பிரதமர் நரேந்திர மோடியின் வெளிநாட்டுப் பயணங்கள் குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவர் சீதாராம் யெச்சூரி கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.
“கடந்த 10 ஆண்டுகளாக மோடியால் பயணம் மேற்கொள்ள முடியவில்லை என்பதனால் இருக்கலாம். அதாவது தற்போது அவர் பயணம் மேற்கொள்ளும் நாடுகள் அவருக்கு அனுமதி அளித்ததில்லை. இப்போது வாய்ப்பு கிடைத்துள்ளது உலகம் முழுதும் பயணிக்கிறார். அவர் பயணிக்கட்டும், இந்தியாவை தனது உடை அலங்காரங்களால் அவரால் முன்னுக்குக் கொண்டு செல்ல முடியும் என்றால் நல்லதுதானே..” என்றார்.
கனடாவில் மோடி பேசும்போது முந்தைய அரசுகள் விட்டுச் சென்றவற்றை சுத்தம் செய்து வருவதாக கூறினார். இது பற்றி யெச்சூரி கூறும்போது, “இது மருத்துவ உலகில் கூறுவது போல் நீடித்த விடுவிப்பு மருந்து அவருக்கு. மோடியினுடையது நீடித்த விடுவிப்பு பிரச்சாரம்…அவர் எங்கு சென்றாலும் இதையே கூறி வருகிறார். அவர் சென்ற புதிய நாடு கனடாவாக இருப்பதால், அங்கு புதிய என்.ஆர்.ஐ.க்கள் இருப்பார்கள். ஆனால் பிரச்சாரம் என்னவோ அதேதான்..
ஆனால், இங்கு என்ன செய்து கொண்டிருக்கிறார்? கடைபிடிக்கும் பொருளாதார கொள்கைகள் மக்களை மேலும் துயரத்துக்கு இட்டுச் சென்று கொண்டிருக்கிறது. நம் நாட்டில் பெருகி வரும் குப்பைகளை மோடி அதிகப்படுத்துகிறார். அதனால்தான் கூறுகிறேன் இது நீடித்த விடுவிப்பு அரசியல் பிரச்சாரம் என்கிறேன்.” இவ்வாறு கூறியுள்ளார் சீதாராம் யெச்சூரி.