மின் கட்டண உயர்வைத் தவிர்த்திட, 30% மின் இழப்பை குறைத்து, கட்டண பாக்கிகளை வசூலித்திடுக.

புதுச்சேரி மாநில என்.ஆர்.காங்கிரஸ் அரசு மின்துறை சார்பில் 2014-15ஆம் ஆண்டுக்கான நிகர வருவாய் தேவை மற்றும் மின்கட்டணத்திற்கு இணைமின்சார ஒழுங்குமுறை ஆணையத்திற்கு மனுசெய்துள்ளது. இணைமின்சார ஒழுங்குமுறை ஆணையம் மக்கள் மீது மின்கட்டண உயர்வைத் திணிக்க கருத்துகேட்பு என்ற பெயரில் கபடநாடகத்தை அரங்கேற்றி வருகிறது.

2013-14ஆம் ஆண்டில் புதுச்சேரி மின் துறையின் கோரிக்கையை ஏற்று மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அநியாய மின்கட்டண உயர்வை அறிவித்தது. மேலும் மின்சார கட்டண உயர்வுடன் 2013-14ஆம் ஆண்டுக்கு முந்தைய புதுச்சேரி மின்துறையின் நட்டத்தொகை ரூ.320.56 கோடியை 3 ஆண்டுகளில் (2013-14 முதல் 2015-16 வரை) மின் கட்டணத்தில் 10% கூடுதல் வரியாக வசூலிக்கவும் மின்சார ஆணையம் உத்தரவிட்டது. மேலும் எரிபொருள் மற்றும் மின்சார கொள்முதல் விலையில் ஏற்படும் கூடுதல் செலவும் ஒவ்வொரு காலாண்டு அடிப்படையில் கணக்கிட்டு மக்களிடம் வசூலிக்கவும் உத்தரவிட்டுள்ளது. தற்போது 2014-15ஆம் நிதி ஆண்டிற்கான மின்கட்டண உயர்வுக்கான நுகர்வோர் கருத்தறியும் கூட்டத்திற்கு இணைமின்சார ஒழுங்குமுறை ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இது மக்கள் மீது ஆண்டுக்காண்டு மின்கட்டண உயர்வை திணிக்கும் கபடநாடகமாகும்.

பாஜக தலைமையிலான மத்திய அரசு, காங்கிரஸ் ஆதரவுடன் மின்சார சட்டம் 2003ஐ நிறைவேற்றியது. தற்போது காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு பாஜக ஆதரவோடு மின்சார சட்டத்தை செயல்படுத்திவருகிறது. இதனால் அனைவருக்கும் கட்டுப்படியான விலையில் மின்சாரம் வழங்குவது என்ற நோக்கம் சிதைக்கபட்டு விலைஉயர்ந்த நுகர்வு பொருளாக மின்சாரம் மாற்றப்பட்டுவிட்டது. குறிப்பாக மின்துறை வாரியமாக மாற்றுவது; மின் உற்பத்தி மின் வினியோகத்தில் தனியார்களை அனுமதிப்பது; மின்நுகர்வோர் மீது மொத்த செலவையும் கட்டணமாக வசூலிப்பது, விலை நிர்ணய உரிமையை தன்னாட்சி அதிகாரம் கொண்ட மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திற்கு அளிப்பது என்பதாகும். இதன் விளைவாக மின்துறை சார்பில் ஒவ்வொரு ஆண்டும் மின்சார கட்டண கோரிக்கை வைப்பதும், ஆணையம் நுகர்வோரின் கருத்துக்களை புறக்கணித்து மின்கட்டணத்தை உயர்த்துவதும் தொடர்கதையாகிவிட்டது.

2014-15ஆம் ஆண்டில், முந்தைய ஆண்டு (2013-14) மின்கட்டணத்தை அப்படியே தொடர்வும், ஏற்படும் நட்டத்தை 2015-16ல் ஈடுசெய்யவும் மின்சார ஆணையத்திற்கு மனுசெய்துள்ளது. இது என்.ஆர். காங்கிரஸ் அரசின் நாடாளுமன்றத் தேர்தலுக்கான சாகசமாகும். 2014-15ஆம் நிதியாண்டிற்கு கட்டண உயர்வு தற்போதில்லை என்ற தோற்ற இருந்தபோதும் எரிபொருள் மற்றும் மின்சார கொள்முதலில் ஏற்பட்ட உயர்வும், மின்கட்டணத்தில் 10% கூடுதல் வரியும் நுகர்வோரிடம் வசூலிக்கப்படும். 2014-15ஆம் ஆண்டில் ஏற்படும் நட்டத்தை அடுத்த ஆண்டில் சமன் செய்யப்படும் என்ற முறையில்தான் புதுச்சேரி மின் துறை மனுசெய்துள்ளது. மாநில அரசின் மின்கட்டண உயர்வு நடவடிக்கையை மார்க்சிஸ்ட் கட்சி கடுமையாக எதிர்க்கிறது.

2014-15ஆம் ஆண்டில், நிகர வருவாய் தேவை ரூ.1149.87 கோடியாகவும், நடைமுறையில் உள்ள கட்டணங்கள் மூலம் வருவாய் ரூ.1080.87 கோடியாகவும், இவற்றிற்கிடையிலான வருவாய் இடைவெளி ரூ.69.20 கோடியாகவும் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. வருவாய் இனத்தில், எரிபொருள் கூடுதல் வரிவிதிப்பின் வருவாய் மதிப்பீடு செய்யப்பட்டிருந்தால் பற்றாக்குறையில் மேலும் குறையும்.

மின் இணைப்பு – மின்பகிர்மாணம், தொழில்நுட்ப இழப்பு, மின் திருட்டு ஆகியவற்றின் மூலம் 29.38% மின் இழப்பு ஏற்படுகிறது. கடந்த காலத்தில் மின் இழப்பை குறைத்து முன்னுதாரணமாக இருந்த மின் துறையில் தற்போது மின் இழப்பு இருமடங்காக அதிகரித்துள்ளது. மாநில அரசும் மின் இழப்பை கட்டுப்படுத்தத் தவறியதால் ஏற்படும் இழப்பையும் சாதாரண மக்களும் நுகர்வோரும் ஈடுகட்ட வேண்டும் என்பதில் எந்த நியாயமும் இல்லை. 30% மின் இழப்பு என்பது கொள்முதல் மின்சாரத்தில் 3ல் 1 பங்காகும். அதாவது 2014-15 மின் கட்டண வருவாய் மதிப்பீட்டுத் தொகையுடன் ஒப்பீடு செய்கிறபோது சுமார் ரூ.380கோடி மின் இழப்பாகும்.

ஆகவே, 30% மின்சார இழப்பை வெகுவாக குறைத்திடவும், பெரும் தொழில் நிறுவனங்கள், அரசுத் துறைகளிடம் உள்ள பலகோடி பாக்கித் தொகையினை வசூலித்திடவும் வேண்டும். இந்த நடவடிக்கையால் மின்கட்டண உயர்வை முற்றாகத் தவிர்த்திட முடியும் என மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது.

மேலும் மக்கள் விரோத தாராளமயக் கொள்கைக்கு எதிராகவும், மக்கள் நலன் சார்ந்த மாற்றுக் கொள்கைகளை வகுக்கவும் மக்கள் அணிதிரள வேண்டும் என மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது.
இவண்
{ வெ. பெருமாள் }
பிரதேச செயலாளர்

Leave a Reply