புதுச்சேரிக்கு நிதி வழங்காத மத்திய அரசைக் கண்டித்து போராட்டம்

புதுச்சேரி மாநிலத்துக்கு மத்திய அரசு கரோனா நிவாரண நிதி வழங்காததைக் கண்டித்து, வாயில் கருப்புத் துணி கட்டிக்கொண்டு தர்ணாவில் ஈடுபட்ட திமுக எம்எல்ஏக்கள் உள்ளிட்ட கூட்டணிக் கட்சித் தலைவர்களை போலீஸார் கைது செய்தனர்.

புதுச்சேரி மாநிலத்தில் தற்போது 3 பேர் மட்டுமே கரோனா வைரஸ் தொற்றால் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் கரோனா வைரஸ் பரவாமல் இருக்க மாநில அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதனிடையே கரோனா தொற்றைத் தடுக்கவும், ஊரடங்கு உத்தரவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கவும் மத்திய அரசிடம் புதுச்சேரி அரசு ரூ.995 கோடி நிவாரண நிதி கேட்டு வலியுறுத்தி வருகிறது.

பிரதமர் மோடியிடம் கடிதம் மூலமும் நிவாரண நிதி அளிக்க முதல்வர் நாராயணசாமி வலியுறுத்தினார். ஆனால், மத்திய அரசு இதுவரை நிதி வழங்கவில்லை. ஆனால் இதர மாநிலங்களுக்கு நிதி தரப்பட்டுள்ளது. இந்நிலையில் பிற மாநில அரசுகளுக்கு நிதி வழங்கிய மத்திய அரசு யூனியன் பிரதேசமான புதுச்சேரிக்கு நிதி அளிக்காதது மக்களை வஞ்சிக்கும் செயல் என காங்கிரஸ், திமுக, இந்தியக் கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள் கட்சிகள் கண்டனம் தெரிவித்தன.

மேலும் புதுச்சேரிக்கு நிதி அளிக்காத மத்திய பாஜக அரசைக் கண்டித்து கருப்புக் கொடியுடன் தர்ணா போராட்டம் நடத்தப் போவதாகவும் அறிவித்தன. அதன்படி இன்று (ஏப் 24) தர்ணா போராட்டம் நடத்துவதற்காக மிஷன் வீதி ஜென்மராக்கினி கோயில் அருகில் காங்கிரஸ், திமுக, கம்யூனிஸ்ட் கூட்டணியினர் கருப்புக்கொடியுடன் திரண்டனர்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பிரதேச செயலாளர் இரா.இராஜாங்கம், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் சலீம் தலைமையில், மாநில காங்கிரஸ் தலைவர் ஏ.வி.சுப்ரமணியன், திமுக அமைப்பாளர்கள் சிவா எம்எல்ஏ, சிவக்குமார், எம்எல்ஏ வெங்கடேசன், விடுதலைச் சிறுத்தைகள் முதன்மைச் செயலாளர் தேவ.பொழிலன், முன்னாள் அமைச்சர் விசுவநாதன், முன்னாள் எம்எல்ஏ நாரா.கலைநாதன், மார்க்சிஸ்ட் முன்னாள் செயலாளர்கள் பெருமாள், முருகன் மற்றும் முக்கிய நிர்வாகிககள் கருப்புக்கொடி ஏந்தி, கருப்பு பேட்ஜ் அணிந்து, வாயில் கருப்புத் துணி கட்டிக்கொண்டு திரண்டனர்.

அப்போது அங்கிருந்த போலீஸார் ஊரடங்கு உத்தரவைக் காரணம் காட்டி போராட்டம் நடத்தக்கூடாது என்று கூறி அவர்களை வலுக்கட்டாயமாக கைது செய்தனர். அப்போது அவர்கள், மத்திய அரசு தொடர்ந்து புதுச்சேரி மாநில மக்களை வஞ்சித்து வருகிறது என்றும், புதுச்சேரி மாநிலத்துக்கு ஜிஎஸ்டி இழப்பீடு, 7-வது சம்பள கமி‌ஷன் என பல்வேறு வகையிலான நிதிகளை மத்திய அரசு வழங்கக் கோரியும், மத்திய அரசு நிதி தர மறுத்து வரும் நிலையில், அதனை துணைநிலை ஆளுநர் கிரண்பேடி பெற்றுத் தரக் கோரியும், பதாகைகளை கையில் ஏந்தி கண்டன முழக்கங்களை எழுப்பினர். இதையடுத்து போலீஸார் அவர்களை தனித்தனி வாகனங்களில் ஏற்றி அழைத்துச்சென்றனர். தர்ணா போராட்டத்தில் ஈடுபட முயன்ற சுமார் 17 பேர் கைது செய்யப்பட்டனர்.

முன்னதாக, கடற்கரைச் சாலையில் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்திருந்தனர். கடற்கரைச் சாலை மூடப்பட்டுள்ளதால் தலைமை தபால் நிலையம் அருகில் போராட்ட இடத்தை மாற்றினர். இதற்காக ஜென்மராக்கினி கோயில் அருகில் அவர்கள் திரண்டபோது கைது செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply