புதுவையில் பாஜகவுக்கு ஆதரவாக செயல்படும் தேர்தல் அதிகாரிகள்: கூண்டோடு மாற்ற வேண்டும்.

பாஜகவுக்கு ஆதரவாக செயல்படும் தேர்தல் அதிகாரிகளை கூண்டோடு மாற்ற வேண்டும் என புதுச்சேரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக அக்கட்சியின் புதுச்சேரி பிரதேச செயலாளர் ராஜாங்கம், தமிழ் மாநில குழுஉறுப்பினர் பெருமாள் ஆகியோர் நேற்று கூட்டாக செய்தியாளர்களிடம் கூறியதாவது:

புதுச்சேரி பாஜகவினர் வாக்காளர்களின் தொலைபேசி எண்களுக்கு, பாஜகவில் சேருங்கள் என்கிற முறையில் எஸ்எம்எஸ்அனுப்பியுள்ளனர்.

இதுதொடர்பாக பிரதேச குழு உறுப்பினர் ஆனந்த், சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கு 24-ம் தேதியும், 26-ம் (நேற்று) தேதியும் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் பல கேள்விகளை முன் வைத்துள்ளனர். தனி நபர் தரவுகள் எப்படி பாஜகவுக்கு கிடைத்தது என்று அறிக்கை அளிக்கக்கோரி புதுச்சேரி அரசுக்கும், தேர்தல் அதிகாரிகளுக்கும், ஆதார் ஆணையத்துக்கும் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். தனி நபர் விவரங்களை பாதுகாக்க வேண்டும் என உச்சநீதிமன்றமே பல உத்தரவுகளை வழங்கியுள்ளது. அப்படி இருக்கும்போது, தனிநபர் பற்றி விவரங்கள் பாஜகவால் எப்படி சேகரிக்க முடிந்தது?

குறிப்பாக பூத் வாரியாக வாக்காளர்களின் தொலைபேசி எண் ணுக்கு பாஜகவில் சேருங்கள் என லிங்க் அனுப்பி இந்த செய்தியை பரப்பி உள்ளனர். அவர்களுக்கு எப்படி வாக்காளர்களின் தொலைபேசி எண் கிடைத்தது? என்பது சம்பந்தமாக புதுச்சேரி தேர்தல் அதிகாரிகள் இதுவரை எந்த விளக்கத்தையும் தரவில்லை. இதுபோன்ற குறுந்தகவலை அனுப்ப பாஜக எவ்வித அனுமதியும் பெறவில்லை என தேர்தல் துறை கூறியிருக்கிறது. அனுமதியின்றி தகவல் பரப்பியது தேர்தல் நடத்தை விதிமுறைகளுக்கு எதிரானதாகும். எனவே, பாஜகவின் அனைத்து வேட்பாளர்களையும் தகுதி நீக்கம் செய்ய வேண்டும்.

மேலும், புதுச்சேரி தேர்தல் உயர்மட்ட அதிகாரிகள் ஒரு கட்சிக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறார்கள் என தொடர்ந்து நாங்கள் விமர்சனம் செய்து வருகிறோம். தேர்தல் ஆணையத்திடம் பலமுறை புகார் அளித்துள்ளோம். தேர்தல் உயர்மட்ட அதிகாரிகளுடைய ஒத்துழைப்பு இல்லாமல் இப்படிப் பட்ட விதிமீறல்கள் நடக்க வாய்ப்பில்லை. எனவே, புதுச்சேரி தலைமை தேர்தல் அதிகாரி உள்ளிட்ட உயர் அதிகாரிகள் தேர்தல் பணியிலிருந்து உடனடியாக மாற்றப்பட வேண்டும்.

குறிப்பாக மாவட்ட தேர்தல் அதிகாரி பூர்வா கார்க் ஒருதலைப்பட்சமாக செயல்பட்டு வருகிறார். அவரை உடனடியாக பணியிலிருந்து விடுவிக்க வேண்டும். நேர்மையான அதிகாரிகளை தேர்தல் பணியில் ஈடுபடுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply