியாக சென்று அனைவரும் பிரசாரம் செய்யுங்கள். மக்கள் நல கூட்டணி ஆட்சிக்கு வந்தவுடன் லோக் அயுக்தா சட்டம் கொண்டு வரப்படும், ஊழலை ஒழிப்போம், மது இல்லாத மாநிலமாக மாற்றிக்காட்டுவோம், தொழிலாளர்களின் கண்ணீரை துடைப்போம், வேலையில்லாத இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கி கொடுப்போம் என்பதை உறுதியுடன் தெரிவித்து கொள்கிறேன். தமிழகம், புதுச்சேரியில் மக்கள் நல கூட்டணி ஆட்சி அமைக்க கனவு காண்போம், கடமையாற்றுவோம், வெற்றி காண்போம். இவ்வாறு வைகோ பேசினார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் பேசியதாவது:-
தமிழகத்தை திமுக, அதிமுகவினர் 5 ஆண்டு கள் மாறி, மாறி ஆட்சி செய்கின்றனர். அங்கே ஆட்கள் மட்டுமே மாறுகிறார்களே தவிர வேறு மாற்றம் இல்லை. எங்கும் ஊழல் மட் டுமே நிரம்பியுள்ளது. பூரணமதுவிலக்கு வரா மல் இருக்க திமுக ஆட்சியில் இருக்கும் போது என்ன காரணம் கூறியதோ அதனையே அதிமுகவும் கூறுகிறது.திமுக பெரிய கட்சி என்று கூறிக்கொள் கிறது. ஜனநாயக ரீதியாக முடிவெடுப்பதாக கூறும் அக்கட்சியில் யார் தலைவர், முதல்வர் வேட்பாளர் யார் என்பதை முடிவு செய்யும் தலைவராக சுப்பிரமணியசாமி இருக்கிறார். திமுக தலைவரின் குடும்பத்தினர் மீதும், அதிமுக பொதுச்செயலர் மீதும் ஊழல் வழக்கு உள்ளது. மக்கள் மாற்றம் வராதா என்று நீண்ட காலமாக ஏக்கத்துடன் எதிர்பார்த்ததை மக்கள் நல கூட்டணி நிறைவேற்றி வைக்கும் என்றார்.
கூட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் பேசியதாவது:-
மாற்று அரசியல், மாற்றுப்பாதை கொள்கையை முன்வைத்து மக்கள் நல கூட்டணியை அமைத்துள்ளோம். கூட்டணிக்கு யாரும் அழைக்க மாட்டார்களா? என்று நாங்கள் ஏங்கி தவிக்கவில்லை. மக்களை பற்றியும், நாட்டின் நலனையும் எண்ணி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இந்த முடிவை துணிச்சலாக எடுத்துள்ளோம்.
மக்கள் நல கூட்டணியில் உள்ள அனைத்து கட்சி தலைவர்களுக்கும் முதல்-அமைச்சராக அனைத்து தகுதியும் உள்ளது. தமிழகத்தில் தலித் சமுதாய மக்கள் 21 சதவீதம் உள்ளனர். அந்த சமுதாயத்தை சேர்ந்த யாரேனும் ஒருவர் முதல்-அமைச்சராக வேண்டும் இது எனது எண்ணம். மது என்கிற அரக்கனிடமிருந்து புதுச்சேரி, தமிழக மக்களை பாதுகாப்போம்.
மக்கள் நல கூட்டணி எப்போது உடையும் என அனைவரும் எதிர்பார்க்கிறார்கள். எங்கள் கூட்டணி மகத்தான கூட்டணி நம்பிக்கையோடு தேர்தலை சந்திப்போம், வெற்றி பெறுவோம்.இவ்வாறு அவர் பேசினார்.
முன்னதாக மக்கள் நல கூட்டணியின் இணையதளத்தை ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ தொடங்கி வைத்தார். மக்கள் நல கூட்டணியின் ‘லோகோ’வை இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தேசிய செயலாளர் ராஜா எம்.பி. திறந்து வைத்தார். அதைத்தொடர்ந்து அவர், மக்கள் நல கூட்டணியின் குறைந்தபட்ச செயல்திட்ட புத்தகத்தை வெளியிட்டார். அதனை இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தேசிய செயலாளர் நாராயணா, தமிழ் மாநில செயலாளர் முத்தரசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ் மாநில செயலாளர் ராமகிருஷ்ணன் ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.