புதுச்சேரியின் கலாச்சாரத்தைக் கண்டுவியந்த அன்றைய பிரதமர் நேரு, “பிரெஞ்ச் – இந்திய கலாச்சாரத்தின் ஜன்னல், புதுச்சேரி”என்று வர்ணித்தார். இந்தக் கலாச்சாரம் அன்றாட வாழ்க்கையில் மட்டுமல்லாது, அரசியலிலும் இருந்தது. பிரெஞ்ச் புரட்சி உயர்த்திப் பிடித்த “சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம்” என்ற அரசியல் கலாச்சாரம் தழைத்த சமூகமாகவும் புதுச்சேரி திகழ்ந்தது.
இந்தச் சூழல் பத்து ஆண்டுக்காலம் புதுச்சேரியில் தங்கியிருந்த பாரதியாரிட மும் தாக்கம் ஏற்படுத்தியது. தலை மறைவுக் கால சிரமங்கள் கடுமையாக இருந்த போதிலும் “பாஞ்சாலி சபதம்” போன்ற அவரது தலைசிறந்த படைப்புக் கள் உருவானதற்கு புதுச்சேரியில் இருந்தஅறிவார்ந்த சூழலும் காரணமாக இருந்தது. அந்த “பிரெஞ்ச்-இந்திய கலாச்சார ஜன்னல்”, பழைய நால் வருண சாதிய பிற்போக்குத்தனத்தின் ஜன்னலாக மாறிவிடுமோ எனும் அச்சம் இப்போது எழுந்துள்ளது.
சமீபத்திய சில நிகழ்வுகளே இதற்குக் காரணம். கலிதீர்த்தாள்குப்பம் கிராமத்தில் திரௌபதியம்மன் கோயில் உள்ளது. சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற திருவிழாவின்போது தலித் மக்கள் ஆலயத்திற்குள் அனுமதிக்கப்பட வில்லை. இதைக் கண்டித்து தீண் டாமை ஒழிப்பு முன்னணியும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் ஆலயநுழைவு போராட்டம் நடத்த அறை கூவல் விடுத்தன. இதற்கு பதிலடியாக, கடந்த செப்டம்பர் 21 அன்று சாதிவெறி பிடித்த ஒரு கூட்டம் மதகடிப்பட்டில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் அலுவலகத்தை சூறையாடி, தீக் கிரையாக்கியது.
இதன் பின்னணி என்ன? மாநிலத்தில் என்.ஆர்.காங்கிரஸ் ஆட்சி வந்த பிறகு சாதியப் பகைமைகள் அதிகரித்து வருகின்றன. சில சாதி மேலாதிக்க அமைப்புக்கள் உருவாக்கப்பட்டுள்ளன.அவர்கள் தலித் மக்களுக்கு எதிரான வெறியை ஏற்படுத்தி, தலித் அல்லாத மக்களை அவர்களுக்கு எதிராகத் திரட்டி வருகின்ற னர். சாதாரண மக்களிடையே பகைமை உணர்வை வளர்த்து வருகின்றனர்.
சாதி மோதலாக மாற்றப்படும் சம்பவங்கள்
2013ம் ஆண்டில் மட்டும் 15-க்கும் மேற்பட்ட சாதிய மோதல் சம்பவங்கள் நடந்துள்ளன. தொண்டமாநத்தம், சந்தைப் புதுக்குப்பம், புராண்சிங்குபாளையம், திருபுவனை, மேல்சாத்தமங்கலம், கொத்தபுரிநத்தம், பண்டசோழநல்லூர், அரியூர், மதகடிப்பட்டு, திருவண்டார் கோயில், ஆண்டியார்பாளையம்,ஏம்பலம் ஆகிய கிராமங்களில் சிறு சிறு மோதல் சம்பவங்கள் நடந்தன. அவற்றை சாதிய மோதல்களாக மாற்ற முயற்சிகள் நடந்தன. சிலைஅவமதிப்பு, பேனர் கிழிப்பு போன்ற சம்பவங்கள் நிகழ்ந்து, சாதிய பகைமை உணர்வுகள் தூண்டப்பட்டன. மக்களிடையே பிளவுக்கான முயற்சிகள் நடந்தன. இரு நபர்களுக்கு இடையே மூளும் சிறு பிரச்சனையை கூட சாதிய சாயம் பூசி சாதிச் சண்டையாக மாற்ற முயற்சிகள் நடந்தன.
கிரிமினல்களாகவும், சமூக விரோதி களாகவும் நன்கு அறியப்பட்டவர்கள் பலர், இந்த சாதிய அணிவகுப்பிற்கு தலைமை தாங்குகின்றனர். அவர்கள் 20-வயதிற்குட்பட்ட பல இளைஞர் களிடமும் மாணவர்களிடமும் சாதிவெறி மனநிலையை ஏற்படுத்தி, ஒரு தலை முறையையே கெடுத்து வருகின்றனர். சில அரசியல் சக்திகள் தங்களது குறுகிய அரசியல் நோக்கத்திற்காக இவற்றை பயன்படுத்தி வருகின்றன. இன்றைய நிலையில் ஆளும் கட்சியாக இருக்கும் என்.ஆர். காங்கிரசும், ஆட்சியை இழந்த காங்கிரசும் தங்களது அரசியல் பிடிமானத்தை தக்கவைத்துக்கொள்ள கடுமையாக போராடி வருகின்றன.ஏனெனில் கடந்த காங்கிரஸ் ஆட்சியும், தற்போதைய என்.ஆர்.காங்கிரஸ் அரசும் மக்களின் சாதாரணத் தேவைகளைக் கூட நிறைவேற்றவில்லை.
இதனால் மக்களிடம் இவர்கள் மீதான வெறுப்பும் அதிருப்தியும் அவ்வப்போது வெளிப்பட்டு வருகின்றன. எனவே ஆளுகிற கட்சியும் இதர கட்சிகளும் சாதிய செயல்பாடுகளை கண்டுகொள்ளாதது மட்டுமல்ல, சாதிய அடிப்படையில் மக்கள் பிளவுபடுவது தங்களது அரசியலுக்கு நல்லது என கருதுகின்றன. மோதல் சம்பவங்கள் குறித்து முறை யான விசாரணை,பொது இடத்தில் தலைவர்களின் சிலை அமைப்பது குறித்து பொருத்தமான விதிமுறைகள் உருவாக்குவது, சாதிய சக்திகளின் செயல் பாடுகளை கண்காணிப்பது, அரசியல் குறுக்கீடுகளுக்கு இடமளிக்காமல் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது உறுதியான நடவடிக்கை, சாதி, மத, இன துவேஷத்தை தூண்டும் வகையிலான பேச்சுகள், சுவரொட்டிகள், பேனர்கள் ஆகியவற்றில் காவல்துறை உரிய கவனம் செலுத்துவது, மோதல் சம்பவங்களின் போது காவல் துறையினர் பாரபட்சம் இல்லாமல் உறுதியான நடவடிக்கை எடுப்பது போன்ற பல மாற்று ஆலோசனைகளை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முன்வைத்தது.
ஆனால் அரசாங்கம் எதையும் செய்யவில்லை. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையில் “சாதிய சக்திகள் தைரியத்தோடு இத்தகைய செயல்களில் ஈடுபடுவதற்கு தற்போதைய அரசியல் சூழல் இடமளிக்கிறது” என்று குறிப்பிடப் பட்டுள்ளது. சாதிய சக்திகளை எதிர் கொள்வதில் மாநில அரசிடம் உறுதியான நடவடிக்கைகள் இல்லை என்ற கருத்து மக்கள் மத்தியில் பரவலாக உள்ளது. சமீபத்தில், தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் பேசிய நரேந்திர மோடி “சாதியத்தை ஒழிக்க வேண்டும்” என்று சூளுரை செய்தார். இந்த அறிவுரையை முதலில் அவருடன் கூட்டு சேர்ந்துள்ள புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியிடம் கூற வேண்டும். மாநிலத்தில் விவசாயம், தொழில் துறை என அனைத்துத் துறைகளும் நொடித்துப் போயுள்ளன. உறுதியான வேலை கிடைக் காத நிலையில் கொத்தடிமை போன்ற ஒப்பந்தப் பணிகளில் இளைஞர்கள் ஈடுபட வேண்டிய நிலை. கிட்டத்தட்ட 25 சதம் மக்கள் வறுமைக்கோட்டிற்கு கீழே வாழ்வதாக ஆய்வறிக்கைகள் தெரிவிக்கின்றன.
மாநில அரசு நிதிநெருக்கடியை காரணம் காட்டி நலத்திட்டங்களை கைவிடுகிறது. இந்நிலையில் மக்களின் ஒன்றுபட்ட போராட்டமே முக்கியத்தேவை. மாறாக, சாதியம் நோக்கி தடம் புரண்டால் பாதிக்கப்படுவது உழைக்கும் மக்களே. தலித்அல்லாத மக்கள் தலித் மக்கள் மீது தீண்டாமை, ஒடுக்குமுறை மனப்பான்மை யை வளர்த்துக் கொள்வது மனித விரோதம்; இது அவர்களது எதிர்கால நலனையும் பாதித்திடும். மார்க்சிஸ்ட கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம் தீக்கிரையாக்கப்பட்டவுடன் புதுச்சேரியில் பல நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்ட ஆவேச கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்திய கம்யூ னிஸ்ட் கட்சி, விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட அரசியல் கட்சிகளும், ஜனநாயக இயக்கங்களும் திரளாக கலந்து கொண்டனர். அருகாமையில் இருக்கும் விழுப்புரம், கண்டமங்கலம் சார்ந்த மக் களுக்கும் இச்சம்பவம் கடும் ஆவேசத்தை ஏற்படுத்தியது.
அங்கிருந்தும் தோழர்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு தமிழக மக்களின் உணர்வு களையும் எதிரொலித்தனர்.மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகம் தீக்கிரையாக்கப்பட்டதை கண்டித்து மட்டுமல்லாது புதுச்சேரியில் சாதிய சக்திகளுக்கும் தலித் மீதான ஒடுக்குமுறைகளுக்கும் இடமில்லை என்று பிரகடனப்படுத்தும் நிகழ்வாகவும் அது அமைந்தது.கட்சி அலுவலகம் தீக்கிரையாக்கப் பட்ட சம்பவத்திற்கு காரணமான அனை வர் மீதும் பாரபட்சமற்ற வகையில் நட வடிக்கை எடுக்கவேண்டுமெனவும், சாதிய சக்திகளின் வெறியை முறி யடிக்கவும், தலித் மக்களுக்கான ஆலயவழிபாட்டு உரிமையை நிலைநிறுத்தவும் கோரி மதகடிப்பட்டில் அக்டோபர் 14 அன்று பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. மக்கள் ஒற்றுமை, தீண்டாமை எதிர்ப்பு, ஜனநாயகத்தைக் காக்கும் போராட்டம் மாநிலத்தின் அனைத்து ஜனநாயகசக்திகளும் ஒன்றுபடும் மக்கள்மேடை யாகவும், வலுமிக்க இயக்கமாகவும் உருப்பெற்று வருகிறது.
என்.குணசேகரன்