
காலம் தோறும் கல்வி பல மாற்றங்களை சந்தித்துவருகிறது. உலகத்திலும், இந்தியாவிலும், பல்வேறு காலக்கட்டங்களில் நிகழ்ந்த ஆட்சி மாற்றங்கள், நிர்வாக அமைப்பு முறைகள் கல்வி தளத்தில் தாக்கத்தை ஏற்படுத்தின. ஒரு வர்க்கத்திற்கு மட்டுமே கிடைத்துவந்த கல்வி படிப்படியாக பெரும்பாலான மக்களுக்கும் கிடைத்து வருகின்றன. தற்கால சூழலில் ஆளும் வர்க்கம் தனது அதிகாரத்தை நிலைநிறுத்திக் கொள்ளவும், சமூக ஏற்றத்தாழ்வுகள் தொடர்ந்து நீடிப்பதற்கும் உகந்த கல்விக் கொள்கைகளை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் ஒன்றிய பாஜக அரசின் புதிய கல்விக் கொள்கை 2020ஐ கொண்டு வந்துள்ளது.
தமிழ்நாடு, கேரளம், கர்நாடகம் போன்ற எதிர்கட்சிகள் ஆளும் மாநிலங்கள் மாணவர்களின் எதிர்காலம், மாநிலத்தின் நலன்களை கவனத்தில் கொண்டு கல்வியை வழங்கிவருகிறது.
புதுச்சேரி மாநிலத்தில் உள்ள என்.ஆர். காங்கிரஸ்-பாஜக கூட்டணி ஆட்சி புதிய கல்விக் கொள்கையை முழுமையாக செயல்படுத்தி வருகிறது. குருவை மிஞ்சிய சீடனாக மாநில கல்வி வாரிய பாட திட்டத்தை கைவிட்டது. மாறாக இந்தி, ஆங்கில மொழிகளைக் கொண்ட மத்திய இடைநிலை கல்வி வாரிய [சிபிஎஸ்சி] பாடத்திட்டத்தை அனைத்து அரசுப் பள்ளிகளிலும் செயல்முறைக்கு கொண்டுவந்துள்ளது. பயிற்று மொழியாக இருந்து வந்த தாய்மொழி கல்வி என்.ஆர். காங்கிரஸ்-பாஜக ஆட்சியில் அடிச்சுவடு இன்றி துடைத்தெறியப்பட்டுள்ளது.
பிரெஞ்சிந்தியாவில் கல்வி முறை
புதுச்சேரிக்கு வணிகம் செய்ய வந்த பிரஞ்சியர் இந்தியப் பகுதியான புதுச்சேரியை ஆட்சி செய்தனர். பிரஞ்சியர்களுக்கு மட்டுமே வழங்கிவந்த கல்வி இந்திய மக்களுக்கும் விரிவுப்படுத்தப்பட்டது. கல்விக்காக 1739 முதல் கல்வி வரி விதித்தனர். படித்தல், எழுதுதல், கணிதம், அறிவியல், பிரான்சு நாட்டின் பூகோளம், வரலாறு ஆகியன பிரெஞ்சு மொழியில் பயிற்றுவிக்கப்பட்டன. எழுத படிக்கத் தெரிந்த போதிலும் பிரெஞ்சு மொழிப் பாடத்தில் மாணவர்கள் தேர்ச்சி அடைவது கடினமாக இருந்தது. இதனால் மாணவர்கள், பெற்றோர்கள் மத்தியில் கடும் அதிருப்தி ஏற்பட்டது. மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். ஒரு கட்டத்தில் வினாத்தாள் பிரெஞ்சு நாட்டுக்கு அனுப்பி திருத்தப்பட்டது. பின்னர் புதுச்சேரி பகுதி மக்களின் உணர்வுகளையும், விருப்பங்களையும் கவனத்தில் கொண்டு கல்வி முறையில் சீர்திருத்தம் செய்வது என உணர்ந்தனர். பிரிட்டிஷ் இந்திய விடுதலையைத் தொடர்ந்து ஆங்கிலோ இந்திய கல்வி முறை செயல்முறைக்கு வந்தது. தாய்மொழி வழிக் கல்விக்கு முன்னுரிமை வழங்கப்பட்டது. தாய்மொழிவழிக் கல்வியே கற்றல் திறனை, சிந்தனை திறனை வளர்த்திடும் என்ற உலக அனுபவத்தையும், புதுச்சேரியின் அனுபவத்தையும் மாநில அரசு உணர மறுக்கிறது.
சிபிஎஸ்சி பாடத்திட்டம் துவக்கம்
புதுச்சேரி மாநிலத்தில் அரசுப் பள்ளிகளில் தாய்மொழிக் கல்வி, மற்றும் ஆங்கிலம் என இருமொழிக் கொள்கை பின்பற்றப்பட்டன. புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் தமிழ், மாகேவில் மலையாளம், ஏனாம் பகுதியில் தெலுங்கு ஆகியவை தாய்மொழியாகும். ஆகவே, தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா ஆகிய மாநில பாடத்திட்டத்தின் கீழ் புதுச்சேரி மாநில அரசுப் பள்ளிகள் இயங்கி வந்தன. புதுச்சேரி மாநிலத்திற்கு தனிக் கல்வி வாரியம் வேண்டும் என்ற கோரிக்கை தொடர்ந்து எழுப்பப்பட்டு வந்தன.
2011ல் புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலில் என்.ஆர். காங்கிரஸ், அதிமுக, கூட்டணி அமைத்து போட்டியிட்டன. தனிப்பெரும்பான்மை பெற்று திரு. என். ரங்கசாமி அவர்கள் தனித்து ஆட்சி அமைத்தார். தமிழக முதல்வரும், அதிமுக பொதுச் செயலாளருமான செல்வி.ஜெயலலிதா அவர்கள் ரங்கசாமி அவர்கள் என் முதுகில் குத்திவிட்டார், அவரது துரோகத்தை வரலாறு மன்னிக்காது என கடும் கண்டனத்தை தெரிவித்தார். இது இரு மாநிலங்களுக்கு இடையே உறவில் பின்னடைவை ஏற்படுத்தியது.
இந்தப் பின்னணியில் 70 அரசுப் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பில் சிபிஎஸ்சி பாடத்திட்டம் துவங்கப்பட்டது. 2013-2014ல் அனைத்து அரசுப் பள்ளிகளிலும் ஒன்றாம் வகுப்பு சிபிஎஸ்சி-யின் கீழ் கொண்டுவரப்பட்டது. இவ்வாறு என்.ஆர். காங்கிரஸ் ஆட்சியில் மூன்றாம் வகுப்பு வரையில் சிபிஎஸ்சி பாடத்திட்டம் விரிவுபடுத்தப்பட்டது. அடுத்து வந்த காங்கிரஸ் ஆட்சியில் 2018ல் 5ஆம் வகுப்பு வரையில் இத்திட்டம் விரிவடைந்தது.
பாஜக கல்வி அமைச்சரின் அரசியல்:
2021ல் என்.ஆர். காங்கிரஸ்-பாஜக கூட்டணி ஆட்சி அடைந்தது. மாநில முதல்வர் திரு.என்.ரங்கசாமி அவர்கள், தமிழக முதல்வர் திரு மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு கடிதம் எழுதினார். அதில் தமிழ்நாடு பாடநூலில் புதுச்சேரியின் சில வரலாற்றுப் பகுதிகளை இணைத்து வழங்க கேட்டுக் கொண்டார். தமிழ்நாடு முதல்வரும் உறுதியளித்தார். பாஜக இதை விரும்பவில்லை. சந்தர்ப்பத்தை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட பாஜக கல்வி அமைச்சர் திரு.நமச்சிவாயம் 2022-23ல் 6,7,8,9, 11 ஆகிய வகுப்புகள், 2024-2025ல் 10 மற்றும் 12ஆம் வகுப்புகள் சிபிஎஸ்சி பாடதிட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட்டன. இந்தியாவில் புதுச்சேரியில் மட்டும்தான் மாநில அரசுப் பள்ளிகள் அனைத்தும் மத்திய இடைநிலை கல்வி வாரியத்தின் இணைக்கப்பட்டுள்ளது. மாநில உரிமை, மாணவர்களின் நலன் புறக்கணிக்கப்பட்டது. டமாநிலத்தின் சமூக, பொருளாதார, கலாச்சார, அடிப்படையிலான கல்வி முறை கைவிடப்பட்டன. என்.ஆர்.காங்கிரஸின் சந்தர்ப்பவாத அரசியல், பாஜகவின் வஞ்சக அரசியலால் மாணவர்களின் எதிர்காலம் முட்டுசந்தில் நிறுத்தப்பட்டுள்ளது.
எது தரமான கல்வித்திட்டம்
நாட்டில் பலவிதமான கல்வி வாரியங்கள் இருக்கின்றன. இவை அனைத்துமே தரமான கல்வி அளிப்பதாக உறுதியளிக்கின்றன. ஆனால் சிபிஎஸ்சி பாடத்திட்டதில் பயிலும் மாணவர்களுக்கு (NEET), JEE போன்று தேசிய நுழைவுத் தேர்வுகளுக்கு பெரும்பங்காற்றுவதாக கருத்தியல் பரப்பப்படுகிறது. இது ஆய்வு வழி நிரூபிக்கப்படவில்லை. சிபிஎஸ்சி பாடத்திட்டத்திலும், மாநில பாடத்திலும் கணிதம், அறிவியல், ஆகியவை ஏறக்குறைய ஒரே மாதிரியானவை தான். கற்பித்தல் மற்றும் பயிற்சி முறையில் தான் வேறுபாடு உள்ளது. ஆனால் மாநில கல்வி வாரியத்தில், மாநில சமூக, பொருளாதார, பண்பாடுகளைக் கொண்ட கல்வி முறை அவசியமாகும். ஆகவே, தரம் என்ற பெயரில் அனைவருக்குமான கல்வி வாய்ப்பை மறுப்பதே அடிப்படை நோக்கமாகும்.
சிபிஎஸ்சி பாடத்திட்டமும் – மாணவர்கள் விடுபடுதலும்
சிபிஎஸ்சி பாடத்திட்டம் அமுலாக்கப்பட்ட நிலையில் 2023-2024ல் 10054 மாணவர்கள் அரசுப் பள்ளியில் இருந்து வெளியேறியுள்ளனர். இடைநிற்றல் மற்றும் அரசு பள்ளியில் இருந்து மாணவர்கள் வெளியேறுவது 6 முதல் 12 வகுப்புகளில் தான் அதிகமாகும். மாநில பாடத்திட்டம் மற்றும் மத்திய பாடத்திட்டத்தின் கீழ் கடந்த 2 ஆண்டுகளில் தேர்வு எழுதிய 10 மற்றும் 12 மாணவர்களின் வெளியேற்றாம் கணிசமாக உள்ளது.
2023-2024ல் தமிழ்நாடு பாடத்திட்டத்தின் கீழ் புதுச்சேரி, காரைக்கால் பிராந்தியங்களில் 12ஆம் வகுப்பில் தேர்வு எழுதியவர்கள் 6101 பேர். மாஹே மற்றும் ஏனாம் பகுதிகள் முறையே கேரள, ஆந்திரா மாநில பாடத்திட்டத்தின் கீழ் 427 பேர் தேர்வு எழுதினார்கள். 2024-2025ல் மத்திய பாடத்திட்த்தின் கீழ் நான்கு பிராந்தியங்களிலும், 12ஆம் வகுப்பு தேர்வு எழுதியவர்கள் 5681 மாணவர்கள். ஆனால் மாநில அரசு தனது தோல்வியை மூடி மறைக்க மாநில பாடத்த்திட்டத்தின் கீழ் செயல்படும் தனியார் பள்ளிகளை மத்திய பாடத்திட்டத்தின் கீழ் இணைந்திட நிர்பந்திப்பது நியாயமற்றது. டடட சிபிஎஸ்சி பாடத்திட்டத்தின் கீழ் 12ஆம் வகுப்பு தேர்வில் 847 மாணவர்கள் எண்ணிக்கை குறைந்துள்ளது. 10ஆம் வகுப்பில் 930 மாணவர்கள் வெளியேறியுள்ளனர்.
சிபிஎஸ்சி பாடத்திட்டத்தில் இருந்து கடந்த ஆண்டு மட்டும் 1777 பேர் அரசுப் பள்ளிகளில் இருந்து வெளியேறியுள்ளனர். நடப்பு ஆண்டில், அரசுப் பள்ளி மாணவர்கள் பலரும் தனியார் பள்ளிகளில் மாநில பாடத்திட்டத்தின் கீழ் சேர்ந்துவருவதாக கள நிலவரம் தெரிவிக்கிறது.
தாய்மொழிவழிக்கல்வியையும், மாநில பாடத்திட்டத்தின் கீழான கல்வி வாய்ப்பும் மாநில அரசு உருவாக்கிட முன்வர வேண்டும். தவறினால் பல அரசுப் பள்ளிகள் மூடப்படும். மாணவர்களின் எதிர்காலம், மாநிலத்தில் சமூகப் பொருளாதார வளர்ச்சி என அனைத்திலும் கடும் விளைவுகளை ஏற்படுத்திடும் ஆபத்து உள்ளது.
சிபிஎஸ்சியின் விதிகள் தளர்வு
சிபிஎஸ்சியின் அங்கீகாரம் மற்றும் தேர்வு முறை குறித்தான விதிமுறைகள் பின்பற்றப்பட வேண்டும் என்பது விதி. மீறினால் அபராதத் தொகை விதிப்பது, அங்கீகாரம் ரத்து செய்வது உட்பட தண்டனை குறித்த விதிகள் குறிப்பிடுகிறது. ஆனால் பல விதிகளை பூர்த்தி செய்யாத அரசுப் பள்ளிகள் அனைத்திற்கும் சிபிஎஸ்சி அங்கீகாரம் கிடைத்துள்ளது. இது ஆளும் வர்க்கத்தின் கைப்பாவையாக சிபிஎஸ்சி வாரியம் உள்ளதை அறியமுடிகிறது. விளையாட்டு மைதானத்துடன் கூடிய பள்ளி வளாகம், 500 சதுர அடி கொண்ட வகுப்பறை, ஒரு மாணவருக்கு ஒரு சதுர அடி அளவில் இடைவெளி, 1:30 என்கிற விகிதத்தில் ஆசிரியர் நியமனம், விளையாட்டு ஆசிரியர்கள், ஆலோசகர் மற்றும் ஆரோக்கிய ஆசிரியர், கைவினை ஆசிரியர், 600 சதுர அடி உள்ள சோதனைக்கூடம், கணிணி பயிற்சி அறை… என பல அம்சங்கள் அரசுப் பள்ளிகளில் இல்லை.
ஆசிரியர் பற்றாக்குறை உள்ள நிலையில் சுமார் 80க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் ஆசிரியர் பணியில்லாத பணிகளுக்கு மடைமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிப்பதற்கு மேக்மில்லன் என்ற புத்தக வெளியீட்டு நிறுவனத்திற்கு ஒப்பந்தம் அளிக்கப்பட்டு பலவித முறைகேடுகள் நடைபெற்று வருகிறது. மொத்தத்தில் மாநில அரசுக்கு மாணவர்கள் நலன் என்பதல்ல. மாறாக இந்தி, சமஸ்கிருத மொழித்திணிப்பு, தமிழ் உள்ளிட்ட தாய் மொழி மற்றும் பண்பாடு மீதான தாக்குதலாகும்.
முடிவாக, மாநில அரசு மாணவர்கள் நலன், மாநிலத்தின் வளர்ச்சியை கவனத்தில் கொண்டு சிபிஎஸ்சி பாடத்திட்டம் திணிப்பதை கைவிட வேண்டும். தாய்மொழி வழிக்கல்வி மற்றும் அலுவல் மொழியான ஆங்கில மொழிக் கல்வி என இரு வாய்ப்புகளையும் உள்ளடக்கிய மாநில பாடத்திட்ட முறையை செயல்படுத்துவது அவசியமாகும். மேலும் ஆசிரியர் கல்வி பணியிடங்களை நிரப்புவது மற்றும் ஆசிரியல்லாதப் பணிக்கு மாற்றல் செய்துள்ள ஆசிரியர்களை கல்வி பணிக்கு திருப்பிவிட வேண்டும். கல்வி என்பது மேம்பட்ட நாகரீக சமூகத்தை கட்டமைக்கும் கருவியாகும். காலத்தோடு பொறுத்தமான கல்வி முறையை அரசு மாற்றி அமைத்திட தவறினால் மக்கள் சமூகம் உரிய காலத்தில் தகுந்த பாடம் புகட்டிடும்.
தாய்மொழிக்கல்வி ஆதரவு, சிபிஎஸ்இ பாடத்திட்ட திணிப்பு எதிர்ப்பு போராட்ட சிறப்பிதழ்
தோழர் வெ.பெருமாள், மாநில செயற்குழு உறுப்பினர் சிபிஐஎம், புதுச்சேரி.










