காங்கிரஸ் கட்சியின் தலைமையிலான ஐ.மு.கூட்டணி-2 அரசாங்கம் பிரதான எதிர்க் கட்சியான பாஜகவின் தலைவர்களை சந்தித்துக் கொண்டிருப்பதாகவும், முக்கியமான பொருளாதார சீர்திருத்தங்களை முன்னெடுத்துச் செல்வதற்கு, ஒரு பொதுவான அணுகு முறையைப் பின்பற்றுவது தொடர்பாக பேசிக் கொண்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
இவ்வாறு, பொருளாதார சீர்திருத்தங்கள் மீது ஒரு புதியசுற்று சூதாட்டம் தொடங்கியிருப்பதாகத் தெரிகிறது. நவீன தாராளமயப் பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகளை விரைவாக முன்னெடுத்துச் செல்ல தன்னால் இயலவில்லை என் பதன்காரணமாகத் தன் பொறுமையின்மையை அரசாங்கம் திரும்பத் திரும்ப வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறது. நடப்புக் கணக்குப் பற்றாக் குறை அதாவது இறக்குமதிப் பொருள்களின் மதிப்புக்கும் ஏற்றுமதிப் பொருள்களின் மதிப்புக்கும் இடையேயுள்ள வித்தியாசமான – வர்த்தகப் பற்றாக்குறை – மிகவும் கூர்மையாக அதிகரித்திருப்பது குறித்து விவாதிக்கப் பட்டுக் கொண்டிருக்கிறது. இவ்வர்த்தகப் பற்றாக்குறை சமாளிக்க முடியாத அளவிற்கு சென்றுவிட்டது. வளர்ச்சி விகிதம் மேல்நோக்கி செல்ல வேண்டுமானால், இதனை உடனடியாகக் குறைத்தாக வேண்டும். 2012-13ஆம் ஆண்டில் மொத்த உள் நாட்டு உற்பத்தி வளர்ச்சி விகிதம் 5 விழுக் காடாக வீழ்ச்சி அடைந்திருக்கிறது. இது 2011-12ஆம் ஆண்டில் 6.2 விழுக்காடாக இருந்தது. நடப்புக் கணக்குப் பற்றாக்குறை, 2012-13ஆம் ஆண்டில் 88.2 பில்லியன் அமெரிக்க டாலராக அதாவது நம் மொத்த உள் நாட்டு உற்பத்தியில் 4.8 விழுக்காடாக இருந்தது. வேறு வார்த்தைகளில் சொல்வதானால், 2012-13இல் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் ஒட்டுமொத்த வளர்ச்சியும் இந்தப் பற்றாக் குறையைச் சமாளிப்பதற்காகவே பயன்படுத்தப்பட வேண்டியிருக்கும். இப்போது, நடப்புக் கணக்குப் பற்றாக் குறை என்பது அந்நியச் செலாவணியில் அளக்கப்படுவதால், இது அந்நியச் செலாவணியால் மட்டுமே சமப்படுத்தப்பட வேண்டியதாகும். இதற்கு, கணிசமான அளவிற்கு ஏற்றுமதியை அதிகரிக்க வேண்டும் அல்லது கணிசமான அளவிற்கு இறக்குமதியைக் குறைத்திட வேண்டும். (தொடர்ந்து ஆறாவது ஆண்டாக நீடித்துக் கொண்டிருக்கக்கூடிய) உலகப் பொருளாதார மந்தத்தின் காரணமாக, ஏற்றுமதியின் வளர்ச்சிக்கான வாய்ப்புகள் என்பவை அநேகமாக இல்லை என்றே சொல்லலாம். நம் நாட்டின் ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியடைந்திருப்பதால், அந்நிய நாடுகளில் நம் பொருள்களின் விலைகள் மிகவும் மலிவாகும் என்றபோதிலும் கூட இதற்கான வாய்ப்புகள் இல்லை என்பதே எதார்த்தமான நிலையாகும், 2012-13ஆம் ஆண்டின் சென்ற காலாண்டில் ஏற்றுமதி மிகவும் மோசமான முறையில் குறைந்திருந்த அதே சமயத்தில், இறக்குமதியோ குறிப்பிடத்தக்க 6 விழுக்காடு அளவிற்கு அதிகரித்திருந்தது.
எனவே, ஆட்சியாளர்கள், இந்த இடைவெளியை சமப்படுத்த வேண்டுமெனில் நம் நாட்டிற்குள் மிகப்பெரிய அளவிற்கு அந்நிய முதலீட்டை அதிகரிப்பதற்கான வழிவகைகளைக் கவர்ச்சிகரமாக செய்துதர வேண்டுமென்று வாதிடுகிறார்கள். இதன் பொருள், அந்நிய நேரடி முதலீட்டை எவ்விதக் கட்டுப்பாடுமின்றி அனுமதிக்க வேண்டும் என்பதே. ஆயினும் கூட, நிகர அந்நிய நேரடி முதலீடு 2011-12ஆம் ஆண்டில் 15.7 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்தது, 2012-13ஆம் ஆண்டில் 12.8 பில்லியன் அமெரிக்க டாலர்களாக வீழ்ந்துள்ளது. இத்தகு சூழ்நிலைமைகளில்தான், ஐ.மு. கூட்டணி-2 அரசாங்கமானது, அந்நிய நேரடி முதலீட்டைக் கவர்வதற்காக பல்வேறு நடவடிக்கைகளில் இறங்கி இருக்கிறது. காப்பீட்டுத் துறையில் அந்நிய நேரடி முதலீட்டை, தற்போதுள்ள 26 விழுக்காட்டிலிந்து 49 விழுக்காடாக உயர்த்தி இருக்கிறது. அதேபோன்று, நாட்டின் பாதுகாப்பு எக்கேடு கெட்டாலும் பரவாயில்லை என்றும் அதுகுறித்துக் கிஞ்சிற்றும் பொருட்படுத்தாமலும் பாதுகாப்பு உற்பத்தியிலும் 26 விழுக்காடு அளவிற்கு அந்நிய நேரடி முதலீட்டை அதிகரித்திடத் துணிந்துள்ளது. இவ்வாறு தாங்கள் செல்லும் கொள்கைத் திசைவழியில் எளிதாகப் பயணம் செய்வதற் காக, ஆட்சியாளர்கள் தற்போது வெளிநாடு வாழ் இந்தியப் பொருளாதார வல்லுநர் ஒருவரை இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநராக நியமித்திருக்கின்றனர். அந்நிய நேரடி முதலீடு, பொருளாதாரத்தில் முதலீட்டின் அளவை அதிகரித்திடும், வேலைவாய்ப்பைப் பெருக்கிடும், உயர் வளர்ச்சி விகிதத்திற்கு இட்டுச்செல்லும் என்றெல்லாம் வாதிடப் படுகிறது. இது ஒரு தவறான வாதமாகும். காப்பீட்டுத்துறை, வங்கித்துறை போன்ற பல துறைகளில் மேற்கொள்ளப்படும் அந்நிய நேரடி முதலீடுகளில் பெரும் பகுதி, உற்பத்தியில் நேரடியாக ஈடுபடுத்தப்படும் முதலீடுகள் அல்ல. எனவே, அவற்றின் காரணமாக வேலைவாய்ப்புப் பெருகும் என்பதெல்லாம் கதை. அப்படியே வேலைவாய்ப்பு கிடைத்தாலும் அது பெயரளவிலானதாகவே இருக்கும். மேலும், உற்பத்தியில் ஈடுபடுத்தப்படும் முதலீடுகள் உயர் வளர்ச்சி விகிதங்களை எட்ட வேண்டுமானால், அதன்மூலமாக வேலைவாய்ப்புகளைப் பெருக்க வேண்டுமானால், அவ்வாறு மேற்கொள்ளப்பட்ட உற்பத்திப் பொருள்கள் போதுமான அளவு உள்நாட்டுத் தேவை காரணமாக உட்கிரகிக்கப்படும்போதுதான் சாத்தியமாகும். இன்றைய இந்தியப் பொருளாதாரத்தின் எதார்த்த நிலையில் – அதாவது வளர்ச்சி விகிதம் வீழ்ச்சியடைந்து மிகப்பெரிய அளவில் வேலை வாய்ப்பு இல்லாத நிலை யில், அனைத்து அத்தியாவசியப் பொருள்களின் விலைகளும் தொடர்ந்து ஏறிக் கொண்டிருக்கும் நிலையில் – மக்கள் தங்கள் உள்நாட்டுத் தேவைகளை மிகக் குறைந்த அளவில்கூட பூர்த்தி செய்ய முடியாத நிலையிலேயே இருக்கின்றனர்.
எனவே, அந்நிய நேரடி முதலீடு மிகப்பெரிய அளவிற்கு நாட்டிற்குள் கொட்டினாலும் கூட, அதனால் தாமாகவே இந்தியாவின் உற்பத்தித் துறையிலும் தொழில்துறையிலும் வளர்ச்சி ஏற்பட்டு விடாது. மாறாக, இன்றுள்ள உலகப் பொருளாதார மந்த நிலையில், சர்வதேச நிதி மூலதனம், நம் நாட்டின் பொருளாதாரம் மற்றும் நம் நாட்டு மக்களின் வயிற்றில் அடித்து, கொள்ளை லாபம் ஈட்டுவதற்கு புதிய வாய்ப்பு வாசல்களை அளிக்கவே உதவிடும். இந்தியாவின் வளர்ச்சியைப் புதிப்பிப்பதற்குத் தற்போதைய தேவை, மூலதனக் குறைபாடோ அல்லது வளங்களின்மையோ அல்ல. நாட்டு மக்களின் உள்நாட்டுத் தேவையை மக்களுக்கு பூர்த்தி செய்யக்கூடிய வகையில் அவர்களுக்கு வாய்ப்பு வசதிகளை அளிப்பதே இன்றைய தேவையாகும். இதனைச் செய்வதற்கு பதிலாக, ஆட்சியாளர்கள் வெளிநாடு மற்றும் உள்நாட்டு கார்ப்பரேட்டு களுக்கு முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு வரிச் சலுகைகளையும் மற்றும் பல் வேறு விதமான வரியல்லாத சலுகைகளையும், வளர்ச்சிக்கான ஊக்கத் தொகை என்ற பெயரில் வாரி வழங்குகிறார்கள். அதற்குப் பதிலாக, நியாயமாக வரி வருவாயை ஆட்சியாளர்கள் வசூலித்து, அவற்றை நமக்குத் தேவையான உள்கட்டமைப்பு வசதிகளைக் கட்டுவதற்காக, பொது முதலீட்டில் செலுத்தப்பட்டிருக்குமானால், அது வேலை வாய்ப்பு வளர்ச்சிக்கும் அதன்மூலம் உள்நாட்டு உற்பத்தியைப் பெருக்குவதற்கும் கணிசமான அளவிற்கு உதவியிருக்கும். உள்நாட்டுத் தேவை சுருங்கியிருப்பதன் காரணமாக, பெருமுதலாளிகள் தங்களின் வளங்களைஅதிக லாபம் ஈட்ட வேண்டும் என்பதற்காக ஊக வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடுத்திக்கொண்டிருக்கிறார்கள். தங்கம் மற்றும் ரியல் எஸ்டேட் விலைகள் கூர்மையாக அதிகரித்திருப்பதில் இது நன்கு பிரதிபலிக்கிறது. உலகத் தங்க நுகர்வில் இந்தியா மட்டும் 27 விழுக்காடு பங்கு வகிக்கிறது. இந்தியாவின் உள்நாட்டு தங்க உற்பத்தி இத்தேவையில் வெறும் 0.3 விழுக்காடு அளவிற்குத்தான் ஈடு செய்கிறது. இந்திய ரிசர்வ் வங்கி தன்னுடைய அறிக்கை ஒன்றில் இந்தியாவில் சமீப காலங்களில் தங்கத்திற்கான தேவை என்பது மொத்த தங்க நுகர்வில் 40 விழுக்காடு முதலீட்டுக்கான தேவை என்று குறிப்பிட்டிருக்கிறது. உற்பத்திக்காக முதலீடு செய்வதைவிட, தங்க நுகர்வுக்காக முதலீடு செய்வது அதிக லாபம் ஈட்டும் ஒன்றாக மூலதனம் விரும்புகிறது என்பதை இது மெய்ப்பித்திருக்கிறது. நாட்டில் பெட்ரோலியப் பொருட்கள் இறக்குமதிக்கு அடுத்ததாக, தங்க இறக்குமதிதான் இரண்டாவது பெரிய இறக்குமதி இனமாகும். நாட்டின் நடப்புக் கணக்குப் பற்றாக்குறையில் 30 விழுக்காடு தங்கம் இறக்குமதி செய்வதன் மூலம் ஏற்பட்டிருக்கிறது. நடப்புக் கணக்குப் பற்றாக்குறையைச் சமாளிப்பதற்காக அந்நிய நேரடி முதலீட்டை அனுமதிப்பதற்குப் பதிலாக ஆட்சியாளர்கள் தங்க இறக்குமதிக்குக் கட்டுப்பாடுகள் கொண்டு வந்திருந்தார்களானால், ஊக வர்த்தகத்தில் கொள்ளை லாபமீட்டப்படுவது கட்டுக்குள் வந்திருக்கும்.
அதேபோன்று, கடந்த ஆண்டில், உலகிலேயே ரியல் எஸ்டேட் வர்த்தகத்தில் நிலத்தின் விலை கடுமையாக அதிகரித்திருப்பதும் இந்தியாவில்தான் என்று ஆய்வுகள் காட்டு கின்றன. உலகில் மிகவும் செங்குத்தாக சொத்தின் விலைகள் உயர்ந்திருக்கும் நகரங் களில் தில்லி பிரதானமான நகராக இடம் பெற்றிருக்கிறது. இவ்வாறு உயர் லாபம் ஈட்டப்பட வேண்டும் என்பதற்காக மூலதனம் ஊக வர்த்தகத்தில்தான் ஈடுபடுத்தப்பட்டிருக்கிறதேயொழிய, உற்பத்தி சார்ந்த எதிலும் இல்லை. இவ்வாறு நிலைமைகள் மிகவும் மோசமாக இருந்த போதிலும், ஐ.மு.கூட்டணி 2 அர சாங்கமானது, நவீன தாராளமய சீர்திருத்த நிகழ்ச்சி நிரலை மேலும் தீவிரமாகப் பின்பற்றவே முயற்சித்துக்கொண்டிருக்கிறது. தன்னுடைய இத்தகைய இழிமுயற்சியில், இது பாஜகவையும் தன் கூட்டாளியாக சேர்த்துக் கொண்டிருப்பது போல் தோன்றுகிறது. நவீன தாராளமயப் பொருளாதாரச் சீர்திருத்தங்களை அமல்படுத்துவதில் காங்கிரசுக்கும் பாஜகவிற்கும் வித்தியாசம் எதுவும் இல்லை என் பதை இது உறுதிப்படுத்துகிறது. ஆயினும் மக்களின் வாழ்வாதாரம் மிகவும் மோசமாக சூறையாடப்பட்டுக் கொண்டிருக்கிறது. அதனைக் கட்டுப்படுத்துவதற்குப் பதிலாக, அதாவது தங்க இறக்குமதி மூலமாகவும், எண்ணெய் இறக்குமதிகளின் கட்டணங்களை சந்திக்க வேண்டியிருக்கிறது என்ற பெயரில் பெட்ரோலியப் பொருட்களின் விலைகளை தொடர்ந்து உயர்த்திக் கொண்டிருப்பதன் மூலமாகவும் ஆட்சியாளர்கள் நவீன தாராளமயச் சீர்திருத்தங்களைத் தொடர்ந்து பின் பற்றுவதன்மூலம் மக்களின் வயிற்றில் அடித்துக் கொண்டிருக்கிறார்கள். நாட்டின் நலன், நாட்டு மக்களின் நலன்கள் காப்பாற்றப்பட வேண்டுமானால், ஆட்சியாளர்கள் கடைப்பிடித்து வரும் நவீன தாராளமய சீர்திருத்தங்கள் முறியடிக்கப்பட்டாக வேண்டும்.
தீக்கதிர் (தமிழில்: ச. வீரமணி)