வளர்ச்சிக்கான ‘குஜராத் மாதிரி’ தோல்வியே படேல் சமூக எழுச்சிக்கு காரணம்: சீதாராம் யெச்சூரி சாடல்

sitram_yechuryகுஜராத் படேல் சமூகத்தினர் ஓரளவுக்கு நல்ல நிலையிலேயே உள்ளனர், ஆனாலும் அவர்களுக்கே அதிருப்தி ஏற்பட்டிருக்கிறது என்றால் வளர்ச்சிக்கான குஜராத் மாதிரி தோல்வி என்றுதானே பொருள் என்கிறார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சீதாராம் யெச்சூரி.

கல்வி, வேலைவாய்ப்பு, வாழ்வாதார பிரச்சினைகள் எழுந்தால்தான் இடஒதுக்கீட்டு ஆர்பாட்டங்கள் உருவாகின்றன என்கிறார்.
குஜராத் படேல்கள் பந்தின் போது நிகழ்ந்த வன்முறைக்கு போலீஸார் மீது சிபிஎம் கட்சி தனது கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளது.

“குஜராத் படேல்கள் ஓரளவுக்கு நல்ல நிலைமையில் உள்ள சமூகமே. அவர்களிடத்திலும் அதிருப்தி ஏற்பட்டுள்ளது என்றால் குஜராத் வளர்ச்சி மாதிரி அனைவருக்குமானது அல்ல என்பது நிரூபணமாகிறது. பெரும்பான்மை வகுப்பினருக்குக் கூட அது பயனளிப்பதில்லை என்பதே இதன் மூலம் தெரிகிறது.

படேல்கள் எழுச்சி குறித்தும், அதன் தொடர்பான வன்முறைகள் குறித்தும் பிரச்சினையின் மையத்தை கணக்கிலெடுத்துக் கொள்ளாத பிரதமரின் அமைதி காக்கும் அறைகூவல் ஒருபோதும் செல்லுபடியாகப் போவதில்லை.

ஜாட் சமூகத்தினரும் இதே கோரிக்கையை முன்வைத்து சில காலங்கள் முன் ஆர்பாட்டத்தில் குதித்தனர். இவையெல்லாமே நாட்டு மக்களின் நலம் எவ்வாறு உள்ளது என்பதை பறைசாற்றுகிறது. இந்த மோசமான நிலைமைகளுக்கு அரசின் கொள்கைகளே காரணம்.

பிற சமூகங்களில் உள்ள பொருளாதார ரீதியாக பின் தங்கியவர்களையும் உள்ளடக்கிய இட ஒதுக்கீடு முறை இருந்திருந்தால் படேல்கள் மூலம் இப்போதைய அமைதியின்மை உருவாகியிருக்காது. பாஜக முன்னதாக பிற சமூகத்திலும் பொருளாதார ரீதியாக பின் தங்கியவர்களுக்கு 5% இட ஒதுக்கீடு என்று கூறிவந்தது, ஆனால் அதனை நடைமுறைப்படுத்த எந்த வித முயற்சிகளும் மேற்கொள்ளப்படவில்லை.

பொருளாதார கேக்கின் ஒரு சிறுபகுதியை அனைவருமே கேட்கின்றனர். ஆனால் கேக் சுருங்கும் போது, பிரச்சினைகள் எழுகிறது.

இது வரைக்கும் எந்த முன்மாதிரியாகவும் இல்லாமல் பிரதமர் மோடி 24 அயல்நாடுகளுக்குச் சென்று வந்திருக்கிறார். ஆனால் அவர் உறுதியளித்த ஆயிரம் கோடி ரூபாய்கள் முதலீட்டை அவரால் கொண்டு வர முடியவில்லை. உலக நிதி நெருக்கடி, பங்குச் சந்தை வீழ்ச்சிகள் மத்தியில் மக்களின் அன்றாடத் தேவைகள் பற்றி எழும் அதிருப்திகள் பற்றி அரசு அசையாமல் உள்ளது. மாறாக நாட்டை வகுப்புவாத அடிப்படையில் பிரித்தாளும் கொள்கைகளை அரசு பரிசீலித்து வருகிறது” என்று கூறினார் யெச்சூரி.

 

Leave a Reply