அமித்ஷா வருகைக்கு எதிர்ப்பு

அமித்ஷா வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து நடைபெறும் போராட்டத்தை விளக்கி புதுச்சேரி முழுவதும் தெருமுணை பிரச்சாரம் நடைபெற்றது.

பன்முகத்தன்மை கொண்ட இந்தியாவில், அனைத்து மாநிலங்களிலும் ஹிந்தி கட்டாயம் இருக்க வேண்டும் என்று ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியதற்கு கண்டனம் தெரிவித்தும்,புதுச்சேரி சட்டமன்ற தேர்தல் பிரசாரத்தில் பிரதமர் மோடி,உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் தெரிவித்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாதது, புதுச்சேரியின் கடன் தள்ளுபடி,ஒன்றிய நிதிக்குழுவில் புதுச்சேரியை  சேர்க்காதது, புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கோரிக்கை நிறைவேற்ற படாததை கண்டிக்கும் வகையில் இப்போராட்டம் நடைபெறுகிறது.

புதுச்சேரிக்கு இன்று ஞாயிற்றுக்கிழமை (ஏப்-24) வருகைதரும் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா வருகைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் நடைபெறும் போராட்டத்தை விளக்கி ,மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்,இந்திய கம்யூனிஸ்ட்,விடுதலை சிறுத்தைகள் கட்சி, மதிமுக உள்ளிட்ட பல்வேறு ஜனநாய அமைப்புகள் சார்பில் சாரம் ஜீவானந்தம் சிலை எதிரில் கருப்புகொடிகளுடன் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.இப்போராட்டத்திற்கு காங்கிரஸ் கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது.

பிரச்சாரம்

கருப்புகொடிகளுடன் நடைபெறும்  ஆர்ப்பாட்டத்தை விளக்கி புதுச்சேரி முழுவதும்  மினி கேரியர் வாகனத்தில் தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது. முதலியார்பேட்டையில் துவங்கிய பிரச்சாரத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர் சலீம், நிர்வாகிகள் நாரா.கலைநாதன், ஆர்.விசுவநாதன், மார்ச்சிஸ்ட் கட்சியின் பிரதேச செயலாளர் ராஜாங்கம், பிரதேச செயற்குழு உறுப்பினர்கள் பெருமாள், ராமச்சந்திரன், கொளஞ்சியப்பன், கலியமூர்த்தி, தமிழ்ச்செல்வன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் செயலாளர் தேவ.பொழிலன் ஆகியோர் பிரச்சாரத்தில் பங்கேற்று பேசினார்கள். அரியாங்குப்பம், தவளக்குப்பம், கன்னியக்கோயில், முத்தியாள்பேட்டை, இலாஸ்பேட்டை, புதுச்சேரி நகரம் ஆகிய பகுதிகளில் பிரச்சாரம் நடைபெற்றது.

Leave a Reply