விவசாயிகளின் கட்டணமில்லா மின்சாரத்தை மின் மீட்டர் பொருத்தி பறிக்கும் நடவடிக்கைக்கு சிபிஎம் கடும் கண்டனம்.

விவசாயிகளின் கட்டணமில்லா மின்சாரத்தை மின் மீட்டர் பொருத்தி பறிக்கும் நடவடிக்கைக்கு சிபிஎம் கடும் கண்டனம்.

புதுச்சேரி அரசு மின் துறையை தனியார் முதலாளிகள் கொள்ளை அடிப்பதற்கு அதை விற்கும் நடவடிக்கையில் தொடர்ந்து ஆளும் பிஜேபி என்.ஆர். காங்கிரஸ் கூட்டணி அரசு ஈடுபட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக படிப்படியான சில மோசடி திட்டங்களை அமல்படுத்தி வருகிறது. அதில் ஒரு திட்டம்தான் கட்டணம் இல்லாமல் மின்சாரத்தை பயன்படுத்தி வரும் விவசாயிகளின் உரிமையை பறிக்கும் விதமாக விவசாய பம்ப் செட்டுக்கு  மின் மீட்டர் பொருத்தும் பணியை செய்து வருகிறது. ஏற்கனவே பல்வேறு நெருக்கடியால் கடும் பாதிப்பு அடைந்து உள்ள புதுச்சேரி விவசாயிகளை புதுச்சேரி அரசும் ஒன்றிய பிஜேபி அரசும் அவர்களின் மின்சார உரிமையை பறிப்பதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது.  இத்தகைய நடவடிக்கைகளை ஒருபோதும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மார்க்சிஸ்ட் அனுமதிக்காது மேலும் ஆளும் அரசுக்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறது.

கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் புதுச்சேரி மின்துறையும் புதுச்சேரி மாநிலத்தின் சொத்துக்களையும் ஒட்டுமொத்தமாக வட இந்திய முதலாளிகளுக்கு பேரம் பேசி பெற வேண்டியதைப் பெற்றுக் கொண்டு விற்பனை செய்ய ஒன்றிய பாஜக மற்றும் புதுச்சேரி ரங்கசாமி- பாஜக கூட்டணி அரசு துடியாய் துடித்து வருகிறது.  இதை எதிர்த்து பல்வேறு கட்ட போராட்டங்களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உட்பட புதுச்சேரியின் அனைத்து தரப்பு மக்களும் மின்துறை ஊழியர்களும் ஏராளமான போராட்டங்களை நடத்தி ஆளும் அரசின் நயவஞ்சக தனியார்மயமாக்கல் திட்டத்தை முறியடித்து தடுத்து வருகின்றனர். இது தொடர்பான வழக்கும் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் குறுக்கு வழியில் படிப்படியாக தனியார் மயமாக்கும் நடவடிக்கையை ஆளும் அரசு செய்து வருகிறது குறிப்பாக. புதுவையில் தனியாருக்காக ரூ.250 கோடியில் மின் மீட்டரை அரசே பொருத்துகிறது. பிரீபெய்டு மீட்டராக மாற்றினால் பணம் கட்டினால்தான் மின்சாரம் வழங்கப்படும். இந்த ஏற்பாடும் மக்களுக்காக அல்ல தனியார் கொள்ளையடிக்க அரசு செலவு செய்கிறது.

இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் புதுவையில் வீட்டு சேவைக்கு ஒரு கிலோ வாட்டுக்கு (KW) ரூபாய் 30 என்றும் வர்த்தக இணைப்புகளுக்கு ரூபாய் 75 என்றும் சிறுகுறு நிறுவனங்களுக்கு ரூபாய் 50 என நிரந்தர சேவை கட்டணம் வசூலிக்க தொடங்கி உள்ளனர்.  மேலும் மின் கட்டணமும் பல மடங்கு உயர்த்தப்பட்டும் உள்ளது. அதேபோல் சிறு,குறு விவசாயிகளுக்கான  நிரந்தர கட்டணத்தை ரூ.11-ல் இருந்து ரூ.20 வரையும், இதர  விவசாயிகளுக்கான  நிரந்தர கட்டணத்தை  ரூ. 50-ல் இருந்து ரூ.75 வரையும் உயர்த்தி உள்ளது. வீடுகளுக்கான ஒரு   யூனிட்டுக்கு ரூ.6.80 வசூலிக்கின்றனர். பீக் அவர் எனப்படும் காலை 6 முதல் 10 மணி வரையிலும், மாலை 6 மணி முதல் 9 வரையிலும் கூடுதல் கட்டணம் வசூலிக்கவும் திட்டமிட்டுள்ளனர். விவசாயிகளுக்கு தனியாக மின் வழித்தட உருவாக்கி மின் இணைப்பு கொடுக்க உள்ளனர் இதனால் எப்போது மின்சாரம் வரும் என்று தெரியாது. இதனால் விவசாயிகள் இரவு நேரத்திலும் வேலை பார்க்க நேரிடும்.

இந்த நிலையில் மின்துறை அமைச்சர் நமச்சிவாயம் புதிய எனர்ஜி மீட்டரைதான் பொருத்துகிறோம். விவசாயிகள் எவ்வளவு மின்சாரத்தை பயன்படுத்துகிறார்கள் என்பதை கண்டறிவதற்காக மட்டுமே மீட்டர் பொருத்துகிறோம். இலவச மின்சாரம் தொடரும் என்று கூறுகிறார்.  அவர் எப்படிப்பட்டவர் என்பதை புதுச்சேரி மக்களும் விவசாயிகளும் நன்கு அறிவார்கள். 2020ல் இவர் காங்கிரஸ் கட்சியின் தலைவராகவும் அமைச்சராகவும் இருந்தபோது புதுச்சேரி மின்துறையை ஒருபோதும் தனியார்மயமாக்க அனுமதிக்க மாட்டேன் என்னை வங்க கடலில் தூக்கி எரிந்தாலும் அனுமதிக்க மாட்டேன் என்றார். பிறகு மதவாத பிஜேபி கட்சிக்கு தாவினார். தற்போதைய கூட்டணி அரசில் மின்துறை அமைச்சாராக இருக்கிறார்.

கடந்த 2021 பிப்ரவரி மாதம் மின்துறை ஊழியர்கள், புதுச்சேரி மக்களின் கருத்துகளை கேட்காமல் புதுச்சேரி மின்துறை தனியார்மயமாக்கும்  நடவடிக்கை எதுவும் மேற்கொள்ளப்படாது என்று உறுதி மொழி அளித்தார், பிறகு 2022 அக்டோபர் மாதம் மின்துறை தனியார்மயத்தை யாராலும் தடுக்க முடியாது என்று கொக்கரித்தார். அதேபோல் 2023 நடத்த பட்ஜெட் கூட்ட தொடரில் இது அரசுன் கொள்கை முடிவு என்று அதிகார போதையில் கூறினார். இப்படி பொய் பேசுவதையே வாடிக்கையாக கொண்டவரின் இலவச மின்சாரம் தொடரும் என்ற வாக்குறுதியை  எந்த விவசாயியும் நம்ம போவதில்லை.

எனவே புதுச்சேரி முதல்வர் தனது கள்ள மௌனத்தை கலைத்து விவசாய பம்ப் செட்டுகளுக்கு பொருத்தப்படும் மின் மீட்டரை நிறுத்த வேண்டும். மின்துறை தனியார் மயமாக்கல் நடவடிக்கைகள் அனைத்தையும் நிறுத்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.  இல்லை என்றால் விவசாயிகளையும் மக்களை திரட்டி தொடர் போராட்டங்களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நடத்தும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

இவண்,

இரா.இராஜாங்கம்,

செயலாளர்,

சிபிஎம், புதுச்சேரி

Leave a Reply