புதுச்சேரியில் பாஜக – என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணி அரசின்  அரசியல் பித்தலாட்டம்

புதுச்சேரியில் பாஜக – என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணி அரசின்
மக்கள் நலன் புறக்கணிப்பு, வரிப்பணம் விரயம் – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்.

புதுச்சேரி, ஜூன் 30, 2025:

வணக்கம். புதுச்சேரியில் கடந்த நான்கு ஆண்டுகளைக் கடந்துள்ள பாஜக – என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணி ஆட்சி,  மக்கள் எதிர்கொள்ளும் அடிப்படைப் பிரச்சனைகளைத் தீர்ப்பதில் தோல்வி அடைந்துள்ளது.  மக்களின் உரிமைகளை காவு கொடுத்து  அரசியலை வியாபாரம் ஆக்கி அடுத்த சட்டமன்றத் தேர்தலுக்கு ஒரு வருடமே எஞ்சியுள்ள நிலையில், அர்த்தமற்ற அரசியல் நகர்வுகளில் ஈடுபட்டு மக்களின் வரிப்பணத்தை விரயம் செய்வதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி புதுச்சேரி மாநில குழு வன்மையாக கண்டிக்கிறது.
புதிய நியமன சட்டமன்ற உறுப்பினர்கள்: அவசியமற்ற அரசியல் விளையாட்டு:
ஏற்கனவே உள்ள பாஜக நியமன சட்டமன்ற உறுப்பினர்களை மாற்றி, புதிய உறுப்பினர்களை நியமனம் செய்வதற்கான அவசியம் என்ன என்ற கேள்வி புதுச்சேரி அரசியல் வட்டாரத்தில் வலுவாக எழுந்துள்ளது. இந்த நடவடிக்கை வெறும் அரசியல் நெருக்கடியில் இருந்து திசை திருப்பும் ஒரு நாடகமே தவிர, மக்கள் நலனில் அக்கறை கொண்டதல்ல என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி செயலாளர் எஸ். ராமச்சந்திரன் குற்றம் சாட்டியுள்ளார். இந்த புதிய நியமனங்களால் உருவாகும் அரசு நிர்வாகச் செலவுகள் அனைத்தும் மக்கள் வரிப்பணத்தின் அப்பட்டமான விரயமே என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தலித் இல்லாத அமைச்சரவை:
சமூக நீதியின் மீதான தாக்குதல்
அரசு நிர்வாகத்தில் நடந்து வரும் மாற்றங்கள், ஆளும் கூட்டணியின் சமூகப் பார்வையை வெட்டவெளிச்சமாக்கியுள்ளன.
 ஏற்கனவே என்.ஆர்.காங்கிரஸ் அமைச்சர் சந்திர பிரியங்கா நீக்கப்பட்டதும், தற்போது பாஜக அமைச்சர் சாய் சரவணகுமார் மாற்றப்பட்டதும், இருவரும் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. புதிய அமைச்சரின் பெயர் அடிபடுவதை பார்த்தால், அமைச்சரவை தலித் பிரதிநிதித்துவம் இன்றி மாற்றப்படலாம் என்ற அச்சம் வலுத்துள்ளது. இது சமூக நீதியையும், பலிதானத்தையும் கேள்விக்குறியாக்குகிறது.
குற்றப் பின்னணி கொண்ட புதிய அமைச்சர்கள்:
 தகுதியின் அவலநிலை
வரவிருக்கும் புதிய அமைச்சர் மீது ஏற்கனவே இரண்டு கிரிமினல் வழக்குகள் நிலுவையில் இருப்பதும், தற்போது கோவில் நில மோசடி மற்றும் கள்ள லாட்டரி சீட்டு போன்ற சமூக விரோதச் செயல்பாடுகளில் முன்னணியில் இருப்பவர் என்பதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. “பாஜகவில் அமைச்சராவதற்கு இதுதான் சரியான தகுதி போல” என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாடியுள்ளது.
 இத்தகைய நபர்கள் பதவியில் அமர்த்தப்படுவது, குற்றச் செயல்களை மறைமுகமாக ஊக்குவிப்பதோடு, நிர்வாகத்தின் நம்பகத்தன்மையையும் கேள்விக்குறியாக்குகிறது.
நியமன எம்எல்ஏக்கள் பதவி: ஜனநாயக மாண்புகளின் மீதான தாக்குதல்
புதுச்சேரி சட்டப்பேரவையில் மூன்று சட்டமன்ற உறுப்பினர்களை நியமனம் செய்ய சமூக அறிவு ஜீவிகள், சமூக சேவகர்கள், கல்வியாளர்கள் போன்றோரை பிரதிநிதித்துவப்படுத்துவது என்ற மரபு இருந்தது. ஆனால் ஒன்றியத்தில் பாஜக ஆட்சிக்கு வந்தபின், அனைத்து ஜனநாயக மாண்புகளும் காற்றில் பறக்கவிடப்பட்டு, மக்களால் நிராகரிக்கப்பட்ட பாஜக கட்சி உறுப்பினர்களின் கட்சிப் பதவியாகவே நியமன உறுப்பினர்கள் பதவி மாறிவிட்டதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.
தற்போது நியமன சட்டமன்ற உறுப்பினர்களாகி இருப்பவர்கள் எந்தத் தகுதியின் அடிப்படையில் நியமனம் செய்யப்பட்டார்கள் என்றும், அவர்கள் மக்களுக்கு செய்த சேவை என்ன என்றும் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. “அனைத்து சமூக விரோதச் செயல்களுக்கும் சொந்தக்காரர்கள் தான் இவர்கள். பாஜகவினுடைய தகுதியும் இதுதான்”
இத்தகைய அநாகரிக அரசியல் நடவடிக்கைகளுக்கு முடிவு கட்ட வேண்டிய முதல்வர்  என். ரங்கசாமி அவர்கள்  தன்னுடைய பதவி  நாற்காலியை காப்பாற்றிக் கொள்வதற்காக இதற்கெல்லாம் உடந்தையாக இருப்பது கண்டிக்கத்தக்கது.
இத்தகைய நியமனங்களால், சட்டப்பேரவையின் தரம் குறைவதோடு, பொதுமக்களின் நம்பிக்கையும் இழக்கப்படுகிறது.
 * மக்கள் நலத் திட்டங்கள் முடக்கம்: ஆளும் கூட்டணியின் உட்கட்சி மோதல்களாலும், அர்த்தமற்ற அரசியல் விளையாட்டுகளாலும் மக்களின் அடிப்படைத் தேவைகளான குடிநீர், சுகாதாரம், கல்வி, வேலைவாய்ப்பு போன்ற திட்டங்கள் சரிவர செயல்படுத்தப்படாமல் முடக்கப்படுகின்றன.
 * அரசின் மீது அவநம்பிக்கை: பொறுப்பற்ற நிர்வாகம் மற்றும் குற்றப் பின்னணி கொண்டவர்களின் நியமனம் ஆகியவை அரசின் மீது மக்களுக்கு உள்ள நம்பிக்கையை தகர்த்து, ஜனநாயகம் மீதான அவநம்பிக்கையை ஏற்படுத்துகின்றன.
 * நிதி விரயம் மற்றும் வளர்ச்சிப் பணிகள் பாதிப்பு: நியமன எம்எல்ஏக்களுக்கான ஊதியம், சலுகைகள் என மக்கள் வரிப்பணம் வீணடிக்கப்படுவது மட்டுமல்லாமல், இந்த அரசியல் குழப்பங்களால் வளர்ச்சிப் பணிகள் தடைபட்டு, புதுச்சேரியின் முன்னேற்றம் பாதிக்கப்படுகிறது.
 * சமூக நீதிக்கு எதிரான செயல்பாடு: தலித் பிரதிநிதித்துவம் இல்லாத அமைச்சரவை மற்றும் சமூக விரோத சக்திகளுக்கு முக்கியத்துவம் அளிப்பது, சமூகத்தில் உள்ள பின்தங்கிய மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களின் நலனைப் புறக்கணிப்பதாக அமைகிறது.
வரக்கூடிய தேர்தல்களில் பாஜக என்ன காங்கிரஸ்கூட்டணி ஆட்சியாளர்களுக்கு தக்க பாடம் புகட்ட வேண்டும் என்று புதுச்சேரி மக்களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி  கேட்டுக்கொள்கிறது.
இப்படிக்கு,
எஸ். ராமச்சந்திரன்,
செயலாளர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, புதுச்சேரி.

Leave a Reply