நிதி நெருக்கடி
ஏறிவரும் விலைவாசி மற்றும் பணவீக்கத்திற்கு ஏற்றாற் போல மத்திய திட்டக்குழுவிடமிருந்து புதுச்சேரிக்கு உரிய நிதி ஒதுக்கீடு பெறுவதில் மாநில அரசு தவறியுள்ளது. மேலும் புதிய கடன்களை வாங்க அரசு முயல்கிறது. நடப்பு நிதியாண்டிற்கு நடைமுறைக்கு மாறாக அமைச்சர்கள் இரு துருவங்களாக சென்று திட்டக்குழுவிடமிருந்து ரூ 1750 கோடி மட்டுமே பெற்று வந்துள்ளனர். மத்திய அரசின் ஊக்குவிப்பு திட்டங்களும் அதற்கான நிதி ஒதுக்கீடுகளும் பெருமளவில் குறைக்கப்பட்டுள்ளன.
மத்திய அரசு ஒதுக்கியுள்ள நிதி பொதுப்பணித்துறை , சமூகநலம், கல்வி, மருத்துவம் ஆகிய துறைகளுக்கு கடந்த ஆண்டில் ஏற்பட்ட பற்றாக்குறையை ஈடுகட்டவே பயன்படும் . மீண்டும் முக்கிய துறைகளுக்கு நிதி இல்லாமல் வளர்ச்சி திட்டங்கள் முடக்கப்படும். நடப்பு ஆண்டிற்கு பொதுப்பணித்துறைக்கு புதிய திட்டங்கள் எதையும் மேற்கொள்ளக் கூடாது என்று சுற்றறிக்கை போடப்பட்டுள்ளது. அரசின் நிதி நெருக்கடி காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக முதியோர் , விதவை ஓய்வூதியம், விதவை பெண்களின் திருமண உதவி திட்டம், கர்ப்பினி பெண்களுக்கான நிதி உதவி திட்டம் , இலவச புடவை – கைலி வழங்கும் திட்டம் ……. போன்றவைகள் கிடப்பில் போடப்பட்டுள்ளது. சிவப்பு அட்டைதாரர்களுக்கு இலவச அரிசி, சென்டாக் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை ஆகிய திட்டங்களும் நிறுத்தப்பட்டுள்ளன.
புதுச்சேரி அரசின் அவலம்
புதுச்சேரி மாநிலத்தில் ஆளும் காங்கிரஸ் அரசு தேர்தல் வாக்குறுதிகள் சட்டப்பேரவையில் அறிவித்த நலத்திட்டங்கள் பலவற்றை செயல்படுத்தவில்லை. மாறாக முதலைமைச்சர் மற்றும் அமைச்சர்களுக்குள் ஏற்பட்டுள்ள மோதல் மக்கள் பிரச்சனைகளை பின்னுக்கு தள்ளியள்ளது.
அமைச்சர்களுக்குள் ஏற்பட்டுள்ள மோதல் அதிகாரிகள் மட்டத்திலும் பிரதிபலிக்கிறது. இதனால் வளர்ச்சி திட்டங்கள் மற்றும் நலத்திட்டங்கள் முடங்கியுள்ளன.
மாநில அரசுக்கு கூடுதல் அதிகாரம்
சமீபகாலமாக எந்த ஒரு திட்டத்தினையும் அமுலாக்க அரசுக்க அதிகாரமில்லை. நிதி இல்லை என்ற குரல் அதிகரித்து வருகிறது. மாநிலத்தின் முன்னேற்றம் , மக்கள் நலனுக்கான சட்டம் இயற்றும் அதிகாரம் , நிதி நிர்வாகம் , ஆட்சி நிர்வாகம் ஆகியவற்றில் முடிவெடுக்கும் அதிகாரம் புதுச்சேரி அரசுக்கு இல்லை.
புதுச்சேரி மாநிலத்திற்கு 2 ஐந்தாண்டுகளுக்கான நிதி உதவியுடன் கூடிய சிறப்பு மாநில அந்தஸ்து அல்லது நிலுவை கடன் 2400 கோடி ரூபாயை ரத்து செய்து மாநில அந்தஸ்து வழங்க மத்திய அரசை வலியுறுத்த மாநிலஅரசு ஆர்வம் காட்டவில்லை.
பொது வினியோக முறை
மாநில அரசும் விலைவாசி கொடுமையில் இருந்து மக்களை பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. தற்போது ரேஷன் கடைகளில் வழங்கப்படுகிற 5 அத்தியாவசியப் பொருட்களுடன் சேர்ந்து 15 பொருட்களை மானிய விலையில் அனைத்து ரேஷன்கார்டுகளுக்கும் வழங்க வேண்டும். மேலும் இலவச அரிசி திட்டத்தை தொடர்ந்து வழங்கவும் , ரூ 2 க்கு ஒரு கிலோ அரிசி வழங்கவும் அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் . சமையல் எரிவாயு விலைஉயர்வை குறைக்க மாநில அரசு மானியம் வழங்க வேண்டும்.
வீடற்றவர்களுக்கு வீட்டுமனைப்பட்டா
மாநிலத்தில் வீடற்ற மக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. வீதி ஓரங்களில் வாழ்பவர்கள், வாடகை வீட்டில் குடியிப்பவர்கள் , புறம்போக்கு மற்றும் கோவில் இடங்களில் வசிப்பவர்களுக்கு மனைப்பட்டா வழங்குவதில் குறைபாடுகள் நீடிக்கிறது. முறையான கணக்கெடுப்பு அரசிடம் இல்லை. 1974 ம் ஆண்டு புதுச்சேரி மற்றும் காரைக்காலில் 901.20 ஹெக்டர் நிலங்கள் உபரி நிலங்களாக கண்டறியப்பட்டது. அதில் 422.02 ஹெக்டர் நிலங்கள் அரசின் பல்வேறு திட்டங்களும் , குடியிருப்பு மனை பட்டாக்கள் வழங்கவும் பயன்படுத்தப்பட்டுள்ளது. மீதியுள்ள நிலங்கள் சுமார் 480 ஹெக்டெர் நிலங்கள் குறித்து 39 வழக்குகள் கடந்த 30 ஆண்டுகளாக நீதிமன்ற நிலுவையில் உள்ளன. வழக்குகளை விரைந்து முடித்து நிலமற்றவர்களுக்கு நிலம் வீட்டு மனை பட்டா வழங்கிடவும் புறம்போக்குகளில் குடியிருப்பவர்களுக்கு பட்டா வழங்கவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். நகரப்பகுதிகளில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டுவது குறித்து வீடற்ற மக்கள் குறித்த கணக்கெடுப்பு நடத்தவும் அரசு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்குதல்
புதுச்சேரி மாநிலத்தில் வேலையற்ற இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே செல்கின்றது. 2008 மார்ச் 31 வரை 1,92,216 பேர் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ளனர். அரசு துறைகளில் காலியிடங்கள் வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் நிறப்பபடுவதற்கு மாறாக கொள்ளைப்புறமாக நேரடி நியமனங்கள் மூலம் நிரப்பப்படுகின்றன. இது சமூக நீதிக்கு எதிரானதாகும். மேலும் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க வேலைவாய்ப்பகம் மூலம் பணி நியமனம் செய்ய அரசு உயர்பதவிகளில் புதுச்சேரி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பளிக்கும் பொருட்டு பணித்தேர்வானையம் உருவாக்க நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். வேலையற்ற இளைஞர்களுக்கு நிவாரணம் வழங்கும் திட்டம் அரசால் அறிவிக்கப்பட்டு கடுமையான விதிமுறைகளால் ஒருவர் கூட விண்ணப்பிக்க இயலாத நிலையினை அரசு மறைமுகமாக ஏற்படுத்தியது. இதை தவிர்த்து தகுதியுள்ள அனைவருக்கும் வேலையில்லா கால நிவாரணம் வழங்க அரசு முன்வர வேண்டும்.
தொழிலாளர் நலன்
புதுச்சேரி மாநிலத்தின் பிரதான தொழில் கேந்திரமான பஞ்சாலைகள் நவீனபடுத்தப்படாததால் இன்றைக்கு பஞ்சாலை தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது. பாரதி, சுதேசி பஞ்சாலைகளை என்.டி.சி நிர்வாகத்திடம் இருந்து புதுச்சேரி அரசு பெற்றுக்கொண்டாலும் அதே ஆலைகளை நவீனப்படுத்தி உற்பத்தியை பெருக்குவதற்கான நடவடிக்கை இல்லாததால் பஞ்சாலை தொழிலாளர்கள் மிகுந்த நெருக்கடிக்கு ஆளாகியுள்ளனர்.
புதுச்சேரி அரசு சரியான தொழில் கொள்கையோ தொழிலாளர் நலக்கொள்கையோ பின்பற்றவில்லை. தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளர்கள் கூடுதல் மணி நேர வேலை , அடிமட்ட சம்பளம், சட்டவிரோத ஒப்பந்த தொழிலாளர் முறை , பணிப்பாதுகாப்பின்மை என்ற முறையில் தொழிலாளர் உழைப்பு சுரண்டலும், தொழிற்சங்க உரிமைப் பறிப்பும் தொடர்கிறது.
கட்டுமான நலவாரியம் மற்றும் முறைசார தொழிலாளர் நலச்சங்கம் ஆகியவற்றில் போதிய ஊழியர்கள் இல்லாமல் செயலற்ற நிலையில் உள்ளன. கட்டுமான நலவாரியத்தில் விண்ணப்பம் வழங்கும் பணி ஓராண்டுகாலமாக நிறுத்தப்பட்டுள்ளன. வீட்டு வேலை செய்யும் பெண்கள் உள்ளிட்ட புதிய முறைசாரா பிரிவு தொழிலாளர்கள் நலச்சங்கத்தில் சேர்க்க மறுக்கப்படுகிறது. இத்தகைய தொழிலாளர் விரோத போக்கு களைந்திட வேண்டும்.
பெருகிவரும் சமூகக்குற்றங்கள்
சமீபகாலமாக புதுச்சேரி மாநிலத்தில் கொலை, கொள்ளைகள், வழிப்பறிகள் அதிகரித்து வருகின்றன. இவற்றை கட்டுப்படுத்த காவல் துறை துரிதமாக செயல்படுவதில்லை. சமூக விரோதிகள் அரசியல்வாதிகள்- காவல் துறை அதிகாரிகள் கூட்டு அதிகரித்துள்ளதால் பல வழக்குகளில் உண்மையான குற்றவாளிகள் தப்பித்துக் கொள்கின்றனர். சிறைச்சாலைகளுக்குள்ளேயே கொலை செய்யும் அளவிற்கு நிலமை மோசமாகியுள்ளது. பல்கலைக்கழக ஊழியர் கொலை உட்பட பல கொலைகளில் குற்றவாளிகளை பிடிக்க முடியாமல் காவல் துறை திணறுகிறது. காவல் துறையில் இரண்டு பிரிவாக அதிகாரிகள் பகிரங்கமாக செயல்படும் நிலை உருவாகியுள்ளது. திறமையான அதிகாரிகள் சட்டம் ஒழுங்கு பிரிவிற்கு பணி அமர்த்தப்படுவதில்லை. மாநிலத்தில் சமூக குற்றங்களை தடுக்க , சமூக விரோதிகளை ஒடுக்க ரௌடிகளுக்கு துணைபோகக்கூடிய காவல்துறை அதிகாரிகள் மற்றும் அரசியல் பிரமுகர் மீது அரசு உறுதியான நடவடிக்கை எடுக்க முன்வரவேண்டும்
மாணவர்நலன்
புதுச்சேரி மாநிலத்தில் தனியார் மருத்துவ பொறியியல் கல்லூரிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ள போதிலும் அரசாங்கத்திற்கு உரிய இடங்களை கேட்டுப்பெறுவதில் அரசு கவனம் செலுத்தாததால் மாணவர்கள் எதிர்காலம் குறித்து அச்சம் எழுந்துள்ளது. பிற மாநிலங்களில் புதுச்சேரி மாணவர்களுக்கு உயர்கல்வி நிறுவனங்களில் ஒதுக்கப்பட்ட இடங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. ூ1 மாணவர் சேர்க்கையில் பல்வேறு குழப்பங்கள் நிலவுகின்றன. தனியார் பள்ளிகளில் கல்விக்கட்டணங்கள் பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. அரசு பள்ளிகளை மாணவர்களின் தேர்ச்சி விகிதம் குறைந்து வருகின்றது. இவற்றை எல்லாம் போக்குவதில் காங்கிரஸ் அரசாங்கம் அக்கரை காட்டவில்லை. புதுச்சேரி பல்கலை கழகத்தில் தொடர்ந்து மதிப்பெண் பட்டியல் திருத்தம் குறித்து புகார்கள் எழுகின்றன. அது குறித்து விசாரணை நடத்தப்படவேண்டும் புதுச்சேரி பல்கலை கழகத்தில் புதுச்சேரி மாணவர்களுக்கு உரிய இடஒதுக்கீடு வழங்கிடவும் பயிற்று மொழி ஆங்கிலமாக இருந்தாலும் தாய்மொழியில் தேர்வு எழுதுவதை தொடரவேண்டும்
நாட்டின் பாதுகாப்பு சுயசார்பு பொருளாதாரம், உழைப்பாளி மக்களின் நலன் பாதுகாத்திட மத்தியிலும் மாநிலத்திலும் மாறுபட்ட அரசியல் மாற்றத்தை உருவாக்க அனைத்துப் பகுதி மக்களும் ஆதரவளிக்க வேண்டுகிறோம் .
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி
புதுச்சேரி மாநிலக்குழு புதுச்சேரி பிரதேசக்குழு