புதுச்சேரியில் நியாயவிலைக் கடைகளைத் திறந்து அரிசி, பருப்பு தரக்கோரி இடதுசாரிகள் கூட்டாகப் போராட்டம்

தமிழ்நாடு, கேரளம் போன்று புதுச்சேரியில் நியாயவிலைக் கடைகளைத் திறந்து அரிசி, பருப்பு, எண்ணெய் தரக்கோரி இடதுசாரிக் கட்சிகள் கூட்டாக இன்று போராட்டத்தில் ஈடுபட்டன.

புதுச்சேரியில் இன்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் சிபிஐ (எம்-எல்) ஆகிய இடதுசாரிக் கட்சிகள் கூட்டாகப் போராட்டத்தில் ஈடுபட்டன. ஆளுநர் மாளிகை அருகேயுள்ள தலைமை தபால் நிலையம், குடிமைப்பொருள் வழங்கல்துறை மற்றும் புதுச்சேரி, காரைக்கால், மாஹே பகுதிகளில் நியாயவிலைக் கடைகள் முன்பாக என நூற்றுக்கணக்கான இடங்களில் இடதுசாரிக் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆளுநர் மாளிகை அருகே நடைபெற்ற போராட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பிரதேச செயலர் ராஜாங்கமும், குடிமைப்பொருள் வழங்கல்துறை அருகே நடைபெற்ற போராட்டத்துக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் சலீமும் தலைமை வகித்தனர்.

போராட்டம் தொடர்பாக ராஜாங்கம் மற்றும் சலீம் ஆகியோர் கூறியதாவது: “புதுச்சேரி காங்கிரஸ் அரசு பொது விநியோகத் திட்டத்தை மாநில நிதியிலிருந்து செயல்படுத்தத் தவறியுள்ளது. துணைநிலை ஆளுநர் கிரண்பேடி, தலைமைச் செயலாளர் அஸ்வினி குமார் ஆகியோரின் கண்மூடித்தனமான முடிவால் நியாயவிலைக் கடைகள் தற்போது மூடப்பட்டுள்ளன. நியாயவிலைக் கடைகளை மூடுவதால் பொது விநியோக முறை அழியும். இது ஏழை மக்களின் நலன் மீது அக்கறை இல்லாத செயல்.

பேரிடர் காலத்தில் அரிசி வழங்கும் பணியில் நியாயவிலைக் கடை ஊழியர்களை ஈடுபடுத்த கிரண்பேடி தடை போடுகிறார். நியாயவிலைக் கடைகளைத் திறக்க வேண்டும். தமிழ்நாடு, கேரளம் உள்ளிட்ட இதர மாநிலங்களைப் போல பொது விநியோகத் திட்டத்தை மீண்டும் புதுச்சேரியில் செயல்படுத்திட வேண்டும்.

அத்தியாவசியப் பொருட்களான அரிசி, பருப்பு வகைகள், சமையல் எண்ணெய் உள்ளிட்ட பொது விநியோக முறையை நியாயவிலைக் கடைகள் மூலமாகச் செயல்படுத்திட வேண்டும், ஊரடங்கு கால நிவாரணமாக ரூ.7,500 தர வேண்டும், கடந்த பத்து ஆண்டுகளில் ஏழ்மை நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோருக்கு சிவப்பு குடும்ப அட்டைகள் தர வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்திப் போராட்டத்தில் ஈடுபட்டோம்”. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Leave a Reply