புதுச்சேரியில் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு நலவாரியம் அமைத்திடுக

நலவாரியம் அமைக்கக்கோரி அமைப்புசாரா தொழிலாளர்கள் சட்டசபையை முற்றுகையிட்டனர். CITU puducherry

ஊர்வலம்

அமைப்புசாரா தொழிலாளர் நலச்சங்கத்தை நலவாரியமாக மாற்றி ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு செய்யவேண்டும் என்ற கோரிக்கையை சி.ஐ.டி.யு. அனைத்து அமைப்புசாரா தொழிற்சங்கங்கள் வலியுறுத்தி வருகின்றன. இந்த கோரிக்கையை வலியுறுத்தி முதல்-அமைச்சரிடம் மனு கொடுக்கும் போராட்டம் நடத்தப்போவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி தொழிற்சங்கங்களை சேர்ந்தவர்கள் அண்ணாசிலை அருகே நேற்று திரண்டனர். அங்கிருந்து சட்டசபை நோக்கி ஊர்வலமாக புறப்பட்டனர். ஊர்வலத்துக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு செயலாளர் ராஜாங்கம் தலைமை தாங்கினார். இந்த ஊர்வலத்தில் சி.ஐ.டி.யு. மாநிலக்குழு உறுப்பினர்கள் நிலவழகன், ராமசாமி, சிவாஜி, ஆட்டோ சங்க கவுரவ தலைவர் முருகன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

தடுப்புகளை தள்ளிவிட்டு…

ஊர்வலம் அண்ணாசாலை, நேரு வீதி வழியாக தலைமை தபால் நிலையத்தை அடைந்தது. அதற்கு மேல் அவர்களை செல்ல அனுமதிக்காமல் போலீசார் தடுப்பு அமைத்து தடுத்து நிறுத்தினார்கள். இதைத் தொடர்ந்து அவர்கள் அங்கு கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் செய்தனர்.

பின்னர் முதல்-அமைச்சரை சந்திக்க அவர்கள் அனுமதி கேட்டனர். ஆனால் வெகுநேரமாகியும் அவர்களுக்கு அனுமதி கிடைக்கவில்லை. இதனால் ஆத்திர மடைந்த அவர்கள் போலீசாரின் தடுப்புகளை தள்ளிவிட்டு சட்டசபை நோக்கி வந்தனர்.

சட்டசபை முற்றுகை

அவர்களை கண்டதும் சட்டசபை காவலர்கள் மெயின்கேட்டை இழுத்துப்பூட்டினார்கள். இதைத்தொடர்ந்து சட்டசபையை முற்றுகையிட்ட அவர்கள் மெயின்கேட் முன்பு அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். அவர்களிடம் போலீசார் முதல்-அமைச்சரை சந்தித்து பேச உடனடியாக ஏற்பாடு செய்வதாக உறுதியளித்தனர்.அதைத்தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் முற்றுகையை கைவிட்டு கலைந்து சென்றனர். தொழிற்சங்க பிரதிநிதிகள் சட்டசபைக்கு சென்று முதல்-அமைச்சர் ரங்கசாமியை சந்தித்து கோரிக்கை மனுவை அளித்தனர்.

Leave a Reply