மார்க்சிஸ்ட் கட்சியின் மண்ணாடிப்பட்டு கொம்யூன் அலுவலகம் சூறையாடப்பட்டு தீக்கிரை மார்க்சிஸ்ட் கட்சி கடும் கண்டனம்.

புதுச்சேரி பிரதேசம் மண்ணாடிப்பட்டு கொம்யூன் கட்சி கமிட்டி அலுவலகம் செப்டம்பர் 21ஆம் தேதி மாலை 6 மணியளவில் வன்னியர் குடும்ப ஒருங்கிணைப்பு அமைப்பைச் சேர்ந்த 30க்கும் மேற்பட்ட இளைஞர்களால் அலுவலகத்தில் இருந்த நாற்காலிகள், மேசைகள், மின்விளக்கு உள்ளிட்ட பொருட்கள் அடித்து நொறுக்கப்பட்டு சேதப்படுத்தப்பட்டன. காவலர்களின் தடுப்பையும் மீறி கட்சி அலுவலகத்தை பெட்ரோல் ஊற்றி தீவைத்து எரித்துள்ளனர். கோழைத்தனமான நாசகர செயலை மார்க்சிஸ்ட் கட்சி கடுமையாக எதிர்க்கிறது.

tnuef leaders visit
Torched by casteist forces.
சிபிஐஎம் மண்ணாடிப்பட்டு அலுவலகம் எரிப்பு
CPIM MANNADIPET OFFICE TORCHED
மொத்தமாக எரிந்து சாம்பல்
சிபிஐஎம் மண்ணாடிப்பட்டு அலுவலகம் எரிப்பு
DSC06584
தலைவர்கள் படங்கள் எரிந்து சாம்பலாக
DSC06588
மொத்தமாய எரிந்து போயின சாதிய தீய சக்திகளால்

தோழர் பி.சீனிவாச ராவ் அவர்களது நினைவு தினமான செப்டம்பர் 30ல் தீண்டாமை கொடுமைக்கு எதிராக நேரடி நடவடிக்கையில் ஈடுபடுவது என்று மார்க்சிஸ்ட் கட்சியும், தீண்டாமை ஒழிப்பு முன்னணியும் முடிவெடுத்திருந்தது. இப்பின்னணியில் தீண்டாமை கொடுமைக்கு எதிரான ஆய்வுகளை மேற்கொள்கிற போது கடந்த இரண்டு மாதத்திற்கு முன்னதாக கலிதீர்த்தாள்குப்பம் திரௌபதையம்மன் கோவில் திருவிழாவின்போது வன்னியர் குடும்ப ஒருங்கிணைப்பு குழு என்ற அடையாள அட்டையை குத்திக்கொண்டு சில இளைஞர்கள் தலித் மக்கள் ஆலயத்திற்குள் நுழைவதை தடுத்து நிறுத்தியுள்ளனர். இந்த சம்பவம் கட்சியின் கவனத்திற்கு வந்தது.

இதன் மீது செப்டம்பர் 30ஆம் தேதி தலித் மக்களுக்குள்ள ஆலய நுழைவு உரிமையை நிலைநாட்டவும் தீண்டாமை கொடுமையை எதிர்க்கும் முகமாக ஆலய நுழைவு போராட்டம் நடத்துவதென்று முடிவு செய்தது. இந்த போராட்ட அறிவிப்பை தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் 20.09.2014 அன்று பத்திரிகை செய்தியாக வெளியிடப்பட்டது. இச்செய்தி மாலை நாளிதழில் பிரசுரமானது. இந்த செய்தியை நகல் எடுத்து அதில் ஆலய பிரவேச போராட்ட அறிவிப்பு சம்பந்தமாக 21.09.2014 அன்று மாலை 6 மணியளவில் திரௌபதையம்மன் கோயிலில் ஊர்கூட்டம் கூட இருப்பதால் குடும்பத்தில் ஒருவர் வீதம் வரவேண்டும் என குறிப்பிட்டு அனைத்து வீடுகளுக்கும் விநியோகம் செய்யப்பட்டது. அன்றைய தினம் ஊர்கூட்டம் நடந்து கொண்டிருக்கிறபொது 30க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மதகடிப்பட்டு கட்சி அலுவலகத்தை நோக்கி வெறிக்கூச்சல் போட்டு வந்தனர்.

பறையனுக்கு ஆலய நுழைவு உரிமையை கேட்கிற சிபிஐஎம் அலுவலகத்தை இல்லாமல் அழிப்பது என்றும் சிபிஐஎம்காரனை எவனையும் விடாம அடிக்கனும், வெட்டனும் என்கிற வெறிப்பேச்சோடு கட்சி அலுவலகத்தில் இருந்த பொருட்களை நாசப்படுத்தி தீக்கிரையாக்கினர்.

இந்த சம்பவத்தை அறிந்து கட்சியின் பிரதேசக்குழு செயலாளர் தோழர் வெ.பெருமாள், உறுப்பினர்கள் தோழர்கள் தா.முருகன், இரா.இராஜாங்கம், வே.கு.நிலவழகன், ஜி.ராமசாமி, எல்.கலிவரதன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர். தகவலறிந்த நூற்றுக்கணக்கான கட்சி ஊழியர்கள் திரண்டனர். சம்பவத்தைக் கண்டித்து மறியல் செய்ய முயன்றபோது காவல்துறை கண்காணிப்பாளர் குற்றவாளிகளை உடனடியாக கைது செய்வதாகவும், உறுதியான நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதியளித்ததின் பேரில் மறியல் விலக்கி கொள்ளப்பட்டது. குற்றவாளிகள் அனைவரையும் உடனடியாக கைது செய்ய வேண்டும்; மேலும் ஆலய நுழைவு உரிமையை மறுப்பதும் தலித் உரிமைக்காக போராடுகிற அமைப்பின் மீதும் தாக்குதல் தொடுப்பதும் வன்கொடுமை சட்டத்தின் கீழ் கடும் குற்றமாகும். ஆகவே, வன்கொடுமை தடைச்சட்டத்தின் கீழும் வழக்கு பதிவு செய்து குற்றவாளிகளை கடும் தண்டனைக்குள்ளாக்க வேண்டுமென்று மார்க்சிஸ்ட் கட்சி மாநில அரசை வலியுறுத்துகிறது.

இதை வலியுறுத்தி இன்று(22.09.2014) அன்று புதுவை நகர் காமராஜர் சிலை அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. சிபிஐஎம் மாநில செயற்குழு உறுப்பினர் தோழர் என்.குணசேகரன், தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் தமிழ்நாடு மாநில பொதுசெயலாளர் தோழர் சாமுவேல்ராஜ், சிபிஐஎம் மாநில குழு உறுப்பினர் தோழர் ஜி. ஆனந்தன், சிபிஐ புதுவை மாநில செயலாளர் ஆர்.விசுவநாதன், விடுதலை சிறுத்தை அமைப்பாளர் திரு. பாவாணன், சிபிஐஎம்எல் மாவட்ட செயலாளர் பழனி என பலர் பங்கேற்கின்றனர். மார்க்சிஸ்ட் கட்சி அலுவலகம் தீக்கிரையாக்கப்பட்ட சம்பவத்தை தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில பொதுசெயலாளர் சாமுவேல்ராஜ், விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினர் ஆர். ராமமூர்த்தி, சிபிஐஎம் மாநிலக்குழு உறுப்பினர் தோழர் ஜி.ஆனந்தன், புதுச்சேரி தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் தலைவர்கள் ஜி.ராமசாமி, க. முருகன் ஆகியோர் பார்வையிட்டனர்.

செப்டம்பர் 30ஆம் தேதி ஏற்கெனவே அறிவித்தபடி ஆலய நுழைவு போராட்டம் நடத்துவது என்று மார்க்சிஸ்ட் கட்சி தீர்மானித்துள்ளது. சிபிஐஎம் மத்திய குழு உறுப்பினர் மற்றும் தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில தலைவருமான தோழர் பி.சம்பத், சிபிஐஎம் மாநில செயற்குழு உறுப்பினர் தோழர் என். குணசேகரன் ஆகியோர் தலைமையில் நடைபெற உள்ளது. இப்போராட்டத்தில் பல்வேறு ஜனநாயக இயக்கங்கள், முற்போக்கு சக்திகள், மார்க்சிஸ்ட் கட்சி ஊழியர்கள் திரளாக பங்கேற்பது என முடிவு செய்யப்பட்டுள்ளது.

புதுச்சேரி மாநிலத்தில் என்.ஆர்.காங்கிரஸ் ஆட்சியில் சாதிய மோதல் சம்பவங்களும், தீண்டாமை கொடுமைகளும் அதிகரித்து வருகிறது. என்.ஆர். காங்கிரஸ் –பாஜக கூட்டணி என்கிற அரசியல் மாற்றம் இத்தகைய சக்திகளுக்கு ஊக்கமளித்ததன் வெளிப்பாடாக மார்க்சிஸ்ட் கட்சி அலுவலகத்தை அடித்து நொறுக்கி, தீக்கிரையாக்கப்பட்டுள்ளது. மாநில என்.ஆர். காங்கிரஸ் அரசு அரசியல் உறுதியோடு, சமூக ஒடுக்குமுறைக்கு எதிராக தீண்டாமை கொடுமைகளுக்கு எதிராக, சாதிய மோதலுக்கு எதிராக உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது.

Leave a Reply