இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) புதுச்சேரி மாநில அமைப்புக்குழு 24வது மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்.
1) புதுச்சேரி அரசியல் தீர்மானம்.
கம்யூனிஸ்டுகளின் தியாகத்தால் சுதந்திரம் பெற பெற்ற புதுச்சேரியில் தற்போது மதவாத பாஜக கூட்டணி அரசு ஆட்சியில் இருப்பது புதுச்சேரி பன்முகதன்மைக்கும் மக்கள் அமைதிக்கும் மிகப்பெரிய அச்சுறுத்தலாகும். ஒன்றிய பாஜக அரசும் புதுச்சேரி என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணி அரசும் புதுச்சேரியை ஆளும் தகுதியை இழந்துவிட்டன. மக்கள் விரோத புதிய தாராளுமைய கொள்கையால் புதுச்சேரி மக்களின் உரிமைகள் அனைத்தும் பரிக்கப்பட்டுள்ளன. அதற்கு எதிராக தொடர்ந்து களத்தில் போராடிக்கொண்டுயிடிருப்பது கம்யூனிஸ்ட்டுகள் மட்டுமே. அந்தவகையில் புதுச்சேரியில் ஒரு மாற்று அரசியலை அதுவும் இடதுசாரி அரசியலை முன்னெடுக்க வேண்டிய தேவை முன்எப்போதும் இல்லாத அளவில் உள்ளது. அதற்கான முதல்படியாக இடது ஜனநாயக அணியை புதுச்சேரியில் ஏற்படுத்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்து போராடும் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.
2) புதுச்சேரிக்கு முழு மாநில அந்தஸ்து வழங்கிடுக!
பிரஞ்சு ஏகாதிபத்தியத்தின் காலனியாக இருந்த புதுச்சேரி, தொழிலாளி வர்க்க தலைமையிலான மக்கள் போராட்டத்தால் 1954 நவம்பர் 1ஆம் தேதி விடுதலை பெற்று இந்திய ஒன்றியத்துடன் இணைந்தது. 1962 ஆகஸ்ட் 16 அன்று சட்டபூர்வமாக இந்திய ஒன்றியத்துடன் இணைக்கப்பட்டது. இந்திய அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 239ல் திருத்தம் செய்யப்பட்டு புதுச்சேரி யூனியன் பிரதேசமாக உருவானது. 1963ல் புதுச்சேரி யூனியன் ஆட்சி பரப்புச் சட்டம் உருவாக்கப்பட்டது. மேற்படிச் சட்டம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை விட ஒன்றிய அரசால் நியமிக்கப்படும் துணைநிலை ஆளுநருக்கு கூடுதல் அதிகாரங்களை வழங்கி உள்ளது.
புதுச்சேரி இந்திய ஒன்றியத்துடன் இணைந்த போது புதுச்சேரியின் தனித்தன்மை பாதுகாக்கப்படும். மாநில வளர்ச்சித் திட்டங்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும், என இந்திய பிரதமராக இருந்த ஜவஹர்லால் நேரு அவர்கள் உறுதிமொழி அளித்திருந்தார். அதற்கு ஏற்ப புதுச்சேரிக்கு திட்ட செலவில் 90% மானியம், 10% கடன் வழங்கப்பட்டன. வளர்ச்சித் திட்டங்களும் மேற்கொள்ளப்பட்டன. காலப்போக்கில் ஒன்றிய அரசு பின்பற்றிய புதிய பொருளாதாரக் கொள்கை மற்றும் அரசியல் நிகழ்ச்சி போக்குகளில் ஏற்பட்ட மாற்றங்கள் புதிய சிக்கல்களை கொண்டு வந்தன.
2014ல் அதிகாரத்திற்கு வந்த தீவிர வலதுசாரி பாஜக ஆட்சியில் இந்திய கூட்டாட்சி முறையை சிதைப்பதும், மாநில உரிமைகளை பறிப்பதும் வேகம் எடுத்துள்ளது. மாநில ஆளுநர், துணைநிலை ஆளுநர்களை பயன்படுத்தி பாஜக தனது அரசியலை விரிவுபடுத்தத் துணிந்து விட்டது. புதுச்சேரி, கேரளம், தமிழகத்தில் நடைபெற்று வரும் ஆளுநர்களின் அப்பட்டமான அதிகார அத்துமீறல் சமீபத்திய உதாரணங்களாகும். ஜனநாயகத்தை உச்சரித்துக் கொண்டே சர்வாதிகாரத்தை கையில் எடுத்துக்கொண்டு ஆட்டம் போடுகிறது. இது ஒற்றைத் தலைமையை நோக்கிய அரசியல் என்பது புலப்படும். ஒன்றிய அரசு என்ற வார்த்தையை தனது சித்தாந்தத்திற்கு எதிராக பாஜக கருதுகிறது.
முதல்வர் என். ரங்கசாமி புதுச்சேரி மாநில அந்தஸ்து வேண்டும் என்று அடிக்கடி பேசிவருவது வியப்பாக உள்ளது. ஒரே நாடு, ஒரே மொழி ஒரே கலாச்சாரம் என்ற கோட்பாட்டை கொண்ட பாஜகவுடன் கூட்டணியில் இருந்து கொண்டு மாநில அந்தஸ்து பற்றி பேசுவது அரசியல் சாகசமாகும். 12-வது நிதிக்குழு (2007-2008) பரிந்துரையின் பேரில் ஒன்றிய அரசு வழங்கி வந்த கடன் உதவி ரத்து செய்யப்பட்டு விட்டது. இதில் புதுச்சேரி மாநிலமும் தப்பவில்லை. மாநில பொதுக்கணக்குத் துவங்கி வங்கிக் கடன் பெற நிர்பந்தித்தது. 2007 இல் பொதுக்கணக்குத் தொடங்கிய போது மாநில அரசின் கடன் ரூபாய் 2177 கோடியாக இருந்தது. தற்போது கடன் தொகை சுமார் ரூபாய் 12 ஆயிரம் கோடி இது மாநில ஜிடிபியில் 24 சதவீதமாகும். இது மாநில ஆண்டு வரவு செலவு திட்டத்தொகைக்கு இணையாகும்.
புதுச்சேரி விடுதலை பெற்று இந்திய ஒன்றியத்துடன் இணைகிற போது நாடு இரண்டாவது ஐந்தாண்டு திட்டத்தை நிறைவு செய்திருந்தது. இந்த இடைவெளியை கவனத்தில் கொண்டு மாநில அரசின் கடனை ஒன்றிய அரசு தள்ளுபடி செய்யாதது துரதிஷ்டவசமாகும்.நிர்வாகம், சட்டம் ஒழுங்கு, நீராதார மேம்பாடு, சுகாதாரம், கல்வி அடிப்படை கட்டமைப்புகளை உருவாக்குவது என மிகப் பெரும் செலவின பொறுப்புகளை மாநிலங்கள் மீது சுமத்தப்பட்டுள்ளன. மறுபுறத்தில் நிதிப் பொறுப்பு மற்றும் வரவு செலவு மேலாண்மை சட்டத்தின் மூலம் கட்டுப்பாடுகளை விகிக்கிறது. இதனால் மாநிலங்களின் வளர்ச்சித் திட்டங்களை முன்னெடுக்கவும், தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற இயலாமல் நெருக்கடிக்கு தள்ளப்படுகிறது.
புதுச்சேரி அரசு, ஒன்றிய உள்துறை அமைச்சகத்தின் நேரடி கட்டுப்பாட்டில் இருப்பதால் மாநில அரசு சுதந்திரமாக செயல்பட இயலவில்லை. வரவு செலவுத் திட்டம் ஒன்றிய அரசின் அனுமதி பெற்று தாக்கல் செய்யப்படுகிறது. சட்டம் இயற்றவும், திட்டம் உருவாக்கவும் ஒன்றிய அரசின் அனுமதிக்காக காத்துக் கிடக்க வேண்டியுள்ளது. பணி நியமனம் செய்யவும், பதவி உயர்த்தவும் அதிகாரிகளை இடமாற்றம் செய்வதும் ஒன்றிய அரசின் அனுமதி பெற வேண்டியுள்ளது.
2024ல் சட்டபேரவையில் எதிர்கட்சிகளால் கொண்டுவரப்பட்ட மாநில அந்தஸ்து கோரும் தீர்மானம் மாநில முதல்வர் கேட்டுக்கொண்டதால் திரும்பப்பெறப்பட்டது. அதைத் தொடர்ந்து மாநில முதல்வரால் அரசு தீர்மானமாக முன்மொழியப்பட்டு ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. ஆனால் ஒன்றிய அரசு தற்போது நிலையே தொடரும் என விளக்கம் அளித்து மாநில அந்தஸ்து கோரிக்கையை நிராகரித்துவிட்டது. புதுச்சேரி மாநிலம் தனித்த விடுதலைப்போராட்டம் மற்றும் தேசிய இயக்கங்களின் வரலாறு கொண்ட பகுதி என்பதால் மாநில அந்தஸ்து கோருவது மாநில மக்களின் அரசியல் உரிமையாகும்.
மக்களாட்சியில் ஒன்றிய அரசால் நியமிக்கப்பட்ட துணைநிலை ஆளுநர் தான் முதல்வர் போல் செயல்படுகிறார். உயர்மட்ட அதிகாரிகள் கூட்டம், கள ஆய்வு, மக்கள் குறை கேட்பு அரசு திட்டங்களை அறிவிப்பது, துவக்கி வைப்பது என அதிகார வரம்பு மீறி செயல்படுகிறார்கள். இத்தகைய குழலில் ஆளுநர் நியமனம் தேவையில்லை சர்க்காரியா கமிஷன் பரிந்துரைப்படி –மாநிலத்தின் சார்பாக பரிந்துரைக்கப்படும் மதிப்பிற்குரிய மூன்று நபர்களில் ஒருவரை குடியரசுத் தலைவரால் நியமனம் செய்வதே பொருத்தப்பாடு உடையதாகும்.
யூனியன் பிரதேசங்களாக இருந்த மாநிலங்கள் மாநில அந்தஸ்து பெற்றுவிட்டன. புதுச்சேரி விடுதலை அடைந்து 70 ஆண்டுகள் ஆகிறது. சட்டப்பேரவை அமைத்து 60 ஆண்டுகள் ஆகிறது. 15 முறை மாநில அந்தஸ்து கோரி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இன்றளவும் ஒன்றிய அரசின் முழுக் கட்டுப்பாட்டில் தொடர்வது மிகப் பெரும் வரலாற்றுப் பிழையாகும். ஆகவே புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்குவதன் மூலம் மாநிலத்தின் சமூக பொருளாதாரம் உயரவும் மக்கள் நலன்களை பாதுகாக்கவும் முடியும். ஆகவே புதுச்சேரிக்கு முழு மாநில அந்தஸ்து வழங்கிட வேண்டும்.
3) தீர்மானம் மின்துறை தனியார்மயம்- பிரீப்பெய்டு மின் மீட்டர் திட்டத்தை திரும்ப பெறுக!
கடந்த 2020ஆம் ஆண்டு புதுச்சேரி உள்ளிட்ட யூனியன் பிரதேசங்களில் மின்சாரத்துறை தனியார் மயமாக்கப்படும் என்று ஒன்றிய நிதி அமைச்சர் அறிவித்தார் உடனே மின்துறை ஊழியர்கள், நமது கட்சி வெகுஜன அமைப்புகளின் தீவிர போராட்டத்தின் காரணமாக அப்போதைய காங்கிரஸ் கூட்டணி அரசு புதுச்சேரி மின்விநயோகத்தை தனியாருக்கு விற்க அனுமதிக்கமுடியாது என்று சட்ட மன்றத்தில் நிறைவேற்றியது. மின்துறை தனியார் வசமானால் ஏற்படப் போகும் ஆபத்துகளை விளக்கி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இயக்கங்களை கட்டமைத்தது. மதசார்பற்ற கூட்டணிக் கட்சிகளை இணைத்துப் பிரச்சாரங்கள், வலிமையான பந்த் மின்துறை ஊழியர்கள் மின்பொரியாளர்கள் வேலை நிறுத்த போராட்டங்கள், சட்ட போராட்டங்கள் நடைபெற்றன. சென்னை உயர்நீதிமன்றத்தின் தடையால் தற்காலிகமாக ஒன்றிய மாநில அரசுகள் தனியார்மய நடவடிக்கைகைளை தாமதமாக்கி உள்ளன.
நமக்கு சொத்தான மின்துறையை பாதுகாக்க வேண்டியது நமக்காகவும் அடுத்த தலைமுறைக்கும் நாம் செய்ய வேண்டிய கடமை. புதுவை மாநிலத்தில் உள்ள சுமார் 16 லட்சம் மக்களுக்கும் சொந்தமான ஒரு மிகப் பெரிய சொத்து ஆகும். ஆனால் தற்போது திட்டமிட்டே இந்த துறை சீரழிக்கப்பட்டுவருகிறது. அமைச்சர் நமச்சிவாயம் மின்துறை 300 கோடிநஷ்டத்தில் இயங்குவதாக கூறுவதும் தனியார்மயம் சிறப்பாக செயல்படும் என்று கூறுவதும் தனியார்மயத்தின் ஒருபகுதியாகும். அமைச்சரியின் இத்தகைய நடவடிக்கைகளை கட்சி வன்மையாக கண்டிக்கிறது.
தனியார்மயத்தின் ஒருபகுதியாக தொடர்ந்து மின்கட்டணம் தொடர்ந்து அதிகரிக்கப்பட்டு வருகிறது இதற்கு எதிராகவும் நமது கட்சியும் பிற கட்சிகளும் போராடியதின் விளைவாக ஒருபகுதி கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது. மாநிலங்கள் மின்சாரம் தனியார்மயத்தில் சிக்கி அல்லல் பட்டு திரும்பியிருக்கிறது. தனியார்மய முயற்சிகளை முளையிலேயே கிள்ளி எறிந்திருக்கிறது அதுபோல புதுச்சேரியிலும் மின்துறை தனியார்மயத்தை தடுத்தி நிறுத்திட அனைத்து இடதுசாரி, மதசார்பற்ற ஜனநாயக சக்திகளை இணைந்து போராட இம்மாநாடு அழைக்கிறது.
புதுச்சேரி மக்களின் சொத்தான மின்துறையை தனியாருக்கு தாரை வார்ப்பது வாக்களித்த மக்களுக்கு செய்யும் துரோகம் என்று பாஜக என்.ஆர்.காங்கிரஸ் ஆட்சியாளர்களுக்கு மிண்டும் சுட்டிக் காட்டுகிறோம். இணைமின்துறை ஒழுங்குமுறை ஆணையத்தில் புதுச்சேரியை சேர்ந்த ஒருவரை நியமிக்கவேண்டும். உயர்த்தப்பட்ட அநியாய மின்கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும். ஏழை எளிய மக்களின் வீடுகளை இருட்டாக்கி வேலைவாய்ப்பை ஒழிக்கவும் வழி வகுக்கும் இந்த மோசடி ப்ரீபெய்ட் மின் மீட்டர், மின்துறை தனியார்மயம் ஆகியவற்றை கைவிட வேண்டும்.
4) மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி (சட்டம்) திட்டத்தை அமலாக்கவும் 200 நாட்கள் வேலை மற்றும் ரூ.600/- கூலி உயர்த்த கோரும் தீர்மானம்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட இடதுசாரி கட்சிகளின் முன்முயற்சி மற்றும் ஆதரவின் மூலம் கொண்டு வரப்பட்ட மகாத்மா காந்தி கிராமப்புற வேலை உறுதி திட்டம் 2005ஆம் ஆண்டு சட்டமாக்கப்பட்டு 2007 முதல் அமலாக்கத்தில் உள்ளது. தற்போது ஆட்சியில் இருக்கும் பாஜக அரசு இத்திட்டத்திற்கு கடந்த காலங்களில் ஒதுக்கப்பட்ட நிதியை படிப்படியாக குறைத்து வருகிறது.
புதுச்சேரி மாநிலத்தில் 42 ஆயிரம் ஹெக்டேராக இருந்த விளைநிலம் தற்போது 15405 ஆயிரம் ஹெக்டேராக குறைந்துள்ளது. மத்திய மாநில அரசுகளின் நவீன தாராளாமய கொள்கைகளின் விளைவாலும் ரியல் எஸ்டேட்களுக்கு நிலம் மாற்றம் செய்யப்படுவதாலும், விவசாய விளைநிலம் வெகுவாக குறைந்து வருகிறது. விவசாயத் தொழிலை நம்பியுள்ள 1.5 இலட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலையின்றி இடம்பெயரும் நிலை உருவாகியுள்ளது. இவற்றை ஓரளவுக்கு ஈடு கட்ட கூடிய வகையில் கொண்டு வரப்பட்ட கிராமப்புற வேலை உறுதி திட்டத்தின் மூலம் ஆண்டுக்கு 10 முதல் 20 நாட்கள் வேலை மட்டுமே வழங்கப்பட்ட நிலையில் நமது தொடர் தலையீட்டின் காரணமாக ஆண்டுக்கு 50 முதல் 60 வழங்கப்பட்டது. தற்போது ஒன்றிய மோடி அரசின் மோசடியால் வேலைக்கான கூலியும் வழங்கப்படாமல் இழுத்தடிக்கப்படுவது தொடர்கிறது. புதுச்சேரியில் உள்ள 108 வருவாய் கிராமங்களில் 60 ஆயிரத்திற்கும் அதிகமான குடும்பங்களுக்கு இச்சட்டத்தில் உள்ள நீர்நிலைகள் பராமரிப்பு பணி மட்டுமின்றி, 66 வகையான வேலைகளையும் தொடர்ச்சியாக வழங்க வேண்டும். மேலும் கிராப்புற வேலைவாய்ப்புகள் இல்லாத நிலையில் ஆண்டுக்கு 200 நாட்களுக்கு தொடர்ச்சியாகவும், ஒரு நாளைக்கு ரூ.394 என இருக்கும் சட்ட கூலியை ரூ.600 உயர்த்திடவும், இந்ததிட்டத்தை நகர்ப்புறத்திற்கு விரிவுப்படுத்தவும் வேண்டும்.
5) ஃபெஞ்சல் புயல் வெல்ல நிவாரணம் வழங்கிட கோருதல் …
கடந்த இரண்டு நாட்களாக ஃபெஞ்சல் புயல் காரணமாக அதி கன மழை பெய்து 46 சென்டிமீட்டர் மழை பதிவு ஆகியுள்ளது. புயல் புதுச்சேரி அருகில் கரையை கடந்ததால் வலுவான காற்றுடன் தொடர் அதி கன மழை பெய்து வருகிறது .வெள்ளம் சூழ்ந்து ,வீடுகள் சேதம் அடைந்து ,மரங்கள் போக்குவரத்து தடை உள்ளிட்ட பெருத்த சேதத்தை புதுவை சந்தித்துள்ளது. நூற்றுக்கணக்கான ஏக்கர் பயிர் சேதம் ,கால்நடைகள் பாதிப்பு ,வீடுகள் இடிந்து விழுந்து அதன் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது .
புதுச்சேரி அரசு நீர் சூழ்ந்துள்ள பகுதிகளில் நீரை அகற்றிடவும் ,வீடு இழந்து தவிக்கின்ற மக்கள் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டு உணவு வழங்கிடவும் ஏற்பாடு செய்ய வேண்டும் .கால்நடை சேதத்திற்கு நிவாரணம் வழங்கவும், பயிர் சேதத்திற்கு ஏக்கருக்கு ரூபாய் 25000 உடனடி நிவாரணமாக வழங்கப்பட வேண்டும்.
மின் விநியோகத்தை முறைப்படுத்த வேண்டும் .அன்றாட தொழில் செய்து வாழ்க்கை நடத்தும் முறை சாரா தொழிலாளர்களுக்கு ,மீன் பிடித்து தொழிலாளர்களுக்கு அரிசி உள்ளிட்ட உணவுப் பொருட்கள் வழங்கவும் ரூபாய் 5000 உடனடி நிவாரணம் ஒவ்வொரு குடும்பத்திற்கும் வழங்கிடவும் ,போர்க்கால அடிப்படையில் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24வது மாநில அமைப்புக்குழு மாநாடு கோருகிறது.. மேலும் புதுச்சேரி முதல்வர் கடற்கரையை சென்று பார்த்துவிட்டு, முறையான ஆய்வு எதுவும் நடத்தப்படாமலே புதுச்சேரியில் புயல் பாதிப்பு இல்லை என்று முதலமைச்சர் அறிவித்துள்ளதாக பத்திரிகை செய்தி வந்துள்ளது இது புதுச்சேரி மக்களை ஏமாற்றி அவமதிக்கும் செயலாகும் தவறான செய்திகளை பரப்பும் முதலமைச்சரை வன்மையாக கண்டிக்கிறோம்.
6) அமைப்பு சாரா தொழிலாளர் நலவாரியத்தினை நிதி ஒதுக்கீடு உள்ளிட்ட கட்டமைப்புகளுடன் செயல்படுத்திட வேண்டும்.
புதுச்சேரி மாநிலத்தின் 90 சதவீதமான உழைக்கும் வர்க்கமாக இருக்கும் முறைசாரா தொழில்களில் ஈடுபட்டுள்ள குறிப்பாக எவ்வித சமூகப் பாதுகாப்பும் இன்றி முறைசாரா தொழிலில் ஈடுபட்டுள்ள ஆட்டோ, டாக்ஸி, ஓட்டுனர்கள், நடைபாதை வியாபாரிகள், தையல், சுமைப்பணி, வீட்டு வேலை செய்பவர்கள், ஓட்டல், பெட்ரோல் பங்குகள், சலவை தொழிலாளர், சிகை அலங்கார கலைஞர்கள், மளிகை, ஜவுளி கடை, நகைக்கடை, உள்ளிட்ட நிர்ணயிக்கப்பட்ட 28 வகையான பணி செய்யும் அமைப்பு சாரா தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கும் சமூகப் பாதுகாப்பை உத்திரவாதபடுத்தும் வகையில் அவர்களுக்கென நலவாரியம் அமைக்கப்பட வேண்டுமென கோரி பல ஆண்டுகளாக நமது கட்சி போராடியதன் விளைவாக அமைப்பு சாரா நலச்சங்கத்தை அமைப்பு சாரா நலவாரியமாக மாற்றி புதுச்சேரி அரசு 2020ல் அரசாணை பிறப்பித்தது. அதைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட வேண்டிய நியமனங்கள், கமிட்டி அமைத்தல், நிதி ஒதுக்கீடு, அலுவலகம் உள்ளிட்ட அடிப்படை வேலைகள் ஏதும் நடைபெறாமல் கடந்த நான்கு ஆண்டுகளாகமாக புதுச்சேரியை ஆளும் என்.ஆர்.காங்கிரஸ் பாஜக அரசு துரோகம் இழைத்து வருகிறது.
மேலும் தொழிற்சாலைகள் மூடப்படுவதன் மூலம் வேலை இழந்து வரும் படித்துவிட்டு படிப்பிற்கு ஏற்ற அரசு பணிகள் உள்ளிட்ட பணிகள் கிடைக்காத காரணத்தாலும் அமைப்பு சாரா தொழில்களை நோக்கி பெரும்பாலான தொழிலாளர்கள் வருகின்ற சூழலில் அமைப்புசாரா நலவாரியம் என்பதும் அதன் செயல்பாடுகளும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைகிறது. எனவே, புதுச்சேரி அரசு அமைப்பு சாரா தொழிலாளர் நலவாரியத்தினை நிதி ஒதுக்கீடு உள்ளிட்ட கட்டமைப்புகளுடன் செயல்படுத்திட வேண்டும்.
7) காரைக்கால், மாகே, ஏனாம் மக்கள் தொகைகேற்ப நிதி ஒதுக்கி திட்டங்களை செயல்படுத்த வேண்டும்.
புதுச்சேரி மாநிலத்தில் காரைக்கால் மற்றும் ஏனாம் அகியன பின்தங்கிய பகுதியாக உள்ளது. மாகே வளர்ச்சி பணிகள் எதுவும் இன்றி முடக்கப்பட்டுள்ளது. காரைக்கால் தனி மாவட்டமாக அறிவிக்கப்பட்டும் இதுவரை துறை வாரியான அதிகாரிகளோ உரிய நிதியும் ஒதுக்கப்படவில்லை. காரைக்கால் மக்கள் தொகைக்கேற்ப நிதியை ஒதுக்கி உரிய வகையில் காரைக்கால் வளர்ச்சிக்கு பயன்படுத்த வேண்டும். கோவில் நகரமான திருநள்ளார் வளர்ச்சிக்கு பண ஒதுக்கீடு செய்தும் பணி மந்தமாக நடைபெறுகிறது. இதை துரிதப்படுத்த வேண்டும். காரைக்கால் நகரம் விரிவடைந்து வருகிறது. சாக்கடை வடிகால் திட்டம் அரசு அறிவிப்பாக வந்த பின்னும் எந்த பணிகளும் தொடங்க வில்லை. உடனடியாக தொடங்க வேண்டும். காரைக்காலில் அரசிடம் சலுகை பெற்று தொடங்கப்பட்ட ஆலைகளில் வெளி மாநிலத்தில் இருந்து ஆட்கள் வரவழைக்கப்பட்டு கொத்தடிமைகளாக சுரண்டப்படுகிறார்கள். இதன் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். ஒவ்வொரு தொழிற்சாலைகளிலும் உள்ளுர் மக்களுக்கு 75 சதவிகித வேலைவாய்ப்பு வழங்குவதை உறுதிப்படுத்த வேண்டும்.
காரைக்கால் காவிரி ஆற்றின் கடைமடை பகுதி சாகுபடிக்கு தண்ணீர் வருவது உத்தரவாதமில்லை. வெள்ளம் வந்தால் தண்ணீர் கடலுக்கு போவது வறட்சி என்றால் சாகுபடி இல்லை. காரைக்காலில் நண்டலாறு, அரசலாறு, திருமலைராயன்ஆறு, திராவிடையன் ஆறு என அனைத்து ஆறுகளும் அகலமான ஆறுகளே. வெள்ளக் காலங்களில் வரும் நீரை ஆறுகளை அகலப்படுத்தி, ஆழப்படுத்தி புதிய ஏறிகளை வெட்டி நீராதாரத்தை சேமிக்க முடியும். இந்த நீர் காரைக்கால் பகுதிக்கு போதுமான நீராக இருக்கும். கடைமடைப் பகுதியான காரைக்காலுக்கு கிடைக்க வேண்டிய ஒன்பது டிஎம்சி தண்ணீரை பெறுவதற்கான சட்டப் போராட்டத்தை புதுவை அரசு நடத்த வேண்டும். காரைக்கால் விவசாயத்தை பாதுகாக்க உரிய செயல்திட்டத்தை ஏற்படுத்த வேண்டும். விவசாயிகள் வாழ்வு வளம் பெற காரைக்கால் மக்களுக்கு நலத்திட்டங்கள் சென்றடைய உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் அதேபோல் ஏனாம், மாகே பகுதி கடந்த மூன்று ஆண்டுகளாக தொடர்ச்சியாக கடுமையான மழை வெள்ள பாதிப்புகளை சந்தித்து வருகின்றன. ஆனால் அவர்களுக்கான நிவாரணம் இரட்டை எஞ்சின் ஆட்சி வழங்காமல் வேடிக்கை மட்டும் பார்க்கிறது. வளர்ச்சி திட்டங்கள் எதுவும் கடந்த மூன்று ஆண்டுகளில் இல்லாமல் இப்பகுதிகள் புறக்கணிக்பட்டுவருகிறது. எனவே நிதி, திட்டங்கள், வளர்ச்சி ஆகியவற்றில் எவ்வித பாகுபாடும் இன்றி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
8) புதுச்சேரி விவசாயத்தை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
புதுச்சேரி விவசாயத்தை பாதுகாக்க தனி கொள்கை உருவாக்கப்படும் என்று அரசு அறிவித்தது. அதற்கான நடவடிக்கையோ, முயற்சியோ இல்லை. புதுச்சேரியில் 42 ஆயிரம் ஹெக்டேராக இருந்த விளைநிலம் இன்று 16 ஆயிரம் ஹெக்டேராக குறைந்துள்ளது. நிறுவனங்களுக்கும், ரியல் எஸ்டேட்டுக்குமாக விளைநிலங்கள் போய்க் கொண்டிருக்கிறது. வெளி மாநிலங்களில் இருந்து சிலரால் விளைநிலங்கள் மொத்தமாக வாங்கப்படுகிறது. இது தொடர்ந்தால் விளைநிலங்கள் குறைந்து உணவு உற்பத்தியும் குறையும் என்பது கவவை அளிக்கிறது. எனவே விளைநிலங்களை பாதுகாக்க அரசு கொள்கைப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
விவசாயத்தில் விளைபொருளுக்கு உரிய விலை கிடைக்காமல் விவசாயிகளுக்கு விவசாயத்தில் லாபம் குறைந்து வருகிறது. ஒன்றிய மோடி அரசின் மோசமான விவசாய விரோத திட்டங்களால் உரங்களின், விதைகளின், உற்பத்தி வேளாண் கருவிகளின் விலை பன்மடங்கு உயர்ந்து உள்ளது. விவசாயிகளுக்கு கிடைத்துவரும் கட்டணமில்லாத மின்சாரத்த்தையும் பறிக்கும் வேலையை செய்துவருகிறது. மேலும் விவசாயிகளுக்கும் நாட்டுக்கும் வீரோதமான வேளாண் சட்டங்களை கொண்டுவர துடிக்கிறது. நமது மாநிலத்தில் அரசு கூட்டுறவு சர்க்கரை ஆலை இருந்தும் அது மூடப்பட்டு திறக்கப்படாமல் புதுச்சேரியில் கரும்பு விவசாயமே முற்றிலும் இல்லாமல் போய்விட்டது. ஆட்சிக்குவந்தால் மூடப்பட்ட லிங்காரெட்டியாளையம் சர்க்கரை ஆலையை திறப்பேன் என்ற நவச்சிவாயமும் ரங்கசாமியும் எந்தவித சிறு முயற்சி எடுக்கவில்லை.
புதுச்சேரி விவசாயிகள் ஊக்கத்தொகை அல்லது வேறு நலத்திட்டங்களை பெற அக்ரிஸ்டேக்ல் பதிவு செய்தால் மட்டுமே பெற முடியும் ஆனால் சுமார் 20 சதவீதமான விவசாயிகளிடம் உள்ள நிலம் பட்டா மாற்றம் செய்யப்படாததாலும் வாய்மொழி குத்தகையாலும் பதிவு முடியவில்லை. பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டம் புதிய வழிகாட்டுதலுடன் கடந்த 2020-21 ஆம் ஆண்டு முதல் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தினையும் புதுச்சேரி வேளாண்துறை முறையாக செயல்படுத்தவில்லை எனவே இப்படி பல்வேறு பிரச்சனைகளோடு போராடிவரும் விவசாயிகளின் நலன்களை காக்க இரட்டை எஞ்சின் ஆட்சி முன்வரவேண்டும் மேலும் நெல் கொள்முதல் நிலையம் காட்சி பொருளாகவும், காரைக்கால் விவசாயிகள் தங்களது நெல், பருத்தி ஆகியவற்றை விற்கமுடியாமலும், தட்டாஞ்சாவடி தலைமை விவசாய கொல்முதல் மையம் புரோக்கர்களின் கையில் சிக்கி விவசாயிகளை வாட்டி வதைத்து வருகிறது. எனவே விவசாயிகளை மிகக்கடுமையாக பாதிக்கும் வகையில் மூடப்பட்டுள்ள நேரடி கொள்முதல் நிலையங்களை உடனடியாக திறக்க வேண்டும், கட்டுப்படியான விலை அளித்து கொள்முதல் செய்ய வேண்டும். நவீன குளிர் சாதன சேமிப்பு கிடங்குகளை அரசு ஏற்படுத்த வேண்டும். கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்துக்கு உதவி வரும் கால்நடை வளர்ப்பு தொழிலுக்கு அரசு முன்னுரிமை அளிக்க வேண்டும், பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு ருபாய் பத்து கூடுதலாக அளித்து கொள்முதல் செய்ய வேண்டும். தரமான அடர்த்தீவனம், பசுந்தீவனங்களை அரசு உற்பத்தி செய்து மானிய விலையில் விவசாயிகளுக்கு அளிக்க வேண்டும்.
9) சிறப்பு கூறுகள் திட்ட நிதியினை முழுமையாக தலித்துகளின் மேம்பாட்டிற்கே பயன்படுத்த வேண்டும்.
புதுச்சேரியில் மதவாத சாதிவாத கூட்டணி ஆட்சியில் தலீத் மக்களுக்கு எதிரான அனைத்து திட்டங்களும் கொண்டுவரப்படுகிறது. ஏற்கனவே அவர்களுக்கு கிடைத்துவந்த உரிமைகள் திட்டமிட்டு பறிக்கப்படுகின்றன. நாடு விடுதலை பெற்று 70 ஆண்டுகளைக் கடந்த பின்னரும் தலித் மக்கள் சமூக ரீதியாக பொருளாதார ரீதியாக முன்னேறி விட்டார்கள் என்று கூற முடியாது. கடந்த காலங்களில் மாநிலங்களின் நிதி ஒதுக்கீட்டில் தலித்துகளின் மேம்பாட்டிற்கென்று சிறப்பு கவனம் ஏதும் செலுத்தப்படாததால் நமது கட்சியின் நாடுதழுவிய தொடர் இயக்கத்தால் ஒடுக்கப்பட்ட மக்களது முன்னேற்றத்திற்கு சிறப்பு கவனம் செலுத்தி நிதி ஒதுக்கீடு செய்ய செய்து ஆறாவது ஜந்தாண்டு திட்ட காலத்திலிருந்து உருவாக்கப்பட்டது தான் அட்டவணை இனத்தவர் துணைத்திட்டம் (Scheduled Caste sub plan). பொதுவான மேம்பாட்டுத் திட்டங்களில் தலித் மக்கள் பயன்பெறும் திட்டங்களை அடையாளம் கண்டு துறை வாரியாக, இம்மாநிலத்தில் உள்ள தலித் மக்களின் சதவீதத்துக்கு ஏற்ப நிதி ஓதுக்கீடு செய்வதே இத்திட்டத்தின் நோக்கம்.
புதுச்சேரியில் மொத்த பட்ஜெட்டில் 16 சதவீத நிதியினை சிறப்புக்கூறுகள் திட்டத்திற்கு துறை வாரியாக ஒதுக்கப்படும் குறைந்தபட்சம் நிதியினையும் முழுமையாக தலித் மக்களின் மேம்பாட்டிற்கு பயன்படுத்தாமல் வேறு பொதுவான திட்டங்களுக்கு திருப்பி விடப்படுவதும் அல்லது திருப்பி அனுப்பப்படுவதும் தொடர்கிறது. கடந்த ஆண்டு சுமார் 30 சதவீத நிதி பயன்படுத்தப்படவில்லை. புதுச்சேரி அரசின் இந்த செயல் வன்மையாக கண்டிக்கத்தக்க, அப்பட்டமான தலித் விரோத செயலாகும்.
கடந்த காலத்தைப்போல அல்லாமல் அடுத்துவரக்கூடிய ஆண்டுகளில் துறைவாரியாக 16 சதவீத நிதியினை, சிறப்புக்கூறுகள் திட்டத்திற்கு ஒதுக்கீடு செய்து, அவற்றை முழுமையாக தலித் மக்களின் மேம்பாட்டிற்கு பயன்படுத்துமாறும், அமுலாக்க அதிகாரியை நியமித்து அனைத்துக்கட்சி பிரதிநிதிகளையும், தலித் அமைப்புகளின் பிரதிநிதிகளையும், பொருத்தமான அதிகாரிகளையும் உறுப்பினர்களாகக் கொண்ட கண்காணிப்பு மற்றும் அமுலாக்கக் குழுவினை அமைக்க வேண்டும்.
10) குடிமனை இல்லாதவர்களுக்கும் வாடகை இடத்தில் வசிப்பவர்களுக்கும் நிரந்த வீடு கட்டி கொடுத்திட வேண்டும்.
புதுச்சேரி விடுதலையடைந்து 70 ஆண்டுகளை கடந்த பின்னும் சொந்த வீடில்லாமல் வாடகை வீட்டில் வசிக்கும் குடும்பங்கள் சுமார் 40 சதவீதம் இருப்பது கவலையளிக்கிறது. புதுச்சேரி மாநிலத்தில் பல்வேறு விதமான அரசுப்புறம்போக்குகளில், கோயில் நிலங்களில் பல ஆண்டுகளாக குடியிருந்து வரும் மக்களுக்கு அந்த இடத்திலேயே பட்டா வழங்குவதிலும், சொந்த வீடில்லாத ஏழைகளுக்கு உரிய நிலங்களை கையகப்படுத்தி மனை வழங்குவதில் அக்கரையின்மை தொடர்கிறது.
கடந்த 3 ஆண்டுகளாக மார்க்சிஸ்ட் கட்சி வாடகை வீட்டில், அரசு நிலங்களில், கோயில் நிலங்களில் குடியிருக்கும் இடத்திற்கு பட்டா கேட்டு தொடர்ச்சியான போராட்டங்களை மேற்கொண்டு வருகிறது. ஒவ்வொரு ஏழை எளிய உழைப்பாளி மக்களின் சொந்த வீட்டு கனவை நிறைவேற்றும் வரை கட்சி தொடர்ந்து போராடும்.
நமது கட்சியின் தொடர் போராட்டத்திற்கு பிறகு ஒரு சில பகுதியில் வழங்கப்பட்ட மனைகள் உரிய பயனாளிகளுக்கு வழங்கப்படுவதில்லை இதற்கு முக்கியகாரணம் மனைகள் வழங்குவதில் அமைக்கப்பட்டுள்ள சட்டமன்ற உறுப்பினர்கள் குழு அளிக்கும் பயனாளிகள் பட்டியல்கள் அடிப்படையில் தான் இலவச மனைப்பட்டா வழங்கப்படுகிறது. மேற்படி அணுகுமுறை இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்திற்கும், இயற்கை நியதிக்கும் எதிரானதாகும். ஆகவே புதுச்சேரி அரசு இலவச மனை வழங்குவதில் வெளிப்படைத்தன்மையுடன் கூடிய கொள்கையை உருவாக்க வேண்டும். தகுதியுடைய அனைவருக்கும் இலவச மனைப்பட்டா வழங்க பழைய நடைமுறையை பின்பற்றப்படவேண்டும் என மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது.
நகரப்பகுதிகளில் குடிசைமாற்று வாரியம், வருவாய்த்துறை, மற்றும் நகராட்சி நிர்வாகத்திற்குட்பட்ட காலியிடங்களை தனிநபர்களுக்கு நீண்டகால குத்தகைக்கு விடுவதைத் தவிர்த்து ஏழை, எளிய மக்களுக்கு குடியிருப்புகளை கட்டி வழங்க வேண்டும். வாடகை வீட்டில் வசிப்பவர்கள் வீடற்றவர்கள் மனைப்பட்டா இல்லாதவர்களுக்கு இலவச மனைப்பட்டா மற்றும் தொகுப்பு வீடுகள் மூலம் குடியிருப்பு வசதிகள் ஏற்படுத்தித் தர வேண்டும். நிறுத்தப்பட்டுள்ள அரசு வீடு கட்டும் திட்டத்தை செயல்படுத்தி மானியத் தொகையை அனைவருக்கும் அதிகரிக்க வேண்டும்.
11) புதுச்சேரி மாநிலத்தில் உள்ள கூட்டுறவு நிறுவனங்களை அழிக்கும் வேலையை புதுச்சேரி அரசு நிறுத்த வேண்டும் மேலும் சங்கத்திற்கான தேர்தலை உடனே நடத்திட வேண்டும்.
புதுச்சேரியில் கூட்டுறவு நிறுவனங்கள் அனைத்தும் லாபகரமாக இயங்கியது. ஆனால் தற்போது கூட்டுறவு நிறுவனங்கள் பெரும் நஷ்டத்துக்கு சென்றுள்ளன. இதற்கு முழுகாரணம் அரசின் மோசமான தலையீடும், முறைகேடுகளும், கொல்லைப்புற நியமனமும், ஊழல்களுமே காரணம். அதற்கு சமிபத்திய உதாரனம் அமைச்சர் நமச்சிவாயம் அவர்களால் திருபுவனை கூட்றவு வங்கி கொல்லை அடிக்கப்பட்டு நாசமாக்கப்பட்டது. கூட்டுறவால் நாடு உயர்வு பெறுகிறதோ! இல்லையோ! புதுவை அரசில் உள்ள அமைச்சர்ககளும், உயர் அதிகாரிகளும் கொழித்துக் கொண்டிருக்கிறார்கள். சிறப்பாக செயல்பட்ட பாண்லே நிர்வாகத்திலும் இதே நிலை ஏற்பட்டுள்ளது. கூட்டுறவு நிறுவனங்களை சிறப்பாக கொண்டுவர முடியும். அதற்கு நல்ல உதாரணம் மாகே உள்ள அனைத்து கூட்றவு நிறுவனங்களும் லாபத்தில் இயங்குகிறது. அதேபோல புதுச்சேரியில் உள்ள கூட்றவு நிறுவனங்களை இலாபத்தில் இயக்கமுடியும். புதுவை அரசு கூட்டுறவுத்துறையின் கீழ் செயல்படும் தலைமை மற்றும் கீழ்நிலை கூட்டுறவு சங்கங்களுக்கு கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக ஜனநாயக முறைப்படி தேர்தல் நடத்தப்படவில்லை. புதுவை மாநிலக் கூட்டுறவு வங்கி, நுகர்வோர் கூட்டுறவு இணையம், மாநில கூட்டுறவு ஒன்றியம், கூட்டுறவு பால் ஒன்றியம் (பாண்லே) கிராம பால் உற்பத்தியாளர்கள் சங்கங்கள், கிராம கூட்டுறவு கடன் சங்கங்கள், வங்கிகளுக்கும் தேர்தல் நடத்த ஆட்சியாளர்களும், அதிகாரிகளும் விரும்பாத சூழ்நிலையில் தேர்தல் என்பதே கேள்விக்குறியாகியுள்ளது. அரசு சார்பு கூட்டுறவு நிறுவனங்கள், உள்ளாட்சி தன்னாட்சி, பொதுத்துறை நிறுவனங்களை முறைப்படுத்துவதற்கு மாறாக, அந்நிறுவனங்களுக்கு போதிய நிதியை, Grants in aid வழங்காமல் அவற்றை மூடுவதற்கு அரசே காரணமாக அமைந்துள்ளது.
கைநிறைய ஊதியம் பெறும் கூட்டுறவு அதிகாரிகள் ஒவ்வொருவரும் மூன்றிலிருந்து ஐந்து கிராமக்கூட்டுறவு சங்கங்களுக்கு நிர்வாகியாக நியமனம் செய்யப்பட்டு, சங்கப் பணம் கையாடல் மற்றும் சங்க வாகனங்களை சொத்துக்களை சொந்த உபயோகத்திற்கு பயன்படுத்துவது போன்ற விதிமீறல்களில் ஈடுபடுவதால் ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட வேண்டிய நிர்வாக குழுவின் தேர்தலில் அதிகாரிகள் ஆர்வம் காட்டாத நிலை நிலவி வருகிறது. எனவே, ஜனநாயக முறைப்படி கூட்டுறவு சங்கங்கள் செயல்பட உடனடியாக அனைத்து நிலை கூட்டுறவு நிறுவனங்கள் மற்றும் சங்கங்களுக்கு ஜனநாயக முறைப்படி தேர்தல் புதுவை மாநில கூட்டுறவுத்துறை நடத்திட வேண்டும்.
12) புதுச்சேரி மாநில அரசு ஊழியர்களுக்கான 8வது ஊதியக்குழு, அரசு சார்பு நிறுவன ஊழியர்களுக்கான ஊதிய உயர்வு பணிநிரந்தரம் வழங்கப்படாமல் நிலுவையில் உள்ள ஊதியம் உள்ளிட்ட இதர பாக்கிகளை உடனே வழங்கிட வேண்டும்.
புதுச்சேரியில் கிட்டத்தட்ட பத்தாயிரத்திற்கும் அதிகமான அரசுப் பணியிடங்கள் காலியாக உள்ள நிலையில், அதன் பணிச்சுமையை தாங்கிக் கொண்டு பல பத்தாண்டுகளாக பதவி உயர்வு கூட இல்லாமல் ஒரே பதவியில் பணிமூப்பு அடைந்து செல்லக் கூடிய நிலையில் இருக்கும் ஊழியர்களுக்கான பதவி உயர்வு, காலிப்பணிடங்களை உடனே நிறப்பவேண்டும். உடனே அமைக்கவேண்டிய 8வது ஊதிய குழுவை அமைக்க வேண்டும். அரசுத்துறைகளை அழிக்கும் நடவடிக்கை கைவிடவேண்டும். 7வது ஊதியக்குழு அமலாக்கம் செய்யப்படாத அனைத்து நிறுவனங்களுக்கும் செய்யப்பட வேண்டும்.
கூலி மற்றும் வவுச்சர் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கப்படும் என்ற அரசின் அறிவிப்பு அறிவிப்பாகவே உள்ளது. அவர்களை பணி நிரந்தரம் செய்வதற்கு பதிலாக அவுட்சோர்சிங் முறையில் பணியாளார்களை நியமனம் செய்து அவர்களின் பணி நிரந்தரம் என்பது பகல் கனவாக மாறியுள்ளது. வேளாண் அறிவியல் நிலையம், மார்க்கெட்டிங் கமிட்டி, நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்து, கிராம பஞ்சாயத்து, கான்பெட், ரொட்டி பால், வட்டார வளர்ச்சி அலுவலக MGNREGA, பஜன்கோவா, பொதுப்பணித்துறை, PPCL, PRTC, அங்கன்வாடி உள்ளிட்ட பல்வேறு துறை மற்றும் துறை சார்ந்த அலுவலகங்களில் நீண்ட காலமாகவும் மற்றும் 10 ஆண்டுகளுக்கு மேலாகவும் பணியாற்றி வரும் அனைத்து தினக்கூலி ஊழியர்களையும் ஒரு முறை நிகழ்வாக பணி நிரந்தரம் செய்ய வேண்டும். இவற்றில் பணிபுரிந்த, பணிபுரிகின்ற பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பணியாளர்களுக்கான ஊதியம் கூட பல்லாண்டு காலமாக நிலுவையில் உள்ளது. எனவே, புதுச்சேரி மாநில அரசு ஊழியர் காலிப் பணியிடங்களை நிரப்பவேண்டும், பொதுத்துறை நிறுவன ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியகாரர்களுக்கு இதுவரை வழங்கப்படாமல் நிலுவையில் உள்ள ஊதியம் உள்ளிட்ட இதர வலியுறுத்துகிறது. பாக்கிகளை உடனே வழங்கிடவேண்டும்.
13) சுதேசி பாரதி மில் நிலத்தில் WTO அமைப்பிற்கு இடமளிப்பதை தடுத்து – பிரதம மந்திரி மித்ரா திட்டத்தின் கீழ் ஜவுளிப் பூங்கா அமைத்தல் – புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும் – ஜூலை 30 தியாகிகளுக்கு நினைவுத் தூண் எழுப்ப வேண்டும்.
புதுச்சேரி மாநில சுதேசி (1829). பாரதி (1889) மற்றும் ரோடியர் (1898) பஞ்சாலைகள் பிரஞ்சிந்திய விடுதலைப் போராட்டம், ஏகாதிபத்திய எதிர்ப்பு மற்றும் தொழிலாளி வர்க்கத்தின் உரிமைப் போராட்டம் ஆகியவற்றின் அடையாளங்களாகும்.. சுமார் 200 ஆண்டு புதுச்சேரி வரலாற்றில் மக்களின் வாழ்வியல், பொருளியல் மற்றும் பண்பாட்டுடன் பின்னிப் பிணைந்த தொழில்களாகும். இந்நிலையில் சுதேசி பஞ்சாலை இடத்தில் உலக வர்த்தக அமைப்பிற்கு அலுவகம் அமைக்க 22 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட உள்ளதாக அறிய வருகிறது. ஏகாதிபத்திய நாடுகளின் பொருளாதார நலன்களுக்கு சேவை செய்யும் உலகி வர்த்தக அமைப்பிற்கு சுதேசி பஞ்சாலைக்குரிய இடத்தில் இடம் வழங்கக் கூடாது. அது மிகப் பெரிய வரலாற்று பிழையாகிவிடும்.
சுதேசி. பாரதி பஞ்சாலைகள், நிர்வாக சீர்கேடு, NTCயின் தென்மண்டல நிர்வாகத்தின் பாரபட்சமான ஆலைமூடல் அணுகுமுறையால் 03.03.2004 அறிவிப்பு செய்யப்பட்டன. சிஐடியு தலைமையில் வர்க்க, வெகுசன அமைப்புகள், மத்திய, மாநில தொழிற்சங்க அமைப்புகளை ஒன்றிணைத்து வெகுஜன அமைப்புகளின் சுதேசி மில் பாதுகாப்பு நடவடிக்கைக்குழு அமைக்கப்பட்டது. தொடர்ச்சியானபோராட்டங்களை நடத்தியது. மத்திய தொழிற்சங்க அமைப்புகளும் ஆலை மூடலை எதிர்த்தன. பேராசிரியர் மு. இராமதாஸ் எம்.பி அவர்களும் தலையீடு செய்தார்.
2004 ஜூலை 30. தியாகிகள் தினத்தன்று, வெகுமக்கள் போராட்டக்குழு சார்பில் 3 குழுக்கள் கிராமங்களை நோக்கி நடைபயணம் மேற்கொண்டது. அன்றைய தினம் சட்டப்பேரவை கூட்டத்தொடரின் கடைசி நாளாகும். எதிர்க்கட்சி தலைவர் திரு.ஆர். வி. ஜானகிராமன் அவர்கள் சுதேசி மில் தொடர்பான தீர்மானத்தை முன்மொழிய முற்பட மாநில முதல்வரான என்.ரங்கசாமி அவர்கள் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்மானத்தை கொண்டுவந்தார். சுதேசி, பாரதி மில்களை மாநில அரசே ஏற்றெடுத்து நடத்தும்,. ஜூலை 30 தியாகிகள் நினைவுத் தூண் எழுப்பப்படும் என்ற தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது காங்கிரஸ் தலைமையிலான ஒன்றிய ஐ.மு.கூட்டணி அரசு மாநில அரசின் முடிவை ஏற்று 2005 ஏப்ரல் 1ல் மாநில அரசின் பொறுப்பில் மில்கள் ஒப்படைக்கப்பட்டன. அதைத்தொடர்ந்து புதுச்சேரி அரசு, சுதேசி, பாரதி மில்களை இலாபத்தில், இயக்குவதற்கான சாத்தியப்பாடுகளை ஆய்வு செய்ய தென்னிந்திய ஜவுளி ஆராய்ச்சி நிறுவனத்திடம் (SITRA) பொறுப்பளித்தது. 2006ல் சித்ரா நிறுவனம் அறிக்கை அளித்தது. அது குறித்து அரசு பரிசீலித்து இயக்க உரிய நடவடிக்கை எடுக்கவில்லை.
2014ல் புதுச்சேரி அரசு சார்பு பிரதிநிதிகள் மற்றும் மத்திய தொழிற்சங்க தலைவர்களை உள்ளடக்கிய குழு இந்திய பிரதமர் மாண்புமிகு மன்மோகன் சிங் அவர்களை சந்தித்தனர். முந்தைய ஆட்சியில் திரு.வெ. நாராயணசாமி அவர்கள் தலைமையில் அமைச்சர்கள், அதிகாரிகள், மத்திய தொழிற்சங்க தலைவர்கள் 2019ல் ஜவுளித்துறை அமைச்சர் ஸ்மிருதிராணி அவர்களைச் சந்தித்தனர் அதன் பின் எந்த முன்னேற்றமும் இல்லை.
2016-2021ல் துணைநிலை ஆளுநராக இருந்த திருமதி. கிரண்பேடி அவர்களின் நிர்பந்தத்தால் 2020ல் சுதேசி, பாரதி, ரோடியர் மில்கள் மூடப்பட்டன. சென்னை உயர்நீதிமன்றம் ஆலைமூடல் அறிவிப்பை ரத்து செய்தது. மேலும் சட்டவிதிப்படி மறு ஆலைமூடல் அறிவிப்பு செய்யவும், தொழிலாளர்களுக்கு அளிக்க வேண்டிய சட்டப்படியான பலன்களை அளிக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டது. மேற்படி தீர்ப்பைத் தொடர்ந்து சுதேசி, பாரதி டெக்ஸ்டைல்ஸ் லிட் நிர்வாகம் புதிய ஆலை மூடல் அறிவிப்பு நோட்டீஸ் தொழிலாளர் துறைக்கு வழங்கியது. இதை எதிர்த்து புதுச்சேரி தொழிலாளர் நீதிமன்றத்தில் இரண்டு வழக்குகள் விசாரணையில் உள்ளன.
2023 ஆகஸ்டில் நடந்த நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடரில் நாடாளுமன்ற உறுப்பினர் திரு வெ.வைத்தியலிங்கம், அவர்கள் விதி எண் 377ன் கீழ் எழுப்பிய கேள்விக்கு ஒன்றிய ஜவுளித்துறை அமைச்சர் தர்ஷனா ஜர்தோஸ் கீழ்க்கண்ட பதிலை அளித்துள்ளார். பிரதம மந்திரி மித்ரா திட்டத்தின் கீழ் 7 மிகப் பெரிய ஜவுளி பூங்காக்கள் 2027-2028க்குள் 4,445 கோடி ரூபாய் முதலீட்டில் உலகத்தரம் வாய்ந்த உள்கட்டமைப்புகளுடன் செயல்படுத்திட உள்ளது. இவைகள் பசுமை தளம் மற்றும் மூடப்பட்ட தொழில் தளங்களில் துவக்கப்பட உள்ளது. இதற்கான முன்மொழிவு மாநில அரசுகளிடம் கோரியுள்ளோம். 13 மாநிலங்களில் இருந்து கோரிக்கைகள் வந்துள்ளன. புதுச்சேரி அரசிடமிருந்து திட்ட முன்மொழிவும், நிலம் குறித்த விவரங்களும் வரவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆகவே, மாநில அரசு பிரதம மந்திரி மித்ரா திட்டத்தின் கீழ் பஞ்சாலைகளுக்குரிய இடத்தில் ஜவுளிப்பூங்கா அமைப்பதற்கான திட்ட வரைவை விரைந்து ஒன்றிய அரசுக்கு அனுப்பிவிட வேண்டுகிறோம். ஜவுளிப் பூங்கா அமைவதன் மூலம் புதிய வேலைவாய்ப்பு பெருகும்.மாநில பொருளாதாரம் உயரும். விவசாய தொழிலும் செழித்திடும். மாநிலத்தின் நீடித்து நிலைக்கக்கூடிய சுயசார்பு பொருளாதாரத்திற்கு இத்திட்டம் பெருமளவு உதவிடும். மூடிய பஞ்சாலை தொழிற்சாலைகளை நவீனப்படித்தி இயக்கவும், ஜூலை 30 தியாகிகளுக்கு நினைவுத் தூண் எழுப்பிடவும் வேண்டும்.
14) புதுச்சேரியில் தொழில் வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும்.
புதுச்சேரியில் உள்ள 25 சதவீத இளைஞர்கள் சென்னை, பெங்களூரு உள்ளிட்ட வெளி மாநிலத்திற்கு வேலைக்குச் செல்கின்றனர். 20 சதவீதத்தினர் உள்ளூரில் கிடைக்கும் வேலைகளுக்கு சென்று கொண்டிருக்கின்றனர். மீதமுள்ள 50 சதவீதத்தினர் வேலை இல்லாமல் இருக்கின்றனர். வேலைவாய்ப்பின்மையில் இந்தியாவில் புதுச்சேரிக்கு தான் முதலிடம் உள்ளது. அரசிடமும் வேலை இல்லை. தனியார் தொழிற்சாலைகளிலும் வேலை இல்லை என மாநிலம் ஒரு இருண்ட திசையில் பயணித்துக் கொண்டிருக்கிறது. இந்த பேரபாயத்தைப் பற்றி அரசுக்கு எந்த கவலையும் இல்லை. மாநில தொழில் வளர்ச்சிக்கு வேலை வாய்ப்பிற்கு புதுச்சேரி அரசிடம் எந்த முயற்சியும் திட்டமும் இருப்பதாக தெரியவில்லை. இந்தியாவில் தொழில்கொள்கை என்பதே இல்லாத அரசாக புதுச்சேரி அரசு இருக்கிறது.
கடந்த 15 ஆண்டுகளாகவே புதுச்சேரி மாநிலத்தில் படிப்படியாக தொழிற்சாலைகள் குறைந்துகொண்டே வருகிறது. குறிப்பாக 1975களுக்குப் பிறகு புதுச்சேரியில் வரிச்சலுகை அறிவித்த பிறகு, நிறைய தொழிற்சாலைகள் வரத்தொடங்கின. தொழிற்பேட்டைகள் உருவாக்கப்பட்டு, புதிய தொழிற்சாலைகள் புதுச்சேரியில் நிறுவப்பட்டன. இதனால், வெளி மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் இங்குள்ள தொழிற்சாலைகளில் வேலை செய்வதற்காகப் புலம்பெயர்ந்து வந்தனர். நாளடைவில் சமச்சீர் வரியினால் புதுச்சேரி தொழிற்சாலைகளுக்கு இருந்த வரிச்சலுகைகள் ரத்தானது. தற்போது கடுமையான மின்கட்டண உயர்வு, ஜிஎஸ்டி, போன்ற காரணங்களால் தொழில்வளர்ச்சி முற்றிலும் முடங்கிபோய் புதுச்சேரியில் உள்ள தொழிற்சாலைகளும் படிப்படியாக குறையத் தொடங்கின. இருக்கும் தொழில்சாலைகளில் புதுச்சேரி இளைஞர்களுக்கு வேலை மறுக்கப்படுகிறது. குறைந்த கூலிக்கு புலம்பெயர் தொழிலாளர்கள் கொரடூமாக சுரண்டப்படுகின்றனர்.
புதுச்சேரி பொருளாதார மண்டலம் தொடங்கப் போகிறோம் என்று காரைக்கால் போலகம், புதுச்சேரி கரசூர், சேதராப்பட்டு போன்ற பகுதிகளில் சுமார் 2800 ஏக்கர் நிலமும் விவசாய நிலங்களை கையகப்படுத்தி பல வருடங்கள் ஆகிவிட்டன. கையகப்படுத்தப்பட்ட இடங்களில் ஒரு கம்பனி கூட தொடங்கப்படவில்லை. கையகப்படுத்தப்பட்ட அந்நிலங்களை நிலமற்ற விவசாயிகளுக்கே கொடுத்திட வேண்டும். விளை நிலங்கள் விவசாயிகளுக்கும் கொடுக்காமல் தொழிற்சாலைகளும் தொடங்கப்படாமல் தரிசாக கிடக்கிறது. தற்போதைய ஆளும் என்.ஆர். காங்கிரஸ் பாஜக கூட்டணி அரசு, மத்திய அரசிடம் சிறப்பு நிதி பெற்று, வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில் புதிய தொழிற்சாலைகளை தொடங்க வழி வகை செய்ய வேண்டும்.
பொருள் உற்பத்தி மூலமாக வருவாய் பெருக்கம் என்பது போய், அரசு சாராய விற்பனையை நம்பியிருக்கும் மோசமான நிலை உருவாகியுள்ளது. மூடப்பட்ட தொழிற்சாலைகளிலிருந்து வேலையின்றி வெளியேறும் தொழிலாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மின்கட்டண உயர்வால் மட்டும் கடந்த மூன்று ஆண்டுகளில் சுமார் 2500 சிறு குறு நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. மேலும் அரசு சர்க்கரை ஆலை, சுதேசி, பாரதி, ரோடியர் பஞ்சாலைகள் மற்றும் சில அரசு கூட்டுறவு நிறுவனங்கள் முற்றாக மூடப்பட்டுள்ளன. இதனால் சமூகப் பதட்டம் உருவாகி வருகிறது. தொழில் தொடங்கப்பட்ட தொழிற்பேட்டைகளெல்லாம் பாழடைந்த கட்டிடங்களாக காட்சியளிக்கிறது. எனவே, இருக்கும் தொழிலை பாதுகாக்கவும் புதிய தொழிற்சாலைகளை உருவாக்கவும் வேலை வாய்ப்புகளை உருவாக்க அரசு உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
15) பொது விநியோகத் திட்டத்தை செயல்படுத்தி அறிவித்தப்படி விரைந்து ரேஷன் கடை திறக்க வேண்டும்.
புதுச்சேரியில் என் ரங்கசாமி அவர்கள் 2011 முதல் 2016 வரை முதலமைச்சராக பொறுப்பில் இருந்தார். அப்போது பிஜேபி கட்சிகளோடு கூட்டணியில் இருந்தார். மத்திய மோடி அரசு புதுச்சேரி மாநிலத்தை பரிசோதனை களமாக கருதி ரேஷன் கடையில் வழங்கப்படும் அரிசிக்கு பதில் பணம் தான் வழங்கப்பட வேண்டும்,ரேஷன் கடையிலே மூட வேண்டும் என்று உத்தரவு உத்தரவிட்டது. இந்த அடிப்படையில் புதுச்சேரியில் இதே முதலமைச்சர் ரங்கசாமிதான் அரிசிக்கு பதில் பணம் வழங்கும் திட்டத்தை அறிவித்தார். உடனடியாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கட்சியின் தமிழ் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தலைமையில் அப்போதே புதுச்சேரி சட்டமன்ற முற்றுகை போராட்டத்தை நடத்தியது. உடனடியாக அழைத்து பேசிய முதல்வர் இத்திட்டத்தை கைவிடுவதாகவும் மீண்டும் அரிசி வழங்குவதாகவும் வாக்குறுதி அளித்தார். அதன் பிறகு காங்கிரஸ் தலைமையிலான அரசு அமைந்த சூழலில் துணைநிலை ஆளுநராக கிரேண் பேடி பொறுப்பேற்றது முதல் ரேஷன் கடைகள் முற்றிலுமாக மூடப்பட்டது. அப்போதிருந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர் போராட்டத்தை நடத்தியது.
2021இல் நடைபெற்ற புதுச்சேரி சட்டமன்ற தேர்தலில் ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், திரு. என். ரங்கசாமி இணைந்து ஆட்சிக்கு வந்தால் ரேஷன் கடைகளை திறப்போம், 14 அத்தியாவசிய பண்டங்களை மக்களுக்கு வழங்குவோம் என்று தேர்தல் அறிக்கை வெளியிட்டார்கள். பிறகு 2021ல் ஆட்சிக்கு வந்து தனது முதலாம் ஆண்டு பட்ஜெட்டில் ரேஷன் கடைகளை திறக்க போவதாகவும் அதுகுறித்து ஆய்வு செய்வதற்கும் குழுவை நியமனம் செய்யப் போவதாகவும் அறிவித்தார். ஆனால் அது நடைமுறைப்படுத்தப்படவில்லை. ரங்கசாமி சொன்னடி செய்ய வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் அனைத்து ரேஷன் கடைகள் முன்பு மக்களை திரட்டி போராட்டம் நடத்தியது.
2022ஆம் ஆண்டு ஆகஸ்ட் 2ந்தேதி கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் அவர்கள் தலைமையில் புதுச்சேரி தலைமைச் செயலகம் முன்பு ரேஷன் கடைகளை திறக்க கோரி காத்திருப்பு போராட்டம் நடத்தப்பட்டது. அப்போதைய தலைமை செயலாளரின் உறுதி அடிப்படையில் போராட்டம் திரும்பப் பெறப்பட்டது. அதே நேரத்தில் குடிமைப் பொருள் வழங்கும் துறை அமைச்சர் ரேஷன் கடைகளை நிரந்தரமாக மூடுவதற்கு ரகசிய கூட்டத்தை ஆகஸ்ட் 23ந்தேதி நடத்தினார் அதையும் மார்க்சிஸ்ட் கட்சி முறியடித்தது. கடந்த 2022ஆம் ஆண்டு சட்டமன்ற கூட்டத்தொடரில் தனது இரண்டாவது பட்ஜெட் உரையின் போது முதல்வர் ரங்கசாமி ரேஷன் கடைகளை திறப்பதற்கும், அரிசி எண்ணெய் உள்ளிட்ட மளிகை பொருட்களை வழங்கப் போவதாகவும் அறிவித்தார் அதுவும் நடைமுறைக்கு வரவில்லை.
கடந்த ஆண்டு நவம்பர் 13ஆம் தேதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி அவர்கள் தலைமையில் மாநில உரிமை, ரேஷன் கடை திறப்பு, அரசின் தனியார்மய நடவடிக்கைகளை எதிர்த்து. மிகப்பெரிய இயக்கம் நடத்தப்பட்டது. உடனே சாய் அமைச்சர் சாய் சரவணகுமார் அவர்கள் இன்னும் ஒரு மாதத்தில் திறப்பதாக கடந்த நவம்பர் 15ஆம் தேதி அறிவித்தார். ஆனால் கடைகள் திறக்கப்படவில்லை. புதுச்சேரியில் உள்ள பல்வேறு அமைப்புகளும் ,குறிப்பாக அகில இந்திய ஜனநாயக மாதர் சங்கம் தலைமையில் இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 2ந்தேதி புதுச்சேரியை உலுக்கும் வகையில் வலுவான போராட்டம் நடத்தினர்.
இந்தப் நீண்ட போராட்ட பின்னணியில்தான் கடந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் முதல்வர் என். ரங்கசாமி அவர்கள் மூன்றாவது முறையாக மீண்டும் ரேஷன் கடைகளை திறக்கப் போவதாகவும், ஊழியர்களுக்கு ஐந்து மாத ஊதியத்தை அளிக்க உள்ளதாகவும், அறிவித்தார். நாடாளுமன்ற தேர்தலில் சென்ற இடம் எல்லாம் பொதுமக்கள் எப்போது ரேஷன்கடை திறக்கப்படும் என்று கேட்டதும் நமது கட்சியின் தொடர்ச்சியான போராட்டமும் தற்போது ஒன்றிய அரசு அனுமதியோடு ரேஷன்கடைகளை திறப்பதற்கான வேலை நடைபெற்றுவருகிறது. அதன் முதல் கட்டமாக தீபாவளிக்கு முன்னிட்டு மூடப்பட்ட ரேஷன்கடைகள் மீண்டும் திறக்கப்பட்டு அரைகுறையாக வழங்கப்பட்டுள்ளது. எனவே முதல்வர் சொன்னபடி ரேஷன் கடைகளை திறந்து 14 அத்தியாவாசிய பொருட்களை வேண்டும் ஊழியர்களுக்கு நிலுவையில் ஊதியத்தை வழங்க வேண்டும்.
16) உள்ளாட்சி– நகராட்சி தேர்தலை உடனே நடத்த வேண்டும்.
அனைத்து மக்கள் நலத்திட்டங்களும் மக்களின் பங்கேற்போடு ஜனநாயகமுறையில் நடைபெறவும் ஒன்றிய அரசின் பல்வேறு நலத்திட்டங்களை பெற்றிடவும் மிக அவசியமான உள்ளாட்சி- நகராட்சி தேர்தலை நடத்தாமால் இருக்கும் ஆளும் என்.ஆர்.காங்கிரஸ் பாஜக கூட்டணி அரசை இந்த மாநாடு வன்மையாக கண்டிக்கிறது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தொடர் நடவடிக்கை காரணமாக 2006 ஆம் ஆண்டில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடைப்பெற்றது. கடந்த 18 ஆண்டுகளாக தேர்தல் நடைபெறவில்லை. மீண்டும் கட்சியின் நீதிமன்ற தலையீடு காரணமாக தேர்தல் நடத்திட வேண்டும் என்ற உச்ச நீதிமன்ற உத்தரவை அமலாக்கி இனியும் காலம்கடத்தாமல் உடனடியாக உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டும்.
17) வேலையின்மையால் வாழ்வாதாரம் இன்றி கடும் பொருளாதார சிக்கலை சந்தித்து வரும் குடும்பங்களின் நிலையை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி மனிதாபிமானமற்ற முறையில் கடன் வசூல் என்ற பெயரால் ஏழை எளிய மக்களின் வாழ்க்கையை குறிப்பாக பெண்களின் வாழ்க்கையை சூறையாடும் கந்துவட்டி நுன்நிதி நிறுவனங்களின் கொடுமைகள் புதுவையில் நாளுக்குநாள் அதிகரித்து வண்ணம் உள்ளது. இந்த கொடுமையிலிருந்து உழைக்கும் மக்களை காப்பற்ற புதுவை அரசு தனது கூட்டுறவு வங்கிகள் மூலம் குறைந்த வட்டியில் கடன் கொடுத்து கந்து வட்டிப் படுகுழியில் இருந்து காப்பற்ற முனைய வேண்டும். புதுவை காவல்துறையும் கடன்வசூல் என்ற பெயரில் ஏழை மக்களை கசக்கி பிழிந்து எல்லை மீறி அவமானப்படுத்தி மிரட்டி உயிரையே பறிக்கும் தனியார்நிதி நிறுவனங்கள் நுண்நிதி நிறுவனங்கள் கந்து வட்டி கும்பல்களை துப்பறிந்து அவர்களின் அத்து மீறல்களை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். வங்கி மற்றும் நுன்நிதி நிறுவனங்களுக்கு வரைமுறை ஏற்படுத்துவதோடு அவர்களிடம் அதிக வட்டிக்கு வாங்கி தவிக்கும் சுய உதவிகுழு மூலம் பெற்றுள்ள கடன்களை ரத்து செய்ய வேண்டும்.
18) புதுச்சேரியில் விளையாட்டுத்துறை தனியாக இல்லை, கல்வித்துறையில் ஒரு பிரிவாக உள்ளது. இதனால் கல்வித்துறை விளையாட்டு பிரிவு ஊழியர்களுக்கு சம்பளத்தை மட்டுமே வழங்கி வருகின்றது. விளையாட்டையும், விளையாட்டு வீரர்களையும் ஊக்குவிப்பதற்கான நடவடிக்கைகள் எதையும் எடுக்கவில்லை. எனவே விளையாட்டை, கல்வித்துறையில் இருந்து பிரித்து தனித்துறையாக அறிவித்து மேலும் விளையாட்டு வீரர்களுக்கு பல அண்டுகளாக வழங்கப்படாமல் உள்ள ஊக்க தொகையை உடனே வழங்கிடவும் சர்வதேச, தேசிய, மாநில போட்டிகளில் வெற்றி பெறும்வகையில் தேவையான நிதி உள்ளிட்ட அனைத்தையும் செய்ய வேண்டும்.
19) புதுச்சேரியில் வன்முறையை கட்டுத்தப்படுத்தவேண்டும்.
புதுச்சேரியில் கொலை, கொள்ளை திருட்டு, வழிப்பறி, ஆள்கடத்தல், சாராயம் கடத்தல், பாலியல் பலாத்காரம், கஞ்சா விற்பனை, போதை பொருட்கள் விற்பனை போன்ற அனைத்து விதமான சமூக குற்றங்களும் எப்போதுமில்லாத அளவிற்கு அதிகரித்துள்ளது. சமூக விரோதிகள் சில காவல் துறையினர் மற்றும் சில அரசியல் பிரமுகர்களின் பின்புலத்தில் இருந்து செயல்படுகிறார்கள். பட்டப்பகலில் துணிச்சலாக, கொலை வெறிச்சம்பவங்களை நிகழ்த்துகிறார்கள். கடந்த மூன்று ஆண்டுகளில் சுமார் 60க்கும் மேற்பட்ட கொலைகள் நடந்துள்ளது. இது போன்ற சம்பவங்களால் புதுச்சேரி மக்கள் அச்சத்தின் பிடியில் தவித்துக்கொண்டிருக்கிறார்கள். இதற்கு ஆட்சியாளர்களின் கொள்கையும், ரௌடிகளுடன் சில காவல் துறை அதிகாரிகள் வைத்துள்ள நெருக்கமான தொடர்பும் தான் காரணம். ஆகவே, புதுச்சேரி அரசும், காவல் துறையும் புதுச்சேரியில் பெருகிவரும் சமூக குற்றங்களை கட்டுப்படுத்த சமூக விரோத சக்திகளை ஒடுக்க உறுதியான விரைவான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
20) கட்டுமான நலவாரிய உறுப்பினர்களின் காக்கப்படவேண்டும்.
கட்டுமான நலவாரியத்தின் மூலம் வழங்கப்படுகிற நலஉதவி திட்டங்களான கல்வி, மருத்துவம், மகப்பேறு, இறப்பு போன்ற நிதியை இரட்டிப்பாக வழங்க வேண்டும் மேலும் புதிய நலத் திட்டங்களை அறிவிக்க வேண்டும் மேலும் கட்டுமான தொழிலாளர்களுக்கான உரிய பணப்பலன்களை உரிய காலத்தோடு அதிகரித்து வழங்க வேண்டும்.
21) ஒன்றிய அரசின் மோசமான சட்டங்களை அப்படியே புதுச்சேரியில் அமுல்படத்த கூடாது.
மத்திய அரசால் கொண்டுவரப்பட்டுள்ள புதிய தொழிலாளர் சட்டங்களையும், நாசகர புதிய மூன்று சட்டங்களையும், சாலை பாதுகாப்பு சட்டத்தையும் புதுச்சேரியில் அமுல்படுத்த கூடாது.
22) புதுச்சேரி கடற்கரையும் மீனவர்கள் நலனும் பாதுகாக்கப்பட வேண்டும்.
கடலரிப்பால் வாழ்விடம் இழப்பு, சாம்பல்- ரசாயனக் கழிவுகளால் மீன் வளம் குறைவு. நிலத்தடி நீர் பாதிப்பு என பல இடர்களை புதுச்சேரி, காரைக்கால் கடற்கரை மக்கள் சந்திக்கின்றனர். பெரும் தொழில் நிறுவனங்களின் வேட்டைக்காடாக புதுச்சேரி கடற்கரை மண்டலம் மாறியுள்ளதால் அந்நிலத்தில் இருந்து மக்கள் அந்நியப்படுவதும் அதிகரித்துள்ளது. கடல் சார்ந்து வாழும் மக்களின் வாழ்வாதாரங்களையும் சுற்றுச் சூழலையும் பாழ்படுத்தும் கடற்கரை பாதுகாப்பு சட்டத்தை மீறி சட்டவிரோதமாக கட்டப்பட்டுள்ள தனியார் கேளிக்கை விடுதிகள், தனியார் ரிசார்ட்டுகள், தொழில் நிறுவனங்கள், ஓட்டல்கள், கடற்கரை தனியாருக்கு தாரை வார்க்கும் நடவடிக்கையை நிறுத்தவேண்டும். மேலும் புதுச்சேரி அரசு தொடர்ச்சியாக முழுமைபெறாத கடற்கரை மண்டல மேலாண்மை திட்ட வரைவை அமுல்படுத்துவதை கைவிட வேண்டும்.
23) தனியார் மருத்துவ கல்லூரியில் 50 சத இடங்களும் புதுவை பல்கலைகழகத்தில் 25 சத இடங்களும் புதுச்சேரி மாணவர்களுக்கு வழங்க வேண்டும்.
தனியார் மருத்துவ கல்லூரிகள் அரசுக்கு அளிக்க வேண்டிய 50 சத இடங்களை உறுதியாக பெற வேண்டும். நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும். புதுவை பல்கலைகழகத்தில் அனைத்து பாடப் பிரிவுகளிலும் 25 சதவீத ஒதுக்கீட்டை புதுவை மாணவர்களுக்கு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
24) அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியர்களுக்கும், தனியார் கல்வி நிறுவனங்களில் பணிபுரியும் ஆசிரியர் ஊழியர்களுக்கு பணி பாதுகாப்பு மற்றும் குறைந்தபட்ச ஊதியம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
25) அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் கட்டமைப்பை மேம்படுத்த வேண்டும். பட்ஜெட்டில் கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும், மருத்துவ பணியாளர்களின் பற்றாக்குறையை பூர்த்தி செய்ய வேண்டும். மருந்து, நவீன கருவிகள், ஆம்புலன்ஸ் வசதிகள் மற்றும் உள்கட்டமைப்பு வசதி ஆகியவற்றை உறுதிப்படுத்தவேண்டும்.
26) நிலத்தடி நீரை பாதுகாப்பதற்கு ஒருங்கிணைந்த பாதுகாப்பு திட்டத்தை அமல்படுத்தவும், சுகாதாரமான குடிநீர் எவ்வித கட்டணமின்றி கிடைக்க நடவடிக்கை எடுத்திடவும், சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் சிறப்பு நிதியினை ஒதுக்கீடு செய்திடவும் காற்று, நீர், ஒலி ஆகிய மாசு களை கட்டுப்படுத்தவும் மற்றும் திடக்கழிவு கழிவுநீர் மேலாண்மை மரம் வளர்ப்பு பூங்காக்களை ஏற்படுத்தும் திட்டங்களை அமல்படுத்த வேண்டும்.
27) புதுச்சேரி கிராமங்களில் நிலத்தடி நீரை நம்பி விவசாயம் செய்து வரும் விவசாயிகளுக்கு எதிரான நகர்புற குடிநீர் திட்டம் மிகப் பெரும் ஆபத்தை விளைவிக்கும். ஏற்கனவே நிலத்தடி நீரில் உப்பு நீராக மாறிவரும் நிலையில், புதுச்சேரி அரசு நகரத்தை ஸ்மார்ட் சிட்டி என மாற்றி இதற்கு 24 மணி நேர குடிநீர் ஆதாரத்திற்காக பாகூர், சோரியங்குப்பம், குருவிநத்தம், மணமேடு, கரையாபுத்தூர், பனையடிகுப்பம், நெட்டப்பாக்கம், கரிக்கலாம்பாக்கம், கரியமாணிக்கம் போன்ற சுற்றியுள்ள பகுதி நீர் பிடிப்பு ஏரிகளில் இருந்து சுமார் 84 ஆழ்துளை போர் வெல்கள் அமைத்து நிலத்தடி நீரை நாசாமக்கி சுற்றுலா மேம்பாடு என்ற பெயரில், சுமார் 500 கோடி பணத்தை கொள்ளை அடிக்கலாம் என்பதற்காகவும் அமல்படுத்த முயற்சித்து வருவதை கைவிட்டு புதுச்சேரி கிராமப்புற நீர் ஆதாரத்தை பாதுக்காக வேண்டும்.
28) 16வது மத்திய நிதி கமிஷனில் புதுச்சேரியை சேர்க்க வேண்டும்.
தேர்தலின்போது வியாபாரம், கல்வி, ஆன்மீகம் சுற்றுலா ஆகியவற்றில் புதுச்சேரியை பெஸ்ட்டாக மாற்றுவதாக பிரதமர் மோடி பிரச்சாரத்தில் உறுதியளித்தார். மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கடன் முழுவதையும் தள்ளுபடி செய்துவிடுகின்றேன் என்று உறுதியளித்தார். மேலும் நலிவடைந்த அனைத்து தொழிற்சாலைகளையும் திறந்து செயல்படுத்துவோம் என்றார். இவைகளில் ஒன்றைக்கூட செய்யவில்லை. ஜிஎஸ்டி இழப்பீட்டுத்தொகை வழங்கி வந்ததற்கான காலக்கெடு முடிந்துவிட்டது. இதனால் புதுச்சேரிக்கு ஆண்டுக்கு சுமார் ரூ.1200 கோடி வருவாய் இழப்பு ஏற்படும். அதிகப்படியான கடன் வலையில் சிக்கியுள்ள புதுச்சேரிக்கு தேர்தல் வாக்குறுதிப்படி சிறப்பு நிதியினை பெற்று மாநில கடனைத் தள்ளுபடி செய்ய வேண்டும் மேலும் கடந்த 10 ஆண்டுகளாக குறைக்கப்பட்டு வரும் மாநில வளர்ச்சிக்கான நிதியினை மத்திய அரசிடமிருந்து பெற்றுத் தரவேண்டும். ஜிஎஸ்டி இழப்பீட்டுத்தொகை மீண்டும் வழங்க வேண்டும் அல்லது அதற்கு ஈடாக நிதி வழங்க வேண்டும். 16வது மத்திய நிதி கமிஷனில் புதுச்சேரியை சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
29) பாரம்பரியமிக்க கைத்தறி தொழிலையும், நெசவாளர்களையும், ஊழியர்களையும் பாதுகாத்திட கைத்தறி கூட்டுறவு சங்கங்களுக்கு நிதி அளித்து செயல்படுத்த வேண்டும், கைத்தறி துணிகளை அரசுத் திட்டங்களுக்கு கொள்முதல் செய்ய வேண்டும்.
30) ஸ்மார்ட் சிட்டி திட்டத்தை காரணமாகச் சொல்லி புதிய புதிய வரி விதிப்பினை மக்கள் தலையில் திணிப்பதை அரசு கைவிட வேண்டும். மேலும் சாலையோர வியாபாரிகள் சிறு வணிகர்களை அப்புறப்படுத்தும் நடவடிக்கைகளை அரசு கைவிட வேண்டும்.
31) மக்கள் உயிர் காக்கும் மருந்து விலைகளை குறைக்க வேண்டும். புதுச்சேரியில் அத்தியாவசிய மருந்துகள் கூட சாதாரண ஏழை எளிய மக்கள் வாங்க முடியாத அளவிற்கு கடுமையாக உயர்ந்துகொண்டே இருக்கிறது. ஒன்றிய அரசு அத்தியாவசியமான மருந்துகளின் விலையை ஜீரோ சதவீத ஜிஎஸ்டியாக நிர்ணயம் செய்ய வேண்டும்.
32) கடந்த 10 ஆண்டுகளாக சீர்கெட்டு பயணிக்க லாயக்கற்ற தன்மையில் உள்ள சாலைகளால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது. மக்கள் பெரும் சிரமத்தை எதிர் நோக்கி உள்ளனர். எனவே உடனடியாக அனைத்து சாலைகளையும் சீரமைக்க வேண்டும்.
33) சிறிய மாநிலமான புதுவையில் பொது போக்குவரத்தை மேம்படுத்துவதோடு அரசு நிறுவனமான பிஆர்டிசி நவீனப்படுத்த வேண்டும். சட்டமன்றத்தில் அறிவித்த மகளிர் மற்றும் மாணவர்களுக்கு இலவச பயண திட்டத்தை அமல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
34) மாநில மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான தனி கல்வி வாரியம், தனி பணி தேர்வாணையம் ஆகியவற்றை அமைக்க அரசு தீவிர முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.
35) மக்கள் ஒற்றுமையை சீர்குலைக்கும் வகையில் புதுச்சேரியில் ஜாதி மற்றும் மத ரீதியான வன்முறைகளை ஏற்படுத்தி அரசியல் ஆதாயம் பெற நினைக்கும் ஆர்எஸ்எஸ் இந்து முன்னணி போன்ற அமைப்புகள் மற்றும் அனைத்து மத பழமைவாத சக்திகளின் செயல்பாட்டை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
36) IT & ITeS பணிபுரியும் ஊழியர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் IT பூங்கா ஏற்படுத்துக
படித்து முடித்து சென்னை மற்றும் பெங்களூர் போன்ற பெரு நகரங்களில் வேலைத் தேடி தவிக்கும் இளைஞர்களுக்கு நவீன தகவல் தொழில்நுட்ப பூங்காக்களை புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் அமைத்து வேலை வாய்ப்பு அளிக்க வேண்டும். தகவல் தொழில்நுட்பம் சார்ந்து இயங்கும் துறைகளில் (IT & ITeS) பணிபுரியும் ஊழியர்களுக்கு குறைந்தபட்ச மாத ஊதியகமாக ருபாய் 30000 நிர்ணயிக்கப்பட வேண்டும். இத்துறைகளில் பெண்களுக்கு பணியிட பாதுகாப்புகளை நிறுவனங்கள் உத்திரவாதப்படுத்த அரசு தலையிட வேண்டும்.
37) மாநில அரசுக்கு பெரும் செல்வந்தர்கள் பெரும் வணிகர்கள் செலுத்த வேண்டிய கேபிள் டிவி கேளிக்கை வரி உள்ளிட்ட அனைத்து வரி பாக்கி களையும் கறாராக வசூலிக்க வேண்டும்.
38) என்.ஆர். காங்கிரஸ் பாஜக கச்சேரி ஆட்சி அதிகாரத்தை பற்றிய பிறகு மதவெறி நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ளன. மத வெறியை தூண்டும் காஷ்மீரி டைரி திரைப்படம் தலையிடப்பட்டது. கவர்னர் முதல்வர் உயர் அதிகாரிகள் கலந்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டது புதுவை பல்கலைக்கழகத்தில் சோமயணம் என்ற கற்பனை நாடகத்தை அரங்கேற்றியதற்காக உயர் மட்ட தலையீட்டின் காரணமாக சம்பந்தப்பட்ட பேராசிரியர் தண்டிக்கப்பட்டார். பல அரசு பள்ளிகளில் தொடர்ச்சியாக சாகா நடத்தி மதவெறி பரப்பப்படுகிறது நெல்லித்தோப்பு பெரியார் நகர் மாதா சிலையை அகற்றிடவும் மதக்கலவரத்தை தூண்டவும் இந்து முன்னணி முயற்சிக்கிறது. கோயில் சத்துக்களை அபகரிக்க பிஜேபினர் ஆட்சி அதிகாரத்தை பயன்படுத்தி கொள்ளையடிக்க முயற்சிக்கிறார்கள் முதல்வர் ரங்கசாமி அவர்கள் இதைக் கண்டு கொள்வதில்லை. மக்கள் ஒற்றுமையை மாநில அமைதியை சீர்குலைக்க முயற்சிக்கும் என் ஆர் காங்கிரஸ் பாஜக பாஜக கூட்டணியை மக்கள் நிராகரிக்க வேண்டும் மேலும் அறிவியல் அடிப்படையில் ஆன முற்போக்கு கருத்துக்களை பரப்பிட மூடநம்பிக்கைகளுக்கு எதிராக மார்க்சிஸ்ட் கட்சி மக்களை திரட்டி போராடுவோம்.
39) ஆதிதிராவிட நலத்துறை மூலம் 2010ல் கிருமாம்பாக்கம் வருவாய் கிராமத்தில் பிள்ளையார்குப்பத்தில் தலித் மாணவர்களுக்கு என உண்டு உறைவிடப் பள்ளி கட்டுவதற்கு 27 ஏக்கர் நிலம் முன்பு இருந்த காங்கிரஸ் ஆட்சியில் 13.84 கோடி ரூபாய் செலவு செய்து கையகப்படுத்தப்பட்டது. ஆனால் அதற்கான பூர்வாங்க பணிகள் ஏதும் இதுவரை துவங்கப்படவில்லை. கடந்த ஆண்டு பட்ஜெட்டில் அதற்கான அறிவிப்பு ஏதும் இல்லை. இது தலித் மக்களுக்கு தரமான கல்வி வழங்குவதை அலட்சியப்படுத்தும் செயலாகும். ஆகவே, நவோதயா பள்ளிக்கு இணையாக, நவீன வசதிகளுடன் தரமான கல்வி வழங்குவதன் மூலம் தலித் மாணவர்களின் வாழ்க்கை சிறக்க உதவ முடியும். தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் உண்டு உறைவிடப் பள்ளிகள் தலித் மாணவர்களின் முன்னேற்றத்திற்கு பெரிதும் உதவுகின்றன என ஆய்வுகள் சொல்கின்றன. எனவே, கிருமாம்பாக்கத்தில் உண்டு உறைவிடப் பள்ளி கட்டிட நிதி ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும். அதேபோல 2022 ஆம் ஆண்டு பழங்குடியின மாணவர்களுக்கான தனி விடுதி ஒன்று கட்டப்படும் என்று அறிவிக்கப்பட்டதை யும் கிராமங்களில் இருந்து நகரம் நோக்கி வரும் மாணவர்கள் பெரும் அவதிக்கு உள்ளாகிறார்கள் என்பதற்காக வில்லியனூரில் ஆதி திராவிட நலத்துறையில் கிளை அலுவலகம் அமைக்கப்படும் என்று 2021 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டதையும் உடனடியாக நிறைவேற்ற வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24வது மாநில அமைப்புக்குழு மாநாடு கோருகிறது.
40) வில்லியனூர் – நெட்டப்பாக்கம் பகுதி மக்களுக்கான சிறப்பு நிதி உள்கட்டமைப்பு மேம்பாடுகளை செய்ய வேண்டும்.
வில்லியனூர் – நெட்டப்பாக்கம் கொம்யூன் கமிட்டி சுமார் 40 சதவீதமான தலீத் மக்களும் மூன்று தனித்தொகுதிகளும் கொண்ட மிகவும் பின்தங்கி பகுதியாக இருக்கிறது. எந்தவித வளர்ச்சி பணிகளும் இன்றி வேலைவாய்பு இன்றி இப்பகுதி மக்கள் தவித்துவருகின்றனர். எனவே இப்பகுதிக்கான சிறப்பு நிதி ஒதுக்கி அனைத்துவிதமான உள்கட்டமைப்பு கல்வி மற்றும் வேலைவாய்ப்புக்கான திட்டங்களை உருவாக்க வேண்டும். இப்பகுதியில் உள்ள ஆக்கிரமிக்கப்பட்ட, கைவிடப்பட்ட நீர்நிலைகள் ஏரி குளங்கள் வாய்க்கால்களை துார்வாரி புனரமைப்பு செய்திடவேண்டும். மேலும் சங்கராபரணி ஆற்றில் கழிவு நீர் கலப்பதையும் அதில் தேங்கி உள்ள ஆகாய தாமரை உள்ளீட்ட செடிகளை அகற்ற வேண்டும். இக்கமிட்டிக்கு உட்பட்ட பகுதிகளில் இயங்கிவரும் அரசு ஆரம்ப பள்ளி மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கான தேவையான உட்கட்டமைப்போ, விளையாட்டுத்திடலோ, ஆய்வகமோ, நுலகமோ எதுவும் முறையாக இல்லை. ஆசிரியர்கள், ஊழியர்கள் பற்றாக்குறை மோசமான நிலையில் உள்ளது. எனவே இப்பகுதியில் உள்ள பள்ளிக்கு தேவையான ஆசிரியர்கள், ஊழியர்களை உடனே நியமிக்க வேண்டும் பல ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட பள்ளி கட்டிடங்களை உடனே மாற்ற வேண்டும். இக்கமிட்டிக்கு உட்பட்ட பகுதியில் தொடர்ந்து ஏற்படும் மின்தடை மற்றும் எரியாமல் இருக்கும் தெருவிளக்குகளை சரிசெய்து செய்யவேண்டும் புதியாக உருவாக்கப்பட்ட நகர்களுக்கு தேவையான புதிய தெரு விளக்குகளை பொருத்திடு வேண்டும்.
கரிக்கலாம்பாக்கம் சமூதாய நலவழிமையம், வில்லியனூர் ஆயூஷ் சிறப்பு மருத்துவமனை போன்ற முக்கிய மருத்துவமனைகளும் 8 ஆரம்ப சுகாதார நிலையம், 7 துனை சுகாதார நிலையம் இக்கமிட்டிக்கு உட்பட்ட பகுதியில் உள்ளன. இந்த அரசு மருத்துவமனைகளில் போதுமான மருந்துகள் இல்லாமலும், உயிர்காக்கும் அவர சிகிச்சை கருவிகள் இல்லாமலும் போதுமான சிறப்பு மருத்துவர்கள், ஊழியர்கள், ஆம்புலன்ஸ் போன்ற அனைத்தும் பற்றாக்குறையோடு ஏழை எளிய மக்களின் உயிரோடு விளையாடும் நிலையில் உள்ளன. எனவே இந்த கமிட்டிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள மருத்துவமனைகளை மேம்படுத்தி தேவையான அனைத்து வசதிகளும் சிகிச்சைகளையும் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும். மேலும் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும். இரண்டு தனியார் மருத்துவமனைகளின் கழிவுகள் முறையாக அகற்றப்டுகிறதா என்பதை அரசு கவனிக்க வேண்டும் வில்லியனூர் கண்ணகி பள்ளி வளாகத்தில் இயங்கிவரும் பெண்கள் கல்லூரிக்கும் தனியார் கட்டிடத்தில் இயங்கிவரும் அரசு ஐடிஐக்கும் நிரந்தமான கட்டிட கட்டி நடவடிக்கை எடுக்கவேண்டும் . வில்லியனூர் கொம்யூன் பஞ்சாயத்து திருமண மண்டபத்தை உடனே கட்ட வேண்டும். நெட்டபாக்கம் கொம்யூன் பஞ்சாயத்துக்கு உட்பட்ட கரியமாணிக்கம், கரிக்கலாம்பாக்கம் திருமண மண்டபங்களை புணரமைப்பு செய்திட வேண்டும். கட்டிமுடிக்கப்ட்டு திறக்கப்படால் உள்ள கரிக்கலாம்பாக்கம் சுபாஷ் நகர் திருமண மண்டபத்தை திறக்க வேண்டும்.