வண்ணம் இணைந்தால் இன்னும் அழகு – புதுச்சேரி அன்பழகன்

இராபர்ட் ஐந்தாம் வகுப்பில் புதியதாக வந்து சேர்ந்திருந்தான். பார்ப்பதற்கு வெள்ளைக்காரரைப்போல சிவப்பாக இருந்தான். யார் வகுப்பிற்கு வந்தாலும் அவனையே விசா ரித்தார்கள். வகுப்பறையைத் தாண்டி பள்ளி முழு வதுமே அவனையே வியப்பாகப் பார்த்தார்கள். இராபர்ட் வந்ததிலிருந்து இராமு தன் நிறத் தையே அடிக்கடி பார்த்துக்கொண்டான். கருப்பாக வும் இல்லை. வெள்ளையாகவும் இல்லை. இரண்டு நிறமும் கலந்தமாதிரி இருந்தது. நாம் ஏன் சிகப்பாக பிறக்கவில்லை என்று தனக்குள் கேட்டுக்கொண்டான். சிவப்பாக இருந்தால் ஏன் இப்படி மதிப்பாக பார்க்கிறார்கள் என்பதை ராமுவால் புரிந்துகொள்ள முடியவில்லை. இராமு தன் நண்பர்களிடம் அடிக்கடி இதுபற்றி கேட்டான். அதெல்லாம் ஒண்ணுமில்லடா, நம்ம கண்ணுக்குத்தான் அப்படி அழகா தெரியுது! நீ நல்லா படித்து முதல் ரேங்க் எடுத்தா அப்புறம் உன்னைப்பற்றியே எல்லோரும் பேசுவார்கள். ராமுவுக்கு இதுசரி என்று பட்டாலும் மனம் மட்டும் கேட்பதாக இல்லை. என்ன செய்வதென்று யோசிக்கத் தொடங்கிவிட்டான்.

அப்பொழுதுதான் கபடி விளையாடிவிட்டு இவனின் நண்பர்கள் வந்து கொண்டிருந்தார்கள். அவர்கள் போட்டிருந்த பனியன் சுத்தமாக நனைந்திருந்தது. அவர்கள் தங்கள் கை, கால்களைச் சுத்தமாக்கிக் கொள்ள கழிவறையை நோக்கிச் சென்றார்கள். அப்பொழுது ராமுவைப் பார்த்து கை அசைத்து அழைத்தார்கள். இராமுவும் அவர்களை நோக்கி ஓடினான். என்ன ராமு! நீமட்டும் ஏன் தனியா நிக்கற!?. எல்லோரும் கேட்டார்கள். ஒண்ணுமில்ல எனக்கு ஒரு கேள்வி இருக்கு! சரி! என்ன கேள்வி? உடனே சொல்லு என்றார்கள். நம்ம இராபர்ட் மட்டும் ஏன் வெள்ளையா இருக்கிறான்?. நாங்களும் அதைப் பற்றித் தான் பேசிக்கொண்டிருந்தோம். நம்ம அப்பா, அம்மா வெள்ளையாக இருந்தால் நாமும் வெள்ளையாகப் பிறப்போம். நமது பெற்றோர்கள் கருப்பாக இருந்தால் நாமும் கருப்பாகத் தான் பிறப்போம். இதுல நமக்கு என்ன கவலை என்றனர் நண்பர்கள். “வெள்ளையின்னா மதிப்பாக பார்க்கிறாங்க! நம்மல குறைவாகத் தானே மதிக்கிறாங்க”. இது எப்படி சரியாகும். உன்னோட வருத்தம் புரியுதுடா! அதுக்கு நாம இப்ப என்ன செய்யமுடியும்? என்றனர் நண்பர்கள்.

அப்பொழுதுதான் உடற்கல்வி ஆசிரியர் கருப்பையா மாணவர்களை நோக்கிவந்தார். விளையாட்டு தான் முடிந்துவிட்டதே! இன்னும் இங்க என்ன செய்யரிங்க என்று ஆவலோடு கேட்டார். சார்! நம்ம ராமுவுக்கு ஒருசந்தேகம்சார்!. அதனால தான் பேசிக் கொண்டிருந்தோம் என்றனர். என்ன சந்தேகம் என்றார் ஆசிரியர். வெள்ளை கலருன்னா மதிக்கிறாங்க! கருப்புன்னா அவ்வளவு மதிப்பு இல்லையே அதுஏன் கேள்வி கேட்கிறான் சார்! நம்ம ராமு! என்றனர். ஆசிரியர் உடனே இராமுவை தன்பக்கம் இழுத்து அன்பாக தட்டிக்கொடுத்து பாராட்டினார். இப்படித்தான் கேள்வி கேட்கவேண்டும். சரியான விடை தெரியும்வரை முயற்சியை விடக்கூடாது. இந்த கேள்விக்கு இன்று ஒரேநாளில் விடை சொல்ல முடியாது. இதுபற்றி நாம் நிறைய தெரிந்து கொள்ள வேண்டும். ஆனால் இராபர்ட்டை விட்டு விட்டு இதுபற்றி நாம் தனியாக பேசக்கூடாது. அவனது கருத்தையும் நாம் அறியவேண்டும் என்றார் ஆசிரியர். மாணவர்களும் சரி என்றனர். நாளை கபடி விளையாட அவனையும் அழைத்து வாருங்கள் என்றார் ஆசிரியர். சரி! என்றனர் மாணவர்கள். இராமு இது உன்னோட கேள்வி மட்டுமல்ல, இனி இது நம்மளோட கேள்வி! என்ன சரியா! என்றார் ஆசிரியர்.

சரி சார் என்றபடி மாணவர்கள் தங்கள் வகுப்பறையை நோக்கிச் சென்றனர். ஆசிரியரும் அடுத்தவகுப்பிற்கு சென்றுவிட்டார். ஆசிரியர் வீடு வந்து சேர்ந்தாலும் கருப்பு, வெள்ளை நிறம்பற்றியே சிந்தனை வந்து போனது. இந்த நிறம் என்பது நாட்டுக்கு நாடு வேறுபாடு உடையது. ஆங்காங்கே நிலவும் வெப்பம், மிதமான வெப்பம், கடுமையான வெப்பம், குளிர், மிதமான குளிர், கடுமையான குளிர் போன்ற சுற்றுச்சூழல் மற்றும் தட்பவெப்பப் பிரச்சனையாக இதை முதலில் பார்க்க வேண்டுமென ஆசிரியருக்குத் தோன்றியது. தாவரங்களின் எண்ணில்லா பூக்களின் நிறத்தை யாரும் குறைசொல்வதில்லை. விலங்குகளின் நிறவேற்றுமைகளை யாரும் கண்டுகொள்வ தில்லை. மாறாக பூக்களுக்கு ஊட்டி போன்ற குளிர் பிரதேசங்களில் மக்களை ஈர்க்க விதவித மான பூக்களை அலங்கரித்து விழாக்களை நடத்துகிறார்கள். மக்கள் வெகுவாக ரசித்துச் செல்கிறார்கள். அதுபோன்றதே இந்த மனிதர் களின் நிறமும் மகிழ்ந்து ரசிக்கவேண்டிய ஒன்று தானே என்ற எண்ணம் வந்துபோனது.

பல்வேறு நிறம் கொண்ட மனிதர்களை அழைத்து இதுபோல விழா கொண்டாடினால் என்ன என்ற கற்பனை மனதில் தோன்றியது. இப்படி கொண்டாடினால் அது ஓர் அற்புத நிகழ்வாக இருக்கும். இது இயற்கை நமக்கு வழங்கி இருக்கும் ஓர் அற்புத வாய்ப்பு. இது போன்ற கற்பனை நம் நினைவில் வருவதே இல்லை. குழந்தை களின் அறிவியல் விழாக்களைப்போல நாம் எல்லா மாநிலத்து குழந்தைகளையும் ஒன்றாக அழைத்து ஒரு அறிவியல் விழா நடத்தினால் எப்படி இருக்கும். வண்ணமும் மகிழ்ச்சியும் கலந்து கண்கொள்ளாக் காட்சியாக அது இருக்கு மல்லவா! அதில் மனம் லயத்துப் போகாதா!

இந்த குழந்தைகள் இப்படி கலந்து ஒன்றாக விளை யாடும் போது நிறம் பற்றிய தவறான புரிதல்களும் தானாகவே மறைந்து போகுமல்லவா! என்ற எண்ணம் ஆசிரியர் மனதில் வந்துபோனது. அப்பொழுது தான் அவர் வீட்டுச்சுவரில் மாட்டியிருந்த அழகான சற்றே பெரியவரிக் குதிரையின் படம் அவர் கண்களில் பட்டது. எத்தனையோ முறை அதைப் பார்த்திருக்கிறார். இப்பொழுதுதான் முதல் முறையாகப் பார்ப்பது போல அதைப் பார்த்தார். அந்த படத்தைப் பார்த்தவுடன் மிகவும் பிடித்துப் போய்தான் ஒரு கண்காட்சியில் அதை வாங்கினார். ஏன் பிடித்துப்போனது என்பதற்கு அப்பொழுது காரணம் தெரியவில்லை. இப்பொழுது மீண்டும் அந்த படத்தைப் பார்த்தார். என்ன அதிசயம்! கருப்பும் வெள்ளையும் இணைந்தே இருப்ப தால்தான் இந்தப் படம் மிகவும் தன்னை ஈர்த்திருக்கிறது என்பதை ஆசிரியர் இபொழுது தான் புரிந்துகொண்டார். கருப்பும் வெள்ளையும் இணைந்ததே அழகு! என்ற உண்மையை நாம் எடுத்துச் சொல்ல வேண்டும் என்பதை மனதில் பதிய வைத்துக்கொண்டார். இந்த சிந்தனை யோடு அடுத்த நாள் பள்ளிக்குச் சென்றார். மாணவர்களை இரு அணியாக பிரித்தார். அதில் வெள்ளையாக இருப்பவர்கள் ஒரு அணியாகவும் கருப்பாக இருப்பவர்கள் ஒரு அணியாகவும் இருந்தனர். ஏன் இப்படி இரு அணியாக ஆசிரியர் நம்மைப் பிரித்தார் .அது சரி! ஏதாவது காரணம்’ இருக்கும் என்று மாணவர்கள் விளையாட ஆரம்பித்தனர். முதல் ஆட்டம் முடிந்து மாணவர்கள் ஓய்வெடுக்க வந்தனர். டேய் அந்த வெள்ளை அணியினர் மேல் ஒரே வியர்வை நாற்றம் வீசுதுடா! என்று பேசிக்கொண்டனர். அப்பொழுது உங்கமேலையும்தான் நாற்றம் வீசுது. நாங்க ஏதாச்சும் சொல்கிறோமா! என்று பதிலுக்குப் பேசினார் வெள்ளை அணியினர். டேய்! நம்ம தோலோட வேலையே வியர்வையை வெளியேற்றுவதுதான். வியர்வை என்றால் கழிவு என்றுதான் அர்த்தம். இதில் எந்த தோலாக இருந்தாலும் நாற்றம் வீசத்தான் செய்யும். பேசாம விளையாடுங்க! என்றான் அணியின் தலைவன்.

அப்பொழுதுதான் ஆசிரியர் அந்த பக்கம் வந்தார். அவர்கள் பேசிக்கொண்டதை உடனே புரிந்து கொண்டார். அவர்கள் அறிவியல் வழியில் சிந்தித்ததைப் பாராட்டினார். இப்படி யோசித்தால் கருப்பு, வெள்ளை என்ற பேதம் நமக்குள் வராது. இதை என்றும் மனதில் வைத்துக்கொள்ளுங்கள் என்றார். சரி! அடுத்த வாரம் ஆண்டு விழா நடக்க உள்ளது. அதில் நமது கபடி அணியும் பங்கேற்க உள்ளது. அதில் நாம் கபடி விளையாட போவ தில்லை. நாம் ஒரு அணிவகுப்பு நடத்தப் போகிறோம். அந்த அணிவகுப்பு என்பது வெள்ளை மாணவர்கள் ஒரு அணியாகவும் கருப்பு மாணவர்கள் ஒரு அணியாகவும் இருப்பார்கள். ஆனால் இரண்டு அணிகளும் இணைந்து பல புதிய அணிவகுப்புகளை நாம் நடத்தப் போகிறோம் என்றார் ஆசிரியர். மாணவர்களுக்கு இப்பொழுதே உற்சாகம் கூடிவிட்டது. மாணவர்களே பல உத்திகளை உருவாக்க உதவுவார் ஆசிரியர். மாணவர்கள் இப்பொழுதே ஆண்டு விழாவை எவ்வாறு சிறப்பாக நடத்துவது என்று திட்டமிட்ட ஆரம்பித்து விட்டார்கள். மிக முக்கியமாக இராபர்ட்டும் இராமுவும் தலைமையேற்று திட்டமிடுவார்கள் என்று அறிவித்துவிட்டார் ஆசிரியர்.

இதனால் இராபர்ட்டும் இராமுவும் அடிக்கடி சந்தித்துப் பேசிக்கொண்டார்கள். இராபர்ட்டுக்கு தான் சிவப்பாக இருப்பதில் எந்த பெருமையும் இல்லையென்று சொன்னான். அதேநேரத்தில் கருப்பாக இருப்பதால் தாங்கள் சற்று மதிப்பு குறைவானவர்களாக தங்களை ஒரு நாளும் நினைத்துக்கொள்ளக்கூடாது என்றும் எடுத்துச் சொன்னான். இராமுவுக்கு இது ஆச்சரியமாக இருந்தது. இப்படி மனம் விட்டு பேசியதில் இராமு வுக்கு மிக்க மகிழ்ச்சி. ஆசிரியர் நம்மை அன்பாக பாராட்டிவிட்டால் அது ஒன்றே போதுமானது நம்மை மகிழ்விக்க. நமது பிறந்த நாட்கள் நம்மை ஒவ்வொருநாளும் இணைத்துக்கொண்டேதான் இருக்கிறது. இதில் நமக்கு படிப்பும் இனிப்பும் மகிழ்வுமே முதன்மையானது. இப்பொழுதுதான் ராமுவின் மனம் அமைதி யானது. இராபர்ட்டுக்கு நன்றி சொன்னான். இருவரும் ஆண்டுவிழாவை சிறப்பாக எப்படி கொண்டாடுவதென்று இப்பொழுதே மகிழ்வாக திட்டமிட்ட தொடங்கிவிட்டார்கள். அன்று ஆண்டுவிழா தொடங்கி விட்டது. கருப்பு மாணவர்கள் ஒரு அணியாகவும் வெள்ளை மாணவர்கள் ஒரு அணியாகவும் அணிவகுப்பு தொடங்கிவிட்டது. இரு அணிகளும் இணைந்து சட்டென பிரியும்போது தோன்றிய அழகை அனைவரும் ரசித்தனர். கருப்பு வானத்தில் நட்சத்திரமாக மின்னி மறைவது போலும், வெண்ணிலா தோன்றி மறைவது போலவும், மின்மினி பூச்சிகள் மின்னி ஜொலிப்பது போலவும் முடிவில் மாணவர்கள் வரிக்குதிரையைப் போல அணிவகுத்து ஒரு சிலை போலநின்று விட்டது அனைவரையும் வெகுவாக கவர்ந்து விட்டது. “கறுப்பும் அழகுதான். வெள்ளையும் அழகுதான். இரண்டும் இணைந்து நின்றால் இன்னும் அழகுதான்” என்று மாணவர்கள் சிறப்பித்துக் காட்டிவிட்டார்கள் என்று ஆசிரியர் சொன்னபோது அரங்கமே எழுந்து நின்று கைதட்டி மகிழ்ந்தது. இராமும் இராபர்ட்டும் இணைந்து மேடை ஏறியபோது மீண்டும் கைதட்டல் ஓசை விண்ணைத் தொட்டது. ஆசிரியர் மகிழ்ந்தபடியே அடுத்த வேலையை பார்க்கச் சென்றார்.

Leave a Reply