புதுச்சேரியில் மதச்சார்பற்ற அணியில் காங்கிரஸ், திமுக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் ஆகிய கட்சிகள் இடம் பெற்றிருந்தன. காங்கிரஸ் நடத்திய அனைத்து போராட்டங்களிலும் சிபிஎம் பங்கேற்றது. ஆனால், தேர்தலின்போது இக்கூட்டணியில் சிபிஎம் கட்சிக்கு ஒரு இடமும் ஒதுக்கவில்லை. அதே நேரத்தில், சிபிஐ, விடுதலை சிறுத்தைகள் கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. இதையடுத்து, மாஹே தொகுதியில் சுயேட்சை வேட்பாளர் ஹரிதாசனுக்கு கேரள சிபிஎம் ஆதரவு தெரிவித்துள்ளது.
இந்நிலையில், புதுச்சேரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பிரதேச செயலாளர் ராஜாங்கம், தமிழ் மாநிலக்குழு உறுப்பினர்கள் ஆறுமுகநயினார், பெருமாள், மத்தியகுழு உறுப்பினர் சுதா ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களிடம் இன்று (மார்ச் 18) மாலை கூறுகையில், “புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் முத்தியால்பேட்டை தொகுதியில் கட்சியின் பிரதேச குழு உறுப்பினர் வழக்கறிஞர் சரவணன் போட்டியிடுகிறார்.
முத்தியால்பேட்டை, மாஹே தவிர்த்து புதுச்சேரியிலுள்ள இதர தொகுதிகளில் போட்டியிடும் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியை ஆதரித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் பிரச்சாரம் செய்யப்படும். பாஜக ஆட்சி அதிகாரத்திற்கு வருவதை தடுப்பதற்கான தீவிர பிரச்சாரத்தில் ஈடுபடுவோம்” என்று தெரிவித்தனர்.