சுதேசி, பாரதி பஞ்சாலைகள் மூடும் முடிவை புதுச்சேரி அரசு கைவிடக்கோரி சிஐடியு ஏஐடியுசி உள்ளிட்ட மத்திய தொழிற்சங்கத்தினர் சார்பில் தர்ணா போராட்டம் நடைபெற்றது.
புதுச்சேரியின் பாரம்பரிய மிக்க சுதேசி, பாரதி பஞ்சாலைகளை நவீனப்படுத்தி புதிய வேலைவாய்ப்பு வழங்க வேண்டும். சித்ரா ஆய்வுக் குழுவின் பரிந்துரைப்படி ஒன்றிய அரசின் நிதி உதவியுடன் ரூ. 100 கோடி பெற்று ஆலைகளை புனரமைக்க வேண்டும். தற்போது பஞ்சாலைகள் மூடும் முடிவை புதுச்சேரி அரசு கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது.
புதுச்சேரி சட்டப்பேரவை அருகே நடைபெற்ற போராட்டத்திற்கு ஏஐடியுசி மாநில செயல் தலைவர் அபிஷேகம் தலைமை தாங்கினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பிரதேச செயலாளர் ராஜாங்கம், செயற்குழு உறுப்பினர் பெருமாள், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்கள். சிஐடியு பிரதேச செயலாளர் சீனிவாசன் துணைத் தலைவர் குணசேகரன், ஏஐடியுசி பொதுச்செயலாளர் சேதுசெல்வம், ஐஎன்டியூசி நிர்வாகி ஞானசேகரன் எம்எல்எப் தொழிற்சங்க நிர்வாகி கபிரியேல், ஏஐசிசிடியூ நிர்வாகி புருஷோத்தமன் உள்ளிட்ட திரளானோர் போராட்டத்தில் பங்கேற்றனர். முன்னதாக ஆலைகளை மூடும் முடிவை கைவிட கோரி முழக்கம் எழுப்பினர். இறுதியாக முதல்வர் ரங்கசாமியை சந்தித்து தொழிற்சங்க தலைவர்கள் ஆளைகள் மூடும் முடிவை கைவிட வலியுறுத்தினார்.