ஆரம்ப கல்வி முதல் ஆராய்ச்சி கல்வி வரை இலவசம் என்னும் அரசாணையை உறுதியாக அமல்படுத்த வேண்டும் என்று தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநாடு புதுச்சேரி அரசை வலியுறுத்தியுள்ளது.
தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் புதுச்சேரி 4வது மாநில மாநாடு புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள மங்களலட்சுமி திருமண நிலையத்தில் நடைபெற்றது. தோழர்கள் பாலமோகனன், லெனின்சுப்பையா ஆகியோரது நினைவரங்கத்தில் நடைபெற்ற மாநாட்டிற்கு தீண்டாமை ஒழிப்பு முன்னணி புதுச்சேரி தலைவர் நிலவழகன் தலைமை தாங்கினார். மாநாட்டை துவக்கி வைத்து தமிழ் மாநிலத் துணைத் தலைவர் ஜி.ஆனந்தன் பேசினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஆர்.ராஜாங்கம், செயற்குழு உறுப்பினர் பெருமாள், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நீல.கங்காதரன், அனைத்திந்திய தலித் இயக்கத்தின் தேசிய தலைவர் ராமமூர்த்தி, பேராசிரியர் பஞ்சாங்கம்,ஆதிதிராவிடர் நலத்துறையின் முன்னாள் இயக்குனர் அன்பழகன் ஆகியோர் மாநாட்டை வாழ்த்தி பேசினார்கள். மாநாட்டு வேலை அறிக்கையை பொதுச் செயலாளர் ராமசாமி வாசித்தார். வரவு செலவு அறிக்கையை பொருளாளர் ரமேஷ் தாக்கல் செய்தார். நிர்வாகிகள் வீர. அரிகிருஷ்ணன், ராமகிருஷ்ணன், ராம்கோபால், உட்பட திரளான பிரதிநிதிகள் மாநாட்டில் பங்கேற்றனர்.
புதிய நிர்வாகிகள்
மாநாட்டில் புதிய தலைவராக என்.கொளஞ்சியப்பன், செயலாளராக வி.ஆர்.சரவணன், பொருளாளராக வி.உமா உட்பட 17 கொண்ட புதிய மாநில குழு தேர்வு செய்யப்பட்டது.
தீர்மானம்
புதுச்சேரி மாநிலத்தில் தீண்டாமை ஒழிப்பு முன்னணி உள்ளிட்டு பல்வேறு தலித் பழங்குடி மனித உரிமை அமைப்புகள் பல வருடங்களாக போராடி வந்ததன் விளைவாக சென்ற ஆட்சியில் ஆரம்ப கல்வி முதல் ஆராய்ச்சி கல்வி வரை, தலித் மாணவர்களுக்கு இலவசம் என்ற அரசாணை வெளியிட்டப்பட்டது. கல்வி முற்றாக வணிகமயமாக மாறியுள்ள சூழலில் இந்த ஆணை மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. ஆனால் இந்த ஆணையில் உள்ள சில குறைபாடுகள் அரசுக்கு எடுத்துக் கூறியும், ஆர்ப்பாட்டங்கள் உள்ளிட்டவை நடத்தியும் சீர்செய்யப்படாமல் உள்ளது. குறிப்பாக, உயர்கல்வியில் சென்டாக் மூலம் தேர்வான மாணவ மாணவிகளுக்கு மட்டுமே கல்வி இலவசம் என்றுள்ளது சரியல்ல. இதை மாற்றி உயர்கல்வி பயிலும் அனைத்து தலித் மாணவ மாணவிகளுக்கும் இத்திட்டத்தின் பயன்கள் கிடைத்திடும் வகையிலும் அரசாணை திருத்தப்பட வேண்டும் என இம்மாநாடு வலியுறுத்துகிறது. மேலும், பூர்விக தலித் மக்களின் குழந்தைகளுக்கு மட்டுமே இச்சலுகை என்பதை மாற்றி மைக்ரண்ட்ஸ் தலித் மக்களையும் இத்திட்டத்தின் வரம்பிற்குள் கொண்டுவரப்பட வேண்டும்.
எக்காரணம் கொண்டும் தனியார் பள்ளிகளில் பயிலும் குழந்தைகளின் வங்கிகணக்கில் பணம் செலுத்தப்படாமல் பள்ளியின் கணக்கில் மட்டுமே செலுத்திட வேண்டும்.
புதுச்சேரி மாநில அரசு மேற்சொன்ன போதாமைகளையும் களைந்து அரசாணையை மேம்படுத்திட வேண்டும் என்றும் தனியார் கல்வி நிறுவனங்கள் இத்திட்டத்தில் ஏமாற்றாத வண்ணம் கண்காணித்திட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டது.