புதுவை அரசு துறை மற்றும் காவல்துறையில் உள்ள ஊழலை ஒழிக்க, லஞ்ச ஒழிப்புத்துறையை பலப்படுத்த வேண்டும்

CRIME-CRIMINAL-TRACKINGபுதுவை அரசு துறை மற்றும் காவல்துறையில் உள்ள ஊழலை ஒழிக்க, லஞ்ச ஒழிப்புத்துறையை பலப்படுத்த வேண்டும் என கவர்னர் அஜய்குமார் சிங் பேசினார்.

பரிமாற்றம் செய்யும் திட்டம்

புதுச்சேரி காவல்துறையின் சேவை வெளிப்படையாக இருக்கும் வகையில் குற்றம் மற்றும் குற்றவாளிகளை பற்றிய தகவல்களை இணையதளம் மூலம் பரிமாற்றம் செய்யும் திட்டம் (சி.சி.டி.என்.எஸ்.) ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதில் பொதுமக்கள் காவல் நிலையங்களை வலைதளத்தின் மூலமாக நேரடியாக தொடர்பு கொள்ளக்கூடிய வசதிகள் உள்ளது.

இதன் தொடக்கவிழா புதுவை கோரிமேட்டில் உள்ள அன்னைதெரசா சுகாதார அறிவியல் முதுகலை மற்றும் ஆராய்ச்சி மைய பயிற்சி கூடத்தில் நடைபெற்றது. விழாவில் கவர்னர் அஜய்குமார் சிங், முதல்–அமைச்சர் ரங்கசாமி ஆகியோர் கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தனர். அதைத்தொடர்ந்து அவர்கள் குற்றம் மற்றும் குற்றவாளிகள் பற்றி தகவல்கள் இணையதள சேவையை தொடங்கி வைத்தனர். மேலும் இந்த திட்டம் தொடர்பான விழிப்புணர் கையேட்டையும் அவர்கள் வெளியிட்டனர்.

அதைத்தொடர்ந்து புதுவை தலைமை செயலாளர் மனோஜ் பரிதா, நிதித்துறை செயலாளர் சந்த்ரேகர்பரிதி, தேசிய குற்ற ஆவணக்காப்பக துணை இயக்குனர் பிரசுன்னகுப்தா ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.

விழாவில் கவர்னர் அஜய்குமார் பேசியதாவது:–

குற்றவாளிகளை சுலபமாக கண்டறியலாம்

நாடு முழுவதும் காவல்துறையை நவீனப்படுத்துவது தொடர்பான திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பான குழுவில் நான் இடம்பெற்றிருந்தேன். அப்போது சி.சி.டி.என்.எஸ். திட்டத்தை மாநில அரசுகளிடம் விட்டுவிடலாம் என கருத்து தெரிவித்தனர். இந்த திட்டம் முக்கியத்துவம் வாய்ந்த திட்டம் மத்திய அரசு திட்டங்களின் 100 சதவீத நிதியுதவியுடன் இதை செயல்படுத்த வலியுறுத்தினேன்.

யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் குற்றச்செயல்களை குறைக்க காவல்துறைக்கு மிகுந்த பொறுப்பு உள்ளது. இந்த திட்டம் மூலமாக குற்றவாளிகளை சுலபமாக கண்டறியலாம். மேலும் பொதுமக்கள் நேரடியாக காவல்நிலையங்களுக்கு சென்று புகார் அளிப்பதற்கு பதிலாக, இணையதளம் வழியாக தங்களது புகார்களை பதிவு செய்யலாம்.

லஞ்ச ஒழிப்புத்துறை…

இந்த திட்டத்தில் எந்த தொழில்நுட்ப சிக்கலும் நேராமல் கவனமுடன் இருக்க வேண்டும். இந்த திட்டத்தை டி.ஐ.ஜி.யே நேரடியாக கண்காணிக்க வேண்டும். அதேபோல் இதுதொடர்பாக எனக்கு மாதந்தோறும் திட்டத்தில் என்ன நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்பதை தெரிவிக்க வேண்டும். இந்த திட்டத்தின் தகவல் பதிவுகளை அவ்வப்போது புதுப்பித்து கொண்டே இருக்க வேண்டும். அவ்வாறு இல்லையெனில் திட்டத்தின் நோக்கமே சிதைந்துவிடும்.

குற்றவாளிகளும் தகவல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு வருகிறார்கள். அவர்களை பிடிக்க, போலீசாருக்கு உரிய பயிற்சியை அவ்வப்போது அளிக்க வேண்டும். புதுவை அரசு துறைகள், காவல்துறையில் ஊழலை ஒழிப்பது அவசியம். இதற்காக லஞ்ச ஒழிப்புத்துறை பலப்படுத்த வேண்டும். புதுவையின் லஞ்ச ஒழிப்பு போலீஸ் சூப்பிரண்டு யார் என்றே எனக்கு தெரியாது.

இரும்பு கரம்…

புதுச்சேரியில் குற்றங்களை தடுப்பதில் காவல்துறை தீவிரமாக செயல்பட வேண்டும். குற்றவாளிகளை போலீசார் இரும்பு கரம் கொண்டு அடக்க வேண்டும். போலீசாரின் நடவடிக்கையால், குற்றங்களில் ஈடுபடவே குற்றவாளிகள் அஞ்ச வேண்டும்.

காவல் நிலையங்களுக்கு புகார் அளிக்க வரும் பொதுமக்களிடம், போலீசார் கனிவுடன் நடந்துகொள்ள வேண்டும். சைபர் கிரைம் குற்றங்களை எதிர்கொள்வது தொடர்பாகவும், சட்டம்–ஒழுங்கு பாதுகாப்பு குறித்தும் காவல்துறை அதிகாரிகளுடன் கலந்து ஆலோசனை நடத்த உள்ளேன். இவ்வாறு கவர்னர் அஜய்குமார் சிங் பேசினார்.

www.citizenportal.police.py.gov.in

www.citizenportal.police.py.gov.in/citizen/login.aspx

www.citizenportal.police.py.gov.in/citizen/login.aspxhttp://citizenportal.police.py.gov.in/citizen/login.aspx

Leave a Reply