இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மார்க்சிஸ்ட் புதுச்சேரி மாநில குழு பத்திரிகை செய்தி
வணக்கம். புதுச்சேரி கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பணிபுரியும் பேராசிரியர்களின் பணி நீட்டிப்பு செய்யப்படாதது கண்டனத்திற்குரியது! அவர்களை பணி நிரந்தரம் செய்க.
புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் உள்ள 11 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில், கடந்த 15 ஆண்டுகளாக ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வரும் 200க்கும் மேற்பட்ட பேராசிரியர்களின் வாழ்வாதாரத்தை புதுச்சேரி அரசும், துணைநிலை ஆளுநரும் கேள்விக்குறியாக்கி வருகின்றனர். மூன்று மாதங்களுக்கும் மேலாக இவர்களுக்குப் பணி நீட்டிப்பு வழங்காமல் இருப்பது மிகுந்த அதிர்ச்சியையும், கண்டனத்தையும் ஏற்படுத்துகிறது.
இந்த ஒப்பந்தப் பேராசிரியர்கள் மிகக் குறைந்த ஊதியத்தில், கடந்த ஒன்றரை தசாப்த காலமாக புதுச்சேரியின் உயர்கல்வி வளர்ச்சிக்கு அரும்பணியாற்றி உள்ளனர். அவர்களில் பெரும்பாலோர் 50 வயதைக் கடந்த நிலையில், புதுச்சேரி அரசு அவர்களைப் பணிநீக்கம் செய்ய முனைவது மனிதாபிமானமற்ற செயல். இத்தகைய செயல் மாணவர்களின் கல்வி நலனையும் கடுமையாகப் பாதிக்கும்.
அரசின் முரண்பட்ட நிலைப்பாடுகள்
புதுச்சேரி அரசு மற்றும் துணைநிலை ஆளுநரின் செயல்பாடுகள் முரண்பாடுகளால் நிறைந்தவை. மோதிலால் நேரு அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் ஒப்பந்தப் பேராசிரியர்களை நிரந்தரம் செய்யுமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது (w.p.no.30904/2024). இந்தத் தீர்ப்பில், பல ஆண்டுகளாக காலியிடங்கள் நிரப்பப்படாமல் இருந்ததற்கான காரணங்களை மத்திய கண்காணிப்பு ஆணையம் விசாரிக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் கூறியது. உச்ச நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பை அரசு தனக்குச் சாதகமாகப் பயன்படுத்தி, ஒப்பந்தப் பேராசிரியர்களைப் பணி நீக்கம் செய்ய முயல்வது வேதனைக்குரியது. அதேசமயம், அதே உச்ச நீதிமன்றம் வலியுறுத்தி வரும் “சம வேலைக்கு சம ஊதியம்” என்ற கோட்பாட்டைப் பின்பற்றி, ஒப்பந்தப் பேராசிரியர்களுக்கு சம ஊதியம் வழங்க அரசு முன்வராதது ஏன்? இது அரசின் இரட்டை வேடத்தை வெளிப்படுத்துகிறது.
காவிமயமாக்கலின் ஆபத்து
பா.ஜ.க.-என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணி அரசு ஆட்சிக்கு வந்ததிலிருந்து, புதுச்சேரி கல்வி நிறுவனங்களைக் காவிமயமாக்க தீவிரமாக முயன்று வருகிறது. சமீபத்தில் மத்திய பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள 220 ஆசிரியர் பணியிடங்களில் 80க்கும் மேற்பட்டவர்கள் ஆர்.எஸ்.எஸ். பின்புலம் கொண்டவர்கள். இது புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் கல்வித் தரத்தைக் குலைத்து, அதை ‘இந்துத்வா’ பிரச்சார மையமாக மாற்றும் முயற்சியாகும். இதேபோல, மாநிலக் கல்லூரிகளையும் காவிமயமாக்க முயல்வதின் ஒரு அங்கமாகவே ஒப்பந்தப் பேராசிரியர்கள் வீட்டுக்கு அனுப்பப்படும் நடவடிக்கைகள் பார்க்கப்படுகின்றன.
புதுச்சேரி பொறியியல் கல்லூரி தொழில்நுட்ப பல்கலைக்கழகமாக உயர்த்தப்பட்டது. ஆனால் அங்கு பணியாற்றும் நிரந்தர ஒப்பந்த ஊழியர்களுக்கு பல மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை, புதிய நியமனங்களும் இல்லை. வெறும் பெயர் மாற்றம் மட்டுமே கல்வி நிறுவனத்தின் தரத்தை உயர்த்தாது.
புதுச்சேரி அரசுக்கும், துணைநிலை ஆளுநருக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கீழ்க்கண்ட கோரிக்கைகளை முன்வைக்கிறது:
* உடனடியாக 200க்கும் மேற்பட்ட ஒப்பந்தப் பேராசிரியர்களின் பணி நீட்டிப்புக்கு உத்தரவிட வேண்டும்.
* கடந்த 2009ஆம் ஆண்டு 149 ஒப்பந்தப் பேராசிரியர்கள் நிரந்தரம் செய்யப்பட்டது போல, தற்போது பணியாற்றும் பேராசிரியர்களையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.
* உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின்படி, “சம வேலைக்கு சம ஊதியம்” என்ற அடிப்படையில் அனைத்து ஒப்பந்த ஊழியர்களுக்கும் சம ஊதியம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
* பணி நியமனங்களில் உள்ள குழப்பங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க, மாநிலத்திற்கென்று ஒரு பணித் தேர்வு ஆணையத்தை உடனடியாக உருவாக்க வேண்டும்.
ஒப்பந்தப் பேராசிரியர்களுக்கு ஆதரவாக அனைத்து மதச்சார்பற்ற, ஜனநாயக சக்திகளும் போராட முன்வர வேண்டும்.மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இந்தப் பேராசிரியர்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு தொடர்ந்து துணை நிற்கும்.
இவன்
எஸ். ராமச்சந்திரன்
(மாநிலச் செயலாளர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் புதுச்சேரி மாநில குழு









