புதுச்சேரி, [01.09.2025] – புதுச்சேரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் (CPM) மாநிலச் செயலாளர் எஸ். ராமச்சந்திரன், செயற்குழு உறுப்பினர்கள் ஆர். ராஜாங்கம், என். பிரபுராஜ் மற்றும் சிஐடியு நிர்வாகி வீர. மணிகண்டன் ஆகியோர் மாண்புமிகு புதுச்சேரி முதல்வரைச் சந்தித்து, இ-கே.ஒய்.சி. (e-KYC) பதிவிற்காக பொதுமக்களைப் பொதுச் சேவை மையங்களுக்கு அலைக்கழிக்கும் நடைமுறையைத் தவிர்க்கக் கோரி மனு அளித்தனர்.
மனுவின் போது,
-
நோயாளிகள், முதியோர்கள் மற்றும் பொதுமக்கள் எதிர்கொள்ளும் சிரமங்கள் எடுத்துக்காட்டப்பட்டன.
-
முதல்வர், உடனடியாக மாவட்ட ஆட்சியரை தொடர்பு கொண்டு தேவையான நடவடிக்கை எடுக்கும்படி அறிவுறுத்தினார்.
-
மேலும், மனுவின் நகல் குடிமைப் பொருள் வழங்குதுறைச் செயலருக்கும், இயக்குநருக்கும் வழங்கப்பட்டது. அவர்கள் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர்.
சி.பி.எம். வலியுறுத்திய முக்கிய அம்சங்கள்:
-
இ-கே.ஒய்.சி.க்கான தேவையான அடிப்படை கட்டமைப்புகள் அரசு தரப்பில் ஏற்படுத்தப்படவில்லை.
-
ரேஷன் அட்டைதாரர்கள் கைரேகை பதிவு மற்றும் ஆதார் எண் சரிபார்ப்பிற்காக சேவை மையங்களுக்கு கட்டாயப்படுத்தப்படுவது மக்களுக்கு சிரமம் ஏற்படுத்துகிறது.
-
மற்ற மாநிலங்களில் போல ரேஷன் கடைகளிலேயே சரிபார்ப்பு பணி செய்யப்படலாம்.
-
முதியோர், நோயாளிகள், ஆதரவற்ற பெண்கள் போன்றோரின் நிலையை கருத்தில் கொள்ளாமல் அரசு எடுத்துள்ள இந்தத் தீர்மானம் மக்கள் நலனுக்கு விரோதமானது.
சி.பி.எம். வலியுறுத்திய கோரிக்கைகள்:
-
இ-கே.ஒய்.சி. பதிவு ரேஷன் கடைகளிலோ, வீடு வீடாகச் சென்று சரிபார்ப்பதிலோ நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.
-
ஆன்லைன்/ஆஃப்லைன் வாயிலாக வீட்டிலிருந்தே சரிபார்க்கும் வசதி செய்யப்பட வேண்டும்.
-
மூடப்பட்டிருக்கும் அனைத்து ரேஷன் கடைகளையும் உடனடியாக திறக்க வேண்டும்.
-
மக்களுக்கு தடையின்றி அத்தியாவசிய 14 பொருட்களை வழங்கும் நடவடிக்கை எடுக்க அரசு உறுதி செய்ய வேண்டும்.
📌 சி.பி.எம். புதுச்சேரி மாநிலக் குழு வலியுறுத்துவது:
“மக்கள் நலனுக்கு எதிரான இந்தத் தீர்மானத்தை அரசு உடனடியாக ரத்து செய்து, மாற்று ஏற்பாடுகளை செய்து பொதுமக்களின் சிரமத்தை நீக்க வேண்டும்.”
01.09.2025
பெறுநர்:
மாண்புமிகு முதல்வர் அவர்கள்,
புதுவை அரசு,
புதுச்சேரி.
அன்புடையீர்! வணக்கம்.
பொருள்: இ–கே.ஒய்.சி. பதிவிற்காக பொது சேவை மையங்களுக்கு மக்களை அலைக்கழிப்பதை தவிர்க்க கோருதல், தொடர்பான நடவடிக்கை –மேற்கொள்வதற்காக… வேண்டுதல்.
புதுச்சேரி அரசின் குடிமைப் பொருள் வழங்கல் துறை, அனைத்து ரேஷன் அட்டைதாரர்களும் இ-கே.ஒய்.சி. (e-KYC) பதிவைச் செய்ய பொது சேவை மையங்களை நாட வேண்டும் என விடுத்துள்ள அறிவிப்பிற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (CPM) ஆட்சேபனையை தெரிவித்துக் கொள்கிறது. இந்த முடிவானது அரசின்பொறுப்புகளில் இருந்து தட்டிக் கழிப்பதாகவும், மக்கள் நலனுக்கு எதிரான செயல்பாடுகளாகவும் கருதுகிறோம்.
இ-கே.ஒய்.சி. சரிபார்ப்பிற்கான அடிப்படை கட்டமைப்புகளை ஏற்படுத்தாமல், ரேஷன் அட்டைதாரர்களை கைரேகை பதிவு மற்றும் ஆதார் எண் சரிபார்ப்புக்காக பொது சேவை மையங்களுக்கு அலைக்கழிக்கச் சொல்வது முற்றிலும் ஏற்றுக் கொள்ள முடியாது. பல மாநிலங்களில் ரேஷன் கடைகளிலேயே இந்தச் சரிபார்ப்புப் பணிகள் மேற்கொள்ளப்படும்போது, புதுச்சேரியில் மட்டும் மக்களை சிரமத்திற்கு உள்ளாக்குவது நியாயமற்றது.திறக்கப்படாத ரேஷன் கடைகள் மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் வழங்காமையும் நீடிக்கிறது.
மக்களின் நேரத்தையும், உழைப்பையும் வீணடிக்கும் இந்த நடைமுறையை உடனடியாக நிறுத்த வேண்டும். புதுச்சேரி அரசு இந்தப் பணிக்கு மாற்று வழிகளை ஆராய்ந்திருக்க வேண்டும். ஆன்லைன் அல்லது ஆஃப்லைன் மூலம் வீட்டிலிருந்தே சரிபார்க்கும் வசதி, வீடு வீடாகச் சென்று சரிபார்ப்பதை உறுதி செய்தல், அல்லது மற்ற மாநிலங்களைப் போல ரேஷன் கடைகளிலேயே சரிபார்ப்புப் பணிகளை மேற்கொள்ளுதல் போன்ற மாற்று ஏற்பாடுகளை அரசு செய்ய வேண்டும்.
வயதான முதியோர்கள், உடல்நலம் குன்றியவர்கள், குறிப்பாக பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் துணைக்கு ஆளில்லாத வயதான பெண்கள் ஆகியோரின் சிரமங்களை அரசு பரிசீலித்து மாற்று ஏற்பாடுகளை செய்வது அவசியமாகிறது.
மேலும், புதுச்சேரியில் திறக்கப்படாமல் மூடப்பட்டுள்ள அனைத்து ரேஷன் கடைகளையும் உடனடியாகத் திறக்க வேண்டும், அத்தியாவசியமான 14 பொருட்களை மக்களுக்குத் தடையின்றி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.
எனவே, புதுச்சேரி அரசு உடனடியாக இந்த மக்கள் நலனுக்கு எதிரான முடிவை ரத்து செய்து, இ-கே.ஒய்.சி. சரிபார்ப்பை மேற்கொள்ள உரிய மாற்று ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும் என வலியுறுத்துகிறது.
இப்படிக்கு
எஸ். ராமச்சந்திரன்
(மாநிலச் செயலாளர்,
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, (மார்க்சிஸ்ட்)
புதுச்சேரி
நகல் பெறுவோர்:
- அரசு செயலர்,குடிமைப் பொருள் வழங்குதுறை
புதுவை அரசு, புதுச்சேரி .
- இயக்குனர்,குடிமைப் பொருள் வழங்குதுறை
புதுவை அரசு, புதுச்சேரி.










