போலி மருந்து உற்பத்தி  மற்றும் போலி மருந்து கொள்முதல் குறித்து உயர்நீதிமன்ற கண்காணிப்பின் கீழ் விசாரணைக்கு உத்தரவிடுக.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மார்க்சிஸ்ட் புதுச்சேரி மாநில குழு

பத்திரிகைச் செய்தி
02.12.2025

புதுச்சேரி என்.ஆர். காங்கிரஸ்-பாஜக கூட்டணி அரசின் பொறுப்பு துறப்பு நிர்வாகத்தால் போலி மருந்து உற்பத்தி  மற்றும் போலி மருந்து கொள்முதல் குறித்து உயர்நீதிமன்ற கண்காணிப்பின் கீழ் விசாரணைக்கு உத்தரவிடுக.

புதுச்சேரி மாநில என்.ஆர். காங்கிரஸ்-பாஜக கூட்டணி ஆட்சியின் நிர்வாகத்தால், மாநிலத்தில் போலி மருந்து உற்பத்தி, தரமற்ற மருந்துகள்  கொள்முதல் ஆகியவை மனித உயிர்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளது. அரசு நிர்வாகத்தின் பொறுப்பு துறப்பு நடைமுறை மற்றும் ஆளும் ஆட்சியாளர்களின் துணையுடன், கடந்த நான்காண்டு காலமாக போலி மருந்து உற்பத்தியும் விற்பனையும் தடையின்றி நடந்துள்ளது மிகுந்த கவலை அளிக்கிறது.

சிபிசிஐடி போலீசாருக்கு புகார் வந்ததன் பேரில் போலி மருந்து உற்பத்தி தொடர்பாக விசாரணை மேற்கொண்டதாகவும், புதுச்சேரி நீதிமன்ற வழிகாட்டுதலின் பேரில் 34 மாதிரி மருந்துகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு மருந்து குடோன்கள் சீலிடப்பட்டுள்ளதாகவும் அறியப்படுகிறது. இச்சம்பவம் தொடர்பாக பின்வரும் கேள்விகள் எழுகின்றன:

சுமார் நான்காண்டு காலம் போலி மருந்து உற்பத்தியும் விற்பனையும் செய்யப்பட்டுள்ள நிலையில், மருந்து கட்டுப்பாட்டுத் துறை ஏன் கண்காணிக்கவில்லை ? இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு போலி மருந்து விற்பனை கண்டறியப்பட்டு செட்டித் தெருவில் உள்ள ஒரு மருந்து கடை மீது வழக்கு செய்யப்பட்டு பிறகு எந்த நடவடிக்கை எடுக்கவில்லையே ? தற்போது அரசு மருத்துவமனைகளுக்கு போலி மருந்து வழக்கில் குற்றவாளிகளுக்கு எளிதாக ஜாமின்கிடைக்கிறதே இது ஆட்சியாளர்களிடமிருந்து வந்த அழுத்தத்தின் காரணமாகவா?  மருந்து கட்டுப்பாட்டுத்துறை ஏன் மருந்து தொழிற்சாலைகளில் ஆய்வு செய்யவில்லை ?   மருந்து கட்டுப்பாட்டுத் துறை தனது கடமையைச் செய்யத் தவறியதா? ஆட்சியாளர்களுக்கும் போலி மருந்து பேர்வழிகளுக்கும் என்ன உறவு ?   சுகாதாரத் துறையின் கீழ் பணியாற்றும் மருந்து ஆய்வாளர்கள் மருந்து கடைகளில் ஆய்வு செய்ய அனுமதிக்கப்படுகிறார்களா ? இது குறித்து ஆழமான, நேர்மையான விசாரணை தேவை என மார்க்சிஸ்ட் கட்சி கருதுகிறது.

குற்றவியல் வழக்கு பதிவு செய்ய வேண்டும்

போலி மருந்து உற்பத்தி மற்றும் சந்தைப்படுத்தப்பட்டு பல நூறு கோடி ரூபாய் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது மனித உயிருக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. மேலும், வரி ஏய்ப்பு மற்றும் முறைகேடுகளில் ஈடுபட்ட மோசடி பேர்வழிகள் மீது உடனடியாக குற்றவியல் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இத்தகைய கடும் குற்றச் செயலுக்கு துணை போன அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகள் உட்பட அனைவரும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும்.


பொறுப்பற்ற ஆட்சியின் விளைவுகள்

என்.ஆர். காங்கிரஸ்-பாஜக பொறுப்பற்ற ஆட்சியின் விளைவாக மக்கள் பல துன்பங்களை சந்தித்து வருகின்றனர். போலி மருந்து விவகாரங்களைத் தவிர, தரமற்ற குடிநீரால், பாதாள சாக்கடை விஷவாயு கசிவால் உயிரிழப்பு, மது வணிகத்தால் கணவனை இழந்த இளம் பெண்கள் அதிகரிப்பு, கோவில் நிலம் அபகரிப்பு, தனியார் சொத்துக்கள் அபகரிப்பு, பொதுப்பணித்துறை, நில அளவை பதிவேடு துறை, மின்துறை, வணிகவரித்துறை, ஊரக வளர்ச்சித் துறை, காவல்துறை அதிகாரிகள் கைது போன்ற சம்பவங்கள் பொறுப்பு துறப்பு நிர்வாகத்தையே காட்டுகிறது.

எனவே பொறுப்பு துறப்பு ஆட்சியால்தான் போலி மருந்து உற்பத்தியும் தரமற்ற மாத்திரை கொள்முதலும் நடந்துள்ளது. ஆகவே, மாநில அரசு ஆட்சியில் தொடருவதற்கு தார்மீக உரிமையை இழந்து விட்டதாக மார்க்சிஸ்ட் கட்சி கருதுகிறது.

மாநில அரசு தனது பொறுப்பு மற்றும் கடமையைச் செய்யும் துணிவிருந்தால், மக்கள் நலனில் அக்கறை இருந்தால், போலி மருந்து உற்பத்தி, தயாரிப்பு, விற்பனை மீது உரிய நீதிமன்ற கண்காணிப்பின்கீழ் உயர்மட்ட விசாரணைக்கு உடனடியாக உத்தரவிட வேண்டும். முன்னதாக உற்பத்தி மற்றும் விற்பனை தொடர்பான விவரங்கள் அடங்கிய ஆவணங்கள், பயன்படுத்தப்பட்ட கணினிகள் போன்றவற்றை உடனடியாக கைப்பற்ற வேண்டும். சம்பந்தப்பட்டவர்களின் வங்கி கணக்குகளை முடக்க வேண்டும். மருந்து உற்பத்தி தொழிற்சாலைகள், மொத்த விற்பனை மற்றும் சில்லறை விற்பனை கடைகள் அனைத்தையும் காலமுறைப்படி ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் என மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது.


இவண்
வெ. பெருமாள்
ஒருங்கிணைப்பாளர்.
மாநில குழு
Communist Party of India (Marxist) CPIM
Puducherry State Committee

Leave a Reply