பஞ்சாலைத் தொழிலைப் பாதுகாத்திடுக

புதுச்சேரி மாநிலத்தில் பிரஞ்சிந்திய விடுதலைக்கு அடித்தளம் அமைத்துக் கொடுத்த, மாநிலத்தின் சமூக பொருளாதாரத்தில் முக்கிய பங்காற்றிய ரோடியர், பாரதி, சுதேசி பஞ்சாலைகள் என்.ஆர்.காங்கிரஸ் ஆட்சியில் மூடுவிழா கண்டுள்ளது. புதுச்சேரி மாநிலத்தில் மாறிமாறி அதிகாரத்திற்கு வந்த காங்கிரஸ், திமுகவின் தவறான கொள்கையாலும், அதிகாரிகளின் நிர்வாகச் சீர்கேட்டாலும் புதுச்சேரி பஞ்சாலைத் தொழில்கள் படிப்படியாக சீரழிக்கப்பட்டுவந்தன. தற்போது இயங்கிக் கொண்டிருந்த சுதேசி, பாரதி மில்களில் முதற்கட்டமாக ”டைஹவுஸ்” பிரிவு மூடப்பட்டு, கைத்தறி பிரிவு படிப்படியாக மூடப்பட்டு தற்போது முழுமையாக மூடப்பட்டுள்ளது. நிரந்தரமாக மூடுவதற்கான முயற்சிகளில் மாநில அரசு ஈடுபட்டுள்ளதாகத் தெரிகிறது. இது கவலையளிப்பதாகும்.

2004ல் சுதேசி, பாரதி மில்களை மூடுவதற்கான அறிவிக்கையை மத்திய தேசிய பஞ்சாலை கழகம் அறிவித்தது. இதை எதிர்த்து மார்க்சிஸ்ட் கட்சியும், இடதுசாரி வர்க்க வெகுஜன அமைப்புகளும் மக்கள் இயக்கத்தை முன்னெடுத்தன. 2004ல் ஜூலை 30ல் புதுச்சேரி கிராமங்களை நோக்கி 72 கிமீ நடைப்பயணம் நடைப்பெற்றது. இவ்வியக்கம் மக்களின் கவனத்தை ஈர்த்தது. மாநில சட்டப்பேரவைக் கூட்டத்தொடரின் இறுதி நாளான ஜூலை 30 அன்று சுதேசி, பாரதி பஞ்சாலைகளை மாநில அரசே ஏற்றெடுப்பது, ஜூலை 30 தியாகிகள் நினைவுத் தூண் எழுப்புவது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மத்தியில் ஆட்சி மாற்றத்தை தொடர்ந்து மத்திய அரசும், சுதேசி, பாரதி பஞ்சாலைகளை மாநில அரசிடம் ஒப்படைத்தது. இத்தகைய பின்புலத்தில் ஏற்றெடுத்த சுதேசி, பாரதி பஞ்சாலைகள் தற்போது மூடப்பட்டுள்ளன.

மத்திய ஜவுளி மேம்பாட்டுக் கழகத்திடம் இருந்து நிதி உதவிபெற்று புதுச்சேரி பஞ்சாலைகளை மேம்படுத்த இடதுசாரி கட்சி எம்பிக்கள் தோழர்கள் டி.கே. ரங்கராஜன், து.ராஜா உள்ளிட்டோர் வலியுறுத்தினர். நிதியுதவி பெற்று பஞ்சாலைகளை மேம்படுத்த அரசு உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை. தற்போது மத்தியில் என்.ஆர். காங்கிரஸ் ஆதரவு பெற்ற பாரதிய ஜனதா ஆட்சியில் பல மாநிலங்களுக்கு ஜவுளிப் பூங்கா துவங்க நிதி ஒதுக்கியுள்ளது. ஆனால் மாநில என்.ஆர். காங்கிரஸ் அரசு தனது ஆதரவு பெற்ற அரசிடமிருந்து பஞ்சாலை தொழிலை காக்க எத்தகைய நிதி உதவியும் பெறவில்லை. 2011 சட்டப்பேரவை தேர்தலில் பஞ்சாலைகளை நவீனப்படுத்தி புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவோம்; உற்பத்தியாகும் துணிகளை அரசு திட்டங்களுக்கு பயன்படுத்துவோம் என்ற என்.ஆர். காங்கிரசின் தேர்தல் கால அறிவிப்பும் காற்றில் பறக்கவிடப்பட்டுள்ளது. மாரில அரசின் பொறுப்பற்ற நடவடிக்கைகளை மார்க்சிஸ்ட் கட்சி கண்டிக்கிறது.

ஆகவே, மாநில என்.ஆர். காங்கிரஸ் அரசு மூடிய பஞ்சாலைகளை உடனடியாகத் திறந்து இயக்கிட தேவையான நிதி ஒதுக்க வேண்டும். ஓய்வு பெற்ற தொழிலாளிக்கு பணிக்கொடை, வேலை செய்த தொழிலாளிக்கு உரிய சம்பள பாக்கிகளை உடனடியாக வழங்க வேண்டும். மத்திய அரசிடமிருந்து நிதி உதவி பெற்று பஞ்சாலைகளை நவீனப்படுத்தி புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கிட வேண்டும் என மார்க்சிஸ்ட் கட்சி கேட்டுக்கொள்கிறது.

Leave a Reply