புதுச்சேரி மாநில பள்ளிக் கல்வியில் உள்ள பிரச்சனைகள்

pondyஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)

புதுச்சேரி பிரதேச குழு

 பத்திரிகை செய்தி

  அன்புடையீர்,

வணக்கம். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி புதுச்சேரி பிரதேச குழு சார்பில் மாண்புமிகு முதலமைச்சர், மாண்புமிகு கல்வித்துறை அமைச்சர் ஆகியோரை நேரில் சந்தித்து புதுச்சேரி மாநில பள்ளிக் கல்வியில் உள்ள பிரச்சனைகள் குறித்து நேரில் சந்தித்து கடிதம் கொடுத்து பிரச்சனைகளுக்கு தீர்வு காணவும் உடனடி நடவடிக்கை எடுக்கவும். வலியுறுத்தப்பட்டது. இதை அடுத்து புதுச்சேரி மாநில கல்வித்துறையின் இயக்குநர் அவர்களையும் நேரில் சந்தித்து பிரச்சனைகளுக்கு உரிய தீர்வு மற்றும் நடவடிக்கை எடுத்திட வலியுறுத்தப்பட்டது.

 அக்கடித்தத்தின் நகல் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்கள் தங்கள் ஊடகங்களில் பிரசுரிக்க வேண்டுகிறோம்.

 

இவண்

 இராஜாங்கம். ஆர்

பிரதேச செயலாளர்

 பெறுநர்

  1. மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள்

புதுச்சேரி அரசு, புதுச்சேரி

  1. மாண்புமிகு கல்வித்துறை அமைச்சர் அவர்கள்

புதுச்சேரி அரசு, புதுச்சேரி

  1. உயர்திரு. செயலாளர் அவர்கள்

கல்வித்துறை, புதுச்சேரி அரசு, புதுச்சேரி

 

மதிப்பிற்குரியீர்,

 வணக்கம்

             கோருதல் – பணியிட மாறுதல் பிராந்திய இட ஒதுக்கீடு – ஆகியவை

            குறித்து தங்களின் தலையிடு கோருதல் தொடர்பாக,.

         ஒரு நாட்டின் சமூக முன்னேற்றத்தின் அடிப்படை கருவி கல்வி என்பதை தாங்கள் அறிவீர்கள். அறிவியல் பூர்வமான பாடத்திட்டமும், வகுப்பறை ஜனநாயகமும் சமூகப் பொறுப்புள்ள குடிமை சமூகத்தை கட்டமைக்க உதவின. வாழ்க்கை பிரச்சனைகளை எதிர்கொள்ளும் மனவலிமையும், தன்நம்பிக்கையும் அளித்தன. கல்வி அரசின் பொறுப்பில் இருந்தவரை இத்தகைய நிலைமைகளை உணரமுடிந்தது.

         1960களில் அமைக்கப்பட்ட கோத்தாரி தலைமையிலான கல்வி குழு விரிவான பரிந்துரையை அளித்தது. குறிப்பாக அரசியல் அமைப்பு சட்டம் வலியுறுத்துகிற சாதி, மதம், இனம், மொழி பாகுபாடில்லாத சமூக சமத்துவத்தை உறுதிப்படுத்தும் வகையில் கல்வித் தரத்தை மேம்படுத்தவும், அனைவருக்கும் கல்வி வழங்கவும் வலியுறுத்தின. கோத்தாரி கமிஷன் பரிந்துரைகள் முழுமையாக அமலாக்கப்பட வில்லை என்றாலும் இந்தியாவிலும், புதுச்சேரியிலும் ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் ஆரம்ப பள்ளி, 3 கிலோ மீட்டர் தூரத்தில் ஒரு இடைநிலைப் பள்ளியும் துவங்கப்பட்டன. அந்த வகையில் 239 தொடக்கப்பள்ளிகள் உள்ளிட்டு, இடைநிலை, உயர்நிலை மற்றும் மேநிலைப் பள்ளி என 422 அரசுப் பள்ளிகள் புதுச்சேரியில் உள்ளன.

         1991ல் நவீன தாராளமயக் கொள்கை அமலாக்கப்பட்ட பின்னால் கல்வி வணிகமயமானது. அனைவருக்கும் தரமான கல்வி என்பதற்கு மாறாக பணம் படைத்தவர்களுக்கு மட்டுமே கல்வி என்ற நிலை உருவாக்கப்பட்டுவிட்டது. மத்திய பாஜக ஆட்சியில் கல்வியில் வகுப்புவாத கருத்தாக்கங்களை உருவாக்குவது,  வணிகமயத்தை தீவிரப்படுத்துவது என்பதோடு குறிப்பிட்ட சமூகத்திற்கு மட்டுமே மருத்துவம் உள்ளிட்ட உயர்கல்வி வாய்ப்புகள் கிடைக்கும் என்பதான முறையில் கல்வி கட்டமைப்புகள் உருவாக்கப்படுகிறது. பல 100 ஆண்டுகளாக கட்டியெழுப்பிய மேம்பட்ட சமூகத்தை அழிக்கும்  வேலையை மத்திய அரசு செய்துவருகிறது.

         ஆகவே, மாநில அரசு, பொறுப்புள்ள சமூகத்தை கட்டமைத்திட அரசுப் பள்ளிகளை பாதுகாத்திட, அனைவருக்கும் தரமான கல்வி கிடைத்திட நடவடிக்கை எடுத்திட வேண்டுகிறோம்.

 பொதுப்பள்ளிகளை பாதுகாத்திடுக :

        திட்டக்குழு இருந்த இடத்தில் புதிதாக அமைக்கப்பட்ட நிதி ஆயோக் கார்ப்பரேட் குடும்பங்களின் விருப்பங்களை செயல்படுத்தும் அமைப்பாகவே செயல்படுகிறது. அதன் ஒரு பகுதியாக 50க்கும் குறைவான மாணவர்களை கொண்ட அரசு ஆரம்ப பள்ளிகளை மூடுவது  அல்லது அருகாமை பள்ளிகளுடன் இணைப்பது என்பதாகும். புதுச்சேரி மாநிலத்தில் பாப்பாஞ்சாவடி, வீரவெளி ஆரம்ப பள்ளிகள் மூடப்பட்டுள்ளன முத்தியால்பேட்டை, உப்பளம் பகுதி பள்ளிகள் போல் புதிய மாணவர் சேர்க்கை கூடாது என வாய்மொழி உத்தரவிடப்பட்டுள்ளன. மாநில அரசின் இத்தகைய போக்கு கவலையளிப்பதாகும். இவ்விஷயத்தில் மாநில அரசு 2009-10 இந்திய கணக்காய்வு மற்றும் தணிக்கைத் துறை தலைவரின் அறிக்கையில் காரைக்கால் மாவட்ட தொடக்கப் பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை குறைவு குறித்து பேசுகிறது. அவற்றை கவனத்தில் கொண்டு தொடக்கப் பள்ளிகளில் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்திட வேண்டும். அரசுப் பள்ளிகளை அருகாமையில் தனியார் பள்ளிகளுக்கு அனுமதி வழங்க கூடாது. மேலும் சட்டம் மற்றும் விதிமுறைக்கு உட்பட்டு கல்வி நிறுவனங்களை நெறிப்படுத்துவதும் அவசியமாகும்.

ஆசிரியர் சமூகத்தினர் அரசுப்பள்ளிகளில் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த சொந்த நிதி மற்றும் பிறரிடம் உதவிகளைப் பெற்று செய்வது என்பது மகிழ்ச்சி அளிக்கிறது. அரசு, ஆசிரியர் சமூகத்தினரையும் இணைத்துக் கொண்டு பொதுப்பள்ளிகளை பாதுகாத்திட உரிய நடவடிக்கை எடுத்திட வேண்டும்.

 பணியிட மாறுதல் அமலாக்குதல்

பணியிட மாறுதல் வெறுமனே பின்பற்றப்படும் விதிமுறையல்ல. மாறாக துடிப்பான மற்றும் திறமையான நிர்வாகத்தின் உயிரோட்டமான அம்சமாகும். குறிப்பாக, பணியிடம் சார்ந்த மக்களின் சமூக, பொருளாதார, கலாச்சார நிலைகளை உணர்தல், அதற்கேற்ப பணிகளை அமைத்துக் கொள்ளுதல், பரவலான அனுபவம் பெறுதல், திறன் வளர்த்தல், வளர்த்துக் கொண்ட திறனை பரவலாக்குதல் .. ஆகிய பன்முகத்தன்மை கொண்டதாகும். பொறுப்பு மிக்க அரசு ஊழியர்களின் கடமையுமாகும். மேலும் அரசு மக்களுக்கான திட்டங்களை உருவாக்குவதிலும், மக்கள் பங்கேற்போடு திட்டங்களை அமலாக்குவதி,லும் அரசு ஊழியர்களால் முக்கிய பங்காற்றிட முடியும். ஆகவே, பணியிட மாறுதலை அரசு உறுதியாக அமலாக்கிட வேண்டும் என மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது.    

         புதுச்சேரியில் எந்த துறைகளிலும் காலமுறைப்படி பணியிட மாறுதலை செய்ய முடியாத நிலை உள்ளது. இதனால் பிராந்திய அடிப்படையிலான இட ஒதுக்கீடு, பணி நியமனம் என்ற தற்காலிக நிலைக்கு அரசு தள்ளப்படுகிறது. இது ஒட்டுமொத்த மாநிலத்தின் வளர்ச்சி மற்றும் ஒற்றுமை உணர்வை சிதைத்துவிடும். ஆகவே, அரசியல் குறுக்கீடுகள் இல்லாமல் பணியிட மாறுதலை அனைத்து துறைகளிலும் செயல்படுத்திட வேண்டும்.

 ஆசிரியர் பணியிட மாற்றம்

புதுச்சேரியில் இருந்து காரைக்காலுக்கு பணியிட மாறுதல் செய்யப்பட்ட 46 ஆசிரியர்கள் 3 முதல் 4 ஆண்டுகளாக அங்கே பணிபுரிந்து வருகிறார்கள். அர்ப்பணிப்போடு பணியாற்றி மாணவர்களின் தேர்ச்சி விகிதங்களை உயர்த்தியுள்ளனர். ஆனால் காலமுறைப்படி பணியிட மாறுதல் செய்யப்படாததால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். நடப்பு கல்வியாண்டின், துவக்கத்தில் பணியிட மாறுதல் உத்தரவு வெளியாக இருந்த நிலையில் அரசியல் குறுக்கீடுகளால் தடைபட்டுவிட்டன. 46 ஆசிரியர்களில் 12 பேர் 10ஆம் வகுப்பு ஆசிரியர்களாக உள்ளனர். அரையாண்டு தேர்வினையொட்டி பாடங்கள் முழுமையாக முடிக்கப்பட்டும் விட்டன. மேலும் பணிக்கு சேர்ந்ததில் இருந்து புதுச்சேரியிலேயே பணியாற்றி வரும் ஆசிரியர்கள் பலர் உள்ளனர். ஆகவே, இப்பிரச்சனையில் மாநில முதல்வர் மற்றும் மாநில அரசு அரையாண்டு தேர்வு முடிந்துள்ள நிலையில் பணியிட மாறுதலை செய்திட வேண்டுகிறோம்.

மதிய உணவு திட்டம்

மாநில அரசின் நேரடி பொறுப்பில் இயங்கி வந்த மதிய உணவுத் திட்டம் மத அடிப்படையில் செயல்படும் இஸ்கான் கீழ் உள்ள அக்‌ஷயபாத்ரா அறக்கட்டளைக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது. அரசு மற்றும் அக்‌ஷயபாத்திரா சேர்ந்து ஒப்பந்தமும் செய்யப்பட்டுள்ளன. இதனால் மாணவர்களின் ஊட்டச்சத்து, பாரம்பரிய உணவு முறை, கேள்விக்குள்ளாக்கப்படும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.

 ஒடிசா, குஜராத், ராஜஸ்தான் போன்ற சில மாநிலங்களில் சில மாவட்டங்களில் அக்‌ஷயபாத்திரா அறக்கட்டளை மதிய உணவு திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இவ்வறக்கட்டளையின் கீழ் வழங்கப்படும் மதிய உணவில் பூண்டு, வெங்காயம் இடம் பெறுவதில்லை. முட்டை வழங்கப்படுவதில்லை. சாத்வீக உணவு முறையை பின்பற்றி வருகிறது. உணவு கலாச்சாரத்தில் ஒற்றை தன்மை திணிக்கப்படுகிறது. இதனால் மாணவர்கள் பலர் மதிய உணவை உண்பதில்லை. இப்பிரச்சனை தற்போது கர்நாடகாவில் பெரும்பிரச்சனையாக உருவெடுத்து வருகிறது.

 ஆகவே, மாநில அரசு மதிய உணவு திட்டத்தை பழையபடி நேரடிப் பொறுப்பில் செயல்படுத்தவும், அக்‌ஷயாபாத்திராவுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தை ரத்து செய்யவும் மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது.

பிராந்திய இட ஒதுக்கீட்டு முறையை கைவிடுக காரைக்காலில் வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்திடுக

விடுதலைக்குப் பின் இந்திய பொருளாதாரம் வளர்முகமாகவே இருந்தன. சேமநல திட்டங்கள் மற்றும் வளர்ச்சி திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. 1991ல் அமலாக்கப்பட்ட நவீன தாராளமயக் கொள்கை அனைவருக்குமான வளர்ச்சி என்பதற்கு மாறாக வாழ்க்கை நெருக்கடிகளை, பொருளாதார ஏற்றத்தாழ்வுகளை அதிகப்படுத்தின. இதனால் மாநிலங்களுக்கு இடையேயும், மாநிலங்களுக்குள் ஏற்றத்தாழ்வுகளை உருவாக்கியது,  சமூகத்தில் ஏழைகள், பணக்காரர்கள் இடைவெளியும் அதிகரித்தன. அரசும் தனது சமூக முதலீடுகளை குறைத்து வந்தன. மாநிலங்களின் வளங்கள், நிதி ஆதாரங்கள் மத்தியில் குவிக்கப்பட்டதோடு மாநிலங்களின் உரிமையும் வளர்ச்சியும் பாதித்தன. மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை மாநில அரசுகள் செயல்படுத்த இயலாமல் திணறி வருகிறது.

  இந்த பின்னணியில் புதுச்சேரியில் காரைக்கால் மாவட்டம் சமூக பொருளாதார ரீதியாக பின் தங்கியுள்ளதை மறுக்க இயலாது. இப்பிரச்சனையில் அறிவியல் பூர்வமாகவும், காரைக்கால் ஒருங்கிணைந்த புதுச்சேரியின் ஒரு பகுதி என்கிற புரிந்துணர்வின் அடிப்படையிலும் அணுகிட வேண்டும். மாறாக, கல்வி, வேலையில் பிராந்திய இட ஒதுக்கீடு என்ற அணுகுமுறை காரைக்கால் பகுதி மக்களின் அடிப்படையான பிரச்சினைகளைத் தீர்க்க உதவாது. மேலும் புதுச்சேரி மாநிலத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சியை பாதித்து விடும்.

 காரைக்கால் தனி மாநிலம் என்ற கோரிக்கையை மக்கள் நிராகரித்தது அனைவரும் அறிந்ததே. புதுச்சேரி, காரைக்கால், மாகி, ஏனாம் பகுதிகள் தனித்தனி பகுதிகளாக மாறுபட்ட மொழி மற்றும் கலாச்சாரம் கொண்டதாக இருப்பினும் சகோதரத்துவ உணர்வோடு ஒற்றுமையாக ஒரே மாநிலமாக தொடர்கிறது. இதற்கு நீண்ட நெடிய வரலாற்று ரீதியான தொடர்பும், மரபும் புதுச்சேரி மாநில மக்களுக்கு உண்டு. விடுதலைப்போரில், மொழி அடிப்படையில் அண்டை மாநிலங்களோடு இணைப்பதை எதிர்த்த போராட்டத்தில்  ஜனநாயக உரிமை மீட்பு போராட்டத்தில் இணைந்து செயல்பட்டு வந்துள்ளனர். புதுச்சேரி மக்கள் ஆட்சியில் மூன்று மொழிகளுக்கும் ஆட்சி மொழி அந்தஸ்து, நலத்திட்டங்கள், வளர்ச்சித் திட்டங்கள் உருவாக்கப்பட்டு செயல்படுத்தி வருகின்றன. இத்தகைய பின்புலத்தில் இருந்து பின்தங்கிய காரைக்கால் பகுதியை முன்னேற்ற, திட்டவட்டமான சமூக பொருளாதார நிலைகளை ஆய்வு செய்து, பொருத்தமான வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்த வேண்டும். உருவாக்கப்படும் திட்டங்களுக்கு முன்னுரிமை அளித்து செயல்படுத்தப்பட வேண்டும். ஆகவே, இட ஒதுக்கீடு திட்டத்தை கைவிட வேண்டும். காரைக்காலில் அனைத்து அரசியல் கட்சிகள் கூட்டத்தை மாநில முதல்வர் தலைமையில் நடத்தி, கருத்தறிந்து பொருத்தமான திட்டங்களை உருவாக்கி செயல்படுத்த கட்சி கேட்டுக் கொள்கிறது.

 இவண்

 ஆர். இராஜாங்கம்

பிரதேச செயலாளர்

Leave a Reply