சமூக ஊடகங்களை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்வோம்
பயிற்சிப் பட்டறையில் சீத்தாராம் யெச்சூரி பேச்சு

கார்ப்பரேட் ஊடகங்கள் நம்மை இருட்டடிப்பு செய்யக்கூடிய சூழலில், சமூக ஊடகங்களை முழுமையாக நாம் பயன்படுத்திக்கொண்டு, நம் சிந்தனைப் போராட்டத்தை வெற்றிகரமாக முன்னெடுத்துச் செல்வோம் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி கூறினார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் சமூக ஊடகங்களுக்கான பயிற்சிப் பட்டறை புதுதில்லியில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு அலுவலகமான ஏ. கே. கோபாலன் பவனில்  சனி, ஞாயிறு தேதிகளில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. அனைத்து மாநிலங்களிலிருந்தும் 85 பிரதிநிதிகள் பட்டறையில் பங்கேற்றனர். தமிழகத்திலிருந்து சுதிர் ராஜா, இரா. சிந்தன், களப்பிரன் உட்பட ஐந்து பேர் பட்டறையில் கலந்து கொண்டார்கள. தீக்கதிர் தில்லி செய்தியாளர் ச. வீரமணியும் பட்டறையில் பங்கேற்றார்.
பிருந்தாகாரத் 
பட்டறை சனிக்கிழமையன்று காலை துவங்கியது, பட்டறையினைத் துவக்கி வைத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினரும், சமூக ஊடகங்களுக்கான பொறுப்பாளருமான பிருந்தா காரத் உரையாற்றினார்.  அப்போது அவர்,  நவீன தாராளமய பொருளாதார சீர்திருத்தங்கள் அமல்படுத்தப்படும் இன்றைய சூழலில் கார்ப்பரேட் மீடியா நம் செய்திகள் மற்றும் இயக்கங்களுக்கு உரிய இடம் அளிப்பதில்லை என்பதை அறிவோம் என்றும் எனவே இதனை ஓரளவுக்குச் சரிக்கட்டக்கூடிய விதத்தில் சமூக வலைத்தளங்களான முகநூல், ட்விட்டர் போன்று இயங்கும் பல்வேறு சமூக வலைத்தளங்களையும் நம் கட்சியின் பின்னே இயங்கும், சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்திடும் தோழர்கள் அவற்றை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள, பயிற்சி அளிக்க வேண்டும் என்ற முறையில்தான் அகில இந்திய அளவிலான இந்த பயிற்சிப் பட்டறைக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது என்றும் கூறினார்.
தொடர்ந்து சமூக வலைத்தளங்களின் முக்கியத்துவம் குறித்தும் அவற்றை நாம் எவ்வாறெல்லாம் பயன்படுத்தலாம் என்றும் ராம் குமார், மகேஷ் ஆகியோர் விளக்கினார்கள். ட்விட்டர் வலைத்தளத்தின் முக்கியத்துவம் மற்றும் அதன்கீழ் புகைப்படங்கள், கேலிச்சித்திரங்கள் எப்படி பதிவேற்றம் செய்யலாம் என்று பப்பா மற்றும் பிரவீன் விளக்கினார்கள். முகநூலை பொதுவாக நம் தோழர்கள் எப்படிப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள், அதனை எப்படிப் பயன்படுத்தினால் பார்வையாளர்களை வேகமாகச் சென்றடைய முடியும் என்று பிரஞ்சால் விளக்கினார். வீடியோக்கள் எப்படி உருவாக்குவது என்று பிரவீன் கூறினார். இவர்கள் கூறியதன் அடிப்படையில் பயிலரங்கிற்கு வந்திருந்தோர் இவற்றைச் செய்து காட்டினார்கள்.
இரண்டாம் நாளான ஞாயிறு அன்று வீடியோக்களை உருவாக்குதல், அவற்றை எடிட் செய்தல் மற்றும் போஸ்டர்கள் உருவாக்குதல் போன்றவை குறித்து என்.கே. சர்மா, சௌரவ் முகர்ஜி, சுதிர் ஆகியோர் விளக்கினார்கள்.
அடுத்து, மற்ற இணையதளங்களில் வரும் செய்திகள் மற்றும் கட்டுரைகள் மீது நாம் எவ்வாறு செயல்பட முடியும் என்பது குறித்து கிரண் சந்திரா மற்றும் பிரவீன் எடுத்துரைத்தார்கள்.
இதனைத் தொடர்ந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய செயலக உறுப்பினர் வி. சீனிவாசராவ் பேசினார். கட்சிப் பத்திரிக்கையின் முக்கியத்துவம் குறித்து மாமேதை லெனின் கூறியிருப்பது உங்கள் அனைவருக்கம் தெரியும். ஆயினும் அவர் காலத்தில் இப்போதிருப்பதைப்போன்று இணையதளங்கள், சமூக வலைத் தளங்கள் கிடையாது.இவற்றையும் நம் பிரச்சாரத்திற்கு எப்படி முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள முடியும் என்பதற்காகத்தான் இந்தப் பயிற்சிப் பட்டறை. இவற்றின் மூலமும் நம் அரசியல் சித்தாந்தத்தை மிக விரிவான அளவில் முன்னெடுத்துச் செல்ல இவற்றைச் சிறப்பாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார்.
சீத்தாராம் யெச்சூரி
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி நிறைவுரையாற்றினர். அப்போது அவர் கூறியதாவது:
“சமூக வலைத்தளங்களை மற்ற கட்சிகள் பயன்படுத்துவதற்கும் நாம் பயன்படுத்துவதற்கும் வித்தியாசங்கள் உண்டு. மற்ற கட்சிகளைப் பொறுத்தவரை அவற்றிற்காக அவை தங்கள் பணபலத்தை முழுமையாகப் பயன்படுத்திக் கொண்டிருக்கின்றன. அதற்கு இணையாக நம்மால் போட்டிபோட முடியாத என்ற போதிலும் உங்களைப் போன்ற தோழர்கள் தம்மிச்சையாக முன்வந்து இதனை பன்மடங்கு முன்னெடுத்துச் சென்றிருக்கிறீர்கள்.
இன்றையதினம் நாட்டில் சிந்தனைகளின் போராட்டம் நடந்து கொண்டிருக்கிறது. ஒரு பக்கத்தில் தற்போதுள்ள மதச்சார்பற்ற ஜனநாயகக் குடியரசை தங்களுடைய வெறிபிடித்த இந்து ராஷ்ட்ரமாக மாற்றுவதற்காக ஆர்எஸ்எஸ்/பாஜக தலைமையில் இயங்கும் மத்திய ஆட்சியாளர்கள் தங்கள் சிந்தனைகளைக் கட்டவிழ்த்துவிட்டிருக்கிறார்கள். இதற்காக அனைத்து சமூக வலைத்தளங்களையும் அவர்கள் பயன்படுத்திக் கொண்டுமிருக்கிறார்கள். இவர்களின் பிரச்சாரத்திற்கு சவால் விடக்கூடிய விதத்தில் நம் தோழர்களும் இவ்வலைத்தளங்களில் இயங்கிக் கொண்டிருக்கிறார்கள்.
நாட்டில் அவசரநிலைப் பிரகடனம் செய்யப்பட்டு அப்போது நாடு அனுபவித்த இருண்ட காலம் குறித்தும், அவற்றின் ஆபத்துக்கள் குறித்தும் இன்றைய தலைமுறையினருக்கு அவ்வளவாகத் தெரியாது. அவற்றையெல்லாம் நாம் சமூக வலைத்தளங்கள் மூலமாக இளம் தலைமுறையினருக்குக் கொண்டு செல்ல வேண்டும். இவற்றை மிகவும் சிறப்பாக உங்களால் இளம் தலைமுறையினரிடம் எடுத்துச் செல்ல முடியும். அதேபோன்று ஆர்எஸ்எஸ்/பாஜக ஆட்சியாளர்கள் உமிழும் மதவெறிப் பிரச்சாரங்களுக்கு எதிராகவும் தக்க விதத்தில் சிந்தனைப் போராட்டங்களை சமூக வலைத்தளங்களின் மூலமாக பல்வேறு வடிவங்களிலும் நீங்கள் முன்னெடுத்துச் செல்ல வேண்டும்.  அவ்வாறு நீங்கள் மிகவும் சிறப்பாகச் செய்துகொண்டிருக்கிறீர்கள். அதனை மேலும் விரிவாக முன்னெடுத்துச் செல்ல வேண்டும்.
கார்ப்பரேட் ஊடகங்கள் நம்மை இருட்டடிப்பு செய்வதை நீங்கள் அறிவீர்கள். லட்சக்கணக்கான தொழிலாளர்கள் பங்கேற்ற தில்லி பேரணி குறித்து ஒரு வரி கூட செய்தியை ஒளிபரப்பாத கார்ப்பரேட் ஊடகங்கள், பேரணி நடைபெற்ற அதே நாளில் பக்கத்தில் பெயரளவில் நடைபெற்ற அண்ணா ஹசாரே உண்ணாவிரதம் குறித்து 24 மணி நேரமும் ஒளிபரப்பிக் கொண்டிருந்ததை நாம் அறிவோம். இவ்வாறு கார்ப்பரேட் ஊடகங்கள் நம்மை இருட்டடிப்புசெய்யக் கூடிய சூழலில் இத்தகைய சமூக வலைத்தளங்களை எந்த அளவிற்கு சாத்தியமோ அந்த அளவிற்கு முழுமையாக நாம்  பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
கட்சியின் பிரச்சாரத்தை மக்கள் மத்தியில் கொண்டுசெல்வதில் உங்களுக்கு மிகப்பெரிய பங்கு உண்டு.  அந்த அடிப்படையில் இரு நாட்களும் நடைபெற்ற சமூக ஊடகங்களுக்கானப் பயிற்சிப் பட்டறை ஒரு நல்ல தொடக்கம். இதனை மாநில அளவிலும் மேலும் விரிவான முறையில் கொண்டுசெல்வோம்.
இவ்வாறு சீத்தாராம் யெச்சூரி கூறினார்.

Leave a Reply