தோழர்கள் அனைவருக்கும் வணக்கம்
குருவிநத்தத்தில் வசித்து வரும் Ρ.Κ. என்றழைக்கும் பெ. கலியபெருமாள் ஆகிய நான் குருவிநத்தத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) கட்சி ஆரம்பித்த வரலாற்றினை உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன்.
1959 ஆம் ஆண்டிலிருந்து குருவிநத்தத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் (CPI) செயல்பட்டு வந்தேன். கோழிப்பாக்கத்தில் வசித்து வந்த தோழர் திரு ராதாகிருஷ்ணனின் மூத்த சகோதரி திருமதி அணுசு அவர்கள் குருவிநத்ததில் திரு. ஜெகநாத ரெட்டியார் என்பவரை திருமணம் செய்த காரணத்தினால் பிற்காலத்தில் திரு ராதாகிருஷ்ணன் அவர்கள் எங்கள் ஊரிலேயே குடும்பத்தோடு 1968 இல் வசித்து வந்தார்
ராதாகிருஷ்ணன் சென்னையில் மேற்படிப்பு படிக்க சென்று விட்டார். படிக்கும் காலத்தில் தோழர் வி.பி சிந்தனால் கவரப்பட்டு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டு குருவிநதத்திற்கு வருகிறார்
திரு ராதாகிருஷ்ணன் என்னிடத்தில் உள்ள அன்பின் காரணமாக நல்ல நண்பராக பழகி வந்த நிலையில் என்னிடத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆரம்பிக்க கூறினார். ஆனால் நான் தற்பொழுது கம்யூனிஸ்ட் கட்சியில் தான் உள்ளேன் என்று கூறினேன்.
அதற்கு அவர் இந்தியாவில் தொழிலாளிவர்கத்திற்காக புரட்சிகரமான செயல்திட்டத்துடன் செயல்படக்கூடிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) CPI(M) என்று கூறினார். நான் சிபிஐயில் உள்ள தோழர்களை கல்ந்து ஆலோசித்த பிறகு சொல்கிறேன் என்று அவரிடம் கூறினேன். அதன் பிறகு சில தோழர்களை அதாவது வெங்கடாசலம், கண்ணன், சீனிவாசன், ஜெயராமன், லட்சுமணன், இராமலிங்கம், போன்ற தோழர்களை சந்தித்து பேசினேன், அவர்கள் அதற்கு நீங்கள் ஏற்பாடு செய்யுங்கள் தோழர் நாங்கள் உங்களுடன் இருக்கிறோம், என்று சொன்னார்கள் இதை ராதாகிருஷ்ணனிடம் கூறினேன்.
அந்த சமயத்தில் 1971 இல் அகில இந்திய விவசாய சங்க மாநில மாநாடு சிதம்பரத்தில் நடைபெற்றது. அந்தப் பேரணிக்கு அவர் எங்களை கூப்பிட்டார். நானும், என்னுடன் வெங்கடாசலம், கண்ணன், சீனிவாசன், ஜெயராமன், லட்சுமணன் ஆகிய ஐவரும் அந்த பேரணிக்கு சென்றோம். அந்தப் பேரணிக்கு வந்த விழுப்புரத்தைச் சேர்ந்த தோழர் பத்மநாபனை எங்களிடத்தில் அறிமுகம் செய்து வைத்தார் இவர்கள் சிபிஐயில் இருந்து வந்திருக்கிறார்கள், என்று கூறினார் பிறகு கடலூர் கட்சி அலுவலகம் சென்று தென்னார்க்காடு மாவட்ட கட்சி செயலாளர் தோழர் எஸ் நடராஜன்
மற்றும் தோழர் என். ஆர். ராமசாமியை எங்களுக்கு அறிமுகம் செய்து வைத்தார்கள் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) கட்சியை ஆரம்பிக்க தோழர்கள் கேட்டுக் கொண்டதன் பேரில் குருவிநத்ததில் உள்ள தோழர்களை கூட்டி பேசிவிட்டு கட்சியில் சேர பெயர் பட்டியல் மற்றும் சந்தா தொகையுடன் வாருங்கள் என்று கூறினார்கள். தோழர்களுடன் கலந்து பேசிவிட்டு பெயர் பட்டியல் உடன் பெ. கலியபெருமாள், லட்சுமணன், ராதாகிருஷ்ணன் மூன்று பேரும் கடலூர் கட்சி அலுவலகம் சென்று எஸ் நடராஜன் அவர்களிடம் பெயர் பட்டியலையும் சந்தா தொகையை கொடுத்தோம். CPI தோழர்களின் பல்வேறு நெருக்கடிகளையும் எதிர்கொண்டு 1971 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) கிளை தோழர்கள் பெயர் பெ. கலியபெருமாள், ரா சீனிவாசன், எஸ் லட்சுமணன், கே கண்ணன், வெங்கடாசலம், ஜெயராமன், இராமலிங்கம், ஆகியோர் கலந்து கொண்ட முதல் கிளைக் கட்சி கூட்டம் நடத்தப்பட்டது. விழுப்புரம் தோழர் பத்மநாபன் கலந்து கொண்டார். அந்த கூட்டத்தில் பெ.கலியபெருமாள் ஆகிய என்னை கிளைச் செயலாளராக தேர்வு செய்தார்கள்.
கிளை கூட்டத்தில் முடிவுசெய்த அடிப்படையில் 1971 ஆகஸ்ட் மாதம் முதல் வாரத்தில் குருவிநத்தம் கிராமத்தில் நிதி வசூல் செய்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) கட்சி அறிமுக பொதுக்கூட்டம் நடத்தினோம். கூட்டத்தில் சிறப்பு பேச்சாளராக, நெல்லிக்குப்பம் தோழர் கோவிந்தராஜன், விழுப்புரம் தோழர் பத்மநாபன், கலந்து கொண்டனர்.
கட்சி அலுவலகம் திறப்பு விழா தோழர் மதுரை குமார் கலை குழுவுடன் கலை நிகழ்ச்சி நடைபெற்றது. அந்த காலத்தில் நமக்கு உதவியாக தூக்கணாம்பாக்கம் கட்சித் தோழர்களும் நெல்லிக்குப்பம் கட்சி தோழர்களும் இருந்து செயல்பட்டார்கள்
இப்படிக்கு
பெ. கலியபெருமாள் CPI(M)குருவிநத்தம்
குருவிநத்தம்









