ஆசிரியர் பணி நியமனங்களில் பெண்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும்

Teacherஆசிரியர் பணி நியமனங்களில் வயது தளர்வு மற்றும் வேலை வாய்ப்பில் பெண்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும். – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்!

புதுச்சேரி அரசு, பள்ளி கல்வித்துறையில் காலியுள்ள ஆசிரியர் பணியிடங்களில் 275 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. மேற்படி பணியிடங்களில் பெண்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை, வயது வரம்பை தமிழகத்தை போல தளர்த்தவும் மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது.

புதுச்சேரி மாநிலத்தில் ஆசிரியர் பணியிடங்கள் அவ்வப்போது நிரப்பப்படாததால் சுமார் 1000த்திற்கு மேற்பட்ட பணியிடங்கள் காலியாக உள்ளன. அதில் ஒரு பகுதி மட்டுமே நியமன அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. நீண்ட இடைவெளிக்கு பின் நியமன அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதால் படித்து முடித்து வேலைக்காக காத்திருக்கும், ஆசிரியர் தகுதி பெற்ற இளைஞர்கள் வயது வரம்பை பலர் கடந்து விட்டனர். கடைசி வாய்ப்பாக நடைபெற உள்ள நியமன தகுதி வயதில் தளர்வு அளிப்பது அவசியமான ஒன்றாகும். தமிழகத்தில் வயது தளர்வு அளித்துள்ளதை போல ஆசிரியர் உள்ளிட்ட பணி நியமனங்களில் தற்போது அறிவித்துள்ள வயது வரம்பில் மேலும் மூன்று வயதை உயர்த்தி வழங்கிட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது.

புதுச்சேரி மாநில அரசு 2023 – 2024 பட்ஜெட்டில் மூன்று சிறப்பு கூறு நிதியம் என்ற திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் ஒன்றாக பெண்களுக்கான சிறப்பு திட்டத்தில். ரூபாய் 1332 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் காவலர் மற்றும் தீயணைப்புத் துறையில் பெண்களுக்கு சிறப்பு திட்டத்தின் கீழ் வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது. அதைப்போல ஆசிரியர் பணியிடங்களில் பெண்களுக்கு சிறப்பு ஒதுக்கீடு வழங்குவது கல்விச்சூழலுக்கு மேலும் உதவிடும். பாகுபாடு நிறைந்த ,சமூக ஒடுக்குமுறை மற்றும் ஒதுக்குதலுக்கு உள்ளாகி உள்ள பெண்கள் அதிகாரம் பெறவும், முன்னேறவும், வேலை வாய்ப்பில் சிறப்பு சலுகையை உறுதி செய்ய வேண்டும் மற்றும் பெண்கள் சிறப்பு கூறு நிதியத்தை முறைப்படுத்தி செயல்படுத்திட விரிவான திட்டத்தை உருவாக்க வேண்டும். அது குறித்து அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் பெண்கள் அமைப்புகள் கூட்டத்தை நடத்த அரசு முன்வரவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது

இப்படிக்கு
ஆர். ராஜாங்கம்,
மாநில செயலாளர்,
CPIM – புதுச்சேரி

Leave a Reply