டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக புதுச்சேரியிலும் வரும் 8-ம் தேதி பந்த் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியுள்ள 3 வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி டெல்லியில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். டெல்லி மாநில எல்லையில் நடைபெறும் இந்த போராட்டம் நாடு முழுவதும் பரவி வருகிறது. அனைத்து மாநிலங்களிலும் விவசாயிகளுக்கு ஆதரவாக அரசியல் கட்சியினர் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இதனிடையே, டெல்லியில் போராட்டம் நடத்தும் விவசாய போராட்ட ஒருங்கிணைப்பு குழு வரும் 8-ம் தேதி நாடு முழுவதும் முழு அடைப்புப் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது. இது தொடர்பாக இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் இன்று (டிச. 06) அக்கட்சியின் செயலாளர் சலீம் தலைமையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர் ராஜாங்கம், மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் பாலசுப்பிரமணியம், விடுதலைச் சிறுத்தைகள் முதன்மை செயலாளர் தேவபொழிலன் ஆகியோர் ஆலோசனை நடத்தினர். முடிவில் வரும் 8-ம் தேதி விவசாயிகள் அறிவித்துள்ள பந்த் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிப்பது என முடிவு செய்தனர்.
ஆலோசனைக்குப் பிறகு இந்தியக் கம்யூனி்ட் கட்சி செயலாளர் சலீம் கூறுகையில், “புதுவையிலும் பந்த் போராட்டம் வரும் 8-ம் தேதி நடத்த முடிவு எடுத்துள்ளோம். காங்கிரஸ், திமுக, மதிமுக, மனிதநேய மக்கள் கட்சி உள்ளிட்ட மதச்சார்பற்ற கட்சிகளும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். வரும் 8-ம் தேதி அன்று புதிய பேருந்து நிலையம், பாகூர், வில்லியனூர், மதகடிப்பட்டு, திருக்கனூர், காரைக்கால் ஆகிய இடங்களில் மறியல் போராட்டம் நடக்கும்” என்று தெரிவித்தார்.
தொழிற்சங்கங்களும் ஆதரவு
இதனிடையே அனைத்து தொழிற்சங்கங்களும் விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக அனைத்து சங்க கூட்டம் இன்று முதலியார்பேட்டை ஏஐடியுசி அலுவலகத்தில் நடைபெற்றது. மாநில பொதுச்செயலாளர் சேதுசெல்வம் தலைமை தாங்கினார். ஏஐடியுசி மாநில செயல் தலைவர் அபிஷேகம், ஏஐடியுசி தலைவர் தினேஷ்பொன்னையா, சிஐடியு புதுச்சேரி பிரதேச செயலாளர் சீனுவாசன், ஐஎன்டியூசி பொதுச்செயலாளர் ஞானசேகரன் உள்பட பலர் கலந்துகொண்டனர்
இக்கூட்டம் தொடர்பாக சேதுசெல்வம் கூறுகையில், “டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக டிசம்பர் 8-ம் தேதி, புதுச்சேரியில் நடக்கும் பந்த் போராட்டத்துக்கு ஏஐடியுசி, சிஐடியு, ஏஐசிசிடியு, அரசு ஊழியர் சம்மேளனம், புதுச்சேரி மாநில ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கம் ஆகிய தொழிற்சங்கங்கள் ஆதரவு தெரிவிக்கிறது. புதுச்சேரியில் அனைத்து தொழிற்சங்கங்கள், பணியாளர்கள் அமைப்புகள், வணிகர் சங்கங்கள், வர்த்தக சபை, திரையரங்க உரிமையாளர்கள், பள்ளி, கல்லூரி நிறுவனங்கள், பேருந்து, லாரி, டெம்போ, லோடு கேரியர், ஆட்டோ உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்கள் சங்கங்கள், மீன்பிடி தொழிலாள்ர்கள், மீனவ சங்கங்கள் உள்ளிட்ட அனைத்து பிரிவினரும் பந்த் போராட்டத்தில் ஈடுபட உள்ளோம். ராஜா திரையரங்கு சிக்னலில் அன்றைய தினம் மறியலில் ஈடுபடுவோம்” என்று தெரிவித்தனர்.