ஏரிப்பாக்கம் MRF தொழிற்சாலையின் பழிவாங்கும் சட்ட விரோதமான கதவடைப்பைக் கைவிடுக!

இந்திய கம்யூனிஸ்டு கட்சி (மார்க்சிஸ்ட்) புதுச்சேரி மாநில குழு
பத்திரிகை செய்தி
தேதி: 04.07.2026
ஏரிப்பாக்கம் MRF தொழிற்சாலையின் பழிவாங்கும் சட்ட விரோதமான கதவடைப்பைக் கைவிடுக! தொழிலாளர்களைப் பணி நிரந்தரம் செய்க! – புதுச்சேரி அரசே உடனடியாகத் தலையிடுக!!
வணக்கம். புதுச்சேரி மாநிலம், நெட்டப்பாக்கம் கொம்யூன், ஏரிப்பாக்கம் பகுதியில் இயங்கி வரும் MRF தொழிற்சாலை நிர்வாகம், தொழிலாளர்களின் அடிப்படை உரிமைகளை மறுத்து, சட்டவிரோதமான முறையில் ‘கதவடைப்பு’ (Lockout) அறிவித்துள்ளதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதுச்சேரி மாநிலக்குழு வன்மையாகக் கண்டிக்கிறது.
நிர்வாகத்தின் அப்பட்டமான சட்ட மீறல்: இத்தொழிற்சாலையில் 2,500 நிரந்தரத் தொழிலாளர்களும், 2,500-க்கும் மேற்பட்ட ஒப்பந்தத் தொழிலாளர்களும் பணியாற்றி வருகின்றனர். கடந்த 5 ஆண்டுகளாக, 65-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ‘அப்ரண்டீஸ்’ என்ற பெயரில் வெறும் ரூ.10,000-க்கும் குறைவான ஊதியத்தில் கடும் சுரண்டலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். பயிற்சி காலம் முடிந்த பிறகும், சட்டப்படி பணி நிரந்தரம் செய்ய வேண்டிய நிர்வாகம், அதற்குப் பதிலாக அவர்களை ஒப்பந்தத் தொழிலாளர்களாக மாறக் கட்டாயப்படுத்தி, தொழிற்சாலைக்குள் அனுமதிக்க மறுத்துள்ளது. இது தொழிலாளர் சட்டங்களுக்கு எதிரான அப்பட்டமான அடாவடித்தனமாகும்.
திட்டமிட்ட பழிவாங்கும் நடவடிக்கை: ஜூன் 29 அன்று சி.ஐ.டி.யூ. (CITU) சார்பில் நடைபெற்ற நியாயமான கோரிக்கை வலியுறுத்தி போராட்டம் நடத்தப்பட்டது இந்த நிலையில்   நிர்வாகம், கடந்த ஜூலை 1 இரவு 9 மணி முதல் எவ்வித முன்னறிவிப்புமின்றி ‘மூலப்பொருள் பற்றாக்குறை’ என்ற பொய்யான காரணத்தைக் கூறி தொழிற்சாலையை சட்டவிரோதமாக மூடியுள்ளது. இது தொழிலாளர்களின் நியாயமான கோபத்தை ஒடுக்கவும், போராட்டத்தை முடக்கவும் மேற்கொள்ளப்பட்ட பழிவாங்கும் நடவடிக்கையாகும்.
ஆட்சியாளர்களின் மெத்தனப்போக்கு கண்டிக்கத்தக்கது:
புதுச்சேரியின் மின்சாரம், நீராதாரங்கள் மற்றும் நிலம் என அனைத்து உள்கட்டமைப்பு வசதிகளையும் பயன்படுத்தி கோடிக்கணக்கான லாபம் ஈட்டும் MRF நிர்வாகம், அதே மண்ணின் மைந்தர்களான தொழிலாளர்களை வீதிக்குத் தள்ளியுள்ளது. இந்தச் சட்டவிரோதக் கதவடைப்பைக் கண்டும் காணாமல் இருக்கும் தொழிலாளர் துறையும், பி.ஜே.பி. – என்.ஆர். காங்கிரஸ் கூட்டணி அரசின் மெத்தனப்போக்கும் கடும் கண்டனத்திற்குரியது.
எனவே பழிவாங்கும் நோக்கில் அறிவிக்கப்பட்ட சட்டவிரோதக் கதவடைப்பை நிர்வாகம் உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும். பல ஆண்டுகளாகப் பணிபுரியும் தொழிலாளர்களை எவ்வித நிபந்தனையுமின்றி உடனடியாகப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும். புதுச்சேரி முதலமைச்சரும், தொழிலாளர் துறையும் உடனடியாகத் தலையிட்டு, தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கப் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கைகளை வென்றெடுக்கும் வரை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தொழிலாளர்களுடனும், அவர்களின் குடும்பங்களுடனும் இணைந்து களத்தில் நின்று போராடும். ஜனநாயக சக்திகளும், பொதுமக்களும் தொழிலாளர்களின் இப்போராட்டத்திற்குத் துணை நிற்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
இப்படிக்கு,
எஸ். ராமச்சந்திரன், மாநில செயலாளர்,
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மார்க்சிஸ்ட்,
புதுச்சேரி மாநிலக்குழு.

Leave a Reply