சென்டாக் முறைககேடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க கோரி இயக்கம்

Centacபுதுச்சேரி மதசார்பற்ற கட்சிகளின் சார்பில் மாண்புமிகு துணை நிலை ஆளுநர்,  முதலமைச்சர், தலைமைச் செயலாளர்,  அரசு செயலர், இயக்குனர் சுகாதாரம் மற்றும் குடும்ப ஆகியோரை சந்தித்து மாநிலத்தில் மருத்துவ மாணவர் சேர்க்கையில் நடைபெற்ற ஊழல் முறைகேடு குறித்து, ஓய்வு பெற்ற நீதிபதி கொண்டு விசாரணை நடத்த வேண்டும் மேலும் எதிர்காலத்தில் மாணவர்கள் நலன்களை பாதுகாத்திட வெளிப்படையான மாணவர் சேர்க்கைக்கான வழி காட்டுதலை வழங்கும் வகையில் விசாரணை குழு பரிந்துரைகள்  இருந்திட வேண்டும். சென்டாக் குழுவை தகுதியான நேர்மையான அதிகாரிகளை கொண்டு மாற்றி அமைத்திட வேண்டும். நீட் மற்றும் நீட் அல்லாத மாணவர் சேர்க்கையை காலத்துடன் செய்திட பொருத்தமான நடவடிக்கை எடுத்திட வேண்டும். மேலும் தேசிய மருத்துவ ஆணையம் மற்றும் உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு மாறாக செப்டம்பருக்கு பின்னர் சேர்க்கப்பட்ட மருத்துவ மாணவர்களின் கல்வி தொடர சாத்தியமான நடவடிக்கைகளை எடுத்திட வேண்டும் என நேரில் சந்தித்து மனு அளிக்கப்பட்டது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஒருங்கிணைக்கப்பட்ட இந்த சந்திப்பில் கட்சியின் மாநில செயலாளர் ஆர். ராஜாங்கம். கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் வி.பெருமாள், காங்கிரஸ் கட்சியின் தலைவர் வைத்தியலிங்கம் எம்பி, திமுக மாநில அமைப்பாளர், எதிர்கட்சித் தலைவருமான இரா.சிவா, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் சலீம், நாரா. கலைநாதன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில முதன்மை செயலாளர் தேவ.பொழிலன், மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சியின் தேசிய கவுன்சில் உறுப்பினர் பாலசுப்பிரமணியன், சட்டமன்ற உறுப்பினர்கள் செந்தில்குமார் சம்பத் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

அனுப்புதல்:

நிர்வாகிகள்

இந்திய தேசிய காங்கிரஸ், திராவிட முன்னேற்ற கழகம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ,இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்), விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி(எம்எல்)
பெறுதல்:

மாண்புமிகு துணை நிலை ஆளுநர் அவர்கள்
புதுச்சேரி அரசு
மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள்
புதுச்சேரி அரசு
உயர்திரு தலைமைச் செயலாளர் அவர்கள்,
தலைமைச் செயலகம்,
புதுச்சேரி அரசு,
உயர்திரு அரசு செயலர்
சுகாதாரம் மற்றும் குடும்ப நலம்
புதுச்சேரி அரசு,
உயர்திரு இயக்குனர் அவர்கள்
சுகாதாரம் மற்றும் குடும்ப நலம்
புதுச்சேரி அரசு,

மதிப்பிற்குரிய, ஐயா! வணக்கம்.

பொருள்  :

  • 2023-24கல்வியாண்டுMBBS மாணவர்   சேர்க்கையில் முறைகேடு.
  • வெளிப்படை தன்மை இல்லாத மாணவர் சேர்க்கை, இடஓதிக்கீட்டில் முறைகேடு.
  • சென்டாக் கன்வீனர் திரு. சிவராஜ் மற்றும் ஸ்ரீ வெங்கடேஸ்வரா தனியார் மருத்துவ கல்லூரி நிர்வாகத்துடன் சந்தேகத்திற்கிடமான சந்திப்பு.
  • மாணவர் சேர்க்கையில் அசாதாரனமாண காலதாமதம்.
  • நீட் அல்லாத மாணவர்களின் சேர்க்கையில் கடும் பாதிப்பு.
  • ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதி அரசர் தலைமையில் விசாரணை கமிட்டி அமைத்திட கோருதல் தொடர்பாக…..

 

  • புதுச்சேரி மாநிலத்தில்மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட தொழிற்கல்வி மற்றும் கலை அறிவியல் கலைக்கல்லூரி, இளநிலை துணைமருத்துவம்   பட்டப்படிப்புகளுக்கு ஒருங்கிணைந்த மாணவர் சேர்க்கை குழு (சென்டாக்) வழியாக நடைபெறுவது தங்கள் நல்வாழ்வு அரசிற்கு நன்கு தெரியும். மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட தொழில் கல்விக்கான மாணவர் சேர்க்கை முடிந்த பின்னரே இதர நீட் (NEET) அல்லாத பட்ட படிப்புக்கான மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. இதனால் நீட் (NEET)அல்லாத அறிவியல் கலைக்கல்லூரி உள்ளிட்ட மாணவர்களின் துவக்க கற்றல் காலம் கல்வி ஆண்டின் முதல் 3 முழு மாதங்கள் வீணடிக்கப்படுகிறது. இதனால் முதல் பருவ தேர்வை (செமஸ்டர் எக்ஸாம்) மாணவர்கள் குறுகிய காலத்தில் சந்திக்க வேண்டிய நிர்ப்பந்தம் உருவாகிறது. காலதாமத சேர்க்கை மாணவர்கள் மத்தியில் பல்வேறு குழப்பங்களையும், மன உளைச்சலையும் ஏற்படுத்தி உள்ளது,  ஆசிரியர்களும் நெருக்கடிக்கு உள்ளாகி வருகிறார்கள். ஆகவே அனைத்து மாணவர்களின் நலனை பாதுகாக்கும் வகையில் சென்டாக் மாணவர் சேர்க்கையில் ஒரு பொருத்தமான தீர்வு காணப்பட வேண்டும்.

ஒவ்வொரு கல்வியாண்டு துவக்கத்திலும் சென்டாக் செயல்பாடுகளில் ஏற்படும் குழப்பத்தினால் மாணவர் சேர்க்கையில் சந்தேகத்திற்கிடமான சர்ச்சைகளும் ,முறைகேடுகளும் நிகழ்வது வாடிக்கையாகி வருகிறது, மேலும் தனியார் நிகர்நிலை பல்கலைக்கழகங்கள், சுயநிதி கல்லூரிகள் ,சிறுபான்மையினர் மருத்துவ கல்லூரிகளில் புதுச்சேரி அரசு மாணவர் இட ஒதுக்கீடு 50 சதம் பெறுவது கட்டாயம் நடைமுறையில் இல்லாததால் அரசு ஒதுக்கீட்டில் சேர்க்கை எண்ணிக்கை பெறுவதற்கு பேரம் பேச வேண்டி இருப்பது, முறைகேடுகளுக்கும், ஊழல்களுக்கும் இட்டுச் செல்கிறது. இதனால் மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும் பணச் செலவு, மன உளைச்சல் ஏற்படுவது தொடர் கதையாகி வருகிறது. மேலும் நீட் (NEET) இளங்கலை மருத்துவ பட்டப்படிப்பு மாணவர்களின் தகுதி மதிப்பெண் நிர்ணய புதிய தகுதி (ரேங்க்) பர்சன்டைல் மதிப்பெண் கணக்கீட்டு முறை (NEET) நீட் தேர்வு முறை தோல்வி  அடைந்ததை உணர முடிகின்றது.

குறிப்பாக நடப்பு கல்வியாண்டில் ( 2023-2024) நீட் தேர்வு முடிந்து இளங்கலை மருத்துவ மாணவர்களின் எம்பிபிஎஸ் தகுதி பட்டியல். 07.2023 அன்று புதுச்சேரி சுகாதாரத்துறையால் வெளியிடப்பட்டது. 5797 மாணவர்கள் பட்டியலில் இடம் பெற்றனர். மேற்படி அறிவிப்பு பட்டியலின் அடி குறிப்பாக பட்டியல்வெளியிட்ட தேதியிலிருந்து பத்து தினங்களுக்குள் ஏதேனும் ஆட்சேபனை இருந்தால் சுகாதாரத்துறை இயக்குனருக்கு தெரிவிக்கலாம் என குறிப்பிடப்பட்டிருந்த்து.

மேலும் 08.2023 (15.32மணிக்கு) 5831 பேர் கொண்ட திருத்தப்பட்ட எம்பிபிஎஸ் மாணவர்களின் தகுதி பட்டியல் வெளியிடப்பட்டன. மேற்படி பட்டியலில் 34 மாணவர்கள் கூடுதலாக சேர்க்கப்பட்டிருந்தனர். இதில் 10 மாணவர்கள் (National testing agency) N.T.A வெளியிட்டுள்ள தகுதி பட்டியல் படி ஆந்திர மாநிலம் எம்பிபிஎஸ் தகுதி பட்டியலில் இடம்பெற்றுள்ளார்கள். நீதிமன்ற உத்தரவுப்படி சேர்க்கப்பட்ட ஒரு நபரைத் தவிர மற்றவர்கள் புதுச்சேரி மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்பதற்கான எந்த முகாந்திரமும் இல்லை. வெளிமாநிலத்தவர்கள் புதுச்சேரி பட்டியலில் இடம் பிடித்துள்ளனர், என்ற சர்ச்சை ஏற்பட்டதால் திருத்தப்பட்ட பட்டியல் இணையத்தில் இருந்து நீக்கப்பட்டது, ஆழ்ந்த சந்தேகத்தை எழுப்பி உள்ளது.

திருத்தி அமைக்கப்பட்ட MBBS  தகுதி பட்டியலில் புதியதாக இடம் பிடித்துள்ள 34 பேரில் 6 மாணவர்கள் புதுச்சேரி இட ஒதுக்கீட்டில் ஜிப்மரில் இடம் பிடித்துள்ளனர். 12 பேர் மாநில அரசு ஒதுக்கீட்டில் இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகளில் சேர்ந்துள்ளனர். இந்த 18 பேர்களின் குடியிருப்பு, சாதி சான்றிதழ்கள் மறு சரிபார்ப்பு செய்யப்பட்டதாக தெரியவில்லை.ஜிப்மர் நிர்வாகம் 30.07.2023 தேதியிட்ட அறிவிப்பில். 31.07.2023ல் காலை 11 மணிக்கு புதுச்சேரி மாணவர்களுக்கான சேர்க்கை நடைபெறும்  என குறிப்பிட்டு இருந்தது. ஆனால் 02.08.2023ல் தான் திருத்தப்பட்ட பட்டியல் வெளியிடப்பட்டது அதில் புதியதாக சேர்க்கப்பட்ட 34 பேரில் 6 பேர். 31.07.2023 அன்று எவ்வாறு ஜிப்மர் மருத்துவக் கல்லூரியில் சேர்க்கப்பட்டனர்? என்பது மர்மமாக உள்ளது.

அதுமட்டுமின்றி தேசிய மருத்துவ குழு(NMC)மற்றும் மத்திய சுகாதாரத்துறையின் விதிகளை மீறி மருத்துவ மாணவர் சேர்க்கை நடைபெற்றுள்ளது. மேலும் NMC வழிகாட்டுதலில் நீட் தேர்வுக்கு மாணவர்கள் விண்ணப்பிக்கும் போது பதிவேற்றம் செய்யப்படும் குடியிருப்பு ,சாதி, படித்த கல்வி நிறுவனம், உள்ளிட்ட எந்த தரவுகளும் மாற்றத்தக்கது அல்ல என குறிப்பிட்டு இருக்கிறது. மேலும் சேர்க்கையின் போது சம்பந்தப்பட்ட தரவுகளை மாநில மாணவர் சேர்க்கைக்குழு மேற்படி தரவுகளை மீண்டும் சரி பார்க்க பயன்படுத்தப்படும் என்பதையும் குறிப்பிட்டு இருக்கிறது இவ்வாறான நிலையில் திருத்தப்பட்ட தகுதி பட்டியல் உள்நோக்கம் கொண்டதாக இருக்குமோ என்ற சந்தேகம் உள்ளது.

மருத்துவ மாணவர் சேர்க்கை விரைந்து முடித்திட புதுச்சேரி மாநில முதல்வர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். முதல்வர் குறிப்பிட்ட தேதியிலும் சேர்க்கை துவங்கப்படவில்லை ஒன்றிய அரசு 09.2023ல் 10 விழுக்காடு அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ கல்வியில் இட ஒதுக்கீடு வழங்க ஆட்சேபனை இல்லை என தெரிவித்திருக்கிறது.07.09.2023ல் சென்டாக் மூலம் திருத்தி அமைக்கப்பட்ட இட ஒதுக்கீடு பட்டியல் வெளியிடப்பட்டது. சுமார், 1850 மருத்துவ மாணவர் இடங்களை செப்டம்பர் இறுதிக்குள். அதாவது நிரப்பமுடித்திருக்க வாய்ப்பிருந்தும் வேண்டுமென்றே காலம் தாழ்த்தி மாணவர் சேர்க்கை துவங்கப்பட்டது முதல் கட்ட கலந்தாய்வு 18.09.2023 தொடங்கி 23.09.2023 வரை நடைபெற்றது .இரண்டாம் கட்ட கலந்தாய்வு 2023அக்டோபர் 07.10.2023-ல், மூன்றாம் கட்ட கலந்தாய்வு 10.10.2023 10 மணி நேர அவகாசத்திலும் முடிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தீய நோக்கத்தோடு காலம் தாழ்த்தியதை உணர முடிகிறது.

மேலும்அரசு ஒதுக்கீட்டில் வெளி நாடு வாழ் இந்தியர்கலுக்கான ஓதிக்கீடு (NRI) உள்ளிட்ட சிறப்பு ஒதுக்கீடுகளில் முறைகேடு நடந்துள்ளது மெட்ராஸ் உயர்நீதிமன்றம் 16 .10 .2023ல்P.NO 28176 of2023 and WMP. Nos.27703, 29258, 29261. மற்றும் 29266.  Of 2023 எண்ணிட்ட வழக்கில் கீழ்க்கண்டவாறு உத்தரவு பிறப்பித்துள்ளது இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் (IGMERI) முன்னாள் ராணுவ வீரர் வாரிசுக்கு ஒரு இடம் காரைக்கால் மாணவருக்கு ஒதுக்கப்பட்டது .அதன்படி அரசு மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து கல்வி பயில உத்தரவிடப்பட்டுள்ளது. இதைப்போல சிறப்பு ஒதுக்கீடுகளில் பல முறையற்ற மாணவர் சேர்க்கை இந்திராகாந்தி அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்திலும் சில தனியார் கல்லுரிகளிலும் சட்ட விதிகளை மீறி சிறப்பு இடஒதிக்கீட்டை சாதிவாரி ஒதிக்கீட்டில் இணைத்திட யார் அதிகாரம் கொடுத்தது எனபது தெரியவில்லை

நீதியரசர் ஆர் .சுப்பிரமணியம் நீதியரசர் கலைமதி ஆகியோர் தலைமையிலான மெட்ராஸ் உயர்நீதிமன்ற அமர்வு கடந்த 11.2023 கீழ்க்கண்ட உத்தரவை பிறப்பித்துள்ளது. மாணவர் சேர்க்கை கமிட்டியால் மருத்துவ முதல்நிலை படிப்புக்கு பரிந்துரைக்கப்பட்ட 16 மாணவர்களுக்கு சேர்க்கை மறுக்கப்பட்டதால் நிகர் நிலை மருத்துவ பல்கலை உள்ளிட்டு 4 தனியார் மருத்துவக் கல்லூரிகளும் தலா ரூபாய்10 லட்சம் ரூபாய் இழப்பீடு தர வேண்டும். மாணவர் சேர்க்கையை உறுதிப்படுத்த தவறிய சென்டாக் நிர்வாகம் 16 பேருக்கும் தலா ரூபாய் 5 லட்சம் இழப்பீடு வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. மெட்ராஸ் உயர்நீதிமன்ற அமர்வின் மேற்படி தீர்ப்பு தனியார் மருத்துவக் கல்லூரி நிர்வாகங்களும், சென்டாக் நிர்வாகத்திற்கும் இடையேயான முறையற்ற கூட்டு இருப்பதை அம்பலப்படுத்தி உள்ளது.

கடந்த 10.2023 அன்று காலை அலுவலக நேரத்தில் சென்டாக் கன்வீனர் திரு.சிவராஜ் அலுவலகத்திற்கு வெளியே இருந்த ஸ்ரீ வெங்கடேஸ்வரா மருத்துவக் கல்லூரி பிரதிநிதி திரு. சவுந்தர்ராஜன் அவர்களின் காரின் உள்ளே (TN10.AH7773) சந்தித்து சந்தேகத்திற்கு இடமான வகையில்பேச்சு வார்த்தை நடத்தியுள்ளார். இச்சம்பவத்தை செல்போனில் வீடியோ பதிவு செய்யப்பட்டு காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. தலைமைச் செயலாளருக்கும் எழுத்துப்பூர்வமாக சிபிஎம் சார்பில் புகார் அளிக்கப்பட்டது. குற்றச்சாட்டுக்கு உள்ளான சென்டாக் கன்வீனர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படவில்லை .சென்டாக் நிர்வாகத்திற்கும், தனியார் சுயநிதி மருத்துவக் கல்லூரிகளும் இடையே உள்ள தொடர்பு, யாரெல்லாம் ஆதாயம் அடைந்துள்ளனர். என்பது குறித்து விசாரணை செய்ய உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிடவில்லை. மாறாக உண்மையை மூடி மறைக்கும் நோக்கில் சென்டாக் கன்வீனர்  பொறுப்பில் இருந்து அவர் விடுவிக்கப்பட்டார். தற்போது கண்துடைப்பாக சென்டாக் கமிட்டியில் பொறுப்பில் இருந்தவர்களைக் கொண்டே சென்டாக் ஒருங்கிணைப்பாளர், மற்றும் சென்டாக் கன்வீனர்  பதவிகள் நிரப்பப்பட்டுள்ளன. இந்த மாற்றம் பிரச்சனையை திசை திருப்பி விடவும் ,சென்டாக் மாணவர் சேர்க்கையில் முறைகேடு தொடரவும் உதவிடும், மேலும் மாநில முதல்வருடன் ஆலோசித்து சென்டாக் பொறுப்புகள் மாற்றப்பட்டதாகவும் தெரியவில்லை.

கல்லூரி முதல்வர் யுஜிசி வழிகாட்டுதல் படி தேர்வு குழுவால் நியமிக்கப்படவேண்டும் .அவரின் பதவிக்காலம் 5 ஆண்டுகள் மட்டும் ஆகும். மீண்டும் அவரையே நியமிக்க வேண்டும் எனில் தேர்வு குழுவால் தேர்ந்தெடுக்கப்படலாம். 10 ஆண்டுகளுக்கு மேல் ஒருவர் கல்லூரி முதல்வராக தொடர முடியாது .ஆனால் 10 ஆண்டுகளுக்கு மேல் கல்லூரி முதல்வராக உள்ள ஒருவர் சென்டாக் கன்வீனராகவும் நியமிக்கப்பட்டதன் மூலம் விதிகள் பின்பற்றப்படவில்லை. அதிகார மையத்தின் ஆசி பெற்றுள்ளதால் சொல்படி நடக்கவும், சொன்னதை செய்து முடிக்கவும் கடமைப் பட்டவராகவே இருப்பார் .சென்டாக் ஒருங்கிணைப்பாளரும் விதிவிலக்காக இருக்க முடியாது. ஆகவே நேர்மையான மூத்த அதிகாரிகளை கொண்டு சென்டாக் கமிட்டி மறுசீரமைத்திட வேண்டிய அவசியம் உள்ளது.அதுவே சென்டாக் மீதான நம்பிக்கையை சீரழித்த கன்வீனர் சிவராஜ் அவர்களை தற்காலிக பணிநீக்கம் செய்து துறை விதிகளின்படி விசாரணைக்கு உட்படுத்த வேண்டும்.

சுருக்கமாக காலம் தாழ்த்திய மாணவர் சேர்க்கை, முறைகேடு ,திருத்தப்பட்ட எம்பிபிஎஸ் தகுதி பட்டியல் வெளியீடு, திருத்தப்பட்ட பட்டியலில் இணைக்கப்பட்ட 34 பேரில் 18 பேர் அரசு ஒதுக்கீட்டில் மருத்துவஇடம் பிடித்தது, NRI உள்ளிட்ட சிறப்பு ஒதுக்கீட்டில் நடந்துள்ள முறைகேடு, மெட்ராஸ் உயர்நீதிமன்ற அமர்வு உத்தரவால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு சென்டாக் நிர்வாகம் அளிக்க வேண்டிய ரூபாய் 85 இலட்சம் இழப்பீடு. உள்ளிட்ட அம்சங்கள் மீது உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிட வேண்டியது அவசியமானதாக உணர்கிறோம்.

ஆகவே ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதி அரசர் தலைமையில் விசாரணை குழு அமைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம் மேலும் எதிர்காலத்தில் மாணவர்கள் நலன்களை பாதுகாத்திட வெளிப்படையான மாணவர் சேர்க்கைக்கான வழி காட்டுதலை வழங்கும் வகையில் விசாரணை குழு பரிந்துரைகள்  இருந்திட வேண்டும்.

சென்டாக் குழுவை தகுதியான நேர்மையான அதிகாரிகளைக் கொண்டு மாற்றி அமைத்திட வேண்டும். நீட் மற்றும் நீட் அல்லாத மாணவர் சேர்க்கையை காலத்துடன் செய்திட பொருத்தமான நடவடிக்கை எடுத்திட வேண்டுகிறோம்.

மேலும் தேசிய மருத்துவ ஆணையம் மற்றும் உச்ச நீதிமன்ற  தீர்ப்புக்கு மாறாக செப்டம்பருக்கு பின்னர் சேர்க்கப்பட்ட மருத்துவ மாணவர்களின் கல்வித் தொடர சாத்தியமான நடவடிக்கைகளை எடுத்திட வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேற்கண்ட எமது நியாயமான கோரிக்கைகளை தங்களின் நல்வாழ்வு அரசு ஏற்றுக்கொண்டு ஓய்வு பெற்ற நீதி அரசர் தலைமையில் விசாரணை கமிட்டி அமைத்து அதன் பரிந்துரைகளை அரசு மக்கள் நலன் கருதி, மாணவர்கள், பெற்றோர்கள் நலன் கருதி நடைமுறைப்படுத்தும் என நம்புகிறோம். மேற்படி எங்களது கோரிக்கைகள் தொடர்பாக தங்கள் நல்வாழ்வு அரசு எடுத்துள்ள மேல் நடவடிக்கைகள் பற்றி எமக்கு விரைந்து தெரியப்படுத்துவீர்கள் என நம்புகிறோம்.

நன்றி

வெ. வைத்திலிங்கம்  நாடாளுமன்ற உறுப்பினர்  (காங்கிரஸ்)   இரா. சிவா, எதிர் கட்சி தலைவர், (தி.மு.க). அமு.சலீம் (செயலாளர்) (சி.பி.ஐ) ஆர் இராஜாங்கம் (மாநில செயலாளர்),  தேவ பொழிலன் (முதன்மை செயலாளர்) (வி.சி.க)   எஸ். புருசோத்தம்மன்(மாநில செயலாளர்)  சி.பி.ஐ(எம்.எல்).

Leave a Reply