பெறுதல்:
1.மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள்,புதுச்சேரி அரசு, புதுச்சேரி.
2. உயர்திரு மாவட்ட ஆட்சியர் அவர்கள்,இயற்கை பேரிடர் மேலாண்மை மற்றும் வருவாய்த்துறை, புதுச்சேரி.
பொருள்: புதுச்சேரியின் சமூக நல்லிணக்கத்தைச் சீர்குலைக்க முயலும் மதவெறி சக்திகள் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்கக் கோருதல் மற்றும் திட்டமிட்டபடி லெனின் சிலையை அதே இடத்தில் அமைத்திட அனுமதி கோருதல் – தொடர்பாக.
வணக்கம், புதுச்சேரி மாநிலம் காலங்காலமாகப் பின்பற்றி வரும் சமூக நல்லிணக்கத்தையும், பொது அமைதியையும் சீர்குலைக்கும் நோக்கில் அண்மைக்காலமாக முன்னெடுக்கப்படும் வன்முறை அரசியல் குறித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆழ்ந்த கவலையையும், கண்டனத்தையும் இக்கடிதத்தின் வாயிலாகப் பதிவு செய்கிறோம்.
வன்முறை அரசியலைத் தடுத்து நிறுத்துக:
புதுச்சேரி மக்கள் கட்சி வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு சகோதரத்துவத்துடன் வாழ்ந்து வருபவர்கள். அரசின் கொள்கைகளை விமர்சிப்பதற்கும், மக்கள் நலனுக்காகப் போராடுவதற்கும் இங்கே ஜனநாயக ரீதியான முழுச் சுதந்திரம் உண்டு. ஆனால், இந்த ஆரோக்கியமான அரசியல் சூழலைச் சிதைக்கும் வகையில், மதவெறியைத் தூண்டி, அதன் மூலம் வன்முறையை அறுவடை செய்யச் சில சக்திகள் முயல்கின்றன.
ஜனநாயக ரீதியான விமர்சனங்களுக்கு இடமளிக்காமல், நேரடி மோதல் போக்கைக் கடைப்பிடிக்கும் இத்தகைய சக்திகளை மாநில அரசு எவ்வித சமரசமுமின்றி இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும். முதல்வர் அவர்கள் தலையிட்டு, புதுச்சேரியின் அமைதிப் பூங்காவை வன்முறைக்காடாக மாற்ற நினைப்பவர்களின் முயற்சியைத் தவிடுபொடியாக்கி, ஜனநாயக அரசியலை உறுதிப்படுத்த வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறோம்.
லெனின் சிலை விவகாரமும் திட்டமிட்ட சதிச் செயலும்:
கடந்த 22.12.2025 அன்று, புதுச்சேரி லெனின் வீதியில், மணிமேகலை அரசு பெண்கள் பள்ளிக்கு அருகிலுள்ள வளாகத்தில் மாமேதை லெனின் அவர்களின் முழு உருவச் சிலையை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி முறைப்படி நிறுவியது. அந்தப் பணிகள் முழுமையடையாத நிலையில், மறுநாளே (23.12.2025) பாஜக மற்றும் இந்து முன்னணியைச் சேர்ந்த சிலர் உள்நோக்கத்துடன் அந்த வளாகத்திற்குள் அத்துமீறி நுழைந்துள்ளனர்.
அங்கே ஒரு கடவுள் சிலையை (விநாயகர்) வலுக்கட்டாயமாக நிறுவி, கோஷங்களை எழுப்பி, வன்முறையைத் தூண்ட முயன்றுள்ளனர். இது வெறும் அரசியல் மோதல் அல்ல; ஒரு மதத்தின் புனிதமான கடவுள் சிலையை அரசியல் ஆதாயத்திற்காகக் கேடயமாகப் பயன்படுத்திய மிக மோசமான செயலாகும். இது உண்மையான இறை நம்பிக்கை கொண்ட மக்களின் மனதைப் புண்படுத்துவதோடு, கடவுள் சிலையையும் இழிவுபடுத்துவதாக அமைந்துள்ளது. காவல்துறை மற்றும் வருவாய்த்துறையின் துரிதமான தலையீட்டால் அன்றைய தினம் அசம்பாவிதங்கள் தவிர்க்கப்பட்டன என்பதைச் சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.
வரலாற்றுத் தேவை மற்றும் கோரிக்கை:
புதுச்சேரி பிரஞ்சு இந்திய விடுதலைப் போராட்டத்திற்கும், கம்யூனிச இயக்கத்திற்கும் பிரிக்க முடியாத பிணைப்பு உண்டு. ஏகாதிபத்தியத்திற்கு எதிரான இந்தப் போரில் உலகளாவிய உந்துசக்தியாகத் திகழ்ந்தவர் மாமேதை லெனின். அதன் அடையாளமாகவே, புதுச்சேரி லெனின் வீதியில், கடந்த அரை நூற்றாண்டிற்கும் மேலாக (50 ஆண்டுகள்) மாமேதை லெனின் அவர்களின் மார்பளவு சிலை இருந்து வந்தது என்பதைத் தங்களுக்குச் சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.புதுச்சேரியின் நெசவுத் தொழிலாளர்கள் செறிந்து வாழ்ந்த அந்தப் பகுதிக்கு ‘லெனின் வீதி’ எனப் பெயரிடப்பட்டதும், அங்கே அவரது சிலை அமைந்திருப்பதும் வரலாற்றின் ஒரு அங்கமாகும்.
எனவே, புனிதமான கடவுள் சிலையைத் தனது குறுகிய அரசியல் லாபத்திற்காகப் பயன்படுத்தி, வன்முறையைத் தூண்டிய பாஜக மற்றும் இந்து முன்னணியினர் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
அரை நூற்றாண்டுகாலமாக மார்பளவு சிலையாக இருந்து வந்த அதே இடத்தில், தற்போது நிறுவப்பட்டுள்ள முழு உருவ லெனின் சிலையை எவ்விதத் தடையுமின்றி அமைத்திடவும், அதனை முழுமைப்படுத்தவும் அரசு உரியப் பாதுகாப்பு வழங்க வேண்டும்.
ஜனநாயக விழுமியங்களைப் பாதுகாக்கும் வகையில், எவ்வித மதவாத அழுத்தங்களுக்கும் பணியாமல் அரசு சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்ட வேண்டும்.
மாண்புமிகு முதல்வர் அவர்களின் ஆட்சிக் காலத்தில், இத்தகைய முற்போக்கான அடையாளங்கள் பாதுகாக்கப்படுவது புதுச்சேரியின் ஜனநாயக மாண்பிற்குப் பெருமை சேர்க்கும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுதியாக நம்புகிறது.
இப்படிக்கு
(வெ. பெருமாள்) மாநில ஒருங்கிணைப்பாளர், சிபிஐ(எம்), புதுச்சேரி மாநிலக்குழு.








