புதுச்சேரியில் கரோனா மரணங்கள் அதிகரிக்க உயர் அதிகாரிகளின் அலட்சியமே காரணம் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதுச்சேரி செயலாளர் ராஜாங்கம் குற்றம் சாட்டியுள்ளார்.
புதுச்சேரியில் கொரோனா தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,382 ஆக அதிகரித்துள்ளது. கடந்த ஏப்ரல் 24 வரை 737 பேர் மட்டுமே கடந்த கால கரோனாவால் இறந்திருந்தனர். ஏப்ரல் 24 முதல் மே 24 வரையிலான ஒரு மாதத்தில் மட்டும் 645 பேர் அதிக அளவாக உயிரிழந்துள்ளனர். தினமும் 20 முதல் 30 பேர் வரை இறக்கின்றனர்.
இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதுச்சேரி செயலாளர் ராஜாங்கம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:
”9 மருத்துவக் கல்லூரிகளுடன் வலுவான மருத்துவக் கட்டமைப்புகளைக் கொண்ட மருத்துவ நகரம் என்று அழைக்கப்படும் புதுச்சேரியில் கரோனா நோயினால் மரணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதிகாரிகளின் அலட்சியம், செயலின்மை, மக்களைப் பற்றிக் கவலைப்படாத ஆட்சியாளர்களின் செயல்பாடுகள்தான் இவற்றுக்குக் காரணம். கடந்த ஒருவார காலமாக தினமும் 30க்கும் மேற்பட்டோரை இழந்து வருகிறோம். நெருக்கடியான இந்த நிலையைக் கையாள்வதற்குப் பொருத்தமான மாற்று நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ளவில்லை.
மருத்துவ ஊழியர்களின் தேவை அதிகரித்து வருகிறது. தேவையான மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்களை நியமிக்க அரசு அக்கறை காட்டவில்லை. அதுமட்டுமின்றி ஆபத்தான நிலையில் உள்ள நோயாளிகளுக்குத் தேவைப்படக்கூடிய உயர் மருத்துவ சிகிச்சைக்கான வல்லுநர்கள் நியமிக்கப்படவில்லை. உயர் சிகிச்சைக்கான கருவிகளைப் பயன்படுத்த ஊழியர்களுக்குப் பயிற்சி அளிக்கப்படவில்லை. வென்டிலேட்டர் படுக்கைகள், ஆக்சிஜன் படுக்கைகள் பற்றாக்குறையாகவே உள்ளன.
உயிர் காக்கும் மருந்து கையிருப்பு இருந்தும் தேவைப்படும் நோயாளிகளுக்குச் செலுத்தப்படவில்லை என்பது மிகப்பெரும் சோகம். இரவோடு இரவாக நியமன சட்டமன்ற உறுப்பினர்களை நியமிக்கும் ஆளுநர், மக்களைப் பாதுகாக்க அதிகாரத்தைப் பயன்படுத்த மறுக்கிறார்.
புதுச்சேரி ஆட்சியாளர்கள் இனியாவது மக்கள் உயிரைப் பாதுகாக்கச் செயல்பட வேண்டும். உயிர் காக்கும் மருந்து தேவைப்படக்கூடிய சக மனிதர்களுக்கும் பாரபட்சம் இல்லாமல் செலுத்த வேண்டும். மருத்துவக் கட்டமைப்புகளை மேம்படுத்த வேண்டும். நிரந்தர முறையில் ஊழியர்களை நியமிக்க வேண்டும். பாதிக்கப்படும் மருத்துவப் பணியாளர்களுக்கு இன்சூரன்ஸ் உள்ளிட்ட பாதுகாப்பு, பேரிடர் கால ஊக்கத்தொகை வழங்குதல் உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். ஆக்சிஜன் படுக்கை, வென்டிலேட்டர் படுக்கைகளை அதிகப்படுத்த வேண்டும். கூடுதலாகப் பரிசோதனைகளைச் செய்ய வேண்டும் .
பொது முடக்கத்தால் வருமானம் இன்றித் தவிக்கும் மக்களுக்கு மாதம் ரூ.7,500, நபருக்கு 10 கிலோ உணவு தானியங்களும் வழங்குவதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்”.இவ்வாறு ராஜாங்கம் தெரிவித்துள்ளார்.