இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) – புதுச்சேரி மாநிலக் குழு
பத்திரிகை செய்தி
அமித்ஷாவின் அடியாளாகச் செயல்படும் புதுச்சேரி துணைநிலை ஆளுநருக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்!
புதுச்சேரி மாநிலம் ஒன்றிய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை நடைமுறைப்படுத்தும் “சோதனை எலியாகப்” பயன்படுத்தப்பட்டு வருகிறது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ச்சியாகக் குற்றம்சாட்டி வருகிறது. அதன் ஒரு பகுதியாகவே புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கைலாசநாதர், உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் ஆணைப்படி ஜனநாயகச் செயல்பாடுகளில் ஈடுபடுபவர்களைக் காவல்துறையின் மூலம் மிரட்டும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது தற்போது அம்பலமாகியுள்ளது.
மிரட்டப்படும் சவுரவ் தாஸ் பெற்றோர்
காக்ரோச் ஜனதா கட்சியின் முக்கியமான தலைவரும், ஒன்றிய மோடி அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளுக்கு எதிராக அமைச்சர் பதவியிலிருந்து விலகும் அளவிற்கு மாபெரும் போராட்டத்தில் முன்னணிப் பாத்திரம் வகித்தவருமான சவுரவ் தாஸ் அவரின் பெற்றோர் புதுச்சேரியில் வசித்து வருகின்றனர். அவர்கள் கடந்த புதன்கிழமையன்று (12.08.2026) மாலை புதுச்சேரி காவல்துறையினரால் அச்சுறுத்தப்பட்டு மிரட்டப்பட்டுள்ளனர்.
இரண்டு நாட்களுக்கு முன்னர் உள்துறை அமைச்சர் அமித்ஷா புதுச்சேரிக்கு வருகை புரிந்தபோது, ஆளுநரும் உள்துறை அமைச்சர் நமச்சிவாயமும் சந்தித்துள்ளனர். இச்சந்திப்பின் பின்புலத்தில்தான் தனது பெற்றோர் மிரட்டப்பட்டுள்ளனர் என்று சவுரவ் தாஸ் தெரிவித்துள்ளார். இதன்மூலம், புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கைலாசநாதரின் தூண்டுதலின்பேரில்தான் இந்த மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது என்பது தெளிவாகியுள்ளது. ஒன்றிய உள்துறை அமைச்சகத்தின் பிரதிநிதியான ஆளுநர், தனது அதிகார வரம்பை மீறிச் செயல்படுவதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது.
அதேநேரம் சவுரவ் தாஸ், “எனது பெற்றோர்களை மிரட்டி, என்னை அச்சுறுத்தி மவுனமாக்கும் இந்நடவடிக்கை ஒருபோதும் பலனளிக்காது; மாறாக, ஊழலற்ற சிறந்த நிர்வாகத்தை உருவாக்கும் எனது உறுதியை இத்தகைய நடவடிக்கைகள் வலுப்படுத்தவே செய்யும்” என்று குறிப்பிட்டுள்ளது பாராட்டத்தக்கது.
ஆளுநரின் தொடர் மக்கள் விரோத நடவடிக்கைகள்
அமைதியான புதுச்சேரி மாநிலத்தில் அமித்ஷா வருகை ஒட்டி தேவையற்ற பாதுகாப்பு நடவடிக்கை என்ற பெயரில் புதுச்சேரி மக்களின் அமைதியையும் சகஜ வாழ்வையும் கடும் நெருக்கடிக்கு உள்ளாக்கி ஆயிரக்கணக்கான காவல்துறை பயன்படுத்தி அச்சுறுத்துவது.
வீடுதோறும் தேசியக்கொடி ஏற்றும் பாஜக கட்சியின் தனிப்பட்ட நிகழ்ச்சியில் பங்கேற்றதோடு, ஆர்.எஸ்.எஸ். கொடியை ஏற்ற முயன்றது.
புதுச்சேரி அமைச்சரவையில் இலாகா ஒதுக்கீடு செய்வதில் பாஜகவின் ஏஜென்டாகச் செயல்படுவது.
புதுச்சேரி கடற்கரையை ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் நிகழ்ச்சிகளுக்குத் திறந்துவிடுவது.
சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு நான்கு மாதங்களாகியும், சபாநாயகர் தேர்வையும் சட்டமன்றக் கூட்டத்தொடரையும் தொடங்குவதற்குத் தடையாக இருந்து வருவது.
போன்ற பல்வேறு மக்கள் விரோத நடவடிக்கைகளை ஆளுநர் கைலாசநாதர் தொடர்ந்து அரங்கேற்றி வருகிறார்.
காவல்துறையின் மழுப்பல் விளக்கத்தை ஏற்க மாட்டோம்.
புதுச்சேரி காவல்துறையினர் இந்த நடவடிக்கையைச் சுதந்திர தின விழா மற்றும் வி.ஐ.பி. வருகைக்கான ‘சம்பிரதாய நடவடிக்கை’ என்று மழுப்பலான விளக்கத்தைத் தந்துள்ளனர். எத்தனை வீடுகளில் இப்படிப்பட்ட சோதனைகளை நடத்தியுள்ளனர்? இது வழக்கமான ஒன்று என்பதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஏற்காது.
நீட் தேர்வு குளறுபடிகளுக்கு எதிராக நாடு முழுவதும் நடைபெற்ற இளைஞர்களின் எழுச்சிமிகு போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கட்சி ஆதரவு தெரிவித்ததோடு, அவர்களுடன் போராட்டத்திலும் கரம் கோர்த்தது. அதற்குத் தலைமை ஏற்ற காரணத்தினாலேயே சவுரவ் தாஸின் பெற்றோர் அச்சுறுத்தப்பட்டுள்ளனர். அகில இந்திய அளவில் நடைபெற்ற இப்போராட்டத்தில் புதுச்சேரி மாணவர்களும் இளைஞர்களும் பங்கேற்றபோது, அவர்களது தனிப்பட்ட குடும்பப் பின்னணியை ‘விசாரணை’ என்ற பெயரில் காவல்துறையினர் விசாரித்ததன் தொடர்ச்சியே இச்சம்பவமாகும்.
இத்தகைய துணைநிலை ஆளுநரின் நடவடிக்கைகளுக்கு எதிராகப் புதுச்சேரியில் உள்ள ஜனநாயக சக்திகள் உடனடியாக அணிதிரள வேண்டும். ஒன்றிய அரசின் ஜனநாயக விரோதச் செயல்பாடுகளுக்குப் புதுச்சேரி களமாவதை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம். ஜனநாயக சக்திகள் ஒன்றிணைந்து இதைத் தடுத்து நிறுத்துவோம் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எச்சரிக்கிறது. சவுரவ் தாஸின் பெற்றோர்களின் பாதுகாப்பை புதுச்சேரி அரசும் புதுச்சேரியின் ஜனநாயக சக்திகள் பாதுகாப்பதோடு, நாடு தழுவிய மக்கள் இயக்கத்தில் தொடர்ந்து பங்கேற்போம்.
இப்படிக்கு,
எஸ். ராமச்சந்திரன்,
செயலாளர்,
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, புதுச்சேரி.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) > செய்திகள் > பிரதேச செயற்குழு > அறிக்கைகள் > அமித்ஷாவின் அடியாளாகச் செயல்படும் புதுச்சேரி துணைநிலை ஆளுநருக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்!
அமித்ஷாவின் அடியாளாகச் செயல்படும் புதுச்சேரி துணைநிலை ஆளுநருக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்!
posted on




