புதுச்சேரி இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் சலீம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பிரதேச செயலாளர் ராஜாங்கம், தமிழ் மாநில குழு உறுப்பினர் பெருமாள் ஆகியோர் இன்று (மார்ச் 5) செய்தியாளர்களிடம் கூறியதாவது:
“கிரண்பேடி ஆளுநராக இருந்த நான்கரை ஆண்டுகளில் எந்த அளவுக்கு நிர்வாகத்தையும், மக்கள் நலத்திட்டங்களையும் முடக்கினார் என்பதை நாடே அறியும்.
அவரை தொடர்ந்து, தமிழிசை சவுந்தரராஜன் துணைநிலை ஆளுநராக பொறுப்பேற்ற பிறகு புதுச்சேரியின் சட்டப்பேரவை மாண்புகளுக்கு எதிராக செயல்பட்டு வருகிறார். துணைநிலை ஆளுநர் தமிழிசைக்கு என்று ராஜ்நிவாஸ் உள்ளது. அங்கிருந்து தனது நிர்வாக நடவடிக்கைகளை அவர் மேற்கொள்ள வேண்டும். ஆனால், அவர் சட்டப்பேரவையில் உள்ள கேபினட் அறையை பயன்படுத்தி நிர்வாகத்தை நடத்துகிறார்.
மேலும், அவருக்கு நியமிக்கப்பட்ட ஆலோசகர்கள் சந்திரமவுலி, ஏ.பி.மகேஸ்வரி இருவருக்கும் அமைச்சர்களுக்கான அறையை ஒதுக்கியுள்ளார். தலைமைச் செயலாளரால், சந்திரமவுலிக்கு 23 பணிகளும், ஏ.பி.மகேஸ்வரிக்கு 22 பணிகளும் ஒதுக்கப்பட்டிருக்கிறது. பாஜக நினைத்தால் எதையும் செய்ய முடியும் என்கிற ஒரு அதிகார திணிப்பின் வெளிப்பாடாக இது இருக்கிறது.
துணைநிலை ஆளுநர் முழுக்க முழுக்க சட்டப்பேரவையையே தன்னுடைய அலுவலகமாக பயன்படுத்துவது மக்கள் ஜனநாயகத்துக்கு எதிரானதாகும். ஆளுநர் மாளிகையில் இருந்து அவர் நிர்வாகத்தை நடத்த வேண்டும். இதுவரை இருந்த ஆளுநர்கள் ஒரு சிறப்பு பணி அலுவலர் மற்றும் ஒரு அதிகாரிகளை வைத்து கொள்வார்கள். தற்போது இரு ஆலோசர்கள் நியமிக்கப்பட்டிருப்பது உள்நோக்கம் கொண்டதாக உள்ளது.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்எல்ஏக்கள் உள்ள சட்டப்பேரவையில் நியமன எம்எல்ஏக்கள் வந்து வாக்குரிமை என்ற பெயரில் ஆட்சியை கவிழ்க்கின்றனர். இதனை தடுத்து நிறுத்த வேண்டும் என்று இந்திய தேர்தல் ஆணையத்துக்கு எழுத்துபூர்வமாக கடிதம் அனுப்பினோம். அவர்கள் அளித்த பதில், அரசுக்கெதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது நியமன எம்எல்ஏக்களுக்கு வாக்களிக்கும் உரிமை இல்லை என்பதற்கான சட்டப்பூர்வமான பதிவுகள் எதுவுமில்லை என்று தெரிவித்துள்ளது.
இதன் மூலம் தேர்தல் ஆணையம் ஒரு மழுப்பலான பதில் அளித்துள்ளது. இதன் மீது மேல் புகார் செய்ய போகிறோம். புதுச்சேரியில் தேர்தல் துறை அமைத்துள்ள பறக்கும் படை அமைதியாக உள்ளது. பகிரங்கமாக பாஜகவினர் இலவச பொருட்கள் மட்டுமல்ல பல வேலைகளை செய்து வருகின்றனர். இதுவரை எந்த இடத்திலும் சோதனை செய்யப்படவில்லை.
பறக்கும் படைகள் நடுநிலையோடு செயல்பட வேண்டும். புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கொடுக்க முடியாது என்று பாஜக கூறிவிட்டது. வருகிற தேர்தலில் மாநில அந்தஸ்து, புதுச்சேரிக்கான தனித்தன்மை, உரிமைகள், மக்களாட்சியின் மாண்புகள், மதச்சார்பின்மை, தொழிலாளர் பிரச்சினை தீர்ப்பதற்கான நல்ல அரசு அமைய வேண்டும். அந்த வகையில் இத்தேர்தலில் மக்களுடைய சிந்தனை இருக்க வேண்டும்.
புதுச்சேரியில் தொகுதி பங்கீடு தொடர்பாக 4 பேர் கொண்ட பேச்சுவார்த்தை குழு அமைத்துள்ளோம். தமிழகத்தில் தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. அது முடிந்தவுடன் புதுச்சேரியில் பேச்சுவார்த்தை நடத்துவோம்”. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.