கிரண்பேடி நீக்கம்; பாஜகவின் தேர்தல் விளையாட்டு: மார்க்சிஸ்ட் விமர்சனம்

புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி நீக்கம் செய்யப்பட்டதை பாஜகவின் தேர்தல் விளையாட்டு என்ற முறையில்தான் மக்கள் பார்ப்பார்கள் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி விமர்சித்துள்ளது. இதுகுறித்து, புதுச்சேரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பிரதேச செயலாளர் ராஜாங்கம் இன்று (பிப்.17) செய்தியாளர்களிடம் கூறியதாவது:

“துணைநிலை ஆளுநர் கிரண்பேடி தன்னிச்சையாகச் செயல்பட்டு அரசுக்கு எதிராக ஒரு போட்டி அரசாங்கத்தை நடத்தி, சர்வாதிகார மனப்பான்மையோடு செயல்பட்டு வந்தார். அவர் நேற்று (பிப்.16) இரவு திரும்பப் பெறப்பட்டுள்ளார்.

இது தொடர் போராட்டத்தினால் கிடைத்த முதல் வெற்றி.  திடீரென ஆளுநர் மாற்றப்பட்டது, பாஜக நடத்துகிற பல அரசியல் விளையாட்டுகளில் இதுவும் ஒன்றாக உள்ளது. ஏற்கெனவே தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு, கூடுதலாக புதுச்சேரி துணைநிலை ஆளுநர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. கிரண்பேடியின் செயல்பாட்டால் அனைத்துத் தரப்பு மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதனால் ஏற்படும் பின்விளைவில் இருந்து தப்பித்துக் கொள்வதற்காக தமிழ் தெரிந்த நபரை துணைநிலை ஆளுநராக நியமித்துள்ளனர். இதனை அரசியல் ஆதாயத்துக்காக பாஜக செய்துள்ளது. இது பாஜகவின் தேர்தல் விளையாட்டு என்ற முறையில்தான் மக்கள் பார்ப்பார்கள்.

30 எம்எல்ஏக்கள் கொண்ட புதுச்சேரி சட்டப்பேரவையில் 10 சதவீதம் நியமன எம்எல்ஏக்களை மத்திய அரசு நியமித்து, ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்கி படுகொலை செய்யும் காரியத்தை மேற்கொண்டுள்ளது. புதுச்சேரியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை நெருக்கடிக்குள்ளாகி, அதனுடைய செயல்பாட்டை முடக்கியுள்ளது.

ஆளும் கட்சி எம்எல்ஏக்களுக்கு கோடிக்கணக்கான ரூபாயை அள்ளி வீசி, பதவி ஆசை காட்டி, பாஜக ஆதரவாளராக மாற்றுவதை மத்திய பாஜக அரசு மேற்கொண்டுள்ளது. புதுச்சேரியில் ஜனநாயக முறையில் தேர்தல் பணி நடைபெற்றதால், தங்களுடைய செல்வாக்கை அதிகரிக்க முடியாது என்பதால் அரசியலில் குறுக்குவழியில் அதிகாரத்தைக் கைப்பற்ற பாஜக ஆசைப்படுகிறது.

எனவே, பாஜகவுக்கும், அவர்களுடன் சேர்ந்துள்ள என்.ஆர்.காங்கிரஸுக்கும், அதிமுகவுக்கும், மக்கள் சரியான பாடத்தைப் புகட்டுவார்கள். எதிர்க்கட்சித் தலைவர் ரங்கசாமி 5 ஆண்டுகளாக மவுனியாக இருந்துவிட்டு திடீரென வாய் திறப்பது சந்தர்ப்பவாத அரசியலின் உச்சமாக உள்ளது.

பெட்ரோல், டீசல், கேஸ் சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டுள்ளது. தொழிலாளர் உரிமை பறிக்கப்படுகிறது. விவசாயிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது. பெண்கள், சிறுபான்மை மக்கள் தாக்குதலுக்குள்ளாகி உள்ளனர். இப்படிப்பட்ட மத்திய பாஜக அரசின் நடவடிக்கையைக் கண்டித்து, புதுச்சேரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் அரசியல் மாநாடு வரும் 24-ம் தேதி நடக்கிறது. இதில், மத்தியக் குழு உறுப்பினர்கள் சவுந்தரராஜன், சுதா சுந்தர்ராமன் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்”. இவ்வாறு ராஜாங்கம் தெரிவித்தார்.

பேட்டியின்போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலக் குழு உறுப்பினர் பெருமாள், செயற்குழு உறுப்பினர்கள் ராமசாமி, ராமச்சந்திரன், சத்யா ஆகியோர் உடனிருந்தனர்.

Leave a Reply