மழையால் 7ஆயிரம் ஹெக்டேர் விளைநிலம் பாதிப்பு

தொடர் மழை, வெள்ளத்தால் புதுச்சேரியில், மொத்தம் 7ஆயிரம் ஹெக்டேர் விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக கணக் கெடுப்பில் தெரியவந்துள்ளது.

வங்கக் கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வு நிலையால், புதுச்சேரியில் தொடர்ந்து 10 நாள்களாக பலத்த மழை பெய்தது. இதனால் நகரில் பெரும்பாலான சாலைகள் சேதமடைந்துள்ளன.

மேலும் பல்வேறு பகுதிகளில் வீடுகளும் இடிந்து விழுந்தன. இந்நிலையில் புதுவையின் கிராமப்புறப் பகுதிகளில் விவசாய நிலங்களிலும் மழைநீர் புகுந்து பெரும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. புதுவையின் நெற்களஞ்சியம் என அழைக்கப்படும் பாகூரில் பெரும்பாலும் நெல் தான் சாகுபடி செய்யப்படுகிறது. அதே போல் அரியாங்குப்பம், வில்லியனூர்,

மண்ணாடிப்பட்டு கொம்யூன் பகுதிகளில் கரும்பு, மரவள்ளிக் கிழங்கு, வாழை, வெற்றிலை பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில், தொடர் மழையால் விவசாய நிலங்களில் தொடர்ந்து மழைநீர் தேங்கியதால் பயிர்கள் பலத்த சேதமடைந்துள்ளன. இதனால், மழையால் வேளாண் பயிர்கள் பாதிப்பு குறித்து கணக்கெடுப்பு நடத்த முதல்வர் என்.ரங்கசாமி உத்தரவிட்டார்.

அதன்படி கூடுதல் வேளாண்மை இயக்குநர் ரவிப்பிரகாசம் தலைமையில் வேளாண்துறை உழவர் உதவியக அதிகாரிகள் பயிர்கள் பாதிப்பு குறித்து கணக்கெடுப்பு மேற்கொண்டனர்.

புதுவை முழுவதும் மொத்தம் 7 ஆயிரம் ஹெக்டேர் விவசாய நிலம் மழையால் பாதிக்கப்பட்டுள்ளது கணக்கெடுப்பில் தெரிய வந்துள்ளது.

இதுகுறித்த இறுதி அறிக்கை அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு தர வேண்டிய இழப்பீட்டை அரசு முடிவு செய்யும் என வேளாண் வட்டாரங்கள் தெரிவித்தன.

கால்நடைகளுக்கு பாதிப்பு: அதே போல் தொடர் மழை, வெள்ளத்தால் புதுச்சேரியில் மொத்தம் 2 பசுமாடுகள், 10 கன்றுகுட்டிகள், 12 ஆடுகள், 1500 கோழிகள் உயிரிழந்துள்ளன. மேலும்

15 கால்நடை கொட்டில்கள் பலத்த சேதமடைந்துள்ளன. அரசுக்கு இதுகுறித்த அறிக்கை தரப்பட்டுள்ளது. இழப்பீடு எவ்வளவு என்பதை மாநில அரசு முடிவு செய்யும் என கால்நடை பராமரிப்புத் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Leave a Reply