மாவீரன் சாம்பவான் ஓடை சிவராமன்

1950 மே 3… பிற்பகல்…
பட்டுக்கோட்டை அருகில் இருக்கும் ‘நாட்டுச்சாலை’ என்ற கிராமத்தில் இருந்த தேநீர் கடையில் அவன் தேநீர் குடித்துக் கொண்டிருந்தான். அப்போது கருங்காலி ஒருவன் இனம் கண்டு கொண்டதை அறிந்தான்.

அதனால் அங்கிருந்து வெளியேறி சாம்பவான் ஓடை கிராமத்திற்குச் செல்லும் குறுக்கு வழியில் அவன் நடந்தான்.

இனி தப்ப முடியாது; காவல் நாய்களிடம் சிக்கிக் கொள்வோம் என்று அவன் எண்ணினான்! இருப்பினும் மெதுவாகத் தொடர்ந்து நடந்தான். அப்போது அவனுக்கு வயது 25…

ஆனால் இளமையின் எழுச்சி இப்போது அவனிடம் இல்லை! ஒடுக்கப்பட்ட மக்களுக்காக உழைத்து உழைத்து அவன் இளைத்து இருந்தான்…வலது கால் பாதத்தில் ஏற்பட்ட காயம் அவனை தத்தித் தத்தி நடக்க வைத்தது.

தோழர் எம்.வி.சுந்தரம் கொடுத்த கைத் துப்பாக்கி காணாமல் போனபோதே அவனுடைய பாதி உயிர் பறிபோனது.

அலைச்சல், தூக்கமின்மை, நேரத்திற்கு உணவின்மை ஆகிய அனைத்தும் சேர்ந்து அவனை தோற்றத்தில் வயோதிகனாகக் காட்டியது.

இருப்பினும் வீரம் மட்டும் அவன் உள்ளத்தில் விஸ்வரூபமாக வளர்ந்தது. இந்த நிலையில்தான் தன்னுடைய பிறந்த ஊரைத் தரிசிக்க இதோ! சாம்பவான் ஓடை நோக்கி அவன் நடந்து கொண்டு இருக்கிறான்.

அவனைப் பிடித்துவிட வேண்டும் அல்லது அவனைச் சுட்டுக் கொல்ல வேண்டும் என்ற வெறியோடு காவல் துறையினர் அலைந்து கொண்டிருந்தனர். இந்த வேளையில்தான் அதோ! அவன் சாம்பவான் ஓடையை நோக்கி மெல்ல மெல்ல நடந்து கொண்டிருக்கிறான்.

தன்னுடைய திருமணத்தின்போது கூட திருமண நாளன்றுதான் வீட்டிற்கு வந்தான்! மனைவி கழுத்தில் தாலி கட்டிய மறுநாள் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு பிரச்சினை ஏற்பட்டதால் அந்த இடத்திற்கு அவன் ஓடோடிச் சென்றான்.

மனைவி பிரசவத்தின் போதுகூட அவன் வெளியூரில் இயக்கப் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தான். அவன் ஊருக்கு வந்த போது பிறந்த குழந்தை இறந்து விட்டது என்ற செய்திதான் அவனுக்குக் கிடைத்தது.

சில நாட்கள் மனைவிக்குத் துணை இருந்த அவன், மீண்டும் ஒடுக்கப்பட்ட மக்களின் பிரச்சினைகளுக்காக வெளியூர் சென்றான்.

மனைவியின் இரண்டாம் பிரசவத்தின் போது திருத்துறைப்பூண்டியில் தோழர்
பி.சீனிவாசராவுடன் ஒரு பொதுக் கூட்டத்தில் அவன் கலந்து கொண்டு இருந்தான். செய்தி அறிந்த தோழர்
பி.சீனிவாசராவ்தான் அவனை ஊருக்கு அனுப்பினார்.

அவன் ஊருக்கு வந்தபோது, அவனுடைய மனைவியும், அவனுடைய குழந்தையும் இறந்து கிடந்தனர். அவர்களுக்குச் செய்ய வேண்டிய இறுதிக் கடமைகளைச் செய்துவிட்டு, சில நாட்களில் மீண்டும் இயக்கப் பணிக்காக அவன் வெளியூர் சென்று விட்டான்.

வடபாதிமங்கலம் பண்ணையார், குன்னியூர் பண்ணையார், மஞ்சக் கொல்லைப் பண்ணையார், நெடும்பலம் பண்ணையார் ஆகியோர் பண்ணைத் தொழிலாளர்களின் மீதும், தாழ்த்தப்பட்ட மக்கள் மீதும் கைக்கொண்டு வந்த ஒடுக்குமுறையைத் தடுக்க அவன் களத்தில் குதித்தான்.

அவனுடைய தீவிரச் செயல்களால் பண்ணையார்கள் திகைத்தனர்; தாழ்த்தப் பட்ட மக்கள் எழுச்சி கொண்டனர்.

இதை சகித்துக் கொள்ள இயலாத பண்ணையார்களும், ஆளும் வர்க்கமும் அவனைத் தீர்த்துக்கட்ட முடிவு செய்தனர்.
இந்த வேளையில்தான் இதோ! அவன் சாம்பவான் ஓடையை நோக்கி மெல்ல மெல்ல நடந்து கொண்டிருக்கிறான்.

நடந்து சென்ற அவனை ஜீப்பில் வந்த காவல்துறையினர் மறித்தனர்… ஜீப்பில் ஏற்றினர்…ஒரு சவுக்குத் தோப்புக்குக் கொண்டு சென்றனர்…

போலீஸ் உயர் அதிகாரி ஒருவன்,”மணலி கந்தசாமி, இரணியன் போன்ற கம்யூனிஸ்டுத் தலைவர்கள் பதுங்கி இருக்கும் இடத்தைத் தெரியுமா?” என்றான்.

“தெரியும்” என்றான் அவன்.

“சொல்” என்றான் போலீஸ் அதிகாரி.

“சொல்ல முடியாது” என்றான் அவன்.

“சரி! நீ போகலாம்” என்று சொல்லி அவனை ஜீப்பிலிருந்து இறங்கிவிட்டனர்.

ஜீப்பிலிருந்து இறங்கிய அவன், “ஏ!
போலீஸ் அதிகாரியே! என்னைப் போகச் சொல்லி, என் முதுகில் சுட்டு வீழ்த்தலாம் என்று எண்ணுகிறாய்…நான் கோழை இல்லை! என் நெஞ்சில் சுடு!” என்று மார்பைத் திறந்து காட்டினான்.

காவல் அதிகாரி என்ற அந்த வெறிநாய் மூன்று குண்டுகளை அவன் நெஞ்சில் பாய்ச்சியது. அந்த மாவீரன் ரத்த வெள்ளத்தில் சரிந்தான்.

அந்த மாவீரன்தான்
சாம்பவான் ஓடை சிவராமன்!

தியாகி சிவராமன் புகழ் ஓங்குக!

(இன்று 03.05.2023 மாவீரன் சாம்பவான் ஓடை சிவராமன் நினைவு நாள்)

Leave a Reply