பெத்துசெட்டிப்பேட்டை, கொல்லிமேடு மைதானம் ஆக்கிரமிப்பு முயற்சியை   தடுத்தல்

பெறுதல்

            மாண்புமிகு மாநில முதலமைச்சர் அவர்கள்

            புதுச்சேரி அரசு, புதுச்சேரி

 மதிப்பிற்குரியீர் ,

             வணக்கம்!

             பொருள் : பெத்துசெட்டிப்பேட்டை கொல்லிமேடு மைதானம் ஆக்கிரமிப்பு முயற்சியை   தடுத்தல் விளையாட்டு அரங்கம் கட்டக்கோருதல் தொடர்பாக.

             புதுச்சேரி யூனியன் பிரதேசம், உழவர்கரை நகராட்சி, இலாசுபேட்டைத் தொகுதியில் பெத்துச்செட்டிப்பேட்டை வார்டில் கொல்லிமேட்டில் சுமார் 4 ஏக்கர் பரப்பளவில் காலி இடம் உள்ளது. மேற்படி இடம் பெத்துசெட்டிப்பேட்டை பகுதி உருவானதிலிருந்தே 80 ஆண்டுகளுக்கு மேலாக பொதுமக்கள் பயன்பாட்டில் இருந்து வருகிறது. தற்பொழுது அப்பகுதி சிறுவர்கள், இளைஞர்கள் விளையாட பயன்பட்டு வருகிறது. இந்த நிலையில் பல கோடி மதிப்புள்ள மேற்படி இடத்தை கையகப்படுத்த பலர் முயன்றுவருகின்றனர்.

             புதுச்சேரி அரசு வருவாய்துறையில் சர்வேயராக பணிசெய்த முத்தியால்பேட்டையைச் சேர்ந்த திரு.ராமசாமி தனக்குச் சொந்தம் என உரிமை கொண்டாடிவருகிறார். பெத்துசெட்டிப்பேட்டை கோயில் நிர்வாகம் கோயிலுக்குரிய இடம் என உரிமை கொண்டாடுகிறது. இவ்வாறு பலர் உரிமை கோரி புதுச்சேரி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். மேற்படி வழக்கு சுமார் 10 ஆண்டுகளுக்கும் மேலாக நீதிமன்ற விசாரணையில் இருந்துவருகிறது. இந்நிலையில் கொல்லிமேடு மைதானத்தை உரிமை கொண்டாடுபவர்களிடம் சமரசம் செய்து மேற்படி இடத்தை வாங்குவதற்கு பணபலமும், அரசியல் செல்வாக்கும் படைத்த நபர்கள் முயற்சித்துக் கொண்டிருக்கின்றனர்.

             கொல்லிமேடு காலி மைதானம் அரசுக்குச் சொந்தமான இடமாகும். அதிகாரத்தைப் பயன்படுத்தி, போலி ஆவணங்களைத் தயார் செய்து இடத்தை அபகரிக்க முயற்சிப்பது கடும் தண்டனைக்குரிய குற்றமாகும். அரசு வசம் உள்ள பிரெஞ்சு ஆவணங்கள் உள்ளிட்ட இதர ஆவணங்களை ஆய்வு செய்தால் உண்மைதன்மை தெரியவரும். ஆகவே, மாநில அரசு ஒரு இடத்திற்கு பலர் உரிமை கொண்டாடுவது குறித்து, அரசு வசம் உள்ள ஆவணங்களை சரிபார்த்து உண்மைத்தன்மை வெளியிட உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிட வேண்டுகிறோம்.

             மேலும் மேற்படி கொல்லிமேடு மைதானத்தை வேறுஎவருக்கும் விற்பனை செய்வதற்கோ, கிரயம் செய்வதற்கோ தடைவிதித்திட வேண்டுகிறோம். பெத்துசெட்டிப்பேட்டை கருவடிக்குப்பம், இலாசுப்பேட்டை, சாந்திநகர் மக்களின் பயன்பாட்டிற்கும், அப்பகுதி சிறுவர்கள் மற்றும் இளைஞர்களின் தனித்திறன் மேம்பாட்டிற்கும் பூங்காவுடன் கூடிய விளையாட்டு அரங்கம் கட்டுவதற்கு கொல்லிமேடு மைதானத்தை பயன்படுத்திட தாங்கள் தலையிட்டு ஆவண செய்ய வேண்டுகிறோம்.  மேற்படி பகுதி மக்கள் சார்பில் கையெழுத்திட்டு எங்களின் கோரிக்கையை தங்களின் மேலான தலையீட்டிற்கு சமர்ப்பிக்கின்றோம்.

21.08.2013

Leave a Reply