பாசிச பாஜக பெண்களுக்கு அரசியல் அதிகாரம், பொருளாதார சுதந்திரம் என வெற்று முழக்கம் இடுகிறது. ஆனால், பாஜகவின் பாசாங்கு அரசியலையே புதுச்சேரி என்.ஆர். காங்கிரஸும் பின்பற்றுகிறது. புதுச்சேரி சட்டப்பேரவையில் ஒரு பெண் உறுப்பினர் கூட இடம்பெறவில்லை. 15 ஆண்டுகளாக உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படாமல் பெண்கள் அரசியல் அதிகாரம் பெறாமல் தடுக்கப்பட்டுள்ளனர். உள்ளாட்சித் தேர்தல் நடைபெறாததால் புதுச்சேரி கிராமப்புற வளர்ச்சி பாதிக்கப்பட்டுள்ளதை மத்திய தணிக்கைக்குழு அறிக்கை அம்பலப்படுத்தியுள்ளது. ஆகவே, பாஜக – என்.ஆர். காங்கிரஸ் கூட்டணி அரசு தனது பாசாங்கு அரசியலைக் கைவிட்டு, பெண்களுக்கு அரசியல் அதிகாரம் வழங்கி மெய்ப்பிப்பது அவசியமாகும். மூன்று நியமன எம்.எல்.ஏ. பதவிகளில் பெண்களை நியமிக்கவும், உள்ளாட்சித் தேர்தலை நடத்தவும் முன்வர வேண்டும்.
முழுமையுறாத ஆட்சி
புதுச்சேரி 16-ஆவது சட்டப்பேரவைத் தேர்தல் முடிந்து முழுமையான ஆட்சி அமையவில்லை. தவணைமுறையில் அமைச்சர்கள் பொறுப்பேற்றுக்கொண்டனர்; துறைகளும் ஒதுக்கீடு செய்யப்படவில்லை. சபாநாயகர், துணை சபாநாயகர் தேர்வு நடைபெறவில்லை. நியமன எம்.எல்.ஏ. பதவிப் பங்கீட்டில் இழுபறி தொடர்கிறது.
77 நாட்களுக்குப் பின்னரே (20.07.2021-ல்) அமைச்சர்களுக்குத் துறை ஒதுக்கீடு தொடர்பான பட்டியல் ஆளுநரிடம் ஒப்படைக்கப்பட்டது. 2026 தேர்தலில் பாஜகவுக்குப் பெரும் பின்னடைவு ஏற்பட்டது. ஆனால், கடந்த 2021-ல் ஒதுக்கிய பதவிகள் மற்றும் துறைகளை அது வலியுறுத்துகிறது. என்.ஆர். காங்கிரஸ் சபாநாயகர் பதவி மற்றும் ஒரு நியமன எம்.எல்.ஏ. பதவியைக் கேட்கிறது. பாஜகவின் அதிகார வளையத்துக்குள் சிக்கியுள்ள திரு. என். ரங்கசாமியால் சுதந்திரமாகச் செயல்பட முடியவில்லை. நியமன எம்.எல்.ஏ. பதவிகளில் ஒரு இடம் கேட்டுக்கெஞ்சுவது என்பது, என். ரங்கசாமியின் கடந்த கால அரசியல் பிழையின் விளைவாகும்.
மாநில நியமன MLA உரிமைப் பறிப்பு
என்.ஆர். காங்கிரஸ் ஆட்சியில் (2011 – 2016) நியமன எம்.எல்.ஏ-க்களை நியமனம் செய்ய ஒன்றிய காங்கிரஸ் அரசு அனுமதிக்கவில்லை. 2014-ல் ஒன்றிய பாஜக ஆட்சியில், ஒரு நியமனப் பதவியை பாஜகவுக்கு விட்டுக் கொடுத்து, இரண்டு நியமன எம்.எல்.ஏ-க்களை என்.ஆர். காங்கிரஸ் பெற்றது.
காங்கிரஸ் ஆட்சியில் (2016 – 2021), மூன்று நியமன எம்.எல்.ஏ-க்களைத் தன்னிச்சையாக ஒன்றிய பாஜக நியமித்தது. நியமன எம்.எல்.ஏ. விவகாரத்தில் பாஜகவின் எதேச்சாதிகாரப் போக்கை, எதிர்க்கட்சித் தலைவராக இருந்த என்.ரங்கசாமி கண்டிக்கவில்லை. மாறாக, நியமன உறுப்பினர்களைச் சட்டப்பேரவைக்குள் அனுமதிக்க வேண்டுமெனச் சொல்லிப் பேரவையிலிருந்து வெளிநடப்பு செய்தார்.
என். ஆர்.காங்கிரஸ் – பாஜக கூட்டணி ஆட்சியில் (2021 – 2026), மூன்று நியமனப் பதவிகளையும் பாஜக தன்னிச்சையாகப் பறித்துக்கொண்டது. காங்கிரசின் வஞ்சகத்திற்கு பழித்தீர்பதாகக் கருதிக்கொண்டு, பாஜகவின் எதேச்சாதிகாரச் செயலுக்கு என்.ஆர். காங்கிரஸ் துணைபோனது. இதனால் மாநிலத்தில் எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும், ஒன்றிய அரசு நேரடியாக நியமன MLAகளை நியமிக்கும் என்ற நிலைக்கு மாநில உரிமை பறிக்கப்பட்டுள்ளது.
நியமன எம்.எல்.ஏ. நடைமுறை
புதுச்சேரி யூனியன் பிரதேச ஆட்சிப் பரப்புச் சட்டம் 1963-ல் நிறைவேற்றப்பட்டது. மேற்படி சட்டத்தின் பிரிவு 3(3) ல், மூன்று பேருக்கு மிகாமல் நியமன உறுப்பினர்களை நியமிக்க வழிவகை செய்கிறது. மேலும், அவர்கள் அரசு ஊழியராக இருக்கக் கூடாது என்றும் குறிப்பிடுகிறது. 1985-86 முதல் 2011-16 வரையில், மாநில அரசின் பரிந்துரையின்படி, ஆளுநரால் ஒன்றிய உள்துறைக்குப் பரிந்துரைக்கப்பட்டு, குடியரசுத் தலைவரின் ஒப்புதலுடன் நியமனங்கள் மேற்கொள்ளப்பட்டன. 1991 – 1996-ல் காங்கிரஸ் ஆட்சியில் நியமன உறுப்பினர்கள் நியமிக்கப்படவில்லை.
ஒன்றியத்தில் பாஜக அதிகாரத்துக்கு வந்த பின் கூட்டாட்சி முறை மற்றும் ஜனநாயகம் கேலிக்கூத்தாகிவிட்டது. சட்டம் மற்றும் நடைமுறைகளை மீறி நேரடியாகப் புதுச்சேரி நியமன எம்.எல்.ஏ-க்களை நியமித்து அவர்களை பயன்படுத்தி ஆட்சி களைக்கப்படுகிறது, கட்சிக்குள் நடக்கும் பதவிச் சண்டையைச் சீர்செய்ய ‘சுழற்சி முறையில் நியமன MLA பதவி மாற்றப்படுகிறது ஆணவத்தோடு அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்துகிறது பாஜக அரசு.
சட்டத்தின் பின்னணி
யூனியன் பிரதேசங்கள் ஆட்சிப் பரப்புச் சட்ட மசோதா 1963, மக்களவையில் மே 3-ஆம் தேதியும், மாநிலங்களவையில் மே 10-ஆம் தேதியும் தாக்கல் செய்யப்பட்டது. பல அம்சங்கள் விவாதிக்கப்பட்ட போதிலும், நியமன உறுப்பினர்கள் பதவி குறித்து அதிகம் விவாதிக்கப்பட்டன.
ஆளுங்கட்சி உறுப்பினர்கள், ‘தேர்தல் மூலம் சட்டப்பேரவையில் இடம்பெறாத ஒடுக்கப்பட்ட சமூகப் பிரிவினருக்கு வாய்ப்பளிக்க முடியும்’ என்றனர். எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சிலர், ‘நியமன உறுப்பினர்கள் பதவி தேவையற்றது; ஜனநாயகமற்றது; தவறுகளுக்கு வழிவகுக்கும்’ என வாதாடினார்கள். சிலர், ‘ஆளும் கட்சி சிறுபான்மையிலிருந்து பெரும்பான்மையாக மாற இது வழிவகுக்கும்’ என்றனர். ‘ஒடுக்கப்பட்ட பிரிவினர், பெண்கள் உள்ளிட்ட பின்தங்கிய பிரிவினருக்கு வாய்ப்பளித்திட வேண்டும்’ என்பதே பெரும்பான்மை உறுப்பினர்களின் கருத்தாக இருந்தது.
விவாதங்களுக்கு விளக்கம் அளித்து மேனாள் உள்துறை அமைச்சர் திரு. லால்பகதூர் சாஸ்திரி அவர்கள் கீழ்க்கண்டவாறு கூறினார்: “நியமன உறுப்பினர் பதவி அவசியமானது. நாட்டில் பல்வேறு பழங்குடியினப் பிரிவுகள் உள்ளன; இவற்றில் அதிக எண்ணிக்கை கொண்ட பிரிவினருக்கு வாய்ப்பளிக்கலாம். பெண்களுக்கும் வாய்ப்பளிக்கலாம். இந்த இரு பிரிவினர் மட்டுமின்றி, கல்வியாளர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் தகுதியான மக்கள் பிரிவினர் தேர்தலில் பங்கேற்காத நிலையில், அவர்களுக்கும் வாய்ப்பளிக்கலாம். இவர்கள் சட்டப்பேரவையில் இடம்பெற்றால் சிறப்பான பங்களிப்புச் செய்ய முடியும் என நான் உறுதியாக நம்புகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார். (மக்களவை விவாதம் பக்கம் 13785- 13908 வரை. மாநிலங்களவை விவாதப் பதிவு பக்கம் 2911- 3033 வரையிலான ஆவணங்களை நாடாளுமன்ற நூலகத்தில் பார்க்கலாம்).
உள்துறை அமைச்சரின் தொகுப்புரையில் குறிப்பிட்ட வழிகாட்டுதலைப் பின்பற்றி, சட்டம் மற்றும் விதிகளில் தெளிவான வரையறை இல்லாது போனது துரதிஷ்டமே. சட்டம் நிறைவேற்றப்படும் போது நாடாளுமன்ற இரு அவைகளிலும் எழுந்த உணர்வுகளும் விவாதங்களும் இன்றைக்கும் மிகப் பொருத்தமானதாகும்.
நீதிமன்றத் தீர்ப்பு
2016 புதுச்சேரி காங்கிரஸ் ஆட்சியில், ஒன்றிய பாஜக அரசு நேரடியாக பாஜக நிர்வாகிகள் 3 பேரை நியமன எம்.எல்.ஏ-க்களாகத் திணித்தது. மத்தியிலும், மாநிலத்திலும் மாறுபட்ட ஆட்சிகள் இருந்தபோதிலும், கூட்டாட்சி கோட்பாட்டைச் சிதைத்து ஜனநாயகப் படுகொலை செய்ய யாருமே இதற்கு முன் துணிந்ததில்லை. பாஜக அரசின் ஜனநாயக விரோதச் செயலை எதிர்த்து அன்றைய ஆளுங்கட்சி சார்பில் 2017-ல் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. (W.P Nos 16275, 18788, 29591 to 29593 of 2017). இந்த வழக்கில் 22.03.2018-ல் இறுதித் தீர்ப்பு வழங்கப்பட்டது.
“நியமன எம்.எல்.ஏ-க்கள் நியமனம் செல்லும், தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ-க்களுக்கு உள்ள அனைத்து அதிகாரங்களும் நியமன உறுப்பினர்களுக்கும் பொருந்தும் எனறும் தீர்ப்பு வழங்கியது. மேலும், நியமன உறுப்பினர்கள் நியமனம் தொடர்பான தெளிவான வரையறை வகுத்திட 4 பரிந்துரைகளை உயர்நீதிமன்றம் வழங்கியது. மேற்படி தீர்ப்பை உச்சநீதிமன்றமும் உறுதி செய்தது. 1963-ல் யூனியன் பிரதேசங்கள் ஆட்சிப் பரப்புச் சட்டம் நிறைவேற்றும் போது எழுந்த நாடாளுமன்றத்தின் உணர்வுகளை இத்தீர்ப்பு பிரதிபலிக்கவில்லை. புதுச்சேரி மாநிலத்தில் பின்பற்றப்பட்ட நியமன நடைமுறை மரபும் தார்மீக உரிமையும் நிராகரிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி சட்டப்பேரவையில் நியமன எம்.எல்.ஏ-க்களுக்கு அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு, நிதிநிலை அறிக்கை மீதான வாக்கெடுப்பு மற்றும் குடியரசுத் தலைவர் தேர்தலில் வாக்களிக்கும் உரிமை இல்லை. இந்தத் தீர்ப்பின் விளைவாக, 2021 பிப்ரவரி 22-ல் பாஜகவின் நியமன உறுப்பினர்களைக் கொண்டு காங்கிரஸ் ஆட்சி கவிழ்க்கப்பட்டது. குடியரசுத் தலைவரைத் தேர்ந்தெடுக்க எந்த மட்டத்திலும் நியமன உறுப்பினர்களுக்கு உரிமை இல்லை. ஆனால், நீதிமன்றம் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ-க்களுக்கு உள்ள அனைத்து அதிகாரங்களும் பொருந்தும் என்று தீர்ப்பு வழங்கியது.
உயர்நீதிமன்றப் பரிந்துரைகள்
• புதுச்சேரி சட்டப்பேரவைக்கு நியமன எம்.எல்.ஏ-க்கள் நியமனம் எங்கிருந்து துவங்குவது என்று தெளிவான நடைமுறை வகுக்கப்பட வேண்டும்.
• யூனியன் பிரதேசச் சட்டம் 3(3) பாராவில், எந்த அலுவலகத்தால் நியமனச் செயல்முறை அதிகாரத்தைப் பயன்படுத்துவது என்பது வரையறை செய்யப்பட வேண்டும்.
• பதவிக்குத் தகுதி பெற்ற ஆளுமையை உருவாக்கும் தகுதிகள், பண்புகள் மற்றும் சான்றுகள் குறிப்பிடப்பட வேண்டும்.
• நியமனம் செய்யப்படும் உறுப்பினர், அவர் சார்ந்த சட்டமன்றக் கட்சியில் அங்கம் வகிப்பார். சட்டப்பேரவையில் அவர் சார்ந்த கட்சி இல்லாத நிலையில், அவர் சார்ந்த அரசியல் கட்சியின் சட்டமன்றக் கட்சியை அமைப்பார்.
மேற்குறிப்பிட்ட நான்கு பரிந்துரைகளை உயர்நீதிமன்றம் வழங்கியது. நீதிமன்றப் பரிந்துரைகளை அறிவார்ந்த நாடாளுமன்றம் அவசியம் என கருதும் பட்சத்தில் தேவையான சட்டத் திருத்தங்களைச் செய்யும் என உறுதியாக நம்புகிறோம்; தேவைப்பட்டால் அரசியலமைப்புச் சட்டத் திருத்தங்களையும் பரிசீலிக்கலாம் எனத் தீர்ப்பு வழங்கியது. 4வது பரிந்துரை தவிர மற்றவை நடைமுறையில் பின்பற்றப்பட்டுவந்தன. ஏழு ஆண்டுகள் ஆகியும், நீதிமன்றப் பரிந்துரைகள் பரிசீலிக்கப்படவில்லை.
பெண்களுக்குப் பிரதிநிதித்துவம் வழங்கிடுக
16வது சட்டப்பேரவையில் ஒரு பெண் உறுப்பினர் கூட இடம்பெறவில்லை. சரிபாதிக்கு மேல் பெண்கள் இருந்தும், தேர்தலில் வேட்பாளர்களாக வாய்ப்பு அளிக்கவில்லை காங்கிரஸ், திமுக, பாஜக உள்ளிட்ட பெரிய கட்சிகள் பெண் வேட்பாளர்களை நிறுத்தவில்லை. யூனியன் பிரதேசச் சட்டம் 1963 நிறைவேற்றப்படும்போது, நாடாளுமன்றத்தில் எழுந்த உணர்வை பிரதிபலிப்பதாக நியமன பதவி அமைவது அவசியம்.
இந்தப் பின்புலத்திலிருந்து, நடப்புச் சட்டப்பேரவையில் மூன்று பெண்களுக்கு நியமன எம்.எல்.ஏ. பதவி வழங்கிட மாநில அரசு முன்வர வேண்டும். மீனவர்கள் மற்றும் பழங்குடியின மக்கள் பிரிவினருக்குத் தலா ஒரு இடமும், தகுதியான நிபுணத்துவம் வாய்ந்த மக்கள் பிரிவிலிருந்து ஒரு இடமும் என பெண்களுக்கே நியமன உறுப்பினர் பதவி வழங்க வேண்டும். இவ்வாறு வழங்குவது வரலாற்று நிகழ்வாகப் பதிவாகும். இது சட்டப்பேரவையின் தன்மையிலும், செயல்பாட்டிலும் நல்ல முன்னேற்றத்தை அளிக்கும்.
நிறைவாக
ஒன்றிய பாஜக அதிகாரத்துக்கு வந்த பின், கூட்டாட்சி முறை மற்றும் ஜனநாயகம் கேலிக்கூத்தாகிவருகிறது; அரசியலமைப்புச் சட்டம் பலவீனப்படுத்தப்படுகிறது. மக்கள் வாழ்வாதாரம் கடும் நெருக்கடிக்குத் தள்ளப்பட்டுள்ளது. பாஜக தனது நாடாளுமன்ற உறுப்பினர் எண்ணிக்கையை மூன்றில் இரண்டு மடங்காக உயர்த்திட, ஆம் ஆத்மி, திரிணாமுல் காங்கிரஸ், சிவசேனா உள்ளிட்ட பிராந்தியக் கட்சிகளின் எம்.பி-க்களைத் தன்வசப்படுத்தியுள்ளது. பாஜக இருமடங்கு பெரும்பான்மையை எட்டும்போது, ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’, தொகுதி மறுசீரமைப்பு மசோதாக்கள் நிறைவேற்றப்படும். அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படை தகர்க்கப்படும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.
ஜனநாயகத்தில் நம்பகத்தன்மை இல்லாத பாஜக, எதிர்க்கட்சி மற்றும் கூட்டணிக் கட்சிகளையும் பலவீனப்படுத்தித் தன் சொந்த பலத்தை அதிகரிக்கிறது. இந்த ஆபத்தை முதல்வர் திரு. என். ரங்கசாமி அவர்கள் உணர்ந்திருப்பார். புதுச்சேரிக்கு முழு மாநில அந்தஸ்து பெறுவது மக்களின் உணர்வாக இருக்கிறது. அதற்கு முன்நிபந்தனையாக இருப்பது, பாசிச பாஜகவின் மக்கள் விரோதக் கொள்கைகளுக்கு எதிராக வெகுஜன மக்களை அணிதிரட்டுவதாகும். இப்பணியை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுதியாக மேற்கொண்டு வருகிறது. தற்போது ஒன்றிய பாஜக அரசுக்கு எதிராக இந்திய மாணவர் அமைப்புகள் இணைந்து தீவிரமாகப் போராடி வருகின்றன. இடதுசாரி, ஜனநாயக சக்திகள் போராடும் இளைஞர்களோடு தங்களை இணைத்துக்கொண்டுள்ளன. இத்தகைய சூழ்நிலையில், திரு. என். ரங்கசாமி அவர்கள் தனது அரசியல் பயணத்தை மாற்றியமைப்பது ஜனநாயக அரசியலுக்கும் மாநில வளர்ச்சிக்கும் வழிவகுத்திடும் என்பது உறுதி.
வெ. பெருமாள்
மாநிலச் செயற்குழு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்), புதுச்சேரி மாநிலக் குழு.





