புதிய வகை கொரோனா ஜே .என்1 நோய் தொற்று உலகம் முழுவதும் பரவி வருகிறது. இந்தியாவில் பரவத் தொடங்கியுள்ளது இது குறித்து ஒன்றிய சுகாதார துறை அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து அறிவுறுத்தியுள்ளது. புதுச்சேரி மாநிலத்திலும் புதிய வகை ஜே என்1 என்ற கொரோனா நோய் தொற்று இருப்பதாக தகவல் வருகிறது. ஜிப்மர் மருத்துவமனையில் 9 பேர் இத்தகைய தொற்றுக்கு ஆளாகி சிகிச்சை பெற்று வருவதாக தெரிகிறது.
குளிர்கால பருவ சூழலில் இருமல், சளி, இன்புளுயன்சா காய்ச்சல், டெங்கு என பாதிக்கப்பட்ட மக்கள் கூட்டம் மருத்துவமனை மற்றும் கிளினிக்குகளில் அதிகரித்த வண்ணம் உள்ளது. மாநில சுகாதாரத்துறை ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் அறிவுறுத்தல் மற்றும் பின்பற்ற வேண்டிய அணுகுமுறை குறித்து ஆக்கப்பூர்வமான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவில்லை. நோய் பரவலை தடுக்க தேவையான பொது சுகாதார நடவடிக்கையோ, மக்களுக்கு விழிப்புணர்வோ ஏற்படுத்தப்படவில்லை. மாநில அரசு மற்றும் சுகாதாரத் துறையின் மெத்தனமான செயல்பாடு கவலையளிக்கிறது.
கிறிஸ்மஸ் பண்டிகை, ஆங்கில புத்தாண்டு, பொங்கல் உள்ளிட்ட பண்டிகை மற்றும் விழாக்காலமான இத்தருணத்தில் கூடுதல் விழிப்புணர்வுடன் அரசு நிர்வாகம் செயல்பட வேண்டும். மாநிலத்தின் வருவாய் மட்டுமே அரசின் பிரதான நோக்கமாக இருக்க முடியாது. மக்களின் உயிர் பாதுகாப்பும், சுகாதார பாதுகாப்பும் முக்கியமானவை ஆகும். வருமுன் காப்பது பெரும் செலவினத்தையும், உயிரிழப்பையும் தவிர்க்க முடியும்.
ஆகவே மாநில அரசு புதிய கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த மாநில முதல்வர் தலைமையில் உயர்மட்ட கூட்டத்தை நடத்திட வேண்டும், ஒன்றிய சுகாதார அமைச்சகத்தின் வழிகாட்டுதலை பின்பற்றவும், அனைத்து மருத்துவமனைகளின் கட்டமைப்பை வலுப்படுத்தவும் மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது. தேவையான மருத்துவர்களை நியமனம் செய்யவும்,காலியாக உள்ள செவிலியர், உதவியாளர் உள்ளிட்ட காலி பணியிடங்களில் “கோவிட் 19” பெருந்தொற்று காலத்தில் களப்பணி ஆற்றிய ஒப்பந்த ஊழியர்களை, NRHM ஊழியர்களைக் கொண்டு நிரப்பவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில முதல்வரை வலியுறுத்துகிறது.
நன்றி
இப்படிக்கு
இரா. இராஜாங்கம்.
மாநில செயலாளர்