துணி கொள்முதலில் முறைகேடு விசாரணை நடத்துக

புதுச்சேரி ஆதிதிராவிடர் நலத் துறை துணி கொள்முதலில் நடைபெற்றுள்ள விதிமுறை மீறல்கள் மற்றும் முறைகேடுகள் குறித்து முழுமையான விசாரணை நடத்த வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரியுள்ளது.

 இது குறித்து அதன் மாநிலச் செயலர் ஆர்.ராஜாங்கம் வெளியிட்ட அறிக்கை:

ஆதிதிராவிட மக்களுக்கு, ஆதிதிராவிடர்  நலத் துறையால் தற்போது வழங்கப்பட்டு வரும் சேலை மற்றும் கைலிகள் மிகவும் தரமற்றதாக உள்ளது.

கைத்தறி நெசவாளர்களுக்கு நிரந்தர வேலை கிடைக்க வேண்டும் பாரம்பரியமான கைத்தறித் தொழில் பாதுகாக்கப்பட  வேண்டும் என்ற நோக்கத்தோடு கைத்தறித் துணிகளை அரசே கொள்முதல் செய்து மக்களுக்கு வழங்க வேண்டும் எனக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்து போராடி வருகிறது.

கடந்த காங்கிரஸ் அரசும், தற்போதைய என்.ஆர். காங்கிரஸ் அரசும் துணிகளை வெளியில் வாங்கி விநியோகிக்க திட்டம் தீட்டினார்கள்.

அதன் விளைவாக கைத்தறி நெசவாளர்களின் வேலையை தட்டிபறித்து, கைத்தறித் துறை உற்பத்தியை தடை செய்து, வெளிச்சந்தையில் கொள்முதல் செய்யத் தொடங்கினார்கள்.

மறுபுறம் தரமற்ற துணிகள் ஆதிதிராவிடர் மக்களுக்கு விநியோகத்துக்கு வந்துள்ளன. ஒரு நிறுவனத்திடம் ரூ.380-க்கு சேலையும், ரூ.200-க்கு கைலியும், ரூ.80-க்கு சட்டைத் துணியும் என ரூ.7.2 கோடிக்கு கொள்முதல் நடைபெற்றுள்ளது.

 இத் துணிகள் தரமற்று இருப்பதன் காரணம் என்ன? இது குறித்த விவரங்களைத் தர ஆட்சியாளர்கள் மறைக்கின்றனர்.

மேலும் இதுவரை இந்த நிறுவனம் ஒரு சில ஆயிரம் துணிகள் மட்டுமே வழங்கியுள்ளன.

மீதம் உள்ள துணிகள் எப்போது வழங்கப்படும் என்றும் தெரியவில்லை.

எனவே ஆதிதிராவிடர் நலத் துறை நடத்தியுள்ள இந்த துணிகள் கொள்முதல் விநியோகம் ஆகியவற்றில் நடைபெற்றுள்ள விதிமுறை மீறல்கள், ஊழல்கள் குறித்து முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என அந்த அறிக்கையில் ஆர்.ராஜாங்கம் வலியுறுத்தியுள்ளார்.

Leave a Reply