தனியார் பள்ளிகளின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்துக!
புதுவை அரசுக்கு சிபிஎம் வேண்டுகோள்

ஜுலை 6-2016

புதுச்சேரி அரசும், கல்வித்துறையும் அரசுப் பள்ளிகள் மீதான அக்கரையின்மையினால் தனியார் பள்ளிகளை மறைமுகமாக ஊக்கப்படுத்துவதால் தனியார் பள்ளிகளின் ஆதிக்கம் அதிகரித்துக் கொண்டே வருகிறது. தனியார் பள்ளிகளின் லாபவெறி காரணமாக கல்விக் கட்டணம் மிகக்கூடுதலாக பெற்றோர்களிடம் வசூலிக்கப்படுகிறது. இந்த நிலையில் கல்விக் கட்டணத்தை முறைப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கட்சி உள்ளிட்ட அனைத்து ஜனநாயக அமைப்புகளும் போராடிவந்தன.குறிப்பாக கடந்த ஆண்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முற்றுகை போராட்டத்தை நடத்தியது. அப்போதைய முதலமைச்சர் கல்விக் கட்டணத்தை முறைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற் கொள்வதாக உறுதியளித்தார் அதைத்தொடர்ந்து ஓய்வுபெற்ற நீதிபதி திரு முகமதுஅலி தலைமையில் குழு அமைக்கப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டது.

இரு தினங்களுக்கு முன்பு ஒரு சில பள்ளிகளுக்கு மட்டும் கட்டணங்களை நிர்ணயித்து இருப்பதாகவும் மேற்படி குழுவிடம் வரவு செலவு கணக்குகளை சமர்ப்பிக்காத பள்ளிகளுக்கு 15 நாட்கள் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாகவும் கல்விக்கட்டண நிர்ணயக்குழு தெரிவித்துள்ளது. எனவே, கல்விக்கட்டணங்களை அனைத்து பள்ளிகளுக்கும் நிர்ணயம் செய்வதோடு ஏற்க மறுக்கும் பள்ளிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்து, அரசே பள்ளியை நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் நிர்ணயிக்கப்பட்ட கல்விக் கட்டணங்களை பொது மக்கள் மற்றும் பெற்றோர்கள் பார்வைக்கு தெரியும் வகைளில் விளம்பரப்படுத்த வேண்டும் என மார்க்சிஸ்ட் கட்சி கேட்டுக்கொள்கிறது.தனியார் மருத்துவக் கல்லூரிகள் அரசுக்கு வழங்க வேண்டிய 50 விழுக்காடு இடங்களை வழங்காமல் தான்தோன்றித்தனமாக செயல்பட்டு வருகிறார்கள். சென்டாக் மாணவர்களிடம் அரசு நிர்ணயிக்கும் கல்விக்கட்டணத்தைவிட பல மடங்கு வசூலித்து வருகிறது.

கல்லுரியில் சேரும்போதே அந்த கூடுதல் கட்டணத்தை செலுத்தவும் கட்டாயப்படுத்தி வருகிறார்கள். இதன் காரணமாக சென்டாக் மாணவர்கள் என்ன செய்வதென்று அறியாமல் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். புதுச்சேரி அரசும் சென்டாக் அதிகாரிகளும் கூடுதல் கட்டணம் வசூலிக்கும் தனியார் மருத்துவக் கல்லூரிகள் மீது நடவடிக்கை எடுத்து, அரசு நிர்ணயிக்கும் கட்டணத்தை மட்டுமே மாணவர்கள் செலுத்துவதற்கான உத்தரவாதத்தை ஏற்படுத்த வேண்டும். நிகர் நிலைப் பல்கலைகழகம் என்ற பெயரில் எவ்வித கட்டுப்பாட் டிற்கும் உட்படுத்திக்கொள்ளாத மருத்துவக் கல்லுரி நிர்வாகங்கள் சென்டாக் மாணவர்களிடம் மற்றவர்களை விட இன்னும் கூடுதலாக கல்விக் கட்டணங்களை வசூலித்து கொள்ளையடிக்கிறார்கள். ஆகவே, புதுச்சேரி அரசு இது போன்ற கல்லுரிகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பிரதேச செய லாளர் ஆர். ராஜாங்கம் வெளியிட்டிருக் கும் அறிக்கையில் தெரிவித்திருக்கிறார்.

Leave a Reply